Wednesday, November 10, 2010

கோயம்பத்தூருக்கே குடை பிடித்து நடந்த "என்"கவுண்டர்?

அண்ணே! கோயம்பத்தூர்ல நடந்த என்கவுண்டர் சரியாத் தப்பான்னு பதிவுலகத்துல ஒரு பெரிய ஹிட் கவுண்டரைத் தொறந்து வைச்சுகிட்டு நம்மல்ல பல பேரு பதிவு போட்டாச்சு. "என்"கவுண்டர் பண்ணினது (அதனால) சரிதான்னு ஒரு கூட்டமும்.... குடை பிடிக்காம "என்"கவுண்டரை 'நடத்தினது' தப்புன்னு ஒரு கூட்டமும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆக மொத்தம் கோயம்பத்தூர்ல கவுண்டர் எண்ணிக்கையில ஒன்னு கூடிடுச்சு. இதுக்கெல்லாம் PCR Act-ல கேஸ் போடமாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

இந்த என்கவுண்டர் வசதியை நம்ம காவல்துறைக்கிட்ட எளிதா ஒப்படைச்சா, ரொம்ப ஆபத்து இருக்குங்கிறது உண்மை. ஏன்னா இது ரெண்டு பக்கமும் கூர்மையான கத்தி. இந்த நேரத்துல இதை எவ்வளவுதான் கத்தி கத்தி சொன்னாலும் இந்த கத்தி மேட்டர் எடுபடாது. மனுசங்க மனசு அப்புடி. இங்க இரும்பிலே இதயம் முளைத்த எந்திரர்கள் யாரும் இல்ல. சும்மா எந்த ஆதாரமும் இல்லாம பெட்டி கேசு போடுற காவல் துரைங்க... இதுமாதிரி என்கவுண்டர் அதிகாரத்தையும் கையில வைச்சிருந்தா, சும்மா பொடிப்பசங்களைக்கூட போட்டுத்தள்ளிருவேன் தெரியுமா... போட்டுத்தள்ளிருவேன் தெரியுமான்னு போட்டு வாங்கிடுவாணுக... வில்லா ஹவுஸ் வாங்குற அளவுக்கு.

எனக்குத்தெரிய சென்னை வியாசர்பாடி ஏரியாவுல சில ரவுடிகளின் மிரட்டல் தொல்லை தாங்க முடியாம, பொம்பளைப்புள்ள பெத்து வைச்சிருந்த பல குடும்பம் வேற ஏரியாவுக்கு ஷிஃப்ட் ஆயிடுச்சு. என்ன பண்றது மானத்தைக் காப்பாத்தணும், மகளைக் காப்பத்தனும், பணத்தைக் காப்பாத்தனும்.... அதுக்கு வேற ஏரியாவுல தான் காஃபி, டீ ஆத்தனும்னு தெரிஞ்சே, அந்த ரவுடிக இவங்களைக் காலி பண்றதுக்கு முன்னாடி, தானாகவே ஏரியாவையே காலி பண்ணிட்டு போயிட்டாங்க. அந்த ரவுடிகளை அரசாங்கம் இந்த மாதிரி என்கவுண்டர்-ல போட்டுத் தூக்கிடுச்சு. அந்த தகவலைக் கேட்ட பல குடும்பம். அப்பாடா-ன்னு ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டுச்சு. இதுல கொலைகளை கொண்டாடுற மனோபாவம் எங்கையாவது இருக்கானு தேடிப்பாருங்க. அப்படி கொலைகளைக் கொண்டாடும் மனோபாவம் இருந்திருந்தால், அந்த கோயம்பத்தூர் பிஞ்சுக செத்தப்பக் கூட கொண்டாடியிருக்கனுமே! இல்லையில்ல... அப்பா நம்ம ஆளுக இன்னும் சைக்கோவாகலை. நீங்க இங்க மூச்சு விட்டுக்கங்க.

குற்றம் செய்தவனை மனநல மருத்துவரிடம் காட்டவேண்டும், மயிலிறகால் வருட வேண்டும் என்றெல்லாம் சமூக நற்ச்சிந்தனையாளர்கலான நாம் கூறிக்கொண்டிருந்தாலும்.... அந்த குற்றவாளியின் மனநிலையை குறைந்த பட்சம் ஒரு குற்றம் செய்த பிறகே கண்டுபிடித்து மாற்ற முயலும் சூழ்நிலையில் உள்ளோம். இவனது மனநிலையை அறிந்துகொள்ள/ இவனுக்கு சிகிச்சை அளிக்க, பாதிக்கப்பட்டவர்கள் என்ன ஆராய்ச்சி எலிகளா?

இந்த என்கவுண்டர் அபாயத்தால், பொதுப்படையான புது ரவுடிகள் உருவாவது வெகுவாகக் குறைந்துதான் உள்ளது. ஆனால், உருவான சில ரவுடிகள் வட/தென் பகுதியின் கழகச் செயலாளர்களாகவும், அமைப்புத் தலைவர்களாகவும் வெள்ளை வேட்டிக்குள் விறகுக்கட்டைகளாக வலம்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு அதிகார பலம் இருப்பதால், உடல் பலமுள்ள தண்டங்கள் முண்டங்களாக கையாள்(ல்) வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களில் பலர் சட்ட மன்றம், பாராளு மன்றங்களில் "மேற்பார்வையாளராக" பணியாற்றுகிறார்கள். (முதல்ல ரெண்டு மன்றத்தோட பேருகளை மாத்தனும்டா சாமி... நமக்கு அசிங்கமா இருக்கு).

இது குறித்த விவாதங்களின் போது நித்தியானந்தாவிற்கு இதே தண்டனை ஏன் வழங்கப்படவில்லை? என்று கேட்டிருந்தார்கள். நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரம் என்றால், அதில் சட்டத்திற்கே வேலையில்லை. அவர் வேறு ஏதேனும் குற்றச் செயல்கள் புரிந்திருந்தால், குற்றங்களின்படி அவருக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும். அதுவும் விரைவாக. நமது கையாலாகாத அரசுகளும் அவரையோ, பாதிரி ராஜரத்தினத்தையோ கடுமையாகத் தண்டித்தால், வாக்கு வங்கிகளான காவி மதமும், வெள்ளையாடை மதமும், வாக்கு சீட்டில் குத்த வேண்டியதை நமது பின் சீட்டில் குத்திவிடுவார்களோ என்ற கழிச்சலுடனே அணுகுவார்கள் என்பது நமது துரதிர்ஷ்டம். அந்தக் காரணங்களினால்தான் பெரியவாக்களும் இன்னும் மிகவும் சவுகரியமாக வாழை இலையில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஜனநாயகத்துல பணம் உள்ளவனுக்கு ஒரு மாதிரியும், பணம் இல்லாதவனுக்கு ஒரு மாதிரியும் சட்டமும், காவல் துறைகளும், ஆளும்(?)கட்சிகளும் வளைஞ்சு கொடுத்துப்போகுது... என்னத்தையாவது வாங்கிக்கிட்டு. உங்க விருப்படி இதை ஜனநாயகம்னோ இல்ல பணநாயகம்னோ நீங்க வைச்சுக்கலாம்.

தேர்தல் முடிவுகளை மட்டும் உடனே தெரிஞ்சுக்க வருஷா வருஷம் ஏதாவதொரு முன்னேற்றத்தை கொண்டுவருகிற நம்ம அதிகாரிகளும், அதுக்கு ஒத்துழைக்கிற அதிகாரிகளும், இந்த நீதித்துறையில ஒரு மாற்று வழியைக் கொண்டுவந்து வழக்குகளை விரைவா நிறைவேற்றி, தண்டணைகள சரியா வழங்க என்ன ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க? ஒரு FIR எழுதுற காவலர்கிட்டையும், கோர்ட்டு அலுவல்களை கவனிக்கிற காவலர்கள்கிட்டையும் அதிலிருக்கிற கஷ்டங்களை கேட்டுப்பாருங்க. அதை ஏன் இன்னும் நம்மளால எளிமைப்படுத்த முடியல? தெளிவான ஆதாரங்கள் உள்ள வழக்குகளின் விசாரணையைக் கூட, சம்பந்தமில்லாம பல வருடங்களுக்கு இழுத்தடித்து, பல சமயங்களில் ஏனோதானோ என்ற தண்டனைகளையும் கொடுத்தால் (போபால் வழக்கு ஒன்னு போதுமா நம்ம லட்சணம் தெரிய) இது போன்ற என்கவுண்டர் கொலைகளைக் கொண்டாடத்தான் செய்யும் இவ்வுலகம்.

என்னதான் தண்டனைகளைக் கொடுத்தாலும் குற்றங்களை இல்லாமல் அழிக்கமுடியாது என்பது பலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால், குற்றங்களைக் குறைக்கமுடியும் என்பது என் திண்ணம். என்னாண்ணே பண்றது... வீட்டுப்பாடம் செய்யலையினா வாத்தியாரு அடிப்பாருன்னு இருந்தாத்தான் நம்ம செய்யுவோம். இல்லை இல்லை அடிக்கலையினாலும் நான் என் அறிவு வளர்ச்சிக்காக செய்வேன் அப்படிங்கிற சொம்பு எத்தனை யோக்கியவான்கள்ட்ட இருக்குன்னு எனக்கு தெரியாது. தண்டனைகளால குற்றங்களைக் குறைக்ககூட முடியாதுன்னு நீங்க நம்புனா, பக்கம் பக்கமா, அதுல பல உட்பிரிவா தண்டணைகள விவரிக்கிற சட்டப்புத்தகங்கள் எதுக்குன்னு ஒருதடவை கேட்டுச் சொல்லுங்க.

என்கவுண்டர்களை எப்போதும் நம்ம ஆதரிக்கக்கூடாது தான். அதுக்கு மாற்றா என்னாண்ணே பண்ணலாம்? நீதி ஏண்ணே நியதியா எப்போதும் இருக்க மாட்டேங்குது? ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது - என்பது ஒரு பெரிய பாராட்டக்கூடிய கொள்கைதான். நிரபராதியைக் காப்பாத்துறேன்னு ஒவ்வொரு குற்றவாளியாத் தப்பிக்க விட்டுட்டு, தேசத்தில அமைதி சீர் குழைஞ்சிருச்சுன்னு சோறு குழைஞ்சது மாதிரி எளிதா சொல்லிட்டுப் போறதுல யாருக்கு லாபம். ஹெல்மெட் போடலையினா காவல் துரைக்கு (எழுத்துப் பிழையில்லை) இருபது ரூபாயாவது தண்டம் அழுகனுமேன்னு தன் தலையைக் காப்பத்துற தறுதல ஜாதி தானே நம்ம. நம்மகிட்ட தண்டனை வரும் வரும்னா... மூல வியாதிக்காரன் முக்கிக்கிட்டே இருக்கிற மாதிரிதான் இருக்கும். காலம் கடந்து கிடைக்கும் நீதியும் ஒரு அநீதி தானே!

மொத்தத்துல காவல்துறையே இது போன்ற என்கவுண்டர் நடத்துவது மிக மிக ஆபத்தானது. நீதித்துறையும் மிக விரைவாக செயல்பட்டு, கடுமையான தண்டனைகளை வழங்கவேண்டும். நீதித்துறையின் செயல்பாடுகளிலும், காவல்துறையின் குற்றம் தவிர்க்கும் அடிப்படைப் பணிகளிலும் அரசியல்வியாதிகள் மூக்கை மட்டுமல்ல எதையுமே நுழைக்கக்கூடாது (துண்டுச்சீட்டு உட்பட). மக்களிடம் தவறுகள் குறைவதற்கான விழிப்புணர்வையோ, நல்லெண்ண மனநிலையோ வளர்க்க தேவையான வழிகளைக் கண்டு நடைமுறைப்படுத்தலாம். குற்றம் செய்தவர்களை கடுமையாகத் தண்டிப்பது எந்த ஆண்மைக்கும் இழுக்காகாது. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் தவறுகள் செய்தால் கண்டிச்சு வளருங்க சாமிகளா. அங்க தண்டனை தேவையில்ல. ஆனா, தேசம்னு வந்துட்டா தண்டிச்சே ஆகணும். இங்க வைச்சு ஊலலால்லா பாடிக்கிட்டு இருக்கமுடியாது கூடாது.


இந்த மோகன்ராஜ் என்கவுண்டர் விஷயத்தில் வழக்கம் போல இட்டுக்கட்டப்பட்ட கதையை காவல்துறை அவிழ்த்துவிட்டாலும், அவர்களின் இந்த துரித தண்டனைக்கான மர்மம் விளங்கவில்லை. இந்த ஆயுதத்தை காவல்துறையிடம் வழங்கும் முன்னர் பலமுறை யோசிக்க வேண்டும். தீயவன் ஏதோ ஒரு வழியில் அழிந்தால், கொண்டாடு எனச் சொல்லிக்கொடுத்தது நமது சமூகம் தானே! எனவே, இதைக் கொண்டாடியவர்களை அரபுதேச குடிமகன்களாக எப்படி முத்திரை குத்தி புறந்தள்ளமுடியும்?

தண்டிக்காம விட்டா மட்டுமல்ல, காவல்துறையிடம் என்கவுண்டர் வசதிகள் ஒப்படைக்கப்பட்டால் கூட வலியது மட்டுமே வாழும். மற்றவர்களுக்கு "வலி"யது மட்டுமே மிஞ்சும்.Saturday, October 30, 2010

ஒரு விறைவீக்கக்காரனின் வீரம்

தொழிலதிபர்களின் குழந்தைகள்
கடத்தி கொலை!
அன்றாட செய்திகள் கண்டு
அயற்சியாய் தானிருக்கிறது...

சந்ததி செய்த பிழைகளா? - இல்லை
தாய்தந்தையரின் சந்திப்பிழைகளா?
சிந்தை பிறழ்ந்தவர்களா? - இல்லை
சிதறிய விந்தில் பிறந்தவர்களா?
மிருக இனத்தின் பகுதியா? - இல்ல
மனித இனத்தின் விகுதியா?

விலங்குகள் கூட சீண்டுவதில்லை
தம்மின மாற்றான் குட்டிகளை
எவ்வெதிர்ப்புக்கேனும்...

காதலில் பிறந்தவர்களா? - இல்லை
கழுகு, பருந்துகளின் எச்சங்களில்
கருவுற்றவர்களா? - அவைகளுக்குத்தான்
குட்டி உண்ணும் பழக்கம்...
இவர்களுக்கும் ஆற்றறிவு
கணக்களவில் மட்டும்...

குலவாரிசுகளைக் குதறிய - இவர்கள்
குறியின் குறுக்குவெட்டுத்தோற்றம்
கண்காட்சியாகட்டும் காவல்துறையே!
பிறப்புறுப்பின் வழி பிறந்தவர்களா? - இல்லை
பிறிதொரு உறுப்பின் வழியோ?

கருவின் உதிரம் குடிக்கத்துடித்த சைக்கோ
கேட்டிருந்தால் பெற்றவளே அனுப்பியிருப்பாள்
மாதம் மூன்று நாட்கள் பார்சலாய்...

குரோதங்களைக்
குட்டிகளிடம் காட்டுமுனக்கு
மூளை எந்த மூலையிலிருக்கிறது? - உன்
விதைப்பையில் விந்துநீர்த்து
வெற்றுக்காற்று நிரம்ப்பட்டும்... - உன்
வீரமெல்லாம் அதைச்சுமக்கவே
விரையம் செய்யப்பட வேண்டும்...


Wednesday, October 27, 2010

ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்....?

நீ வாங்குன மார்க்குக்கு இஞ்சினியரிங் காலேஜ்-ல படிக்கனும்னா பொட்டி பொட்டியாப் பணங்கட்டனுமாம்... நம்மகிட்ட பொட்டி வாங்கவே பணமில்ல... வேறவழில்யில்ல, நமக்குத் தெரிஞ்ச காலேஜ்-ல சொல்லி ஏதாவது பி.எஸ்.சி-ல இடம் வாங்கித்தாறேன். "அதுலயாவது" நிறைய மார்க் எடுத்து உருப்புடப் பாருப்பானு பல வீடுகள்ல இந்த சங்கீதம் மே மாத இறுதில அரங்கேறும்.

பி.எஸ்.சி-னு முடிவானதுக்கப்புறம் படிச்ச பெரியவங்களோட கலந்தாலோசிச்சு மேத்ஸ் எடுக்கலாமா? ஃபிசிக்ஸ் எடுக்கலாமா? கெமிஸ்ட்ரி எடுக்கலாமான்னு? பலபேரு உயிரை எடுப்பாங்க. அதுல சில ஆளுக கெமிஸ்ட்ரி வேணாம் சார்... அவன் போயி ஆசிட்டுகள கலக்க வேண்டியிருக்கும். அது டேஞ்சரு. மேத்சும் வேணாம். அதைப் படிச்சா வாத்தியாரப் போறதுக்குத் தான் அதிக வாய்ப்பு .அதுனால, பேசாம ஃபிசிக்ஸ் படிக்க வைங்க. எதிர்காலத்துல சைண்டிஸ்டா போகலாம் (நம்ம லெவல் அவங்களுக்குத் தெரியல. பாவம் விட்டுருவோம்). இல்லைனா எம்.சி.ஏ படிக்கலாம். ஒன்னுமே முடியலைன்னா வாத்தியாராப் போகலாம்( வாத்தியார் வேலைக்கு தகுதி எப்புடி வச்சிருகாய்ங்க பாருங்க).- ன்னு சொல்லி ஒருவழியா தெளிவடைய(!?) வச்சிருவாங்க.

தம்பி நானும் விசாரிச்சிட்டேன். எம்.சி.ஏ படிச்சா டாக்டர் படிப்பு அளவுக்கு சம்பாரிக்கலாமாம். அதுனால ஒரு ஃசேப் சைடுக்கு பி.எஸ்.சி ஃபிசிக்ஸ் படி. அதுல நல்ல மார்க் எடுத்தீன்னா எம்.சி.ஏ படிச்சிட்டு வேலைக்கு போயி நல்லா சம்பாதிக்கலாம். கம்பியூட்டருக்கு நல்ல எதிர்காலம் இருக்காம்(அதுசரி, கம்பியூட்டரை வச்சு ஜோசியம் பார்த்த கோஷ்டிதானே நம்ம ஆளுங்க). அப்படி இப்படின்னு சொல்லி நமுக்கு புடிக்காத பாடமான ஃபிசிக்ஸ்-ல சேர்த்துவிட்டாங்க. என்ன சப்ஜெக்டுங்க அது... முதல் விதி, இரண்டாம் விதின்னு உயிரை எடுப்பானுங்க. நம்ம விதியையே நம்ம நொந்துகிட்டு இருக்கும்போது இதுல இவனுக விதி... என்ன பன்றது எல்லாம் "தல"விதி.

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லைன்னு உறுதியா நம்பி நல்ல மார்க் எடுத்து... எம்.சி.ஏ சீட்டும் வாங்கியாச்சு. அதை படிச்சு முடிச்சிட்டு ஒரு வழியா வேலைக்கும் சேர்ந்தாச்சு. இந்த வேலையில பிறப்பிக்கப்படுகிற லேங்குவாஜ்/டெக்னாலஜியை கணக்கெடுத்தா நம்ம மக்கள்தொகையை விட அதிகமா இருக்கும் போலங்க. பத்தாக்கொறைக்கு வெர்சன் வேற 1.0 , 2.0 -ன்னு. கருமம்டா சாமி. இந்தப் படிப்பை படிச்சவனுக்கெல்லாம் மூலம் நட்சத்திரமா இருக்கும் போல. எப்போதும் குடும்பத்தைப் பிரிஞ்சே இருப்பானுக. இந்த வேலை மூலம் ஆதி மூலம் முதல் பேதி "மூலம்" வரை நட்பாகக் கிடைக்கும். இதுல வேற இந்த ட்ரெய்னிங் அந்த ட்ரெய்னிங்-னு போட்டு உயிரை எடுப்பாணுக. நம்மெல்லாம் மத்தியான சோறு ஓசியாப் போடுற ட்ரெய்னிங் மட்டும்தான் கலந்துக்கிறது. நல்லா ட்ரெய்னிங் எடுத்து நிறைய சம்பாதிக்கிறது எடுத்துக்கு மனுஷன் வயிறார சாப்புடுறதுக்குத்தானே. அதுக்கு நேரடியாவே சாப்பாடு போடுற ட்ரெய்னிங்-ல கலந்துக்கிறது தானே புத்திசாலித்தனம்.


எப்பவாவது அதிசயமா ஒருவாரம், ரெண்டுவாரம் லீவு குடுப்பாணுக. சரி வீட்டுல போயி பெத்தவங்களோடவும், மத்தவங்களோடவும் சந்தோசமா இருந்துட்டு வரலாம்னு போனா.... அங்க சில கொடுமை "தலப்பா" (தலைப்பாகை) கட்டிக்கிட்டு ஆடும். கிராமப்புறம் வேற... நம்ம கூட வேற டெக்னாலஜி-ல வேலை பாக்குறவனுக்கே நம்ம என்ன வேலை பாக்குறம்னு புரியவைக்க முடியாது. இதுல இவங்களுக்கு புரியவைக்கனுமா... விளங்கிடும்...

அவங்க கேக்குற கேள்வியெல்லாம் எப்புடி இருக்கும் தெரியுமா...? கம்புட்டர் வேலை பாக்குறங்கிரியே உனக்கு கம்பியூட்டர் செய்யத் தெரியுமா? இந்த ஜோசியம் சொல்ற கம்பியூட்டர் உங்க கம்பெனில செய்யிறாங்களா? அது எவ்வளவு விலை இருக்கும்? இந்த கம்பியூட்டர் அப்புடி என்னதான் பண்ணும் அதைப்போயி இவ்வளவு விலை சொல்றானுக? புதுசா தொறந்த ராசி மளிகைக்கடையில கூட கம்பியூட்டர் பில்லிங் தான். அங்க நமக்கு தெரிஞ்ச பயதான் வேலை பாக்குறான். அவனுக்கு மூவாயிரம் சம்பளந்தான் தாராக. அவன் ரொம்ப நல்ல பையன். கைசுத்தமான ஆளு. கெட்டிக்காரன் கூட. நீ அவனுக்கு உன் கம்பெனில முப்பாதாயிரம் ரூவாய்க்கு வேலை வாங்கித்தரக்கூடாதா?

இதை பக்கத்துல இருக்குற இன்னொரு மங்குனி அமைச்சரு விளக்குவாரு... அட அப்புடி இல்ல மச்சான். வேறவேற கம்பெனில ஸ்க்ரூ, தகரம், கண்ணாடின்னு செஞ்சு வரும் அதை இவுகளை மாதிரி பெரிய கம்பெனில இருக்கவுக மாட்டி ஒக்குட்டு வியாபாரத்துக்கு அனுப்புவாக. (அப்புடித்தானே மருமயனே-ன்னு நம்மகிட்ட கேள்வி வேற). இல்ல நான் வேலைபாக்குறது ஒரு பேங்குக்கு அப்புடின்னு சொன்னா... அங்க உங்களுக்கு லோன் எல்லாம் தருவாய்ங்களா? அப்பா உனக்கு கம்பியூட்டர்ல கணக்கெழுதுற வேலையா? நீ பேசாம அங்கிட்டு இங்கிட்டு கெடந்து கஷ்டப்படுரதுக்கு உன் வேலைய நம்ம ஊரு இந்தியன் பேங்குக்கு மாத்திக்கிட்டு வந்துரலாமே... அங்ககூட மேனஜர் டேபிள்-ல ஒரு கம்பியூட்டர் பார்த்தேன் - அப்புடின்னு தாக்குவாய்ங்க பாருங்க... ரஷ்ய ராக்கேட்டேல்லாம் தோத்துப்போயிடும்.


இல்ல... அந்த பேங்குடைய வெப்சைட் இன்டர்நெட்-ல இருக்குறத பார்த்துக்கணும். அதை சில நேரம் மாத்தணும்... எல்லாத்தையும் ஆடோமெட் பண்ணனும்னு என்னென்னமோ விபரம் சொன்னாலும்... ம்ஹூம். என்னப்பா இன்டர்நெட் இருந்தா கெட்டுப் போயிருவானுகன்னு சொல்றாங்க...நீ அதுலே வேலை பாக்குறம்னு சொல்றே-ன்னு ஒன்னு விழும். இன்னொரு ராக்கெட்டு சீருனதைப்பாருங்க... ஏப்பா! உன் கம்பெனில கம்பியூட்டரை கொடுத்து வேலைபாக்க சொல்லி உனக்கு சம்பளம் கொடுக்குராணுக. அப்ப அவனுகளுக்கு செலவு போக என்னப்பா மிஞ்சும்? நம்ம ஊர்ல அந்த முருகேசன் பயலைப் பாரு நாலைஞ்சு கம்பியூட்டரை வச்சுக்கிட்டு சின்ன ஒரு இன்டர்நெட் கம்பெனி வச்சுகிட்டு... அங்க போயி அதுல வேலை பாக்குறவங்ககிட்ட ஒரு மணி நேரத்துக்கு இருபது ரூவாயின்னு டெக்னிக்கலா சம்பாரிக்கிராம்பா... (விளங்கிடும்)

அப்பவே புரிஞ்சுக்கணும் நமக்கு லீவு கொடுத்த மேனஜர் அவருகும்பிடுற குலதெய்வத்துக்கிட்ட சொல்லி, சனியனுக்கு சகல வசதியும் பண்ணிக்குடுத்து நம்ம கூட அனுப்பி வச்சிட்டார்னு. யாராவது புரிய வச்ச மாகாராசனுங்க, எப்புடின்னு சொல்லுங்கப்பா... இண்டர்வியூவுக்கு தயாராகுறதை விட லீவுக்கு ரொம்ப உஷாரா தயாராக வேண்டியிருக்கு...Saturday, October 23, 2010

உள்குத்து கவிதைகள் - 8 - துறவிகள் ஸ்பெஷல்

மனிதம் வளர்க்க வேண்டியவர்கள்
மதம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பளிங்கு பங்களாவிலும்
பாதாளச் சாக்கடையின்
பாதச் சுவடுகள்
இருப்பது நிரூபனமாயின...
திரைகள் கிழிந்து
முகம் நிர்வாணமாயின...
உண்மை இறை தேடியவர்கள் - இன்று
உணர்ச்சியால் இரை தேடுகிறார்கள்...

உடை நிறம் மட்டுமே மாறியிருக்கிறது
காவியாகவோ, வெள்ளையாகவோ...
உங்கள் மனங்களிலிருந்து
அகலவில்லை ஒரு மாசும்...
துறந்தவர்கள் எல்லாம்
திறந்தே வைத்திருக்கிறார்கள்
தங்க(ள்) வாசலை...
எவளேனும் ஒருத்தியாய் வரும்வரை!

ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழ
ஊருக்கு மட்டும் உபதேசம் - ஆனால்
எல்லாவளும் ஒருத்தியாய்
அவன் ஒருவனுக்கே என்ற நினைப்போடு...!

அனைத்தும் மறைக்க
வகை-தொகையாய் பூசை ஆண்டவனுக்கு...
நன்றி கெட்டவன் காட்டிக்கொடுத்துவிட்டான்
வருமான வரித்துறைக்கு...

நித்ய ஆனந்தமாய் வாழ
லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும்...
புரிந்துகொண்டு - என்
அறைக்கதவை முழுத்தாழிட்டாள்
ஒரு உயர்தர பக்தை!

சர்ப்பம் தொழவும்...
கர்ப்பம் கலைக்கவும்...
துறவிகளுக்கு!


Wednesday, October 13, 2010

சிங்கபூருக்கு வாரீயளா? - செலவில்லாம...

உலகம் முழுதும் பரவியிருக்கிற என் சொந்தக்காரய்ங்களா!!! நல்லாயிருக்கீகளா? உங்களையெல்லாம் பாக்கனும்னு எங்களுக்கு ஆசை. சிங்கபூர் வாரியளா?? வாய்ப்பை நாங்க தாரோம். வாகையை நீங்க சூடுங்க...


கொடுத்திருக்கிற மூனு பிரிவுல, எது பத்தி நிறைய இருக்கோ உங்க அறிவுல... அதை தெரிவு செய்யுங்க.

தலைப்பை தலைக்குள்ள வாங்கி... தலைக்குள்ள இருக்குறத கட்டுரையா தழைக்க வைங்க..
 
எதுவும் பதிவு பண்ணத் தேவையில்லை... பதிவரா மட்டுந்தான் இருக்கணும்னு அவசியம் இல்ல... யாருவேணும்னாலும் எழுதலாம்... ஆனால் தமிழ்-ல தான் இருக்கணும்.


தலைப்புல அரசியல் பிரிவு இருக்கும்... மணற்கேணி மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் போட்டிகளிலும் வெற்றியாளர்களை கவுரவிப்பதிலும் அரசியலால் பிரிவுகள் இருக்காது... பயப்புடாமா வாங்க...

அறிவுசார்ந்த உங்க நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தப் போட்டியைப் பத்தி சொல்லுங்க...


ஓட்டுக்கும் கூட்டுக்கும் இங்க வேலையில்லை...

கட்டுக்கதைகளை எழுதி எழுதி பழகினது போதும்... மொக்கையே போடாம சக்கையா கட்டுரைகளை தயார் பண்ணுங்க. போட்டில வென்று சிங்கபூர் கிளம்ப தயாராகுங்க...

விதிகளை தெரிஞ்சுக்கிரனுமா?? அட உங்க விதியை இல்லங்க... போட்டிகளுக்கான விதிமுறைகளை இங்க போயி பாருங்களேன்... நல்லா கொடுத்துருக்காங்க டீட்டெயிலு...

இன்னும் என்னா வெயிட்டிங்கு... நாளும் நேரமும் ரன்னிங்கு... எழுதி அனுப்புனாத் தானே கிடைக்கும் வின்னிங்கு... ரெடி ஜூட் மக்கா... ஜூட்...Saturday, August 7, 2010

எல்லாம் போறவழில....

எல்லா நாட்டு பயபுள்ளைகளுக்கும் இப்ப ஒரு வியாதி தொத்திக்கிச்சுண்ணே... என்னா வியாதின்னா எதாயிருந்தாலும் போறவழில பாத்துக்கலாம்... பண்ணிக்கலாம்னு இருக்குறது...

இந்த வியாதி இப்ப ரொம்ப சீக்கிரமா பரவிகிட்டு வருது. இதுக்கு இனிமே மருந்து கண்டுபிடிச்சாலும் அதை போற வழிலதான் சாப்புட்டுட்டு போவாங்க. அந்த அளவுக்கு வியாதி முத்தீருச்சு. காலையில ஆஃபீசுக்கு போறத்துக்கு முன்னாடி சாப்புட்டு போடான்னு வீட்டுல அம்மாவோ, வீட்டுக்கார அம்மாவோ சொன்னாலும்... நேரமில்ல பிரெட் சாண்ட்விச்சு வை. போறவழில சாப்டுக்கிறேன்-னு சொல்றது இன்னைக்கு பிரபலமாயிடுச்சு. சரி சரி தலையவாவது சீவிட்டு போகலாம்லன்னு சொன்னாலும், சீப்பு பேண்ட் பாக்கெட்டுல இருக்கு போறவழில சீவிக்கிறேன்-னுட்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சிட்டாங்க எல்லாரும். பொண்ணுகளுக்கு இன்னும் வசதி முடிய விரிச்சுப்போட்டுட்டு போறதுல... தலை குளிச்சா காயவைக்க நேரம் ஒதுக்க வேணாம்...


வீட்டைவிட்டு கிளம்பும்போது சாமிகும்பிட்டுட்டு பொண்ணு யாராவது சொன்னாக்கூட... போறவழில கோயில்ல கும்பிட்டுக்கிறேன்-னு சொல்லிட்டு... கோயிலப்பாத்து கும்பிட்டுட்டு ஓடிகிட்டேயிருப்பாங்க. நல்ல வேலை பல்லு விளக்குறது, குளிக்கிறத மட்டுமாவது வீட்டுல பண்ணிட்டு போறாங்க... அப்பவும் பல்லு விளக்கலையான்னு கேட்டா, டாய்லட் போகும்போது சும்மாதானே உக்காந்திருப்பேன்... அப்போ விளக்கிக்கிறேன்-னு சொல்லுவாங்க பாருங்க... அட அட அடா... பல்லு விளக்கதவங்க, குளிக்காதவங்களுக்கு இது பொருந்தாது மக்களே...


இன்னும் சில பேரும் பல்லு விளக்கி, குளிச்சிட்டு போனா போதும். ஆஃபீசுல போயி டாய்லட் போயிக்கிறலாம்னு ஒரு கோஷ்டி இருக்கும். (என்ன மங்குனி இப்புடி வில்லங்கமா போறவழில பிரச்சனை ஆயிடாதான்னு கேக்குற...? ஏற்கனவே வழக்கமா போறவழில பிரச்சனை ஆனதுனாலதானே இப்புடி). இதுனால நம்ம நேரத்தை மிச்சப்படுத்துறமா இல்ல நமக்கு நேரம்பத்தலையான்னு தெரியல. அட அதை யோசிக்கக் கூட நேரமில்லையப்பா (இந்த இடத்துல ஒரு அண்ணே, அப்புறம் எப்புடிடா உங்களுக்கு இப்புடி மொக்கையா எழுதவும், முதுகு சொறிஞ்சுவிடவும் உங்களுக்கு நேரம் இருக்குன்னு மைன்ட் வாய்ஸ்ல கேக்குறது எனக்கு நல்லா கேக்குது).

வீட்டுக்கு காய்கறி, பலசரக்கு வாங்கலையா....? போறவழில வாங்கிக்கலாம். நண்பனோட கல்யாணத்துக்கு நினைவுப்பொருள் வாங்கலையா...? போறவழில வாங்கிக்கலாம். இன்னைக்கு வீட்டுல சமைக்கல. எங்கையாவது சாப்பாடு வாங்கிட்டு அல்லது சாப்டுட்டு போகலாமா...? போறவழில சாப்டுக்கலாம். உள்ளூர் வியாபாரில இருந்து... உலக வியாபாரி வரை இந்த "போற வழில" விஷயத்தை புரிஞ்சுகிட்டாங்க. அவங்களும் போறவழில வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பெரும்பாலான கண்டுபிடிப்புகள் கூட போறவழில பயன்படுத்துற மாதிரிதான் இப்போ கண்டுபிடிக்கிறாங்க. அதுல பல பொருள் போரவழிலே தூக்கிபோட்டுட்டு போற மாதிரிதான் இருக்குங்கிறது தனிக்கதை.


சாட் பண்ணனுமா? மெயில் அனுப்பனுமா? பாட்டுக் கேக்கனுமா? படம் பாக்கனுமா? எல்லாத்துக்கும் இப்போ கையடக்கமா நிறையப் பொருள்கள் வந்திடுச்சு... (இதைப் படிக்கிற யாரோ ஒரு ஆணாதிக்கவாதி, பொண்ணுகளைத் தவிர மத்தது எல்லாம் அடக்கமாத்தான் இருக்குதுன்னு சொல்றது உங்களுக்குக் கேக்குதா?? ;-) ) நம்ம ஆளுக அவசரத்தை புரிஞ்சுகிட்டுத்தான் சுடுதண்ணியை ஊத்தி ரெண்டு நிமிஷம் ஊறவச்சா போதும் அப்புடியே சாப்பிடலாம்னு நூடுல்ஸ் வகையெல்லாம் வந்துச்சு. நம்ம ஆளுக அதையும் பாத்ரூமுக்கு போறவழில ஊறவச்சிட்டுப் போவானுக.
 
சாப்புடுற விஷயமாவது பரவாயில்ல... சம்சாரம் தேடுறதும் அப்புடியே போறவழில பொண்ணைப் பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம்னு இப்போ நிறையப் பேரு கிளம்பீட்டாங்க. தம்பி நீ கட்டிக்கிற மாதிரி ஒரு பொண்ணு திருச்சில இருக்குன்னாங்க என்னைக்காவது லீவு நாள்ல போயி பாத்துட்டு முடிவு பண்ணிடலாம்டான்னு வீட்டுல சொன்னா... அவரு, "எனக்கு இப்ப லீவெல்லாம் இல்லம்மா... தீவாளிக்கு சொந்த ஊருக்குப் போவோம்ல... அப்போ போறவழில பொண்ணைப் பாத்துட்டு போயிடலாம்"-னு சொல்றாரு. பல வெளிநாடுகள்ல... இன்னைக்கு நம்ம இந்தியாவுலயும் கூடத்தான்... கல்யாணம் பண்ணின தம்பதிக கூட ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு போகும்போது போறவழில கிட்டத்தட்ட பாதி தாம்பத்தியத்தை முடிச்சிடுறாங்க...மூத்திரம் போறதில இருந்து முத்தம் குடுக்குற வரைக்கும் இன்னைக்கு போறவழிலதான் நடக்குது.


இதுக்கு யாரையும் குத்தம் சொல்லமுடியாது. அவனவன் இருக்குற அவசரத்துல குத்தவச்சும் சொல்லிக்காட்டமுடியாது. இதைப் படிச்சிட்டு சந்தோசமா இருந்தீங்கன்னா அப்புடியே போறவழில நாலைஞ்சு பேருகிட்ட சொல்லி பெருமைப்படுத்தீட்டு போங்க. செம காண்டுல (இதுக்கு எனக்கே அர்த்தம் தெரியாது) இருந்தீங்கன்னா... போறவழில துப்பீட்டுப் போங்க. இங்க துப்பீராதீங்க. அப்பப்ப உங்களைமாதிரி பல நல்லவங்க போறவழில வந்துபோற இடம் இது. :-)


இது எல்லாமே நம்ம மேல போறவழில நடக்குறதுதான்னு உங்க காவிகட்டுன மனசு சொல்லுமே!Wednesday, July 21, 2010

என்னடா தத்துவ மயிரெல்லாம் பேசுற... (சொற்சித்திரம்)

மகேசு பேசுறேண்டா. எப்புட்றே மாப்ள இருக்க?

நல்லா இருக்கேன்டா. நீ எப்புடி இருக்க?

இருக்கேன்... நாளும் பொழுதும் ஓடிகிட்டு இருக்கு.

ஆமாடா மாப்ள... நமக்கும் கல்யாணம் காட்சின்னு ஆகி ஒரு புள்ளையையும் பெத்துப்புட்டோம். நாளு அவ்வளவு வேகமா ஓடுது.

அதுபாட்டுக்க ஓடட்டும் விட்றா... அது என்ன ஒத்தப் புள்ளையை பெத்துபுட்டு வயசானவனாட்டம் கணக்கு சொல்லிகிட்டிருக்க... அதுக்கும் ரெண்டு வயசாச்சு... சட்டுபுட்டுன்னு அடுத்த புள்ளைய பெக்குற வழியப் பாருடா...

போடா... அடுத்து ஒன்னை பெக்குறதுக்கு பயமா இருக்குடா...

நீயேண்டா பயப்புட்ற... புள்ளை பெக்கப்போற என் தங்கச்சில பயப்படனும். உன்னைய கட்டிக்கிறதுக்கே அது பயப்புடல. இதுக்கா பயப்புடப் போகுது...?


இந்த எகத்தாள பேச்சு மசுத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல. என்னமோ இவரு அஞ்சாறு புள்ளையப் பெத்ததுமாதிரி அள்ளிவிடுவாரு... பெக்குறது பெருசில்லடா... இந்தக் காலத்துல அதுகளை படிக்க வைக்கனுமே... அதான் பயமே...

அதென்னாடா... எல்லாரும் சொல்லி வச்சமாதிரி பெக்குறதே ரெண்டு... அதுகள வளக்கவும், படிக்க வைக்கவும் கஷ்டம்னு பொலம்பிகிட்டு இருக்கீங்க... அந்தக் காலத்துல அஞ்சாறை பெத்து படிக்க வச்சு வளக்கல?

வெண்ணை பெத்தாய்ங்க... பெருசா எங்க படிக்க வச்சாய்ங்க?? எங்கையாவது ஒருசில குடும்பத்துல வசதி இருக்கிறதால நல்லா படிக்க வச்சாங்க...

ஊரு ஒலகத்தை விடுறா... ஒங்க வீட்டுலையும், எங்க வீட்டுலையும் என்ன வசதியாவ இருந்தாய்ங்க...? நீயும், நானும் என்ன படிக்காமையா போயிட்டோம்?

அப்பவெல்லாம், எம்.ஜி.ஆர் கொடுத்த காக்கி டவுசரும், வெள்ளை சட்டையும், எம்.ஜி.ஆர் பல்பொடியும் போதும்டா... புத்தகமும் இலவசமா எட்டாவது வரைக்கும் கொடுப்பாய்ங்க... நம்மளும் கவட்டையில கிழிஞ்ச டவுசரை போட்டுக்கிட்டு, பல்பொடில பாதிய தின்னுபுட்டு... மீதியை வச்சு பல்லு வெளக்கீட்டு பள்ளிகொடத்துக்குப் போயிடுவோம். இப்போ புள்ளைய பள்ளி கொடத்துல சேக்க போயிப்பாரு... நீ போட்டுருக்குற எல்லாத்தையும் உருவுராய்ங்கடி...

இருக்குறவன் ஒழுங்கா இருந்தா செரைக்கிரவன் ஒழுங்கா செரைப்பான்னு சொல்லுவாய்ங்க... அந்த மாதிரி நாட்டை ஆளுரவனும், அதிகாரியும் ஒழுங்கா இருந்தா எல்லாஞ்சரியா இருக்கும்... அவனுக தான் லாட்டரியை சொரண்டக்கூடாதுன்னு தடை போட்டுட்டு மத்த எல்லாத்தையும் சொரண்டிகிட்டு இருக்கானுகளே...

நீ சொல்றது அந்தக்காலம்டா... அப்பா செரைக்கிரவன் சுத்தி சுத்தி வந்து செரைச்சான். இப்பா பாரு நாக்காலில ஒக்கார வச்சு அவன் ஒரு எடத்துல நின்னுகிட்டு உன்னைய சுத்தவிட்டு செரைக்கிறான். இப்ப வர்றவங்கதான் முடிஞ்ச வரைக்கும் சுருட்டிட்டு போகல்ல பாக்குறானுக.

சுருட்டட்டும் சுருட்டட்டும்டா எங்க போகப்போராணுக? காசு நெறைய இருக்குங்கிறதுக்காக கண்ண மூடாமையேவா வாழப்போறாய்ங்க?? ஒன்னு தெரிஞ்சுக்கடா மாப்புள... வாழ்க்கைங்கிறத வாழணும்டா... ஓடக்கூடாது...

என்னடா தத்துவ மயிரெல்லாம் பேசுற... ம்ம்ம் பெரிய ஆளாயிட்டடா...

பெரிய ஆளெல்லாம் ஆகலைடா... எங்கையா மூணாவது வரைக்கும் படிச்சாரு... எங்கப்பா பத்தாவது வரைக்கும் படிச்சாரு... நான் டிகிரி வரை படிச்சிருக்கேன். இன்னைக்கு நல்லா வேலையில தான் இருக்கேன். அதேமாதிரி உங்கையா அஞ்சாவது வரை படிச்சாரு... ஏதோ உங்க அப்பா கொஞ்சம் நல்லா கஷ்டப்பட்டு படிச்சதால எம்.ஏ வரைக்கும் படிச்சிட்டு வாதியாரானாறு. நீ அவரைவிட கொஞ்சம் அதிகமா படிச்சு எம்.சி.ஏ வரை படிச்ச... இப்போ நல்லா வேலையில இருக்க... இதுக்கு பேருதாண்டா முன்னேற்றம்.

ங்கொய்யால எங்கிட்டோ போயி சரக்கை போட்டுட்டாய்னு நெனைக்கிறேன்...

சரக்கும் போடல... ஒரு மசுரும் போடல... எல்லாங்கலந்ததுதாண்டா வாழ்கை. எல்லாரும் படிச்சு டாக்டராவோ, எஞ்சிநியராவோ போனா... மத்த வேலையெல்லாம் எவன்டா பார்ப்பான். மத்ததெல்லாம் வாழ்க்கைக்கு தேவையில்லாததா என்ன? படிப்பாளி, உழைப்பாளி, அறிவாளி, படைப்பாளி, தொழிலாளி எல்லாரும் சேந்ததுதாண்டா உலகம். இது தான் பெருசு... அதுதான் பெருசுன்னு சொல்லி மத்ததெல்லாம் இளக்காரமா பாக்குறது வீனாப்போனவய்ங்க மனசுதாண்டா..


மாப்ள புல்லரிக்குதுடா... என்னடா என்னென்னமோ சொல்ற... ?

அப்பறமென்னடா மயிரு... நீனே சொல்லு... நம்ம ஆளுகளுக்கு அவன்கிட்ட இருக்கதெல்லாமே பெருசு பெருசா வேணும்... பெரிய வீடு... பெரிய காரு... பெரிய டிவி... பெரிய ஃப்ரிட்ஜு-னு லிஸ்டும் பெருசாவே இருக்கும். ஆனா மனசு மாத்திரம் ரொம்ப சிறுசா இருக்கும். அதமாதிரி மத்த எல்லாமே ரெண்டு அல்லது அதுக்கு மேல வேணும்... ஆனா புள்ளைகுட்டி ஒன்னை பெத்துக்குறதுக்கே அழுது பொழம்புவாய்ங்க... அப்பறம் என்ன மசுத்துக்குடா இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிராய்ங்க...? புள்ள பாக்கியம் இல்லாதவங்ககிட்ட கேட்டா தெரியும் புள்ளையோட அருமை... எதுக்கு ஓடி ஓடி உழைக்கிரம்னே தெரியாம திரியிராய்ங்கடா ரொம்பப் பேரு... அதான் கடுப்பு மசிரா வருது...


டாய் அப்புடியெல்லாம் சொல்லாத... நிறைய காசு பணம் இருந்தாத்தானடா எல்லாத்தையும் அனுபவிக்க முடியுது...

என்ன பெருசா அனுபவிக்கிற? நானும் சோறுதான் திங்கிறேன்... நீயும் அதான் திங்கிற... மிஞ்சிப்போனா நீ வேறமாதிரி சுவையில திம்ப... ஆனா கடைசியில கொழுப்பு வந்துருச்சு... சக்கரை வந்திருச்சுன்னு டாக்டர்கிட்ட போயி பணத்தை கொடுப்ப... அதுக்குத்தான அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரிச்ச...? எப்ப பார்த்தாலும்... இது வாங்கணும், அது வாங்கனும்னு டென்சனா இருந்துகிட்டே எல்லா வியாதியையும் வாங்கிக்குவ... அதுக்கும் தியானம் பண்ட்றேன்... சாமிகிட்ட போயி தீட்சை வாங்குறேன்... நோய் வெரட்ட மந்திரிக்கிரேன்னு போயி அவனுக கால்ல விழுந்து விழுந்து எந்திரிப்ப... பாத பூஜை-னு அவனுக கால கழுவி விடுவ... இதுக்குத்தானாடா இவ்வளவு கஷ்டப்பட்ட...? அதுக்கு உன் காலையே ஒழுங்கா ஆற அமர கழுவி வீட்டுல சந்தோசமா இருந்துருக்கலாமேடா...

தக்காலி... எங்கயும் போதி மரத்துல படுத்துகிட்டே ஃபோன் பேசுறியா?

இல்லடா மாப்புள.. நக்கல் வெங்காயதுக்கொன்னும் கொறைச்சல் இல்ல... நான் சொல்றதுல கொஞ்சமாவது உண்மையிருக்கா இல்லையா...? ரொம்பப் பேரு வாழ்கையில நிமிந்து நிக்கணும்... நிமிந்து நிக்கனும்னே சொல்லி மனசையும் இறுக்கமாக்கிட்டு எதுக்கும் வளைஞ்சு நெளிஞ்சு... நெளிவு சுழிவா வாழத்தெரியாமத்தான் சின்ன சின்ன கஷ்டம் வரும்போதெல்லாம் ஒடிஞ்சு போயிடுராணுக.. சரி அதை விடு... ஏதோ நீனாவது பேசுறதுக்கு நேரம் ஒதுக்குறேன்னு உன்கிட்ட இதெல்லாம் சொன்னேன். இதுக்குமேல சொன்னா எம் மூஞ்சில குத்து விட்டுருவ...

அட வெண்ணை இந்த வாரம் குத்து வாரம்னு உனக்கும் தெரிஞ்சு போச்சா...??Wednesday, July 14, 2010

நாம் ஏங்கும் புதுவுலகம்...!!!

அண்ணே! நாம இந்த உலகத்துல நமக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோமா? இல்ல நம்மளைப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோமா?-னு சரியாப் புரியலைண்ணே.

ஆனா ஒன்னுண்ணே... எப்போதும் நம்ம ஏதாவது ஒன்னுக்கு ஏங்கிக்கிட்டே இருப்போம். நம்ம அறிவு மூலமாகவும், அறிவியல் மூலமாகவும் நாம கண்டுபிடிச்ச பல கண்டுபிடிபுகளால நமக்கு கண்ணு போனதும், மூலம் வந்ததும் உண்மைதான்.

இப்ப உள்ள வாழ்க்கை முறையால, நானும் ஜெயிக்கனும், நானும் ஜெயிக்கனும்-னு நம்ம எல்லாரும் மனசால பல மைல் தூரம் ஓடிக்கிட்டும்... மணிக்கணக்கா உட்கார்ந்து வேலை பார்த்துக்கிட்டும் போராடிக்கிட்டே இருக்கோம். இதுல அப்பப்ப வாழ்க்கை போரடிக்குதுன்னு ஒரு புலம்பல் வேற.

நம்ம வாழ்க்கையை சுத்தியும், வாழுமிடத்தை சுத்தியும் நம்மளே பல குப்பைகளை குமிச்சு வச்சுகிட்டு மனசுக்குள்ளே குமைஞ்சுகிட்டு இருக்கோம். ஆத்தா அப்பன்கிட்ட பேசுறதுக்குக்கூட அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிற நிலைமையிலதான் நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

வாழ்க்கையில முன்னேறனும், முன்னேறனும்னு பல வழிகளையும், வலிகளையும் கண்டுபிடிச்சுட்டு... நம்ம வாழ்க்கைய தொலைச்சுப்புட்டோம். நாம பயன்படுத்துகிற பொருட்கள்-ல பிரச்சனையினாலும், நாம் நிறுவனங்களிடமிருந்து பெரும் சேவைகள்-ல சந்தேகம்னாலும் தொடர்புக்கு நிறைய வாடிக்கையாளர் சேவைகள் அதுவும் இலவச தொடர்பு எண்ணில்...  நம்ம ஒவ்வொருவருக்கும் ஒரு (அதற்கு மேற்பட்ட) தொடர்பு எண்கள் இருந்தும் தொடர்புகொள்ள நேரமில்லாமல் இருப்பது வெட்கக்கேடானது தான்.

நிறைய இருக்குன்னு சொல்றதுக்கு... நேரமில்லை... (இத்தோடவா விடப்போறேன்... அப்பப்ப சாவடிப்பேன்). நீங்க மறந்துடாம, சோம்பேறியா இருந்துடாம, இந்தப் படத்தைப் (ஒன்பது பாகத்தையும்)பாருங்க... முக்கியமா கீழ வரும் Sub Title - ஐப் படிங்க.

இந்த திரைப்படத்திற்கு விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது!

பிரபலப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இந்தப் படத்தை தங்கள் தளத்திலும் அறிமுகப்படுத்துங்க. நிறைய நண்பர்கள் கண்டு களி(ழி)க்கட்டும். :-)


http://www.youtube.com/watch?v=C5CmMm_SRpM

http://www.youtube.com/watch?v=wbfKRx1glD4&feature=related

http://www.youtube.com/watch?v=dsh4IXjTeQU&feature=related

http://www.youtube.com/watch?v=9HEkEavkZJY&feature=related

http://www.youtube.com/watch?v=FMqOmb96SA0&feature=related

http://www.youtube.com/watch?v=x7YvR8rjV3k&feature=related

http://www.youtube.com/watch?v=EBvesLTYNDY&feature=related

http://www.youtube.com/watch?v=9dK3wVFMnS8&feature=related

http://www.youtube.com/watch?v=S28DaG-IJq8&feature=related

நன்றி இப்படத்தை இணையம் மூலம் பகிர்ந்த நண்பருக்கு!


Friday, July 9, 2010

உடையும் பிம்பங்கள்...

ஒருவரை நேரில் பார்க்காமல் நாம் பழகும்போதோ அல்லது ஒருவரைப்பற்றி கேள்விப்ப்படும்போதோ அவரைப்பற்றிய பிம்பம் நம் மனதில் உருவாவது இயற்கையே. அந்த பிம்பத்திற்கு நாம் ஒரு உருவம் கூட உருவாக்கி வைத்திருப்போம். அந்த பிம்பத்திற்கான இயல்புகள் மற்றும் பண்புகள் நம்மாலேயே கற்பனையில் கலந்து பிசையப்பட்டு அந்த கற்பனை உருவத்தோடு பொருத்தி வைத்திருப்போம்.

இது அனைவருக்கும் இயல்பானதே. சில சமயங்களில் நாம் கேட்கும் கதைகளுக்கும், சம்பவங்களுக்கும் கூட, சுற்றுப்புறத்தை நமது மனதே கற்பனை செய்து ஒரு திரைப்படம்போல மனத்திரையில் ஓட்டிக்கொண்டிருக்கும். இந்த சுவாரஸ்யம் இல்லையெனில் நமது ரசனையும், கற்பனையும் வறண்டுவிடும்.

சில சமயங்களில் நாம் உருவாக்கிய பிம்பத்திற்கும், நிஜத்திற்கும் அதிக வித்தியாசம் இருக்காது. அப்படிப்பட்டவர்களை நாம் நேரில் சந்திக்கும்போது ஏற்படும் ஆனந்தம் அளவிட முடியாதது. சிலர் வாய்விட்டு "அப்புடியே நான் நெனைச்சது மாதிரி இருக்கீங்க"-ன்னு வெளிப்படையாகச் சொல்லக்கேட்டிருப்போம். இன்னும் சில சமயங்களில் அவர்களது சொற்களும் செயல்களும் நாம் எதிர்பார்த்ததை விட இன்னும் சிறப்பாக இருக்கும். இத்தகைய நற்செயல்கள் நாம் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்திற்கு வலு சேர்க்கும்.
 
சில சமயங்களில் இந்த கற்பனை பிம்பம் போல, நிஜத்தின் செயல்பாடுகளும், உருவமும் இல்லாமல் பொய்த்துவிடுகிறது. இந்த பிம்பம் உடைபடுதல் ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால் பலருக்கு அதிர்ச்சியானதாகும். இந்த பிம்பம் உடைதலின் வெளிப்பாடுதான் "ச்சே இவரை என்னமோன்னு நினைச்சிருந்தேன். ஆனா இப்புடி இருக்காரே!?", "இவரு நான் நினைச்ச மாதிரி இல்லை", "இப்பத்தான் தெரியுது இவரோட உண்மையான முகம்" என்ற புலம்பல்களும், அலுத்துக்கொள்ளுதலும்.


இந்த பிம்பங்கள் உருவாதலும், உடைதலும் எல்லா வகையான உறவுகளுக்குள்ளும் இருக்கத்தான் செய்யும். இத்தகைய தருணங்களில் தான் சகிப்புத்தன்மை நம்மை காக்கும். சகித்துக்கொள்ளுதல் எனும் பண்பு நம்மிடம் இல்லாத போதுதான் உறவுகளில் சிக்கலும், மன இறுக்கமும் அதிகமாகிறது. நாம் உருவாக்கிக்கொண்ட பிம்பங்களின் மீதான அதிகமான பற்றுதலே இச்சிக்கல்களை அறியாமலே வளர்த்துவருகிறது. எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்நோக்கும் அசாத்திய குணம் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது?

இந்த பிம்பங்கள் உருவாவது எப்படி இயற்கையோ, அதுபோலத் தான் உடைதலும்! எல்லா மனிதனும், எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் நல்லவனாகவோ, ஒரே மாதிரியாகவோ இருக்க முடியாது. சூழ்நிலைகள் தாமாகவே நமக்கு முகமாற்றம் செய்துவிடும். நல்லது/கெட்டது - சரி/தவறு என்பவை ஒவ்வொருவருக்குள்ளும் அந்தந்த சூழ்நிலைகள் உருவாக்கும் கோட்பாடுகளே. வழக்கம்போல பெரும்பான்மையே வெற்றிகரமானதாக / வெற்றிபெற்றதாகக் கருதப்படும். அதுதான் சரியா? அதுவும் சரியா? அதுவே சரியா? என்பவை கேள்விக்குறிகளாகவே தொங்கிக்கொண்டிருக்கும்.

இந்த பிம்பங்களை எப்போதும் திடமான நிலையில் உருவாக்கி விடாதீர்கள். திரவநிலையிலோ, அரை திரவநிலையிலோ இருப்பின் உடைதல் சாத்தியமில்லை. பல்வேறு பாத்திரங்களுக்குள் பொறுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். என்னைப்போல அவன் இல்லை / நான் விரும்பியது போல அவன் இல்லை என்பது தான் நமது முரண்பாடுகளின் முச்சந்தி. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை", "குணம்நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்" இவை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். இவற்றை கடைபிடித்தாலே நாம் இன்பமாக வாழலாமே!

பொறுப்பு துறப்பி: இவ்வளவு சீரியசாக இருக்கும் இந்த பதிவை படித்து என்மீதான பிம்பம் உங்களில் உடைபட்டால் திசைகாட்டி பொறுப்பல்ல.


(ரொம்ப நாள் கழிச்சு வந்து எழுதும்போது இவ்வளவு சீரியஸா எழுதுறது எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு... பொறுத்துக்கங்க) - (பட்டாபட்டி இதை காப்பி பண்ணி கமெண்டு போட்டேன்னு வையி... மவனே இந்த பதிவை மாச மாசம் மீள்பதிவு போட்டுருவேன்)Thursday, June 10, 2010

நான் மதுரை வியாபாரி....- புனைவு

மதுரை ஒரு தூங்கா நகரம்.

அங்க நடக்கும் வகைவகையான வியாபாரம்.

நிறைய கடைகளின் வரலாறு பழசு.

ஒவ்வொரு முதலாளியோட அப்ப்ரோச்சும் ஒவ்வொரு தினுசு.

அங்க உள்ள மீனாச்சி அம்மன் கோயிலு தான் அந்த ஊரு வர்த்தக மையம்.

நாலு திசைக்கும் ஒவ்வொரு வாசலிருக்கும்.

ஒவ்வொரு வீதிக்கும் ஒரு வாசனை இருக்கும்.
 
பிளைவுடு கடை, இரும்பு பைப்பு கடை, பிளாஸ்டிக் சாமான் கடை, எலக்ட்ரிக்கல் சாமான் கடை, டைல்சு கடை, புத்தகக்கடை, பூக்கடை, ஹார்டுவேர் கடை, அண்டர்வேர் கடை, துணிக்கடை, தூபக்கடை, சாக்கடை, பேக் கடை, கேக்கு கடை, டீ கடை, பெயிண்டு கடை, பொட்டிகடை, போட்டோக்கடை, ஸ்டிக்கர் கடை, ஸ்பீக்கர் கடை, பழக்கடை, பட்டாணிக்கடை, பரோட்டாக்கடை, பாவாடைக்கடை, சிடி கடை, பீடி கடை, கண்ணாடிக்கடை அதுக்கு முன்னாடியும் கடை, டாஸ் மாக் அதுக்கு அடுத்தாப்புல சங்கு மார்க்கு.


அரிசி மண்டி, புண்ணாக்கு மண்டி, எண்ணை மண்டி, பழக்கமிஷன் மண்டி...

எல்லாச் சாமானையும் ஏத்திட்டுப் போக தினுசுதினுசா வண்டி....

இப்படிப்பட்ட மதுரைக்குள்ள போக உங்களுக்கு மனசுவரல??

வாங்க வடக்குமாசி வீதிக்குள்ள... ம்ம்ம்... இதான்ணே எங்கடை... சும்மா உள்ள வாங்க. பரவாயில்லைணே செருப்போடையே வாங்க....


டேய் முருகா... அண்ணனுக்கு அந்த ஸ்டூலை எடுத்துப்போடு...

அண்ணே அப்புடியே ஓரமா உக்காந்து எங்க பொழப்பு எப்புடி ஓடுதுன்னு பாருங்க... உங்களுக்கும் பொழுது போனது மாதிரி இருக்கும்.

முருகா எல்லாரும் டீ சாப்டிகளாடா?

இன்னும் இல்லைண்ணே...

சரி... எல்லாருக்கும் டீ சொல்லு... அண்ணனுக்கும் சேர்த்து... அண்ணே டீயா, காப்பியாண்ணே?

அண்ணனுக்கு காப்பியாம்டா முருகா... நல்லா ஸ்ட்ராங்கா போடசொல்லு...

டேய் குமாரு, நம்ம மினிடாரை கடை வாசல்ல போடாதைன்னு எத்தனை தடவைடா உனக்கு சொல்றது? ரோட்டுக்கு அந்த சைடு பார்க்கின் பக்கமாப் போட வேண்டியதுதானே... இங்குன போட்டீன்னா ரோட்டுல போறவன் எல்லாம் ட்ராபிக் ஆகுதுன்னு பூல் பூல்னு ஆரனடிச்சிட்டு போவான். பெரிய தலைவலிடா...

இல்லைண்ணே.... இந்த சத்தவுடத்துக்குள்ள எடுத்து அங்கிட்டு போட்றேன்...
டேய் என் செல்போனு அடிக்குது பாரு... எங்க குடோனுக்குள்ள வச்சிட்டம்போல எடுத்துட்டு வா... யாருன்னு பாரு...


இந்தாங்கண்ணே செவகங்கை பாலாண்ணே அடிக்கிறாரு...

ஹலோ அண்ணே சொல்லுங்கண்ணே... ஆமாணே கடையிலதான் இருக்கேன்... வாங்க வாங்க... இங்கதான் இருப்பேன். இப்ப எங்க நிக்கிறீக?... ஓ சரி... சரி... அந்த வேலையை முடிச்சிட்டு வாங்க... வாங்க... ஓகேண்ணே.. பை...

ஏண்டா... நேத்து ராத்திரி குஜராத்துல இருந்து கக்கூஸ் கோப்பை லோடு வந்துச்சே... எல்லாத்தையும் பத்தரமா எறக்கீட்டிகளா? எத்தனை ஒடைஞ்சுச்சு?

எறக்கியாச்சுண்ணே... இந்த தடவை அவ்வளவா ஒடசல் இல்ல...

சேட்டு கெடக்கமாட்டானே... இன்னைக்கே காசுக்கு போன் அடிச்சிருவானே....! முருகா இன்னொரு ஸ்டூலை எடுத்து இங்குட்டு போடு... செவகங்க பாலாண்ணே வாராரு... அண்ணே அண்ணே வாங்கண்ணே... எப்புடி இருக்கீக?

நான் நல்லாத்தான் இருக்கேன் மொதலாளி... நீங்க எப்புடி இருக்கீக?

எங்கண்ணே ஒரே அலச்ச... அதான் போனவாரங்கூட கலெக்சனுக்கு வரல... அதுனால வேற பணம் பூராம் மொடங்கி கெடக்கு... ஒருவாரம் தேங்கிப்போனாலே பெரட்டல் உருட்டலுக்கு ஆகமாடேங்குதே... என்னணே ஹார்ட்வேர் சரக்கெல்லாம் ஆர்டர் போட்டாச்சா?

முருகா பாலாண்ணே டீ சாப்புடமாட்டாரு... நிறைய சிரப் ஊத்தி ஒரு சர்பத் போட்டு வாங்கிட்டு வா...

ம்ம். இப்பத்தாண்ணே ஜெயபுஷ்பத்துல போட்டுட்டு வாரேன். அப்புடியே உங்களை பாத்துட்டு, உங்க கடையில கொஞ்சம் படம்போட்ட டைல்சும், அஞ்சாறு கக்கூஸ் கோப்பையும் ஆர்டர் போட்டுட்டு போகலாம்னு வந்தேன்.

நல்லதுண்ணே... நீங்க மூணு நாளைக்கு முன்னாடி சொல்லிருந்த பாத்ரூமுக்கு போடுற ஆறுக்காறு கோல்டன் பிரவுன் டைல்சும் பத்து பெட்டி ரெடியா இருக்குண்ணே... ஆர்டரை சொன்னா, ஒண்ணா இன்னைக்கு சாயந்தரமே உங்க ஊரு ரபீக் ராஜா லாரி சர்வீசுல போட்டு விட்டுரலாம்.

ரொம்பவெல்லாம் ஒண்ணுமில்லண்ணே கிச்சன்-ல ஓட்டுறதுக்கு ஃப்ரூட்ஸ், வெஜிட்டபில்சு படம் போட்ட டைல்சு இருவது இருவது பீசும், புதுசா வந்துருக்குல்ல கண் திருஷ்டி படம் அதுல ஒரு பத்து பீசும் போடுங்க... அப்புடியே வெஸ்டன் டாய்லட்டு கோப்பை மாடில வைக்கிற மாடல் மூனும், தரையில வைக்கிறது மாதிரி ஒரு அஞ்சும் சேத்து போடுங்க...

சரிண்ணே வேற வேற கலர்ல கலந்து போட்டுடுறேன். அண்ணே, இப்ப புதுசா சிம்ரன் டிசைன் பாத்ரூம் வால்டைல்சு வந்திருக்குண்ணே.. அதுல ஒரு பத்து பீசு போட்டு விடவா...?

அட போங்கண்ணே... இன்னும் எங்க ஊருபக்கம் பாத்ரூம்ல வால்டைல்சு போடுறதுக்கே ரெடியாகமாட்டெங்கிறாய்ங்க... இதுல வேற சிம்ரன் டிசைனு.. அதெல்லாம் வேணாம்னே...

இருங்கண்ணே போன் அடிக்குது... ஆஹா சேட்டு அடிச்சிட்டானே... "ஹான் ஜி.. போலியே ஜி... அச்சா ஹே... கேசா ஹே... ம்ம்ம் ஆகையா... ஆகையா... மணி??... யா ரெடி ஹே... ரெடி ஹே... ஹமாரே செக்... கல் கிளியர் ஹோஹையா... அச்சா... அச்சா... ஓகே சேட்ஜி... ஓகே.. பை...". சேட்டாய்ங்க ரொம்பத் தெளிவா இருக்காய்ங்கண்ணே... சரக்கை அனுப்பிட்டு உடனே காசுக்கும் போன் அடிச்சிர்றாய்ங்க...

இந்தாங்கண்ணே சர்பத்து...

பார்றா முருகா... உங்க மொதலாளி எங்கிட்ட இருந்து வசூல் பண்ணுறதுக்காகவே... ஹிந்தி எல்லாம் பேசுறாரு... ஹஹா...ஹாஹா...

இல்ல பாலாண்ணே... உங்க நக்கலு இருக்கே... யப்பா சாமி... ஆனா, ஒண்ணுணே போனவாரமும் வசூலுக்கு லயனுக்கு போகததால பணத்துக்கு என்னடா பண்ணுறதுன்னு கையை பெசஞ்சுகிட்டு இருந்தேன்... கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்தது மாதிரி நீங்க வந்தீங்க... ஹாஹா... ஹாஹா... வேற என்னணே பண்ணுறது... இப்புடித்தான் பொழப்ப ஓட்டவேண்டியதா இருக்கு... இல்லையினா இந்த மதுரையில நம்மளும் ஒரு வியாபாரியா ஓட்ட முடியுமாண்ணே?உங்களுக்கே தெரியும். என்னோட கஸ்டமர்கள் எங்கிட்ட இல்லாத பொருளை கேட்டாக் கூட நான் இங்க மதுரையில இருந்து வாங்கி அனுப்பி விடுவேன். அதுல நமக்கு லாபமெல்லாம் வேணாம்ணே... அந்த காசு ரெண்டு நாளைக்கு நம்ம கையில உருண்டு பெரண்டா போதும். ரொட்டேசனுக்கு ஆகிப்போயிருதுல்ல... அது போதும் நமக்கு.


ஆமா ஆமா ஞாபகம் இருக்கு... நான் மொத மொத உங்ககிட்ட அந்த மாதிரி வேற சரக்கு கேக்கும்போது அனுப்பி விடுறேன்னு சொன்னீங்க. என்ன என்ன பொருள்தான் நீங்க விக்கிறீங்கன்னு கேட்டதுக்கு, "மனுசனை தவிர மத்த எல்லாம் விப்பேன்னு" குசும்பா சொன்னீங்க.

ஆமாண்ணே அப்புடி பண்ணலையினா எனக்கு ஏதுண்ணே இந்தக்கடை? கூலிக்கு இன்னொருத்தர்கிட்ட வேலை பாத்துக்கிட்டு இருந்த எனக்கு, இப்புடி ஒழைக்காம இருந்திருந்தா எப்புடி இந்த ஸ்தானம் கெடைக்கும்? நீங்களே சொல்லுங்க?

சரிண்ணே நான் கெளம்புறேன்... நம்ம அயிட்டங்களை இன்னைக்கு ராத்திரியே ரபீக் ராஜா லாரி சர்வீசுல ஏத்திவிட்டுருங்க. போய்ட்டுவாறேன்.


போயிட்டுவாங்க பாலாண்ணே... நான் அனுப்பிவிட்டுறேன்... டேய், பாலாண்ணே சரக்கை இன்னைக்கு ஏத்திவிட மறந்துராதீகடா..

அடடே! நீங்க வேற ஒக்காந்து என் வாழ்க்கையை பாத்துகிட்டு இருந்தீகளே! ஒன்னும் போரடிக்கலையே? ஆமாணே உழைப்பும் இந்த வாய்ப்பேச்சும் இருந்தாத்தான் முன்னுக்கு வரமுடியுது... இந்த மதுரையிலன்னு இல்லண்ணே எல்லா ஊர்லயும் இதான் நெலம... நீங்க வேண்ணா இன்னொரு டீ சாப்புடுரீகளா? என்னது கெளம்புரீகளா? சரிண்ணே போய்ட்டு வாங்க. இன்னொரு நாள் பாப்போம்.Monday, June 7, 2010

களவாணித்தனமா கல்வி விற்போம் / வாங்குவோம் வாங்க...

நம்ம நாட்டுல தான் வாழ்க்கையையும், உடல் நலத்தையும் சீர்குழைக்கும் மதுக்கடையை அரசு ஏற்று நடத்துது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான கல்வியை மதுக்காய்ச்சியவர்கள்(ளும்) விற்கிறார்கள் அப்படின்னு நாம சொல்லி நம்மளே நம்ம தலையை சொறிஞ்சு சிரிச்சுக்கிட்டு போயிடுவோம். வேற என்னா பண்றது... நம்மளால முடிஞ்சது அதுதான் அப்படின்னு நம்ம கையாலாகாத தனத்தை நாமளே மெச்சிக்கிட்டு போயிடுவோம்.

ஒவ்வொருத்தருக்கும் நமது பிள்ளைகள் எதிர்காலத்துல நிறைய ச(ம்பா)திக்கனும்னு நினைக்கிறதுல தப்பே இல்லை. அது பேராசை-னு சொல்ல யாருக்கும் மனசு வராது. இதை சாதகமா தனியார் கல்வி வியாபாரிகள் பயன்படுத்திக்கிட்டாங்க. மிகச்சிலரைத் தவிர மற்றவங்க யாரும் இதை சேவையாக பண்ணுவது கிடையாது. இதில் வரும் இலாபங்களைக் கணக்கில் கொண்டே, இதற்கான உரிமம் பெறுவதற்கு கோடி கோடியாகக் கொட்டியும், தேவைப்பட்ட அளவு கூட்டியும் (பணத்தை) நமது அரசியல்வியாதிகள் மற்றும், சம்பத்தப்பட்ட அரசு (சர்வா)அதிகாரிகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

வியாபாராத்துல ஒரு யுக்தி உண்டு. கொஞ்சம் தரம் குறைவான ஒரு பொருளையும், கொஞ்சம் தரம் கூடிய பொருளையும் வைத்துக்கொண்டு, இரண்டிற்கும் உற்பத்தி செலவு மிகுந்த வித்தியாசம் இல்லாதிருப்பினும், அந்த தரம் கூடிய பொருளை மிக மிக விலை வித்தியாசத்துடன் விற்பார்கள். அதே யுக்தி கல்வி வியாபாரமாகிவிட்ட இந்த காலத்தில் பயன்படுத்தப்படுகிறதே என்ற வருத்தம் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்டு.

வீட்டுக்கு வாங்குற பூட்டுல இருந்து, விருப்பத்துக்கு வாங்குற ஆடைகள் வரை Branded பார்க்கும் நம் மக்களின் மனநிலைக்கு, தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை குறித்த பயம் இருப்பதில் நாம் அதிர்ச்சி அடைய முடியாது. அடையவும் கூடாது.  இந்த விருப்பத்தை வியாபாரமாக்கி கொள்ளை லாபத்தில் சுகபோக வாழ்வில் குளிர்காயும் குள்ள நரிகளுக்கு தூபம் அனைத்து ஆட்சிகளிலும் போடப்படுவது கண்டனத்துக்குரியதே. இதில் கண்டிக்கவும், தண்டிக்கவும் பட வேண்டியவர்கள் தனது ஆசிரியர் பணியை கடமையாகச் செய்யாமல், கடமைக்காகச் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனைகளை செயல்படுத்த முயலாமல் / முடியாமல், பெரும் பதவிகளில் பகட்டாகத் திரியும் அதிகாரிகளும் தான்.

பல அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கும் போதிய அடிப்படைத் தேவைகளை செய்து தராமல் இருப்பதற்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் ”எனக்கென்ன வந்தது” என்று பல காரணங்களை உருவாக்கிக் கொண்டும், காரணமே இல்லாமல் தவிர்த்துக் கொண்டும் வருபவர்களுக்கு நாம் என்ன பெயர் சூட்டலாம்? எப்படி அவர்கள் தலையில் குட்டலாம்? அதே நேரம் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த இடங்களில், யாரும் பின் நின்று தங்களை கண்காணிக்கவும், மேய்க்கவும் தேவையற்று சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் என்னோடு ஒத்த கருத்துள்ள நண்பர்கள் சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 

தம் பணியை மறந்தவர்கள் கொஞ்சமேனும் சுரணையோடு இருங்களேன். உங்களிடம் அல்லது உங்கள் ஆளுகையின் கீழ்வரும் பள்ளியில் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க உங்களுக்கு மனம் வராததற்கு காரணம் நீங்களும் தான் என்பதில் என்றேனும் வெட்கப்பட்டிருக்கிறீர்களா? கலைத்துறை என்ற பெயரில் திரை விலகும் முன்னே ஆடை விலக்கி நல்லவளாக நடிக்கும் நடிகைக்கு உள்ள அங்கீகாரம் நல்லாசிரியர்களுக்கு கொடுக்காததற்கு சம்பந்தப்பட்டவர்களின் பதில் என்ன? தமிழில் என்ன கருமாந்திரத்தையாவது பெயராக வைத்துவிட்டு கழிசடைகளை எங்களுக்கு கற்பிக்கும் கழிவறை சினிமாக்களுக்கு கொடுக்கும் வரிவிலக்கை ஏன் எமது அரசு நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு கொடுக்க என்றுமே முன் வருவதில்லை. அங்கீகாரம் செய்யப்படவேண்டும் தானே?

நல்ல கல்வியை அனைவருக்கும் தந்துவிட்டால், எங்கே எல்லோரும் விழித்துக் கொள்வார்கள் என்ற உங்களின் அச்சத்தை வெளிப்படையாக உங்களால் ஒத்துக்கொள்ள முடியுமா? இந்த கல்வி வியாபாராத்தை ஆங்காங்கே, சிறுசிறு போராட்டங்கள் மூலம் தெரிவித்த பெற்றோர்களுக்கு நமது அரசும், அரசு அதிகாரிகளும் வாக்கு எனும் பேரில் கொடுப்பது பேச்சுவார்த்தை எனும் பேரீச்சம்பழம்... உள்ளெ பெரிய கொட்டையுடன். அவ்வப்போது கண்துடைப்பாக அரசு போடும் கட்டளைகளுக்கு, வியாபாரிகள் உடனே நீதி மன்றம் செல்வதும், தடைபெறுவதும் கேலிக்கூத்தான செயல்தான்.   நிதிக்கும் நீதிக்குமுள்ள சம்பந்த உறவு அவர்களுக்குத் தெரியாதா என்ன?

அரசியலே சாக்கடையாகக் கிடக்கும்போது, அதில் உல்லாசமாகத் திரியும் இவர்கள் சாக்கடையில் நெளியும் புழுக்களாக (நன்றி பதிவுலகம்) இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? பணம் பார்த்த பிணங்கள் என்றும் இறங்கி வராது. ஆனால், எத்தனை அரசு அதிகாரிகள், அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இதை சவாலாக எடுத்து திறம்பட செயல்பட்டு, தமது பள்ளியின் தரத்தை எமக்கு உறுதிப்படுத்த முடியும்? இதில் முழுவதும் பெற்றோர்களைக் குறை சொல்ல முடியாது. யாரும் முழு விருப்பத்தோடு கல்வி வியாபாரிகளிடம் கல்வி வாங்குவதில்லை. 

ஒவ்வொரு தேர்தலுக்கும் தங்களின் கைகளை இந்த வியாபாரிகளை நோக்கி நீட்டும்போது... அரசியல்வாதிகள் எப்படி இந்த வியாபாரிகளின் கைகளை மடக்க முடியும்? சாட்சிகளைக் கொலை செய்யும் இவர்கள் அனைவருக்கும் எப்படி மனசாட்சி உயிராயிருக்கும்? ஏனோ தெரியவில்லை போராடுபவர்கள் மீது மட்டும் இந்த சட்டம் பல கொம்புகளுடன் முடிந்தவரை ஆழமாகப் பாயும். ஆனால் இந்த வியாபாரிகளின் தோள்களில் காதலி போல் இதமாக சாயும். பெரும்பாலும் அரசு இயந்திரங்கள் ஒழுங்காக இயங்காது. ஆனால், எவரேனும் ஒரு அப்பாவிக் கூட்டம் இந்த இயந்திரத்தின் சக்கரங்களில் சிக்கிக்கொண்டால், மிக கொடூரமாக இயங்கி, சக்கையாக முடிந்தவரைப் பிழிந்துவிடும். எப்படி அடுத்தவன் தயாராவான் என்ற பெரும் சப்தத்தோடு.

கல்வித்தரம் நன்றாக இருப்பதாக நாம் மதிப்பெண்களை வைத்து மட்டும் முடிவு செய்துகொண்டே இருப்போம். எப்படி பெரும்பாலான அந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது? எவர் வேறு பள்ளியில் படித்தாலும், அவரின் மதிப்பெண் அதிகாமாக இருந்தால் அவருக்கே தமது பள்ளியில் படிக்க அனுமதி என்று எழுதப்படாத சட்டம் அமலில் இருப்பதை எங்கு போய் முட்டிக்கொள்வது?

பதினான்கு வயதுவரை இலவசக் கல்வி... நல்ல திட்டம்தான். எந்த அளவுக்கு வெற்றி? இலவசம் தானே, இதில் தரம் எதிர்பார்க்க முடியாது என்பது கல்விக்கும் பொருந்துமா? பாலர் பள்ளிகளுக்கே பல லட்சம் கட்ட தயார்நிலையில் இருக்கும் பெற்றொர்களை அந்த முடிவுக்கு இழுத்துச் சென்ற பயம் / மிரட்டல் எது? ஏட்டுச்சுரைக்காய்களாய் வளர உற்சாகமூட்டுவது நம் நடைமுறைகளா? அல்லது அதுதான் இயல்பா / சாத்தியமா? அரசும், அரசுப்பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகளின் நற்கல்விக்கு உத்திரவாதம் தந்தால்... நாம் நமது பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு அப்போதாவது தயாராவோமா? எனும் கேள்விகள் என்னுள்ளும் எழுகிறது. 

பலருக்கும் இந்த கல்வி வியாபாராத்தின் மேல் எரிச்சல் இருந்தாலும், அதை எப்படி எதிர்ப்பது / தவிர்ப்பது / தடுப்பது என்று தெரியாமல் சிலர். தெரிந்தாலும் தலைக்கு மேல் வேலை என சொல்லுவதற்கும் எளிதான காரணம். அல்லது அது தான் நம்மில் பலரின் வாழ்க்கை முறை. என்ன செய்யலாம்? இந்த கல்வி முறையும், வியாபாரமும் ஏழைக்கும் பணக்காரனுக்கும் பெருத்த வித்தியாசத்தை ஏற்படுத்திக்கொண்டே போகிறது. வருத்தம் தான்.

இந்த பதிவும் என்னால் ஆன ஒரு அதிர்வு. பலரும் இந்த அதிர்வுகளை ஏற்படுத்தலாம். இன்னும் விபரம் தெரிந்தவர்கள் தங்களின் பதிவுகள் மூலம் விவரிக்கலாம். மாற்றம் வருமென்ற நம்பிக்கையில் நானும்....

முன்பே அதிர்வு ஏற்படுத்திய அன்பு நெஞ்சங்கள் - மதுரை சரவணன், தருமி இருவருக்கும் நன்றிகள். வாசியுங்கள்.

இந்த பதிவை எழுதத் தூண்டிய தருமி ஐயாவுக்கு நன்றிகள்.Monday, May 31, 2010

பார்மாலிட்டி எனும் சம்பிரதாயம் ...

பார்மாலிட்டி எனும் சொல்லுக்கு சம்பிரதாயம் சரியான சொல்லா?? வேற ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே!

நம்ம ஊர்ல கொஞ்ச ஆளுங்க இருப்பாங்க... எதாவது ஒரு காரணம் சொல்லி சண்டை பிடிக்கிறதுக்கு. அவங்க எதாவது ஒரு வழில நமக்கு உறவுக்காரரா இருப்பாங்க. அதான் கஷ்டம். நட்புகளுக்குள்ள பெரும்பாலும் பார்மாலிட்டிகள் பார்க்கிறதில்ல. அப்படி அதை எதிர்பார்க்க ஆரம்பிச்சா அப்புறம் அது நட்புமில்ல... அந்த நட்பு அத்தோட நமக்கில்ல...

தேவையில்லாத பார்மாலிட்டி எதிர்பார்க்கிற ஆளுங்களைப் பார்க்கும்போது, கோபம் வந்தாலும், இன்னும் மாறாம இருக்காங்களேன்னு ஒரு பரிதாபம் வேற ஏற்படும். எதுக்கெடுத்தாலும் ஒரு குறையைச் சொல்லி குத்தவச்சுருப்பாங்க. அதைக் குத்தமாவே எப்போதும் வச்சிருப்பாங்க.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லம் கிளம்பி ஒரு காரோ, வேனோ எடுத்து எங்கையாவது குலசாமி கோயிலுக்கு போவாங்க... அடுத்த வீதில இருக்கிற உறவுக்காரவங்களுக்கிட்ட சொல்லிட்டுதான் போவாங்க... அவங்க கிளம்பி போனவுடனே, அந்தப் பகுதில இருக்கிற ஒரு வீடு இல்லாமப் போயி... “நாங்களும் அவங்க சொந்தக்காரங்க தானே... பார்மாலிட்டிக்காகவாவது எங்களை கூப்பிட்டு இருக்கலாம்ல... கூப்பிடவேயில்லைங்க...”-னு பொலம்பீட்டு வந்திருவாங்க...

இன்னும் சில ஆளுங்க இருக்காங்க... கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து சொல்லுங்கன்னு அவங்ககிட்ட சொல்லியிருப்பாங்க. ஆனா, அவங்க வேலைப்பளு காரணமாக்கூட பார்த்திருக்கமாட்டாங்க. வேற எங்கையாவாது பொண்ணு அமைஞ்சு, ஒப்புதல் குடுத்திருந்தா... அதைக் கேள்விப்பட்டு... பொண்ணு முடிக்கும்போது என்கிட்ட சொல்லலை...-னு குத்தம் சொல்றது.

கல்யாணப் பத்திரிக்கை எனக்கு கொடுக்கும்போது கவர்ல எம் பேரைப் போடும்போது, பேருக்கு முன்னால ”திரு”-ன்னு போடலை, பேருக்குப் பின்னால “அவர்கள்”-ன்னு போடலை... அதனால அவன் வீட்டு வாசல் மிதிக்கமாட்டேன்னு முடிவு பண்ணுவாங்க. ஆனா, எனக்குத் தெரிஞ்சு இப்பவெல்லாம் நண்பர்கள் தங்களுக்குள்ள இந்த பார்மாலிட்டி பார்ப்பதில்லை. விடு மச்சி நீ பத்திரிக்கையெல்லாம் கூட அனுப்பவேண்டாம். தேதி, மண்டப விபரம் மட்டும் சொல்லு அது போதும் அப்படின்னு பெருந்தன்மையா இருக்காங்க.

ஒரு சில விஷயங்கள்ள அந்த சம்பிரதாய முறைகளையோ, மரியாதைகளையோ எதிர்பார்த்தா சரி. எதற்கெடுத்தாலும் அதையே புடுச்சு தொங்கிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். சின்ன சின்ன விழாக்களை சுருக்கமா செய்யலாம்னு குடும்பத்தார் முடிவு பண்ணிருப்பாங்க. ஒவ்வொரு உறவுக்காரர்களும் எனக்கு சொல்லலை, ஒரு பேச்சுக்கு கூட என்னைக் கூப்பிடலை-னு சொன்னா... அந்த விழா எப்படி சுருக்கமா முடியும்?? அதையும் கொஞ்சம் யோசிக்க வேணாமா??

மற்ற உறவுகளை விடுங்க... அவங்க நம்ம கூட மனவருத்தமா இருந்தா பெரிசா ஒன்னும் நேரடிப்பாதிப்பு இருக்காது. சம்பந்தம் போட்ட இடங்கள்லையும், மருமகள், மருமகன்கிட்டையும் இருந்து இதே பார்மாலிட்டியை எதிர்பார்த்தா, நேரடியா நம்ம மகன் - மருமகள், மகள் - மருமகன் இவர்களது உறவுகள்-ல கூட விரிசல் வரலாம். சம்பந்த உறவுகளிடம் நல்ல உறவு இல்லையென்றால், நம் சந்ததிகளும் உறவுகளை துயரங்களாகவே நினைப்பாங்க.

நான் சில இடங்கள்-ல பார்த்திருக்கிறேன். என் மருமகன்(ள்) எனக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கார்(ள்)... நான் ஊர்ல இருந்து வரும்போது மருமகள் ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேசனுக்கு என்னை வரவேற்க வரலை. நான் குளிக்கிறேன்னு சொன்னேன்... ஒரு பேச்சுக்குக்கூட சுடுதண்ணி போட்டுத்தரவான்னு கேட்கலை... அப்புடி இப்புடின்னு என்னத்தையாவது சொல்லி முக்கி முனங்கி மனசுகள்-ல சஞ்சலங்களை எளிதா ஏற்படுத்திடுவாங்க. இது தேவையாண்ணே??

இப்படி எதாவது குற்றம் கண்டுபிடிச்சுகிட்டே இருந்தா எப்படி மக்களே வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்?? ஒவ்வொருத்தருக்கும் அவரவர் வாழ்க்கை முறை, வசதி, கால அவகாசம் இவைகளைப் பொறுத்து ஒரு வாழ்க்கைத் திட்டம் இருக்கும். அதன்படி சில முடிவுகளின் படி செயல்படுவாங்க. அதன்படி செயல்பட விடுங்க. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

எல்லா எதிர்பார்ப்புகளையும் உதறித்தள்ளிட்டு, உறவுகளைக் கொண்டாட வாங்க சாமிகளா. உங்க புள்ளை குட்டிகளையாவது இந்த பார்மாலிட்டி கருமத்தை விட்டொழிச்சிட்டு வாழப் பழக்கிவிடுங்க. பெரும்பாலான இடங்கள்-ல இந்த பார்மாலிட்டியால உறவுக்கார மாமன், மச்சான்களோட பகையா இருந்துகிட்டு, பழகுகிற நண்பர்களை மட்டும் மாமா, மச்சான்னு கூப்பிட்டு மகிழ்ந்துகிட்டு இருக்கிறோம். நல்ல உறவுகளை நாம் பெற்றிருந்தால், நம்மளோட கடைசி ஊர்வலத்துல எல்லோருமா சேர்ந்து நல்லா நமக்கு பார்மாலிட்டி பண்ணி அனுப்புவாங்க. இல்லையினா, அன்னைக்கும் அவனுகளுக்குள்ள பார்மாலிட்டி எதிர்பார்த்துகிட்டு வீதிக்கு ஒரு ஆளா விலகி நிப்பாங்க...

என்னா அண்ணே, மாமு, மச்சான்ஸ், அக்கா, தங்கச்சி, அத்தாச்சிமார்களே சரிதானே! :-)Friday, May 14, 2010

விளம்பரங்கள் செய்யும் களேபரம்...!!!

விளம்பரங்கிறது ரொம்ப காலமா இருக்கிறது தான். ஆனா, இப்போ அதன் பரிணாமம் பிரமிக்கிற வகையில முன்னேறி இருக்கு. ஒரு விஷயத்தைக் கவனிச்சிங்களாண்ணே? முந்தியெல்லாம் விளம்பரம் வந்தா நம்மள்ல ரொம்பப் பேரு டிவி, ரேடியோவை அமத்திட்டு போய்கிட்டே இருப்போம். ஆனா, இப்போ அதுதான்ணே நல்லாயிருக்கு. ஒரு காலத்துல, நம்ம தூரதர்ஷன்-ல போடுற விளம்பரங்களைப் பார்த்தாலே ராவா சரக்கடிச்சா தொண்டை எப்படி எரியுமோ அது மாதிரி கடுப்பா இருக்கும். அதுனால, பல ஆளுங்க விளம்பர இடைவேளைகள்-ல பண்றதுக்காகவே சில பல வேலைகளை ஒதுக்கி வச்சிருப்பாய்ங்க...

இப்போ பாருங்க கிராபிக்ஸ் மற்றும் பல தொழில் நுட்பங்களாலையும், விளம்பரங்கள்ல வர்ற அழகு தேவதைகள், தேவன்கள் மற்று குழந்தைகளாலையும் விளம்பரங்கள் ரசிக்கிற மாதிரியா வெளிவருது. அட ஆமாண்ணே, விளம்பரங்களுக்கு ரசிகர்கள் இப்போ நிறையப் பேரு இருக்காங்க. என்னா ஒன்னு, சில ஆளுக அதுல வர்ற ஃபிகருக்கும், குழந்தைகளுக்கும் அல்லது கான்செப்ட்டுக்கும் ரசிகரா இருப்பாங்க. சில விளம்பரம் இருக்கும்... எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காதுன்ணே. அவ்வளவு அருமையா எடுத்துருப்பாய்ங்க.

இன்னும் சில விளம்பரம் பார்த்தோம்னு வைங்க, அருமையா மியூசிக் போட்டு அசத்திருப்பாய்ங்க. ஊறுகாய் விளம்பரத்துல இருந்து உள்ளாடை விளம்பரம் வரை சூப்பரா தான்ணே இருக்குது. டிவி-ல வர்ற நிகழ்ச்சிகளை விட இந்த விளம்பரங்கள் தான் நல்லா இருக்குது. ஆனா என்னா, எல்லா விளம்பரத்துக்கும் சம்பந்தமே இல்லாட்டியும் ஒரு அழகான ஃபிகரை நடமாடவிட்டுருப்பாய்ங்க. அண்ணே, பெண்ணியம், பெண்களை அழகு பதுமைகளா மட்டுமே பயன்படுத்துறாங்க அப்புடின்னு பேசுறவங்களுக்கு இந்தப் பதிவுல இடம் இல்ல. நானே அந்த டவுசரை (எத்தனை நாளைக்குத் தான் முகமூடி-ன்னு எழுதுறது/) கழட்டி வச்சிட்டுத் தான் இதை எழுதுறேன். அவங்களை விளம்பரத்துல பயன்படுத்துறதை தவிர்க்கனும்னா சம்பந்தப்பட்ட அம்மணிகள் தான் முடிவு பண்ணனும்.

இந்த விளம்பரங்கள் மூலமா, பல ஜாலங்கள் பண்ணி நம்மை மயக்கி நம்மளையும் அந்தப் பொருளை பயன்படுத்த வைக்கிறது தான் அவங்களோட நோக்கம். ஆட்டா மாவுல இருந்து மூஞ்சில போடுற புட்டாமா(பவுடர்) வரைக்கும் இந்த வியாபார யுக்தியில வெற்றி பெற்றது தான். இவங்க பண்ணுற களேபரத்துல, அக்குள்ள ஆக்ஸ் ஸ்ப்ரே அடிச்சுகிட்டு எத்தனை பேருடா ம்ம்ம்-னு மயங்கி வாராளுகன்னு நம்ம இளசுக திரும்பி பாக்குதுங்க. சோப்பு, பேஸ்ட்டு, வீடு கழுவுற ஆசிட் இப்புடி எல்லா விளம்பரத்துலையும் காட்ற புழு நம்ம கண்ணு முன்னாடி அப்பப்ப வந்து பீதியை கிளப்பும். அந்த புழுவை இந்த சரக்குகளாலை தான் விரட்டி அடிக்க முடியும்னு நம்பி நம்மளும் வாங்குவோம்.


முக்கியமா இந்த விளம்பரங்கள் எல்லாம் நம்ம வீக் பாய்ண்ட்டை தெரிஞ்சுகிட்டு விளையாடுவாய்ங்க பாருங்க அது தாங்க டாப்பு. நம்ம ஊரு பொம்பளைப் புள்ளைகளும், விளம்பரத்துல காட்டுற க்ரீமுகளை அப்பிக்கிட்டு அப்புடியே மெதுவாத் தடவிப் பார்ப்பாங்க... உடனே ஒரு பறவையோட இறகு அவங்க மேனில சறுக்கி விளையாடுற சீன் ஞாபகம் வரும். அப்புறமா தண்ணில கழுவிப்பார்த்தா தான் உண்மைநிலை தெரியும். நம்ம பயபுள்ளைக 300 ரூபாய்க்கு ரேசர் செட்டு வாங்கி தாடியை சவரம் பண்ணிட்டு, ஒரு கண்ணு புருவத்தை உயர்த்தி கண்ணாடில அப்புடியும், இப்புடியுமா மூஞ்சியப் பாப்பாய்ங்க பாருங்க... அட அட அடா கண்ணாடிக்கே காதல் வந்துரும்ணே... 3 ரூபாய்க்கு வித்த பிளேடு-ல சவரம் பண்ணின மூஞ்சிக்கு இப்ப 300 ரூபாய்க்கு பிளேடு வாங்க வேண்டியது இருக்கேன்னு மனசு நினைக்குமா என்ன?

இன்னொன்னை கவனிச்சிங்களா? நவீன யுகத்துல எல்லா ஐட்டங்கள்-லையும் ஆம்பளைக்கு வேற, பொம்பளைக்கு வேறைய்ன்னு பிரிச்சு வச்சுடாய்ங்க. பழைய காலத்துல உடம்புக்கு, மூஞ்சிக்கு, தலைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து துவைக்கிற சவுக்காரக் கட்டிய போட்டுத் தேய்ச்சு குளிச்சிட்டு போய்கிட்டு இருந்தாய்ங்க. இப்ப பாருங்க, மூஞ்சிக்கு ஃபேஷ் வாஷ் லோஷன், உடம்புக்கு சோப்பு, சோப்பு போட்டு குளிச்சதுக்கு அப்புறம் பாடி லோஷன், தலைக்கு ஷாம்பு, அது முடிஞ்ச உடனே கண்டிஷனர்... சோப்பை உடம்புல போட்டு தேய்க்கிற பஞ்சு... அப்புடின்னு பாத் ரூமுக்குள்ளே அவங்க கடைச் சரக்கு எல்லாம் விளம்பரம் மூலமா கொண்டுவரப்படுது. இந்த மாதிரி ஐட்டங்களால இப்பவெல்லாம் பாத் ரூம்-ல நின்னு குளிக்கவே இடம் இல்லைண்ணே. இதுல வேற, சில அந்த துறையால் பரிந்துரைக்கப்பட்டது... அண்ணாத்துரையால் எடுத்துரைக்கப்பட்டதுன்னு நொனைநாட்டியம் வேற...


ஊருக்கு எங்கையாவது கிளம்பிப்போனா, முந்தியெல்லாம் சைடு ஜிப்புல இருந்த இந்த ஐட்டம் பூராம் இப்ப பெரிய ஏரியாவுக்கு ஷிஃப்ட் ஆயிடுச்சுண்ணே... என்னாது ட்ரெஸ்ஸா??... போங்கண்ணே எந்த காலத்துல இருக்கீங்க... ஒரு ஜீன்ஸ், ஒரு டி-ஷர்ட்-ல தானே ஒரு மாசம் ஓடிகிட்டு இருக்கு. அதுக்கு சைடு ஜிப்பே ஜாஸ்தி-ண்ணே. விளம்பரத்துல வர்ற பொண்டாட்டி, குடும்பம், வீடு மாதிரி நமக்கும் அமையணும்னு கனவு வேற கண்டுக்கிட்டே இருப்போம். அவ்வளவு அழகா இருக்கும்ணே எல்லாம். இதைத் தான் அப்துல் கலாம் ஐயா சொல்லிருப்பாரோ...? இந்த மாதிரி விளம்பர யுக்திகளாலதான் நுகர்வுக் கலாச்சாரம் வளர்ந்துச்சு. உஷாரா இருந்துக்கங்க அண்ணே... இந்தக் கலாச்சாரம் பல பேருடைய பர்சை பதம் பார்த்திருக்கு. பண சேமிப்பையெல்லாம் பஞ்சராக்கிருக்கு.

உள்ள விளம்பரம் பத்தாதுன்னு ஒரு டிவி நிறுவனம் கண்ட கண்ட கருமாந்திரத்தையும் கதையினு ஜோடிச்சு படம் எடுத்து இருபது நிமிஷத்து ஒரு தடவை விளம்பரப் படுத்துவாய்ங்க பாருங்க... ங்கொக்கா மக்கா... சாவடிச்சிருவாய்ங்கண்ணே. அவங்க படம் ஓடுதோ ஓடலையோ... இவனுக விளம்பரத்தை பாத்தீங்க உங்களுக்கு நிக்காம ஓடும். சூதானமா பொழைச்சுக்கங்க...Friday, April 30, 2010

பள்ளிக்கூடத்துல பேரு சேக்கனும்...

கிராமத்துல பொறந்து, அங்கையே படிச்சு வளந்த வாழ்க்கைய நெனச்சுப் பாத்தா... அந்த ஊரு வயக்காடுக மாதிரி ரொம்ப பசுமையாத் தான் இருக்கு.

பயலுக்கு நாலு வயசாச்சு, அவனைக் கொண்டுபோய் பால்வாடியில சேத்துவிட்டா அவம் பாட்டுக்க போயி, அங்க போடுற சோத்த தின்னுப்புட்டு, அங்க வர்ற புள்ளகுட்டிகளோட வெளையாண்டுட்டு, அங்கிட்டே சத்த தூங்கிட்டு சாயந்தரமா வருவான். அதுக பாட்டுக்க இப்புடி தெனோம் போயிட்டு வந்தா, நம்ம காடு கரைக்கு போகலாம், வீட்டு வேலைகளைப் பாக்கலாம். இந்த வருஷம் பால்வாடி ஆயா பாப்பா அக்காகிட்ட சொல்லி தெனமும் இவனையும் கூட்டிகிட்டு போக சொல்லணும்.

தம்பி இன்னையிலருந்து நீ, பட்டவரு பேரன் ராபட்டு, பரிபூரணம் பேரன் ஜோசப்பு கூட தெனமும் பால்வாடிக்கு போகணும். தெனமும் காலையில பாப்பாக்கா வந்து உங்கள கூட்டிகிட்டு போவாக. போகும்போது ரோட்டு ஓரமா போகணும். பஸ்சுகிஸ்சு வரும். பாத்து போகணும். அங்க போயி யாருகூடயும் சண்டைபோடாம வெளையாண்டுட்டு, சாப்புட்டுட்டு சாயந்தரம் எல்லாரோடவும் சேந்து வீட்டுக்கு வந்துரு. சரியா?

இது மாதிரி தெனமும் நாங்க கொஞ்சப்பேரு பால்வாடிக்கி போய்ட்டு வந்துக்கிட்டு இருந்தோம். தூக்கிகிட்டு போறதுக்கு எந்த புத்தகமும், பைக்கட்டும் கிடையாது. நடந்து போகும்போதே, ரோட்டோரம் போற ஓந்திய (ஓணான்) கல்லைவிட்டு எறிஞ்சு வெளையாண்டுக்கிட்டு போறது வழக்கம். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பழக்கம் இருக்கும். ஒருத்தன் லூசா இருக்குற டவுசர ஒரு கையாள புடிச்சுகிட்டும், இன்னொருத்தன் ஒழுகி முட்டை விடுற மூக்கை அப்பப்ப உறிஞ்சிகிட்டும், சட்டை காலரை வாயில வச்சு கடிச்சு உறிஞ்சிகிட்டும் போவானுக.


அங்க பால்வாடி டீச்சரு, தெனுமும் வகை வகையா "அம்மா இங்கே வா வா..., தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை....," போன்ற பாட்டுகளச் சொல்லிக்குடுப்பாங்க. வெளையாடுரதுக்கு பொம்மையோ, விளையாட்டு சாமான்களோ, பிளே க்ரௌண்டோ எதுவும் இருக்காது. ஒரே ஒரு நீண்ட ஹால் தான் எங்க பால்வாடி. வீதியோரம் விறகடுப்ப பத்த வச்சு எல்லாப் புள்ளைகளுக்கும் ஒண்ணாப் போட்ட சோறு (காய்கறி, கொழம்பு, சோறுன்னு தனித்தனியா இல்லாம) பாப்பா அக்கா சமைக்க ஆரம்பிச்சுருவாங்க.


அதே வீதில கொட்டாச்சில (தேங்காய் ஓடு) மண் அள்ளி விளையாடுறது தான் எங்க பொழுதுபோக்கு. அப்புடியே அங்க சாப்புட்டுப்புட்டு, அந்த ஹால்ல படுத்து தூங்க சொல்லுவாங்க... நாலு மணிக்கு எழுப்பிவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவாக. இப்புடியே ரெண்டு வருஷம் ஓடும்.

ஏங்க இவனுக்கு இந்த வருசத்தோட அஞ்சு வயசு முடியுது. வர்ற ஜூன் மாசம் இவன பெரிய பள்ளியோடத்துல பேரு சேக்கனும். நீங்க ஹெட்மாஸ்டரையும், ஒண்ணாங்கிளாஸ் அம்மாங்களையும்(கிறிஸ்டியன் சிஷ்டர்களை அம்மாங்க-ன்னும் கிராமத்துல சொல்லுவாங்க) பார்த்தா சொல்லி வையுங்க.

சரிடி சொல்லிருவோம். அடுத்த வருசமும் இந்த சளி முழுங்கி(காறி உமிழும்போது சளி வந்தா முழுங்குற பழக்கம் இவங்களுக்கு) அம்மாங்க தான் ஒண்ணாங்கிளாஸ் டீச்சரா??

அமாங்க, இன்னும் மூணு வருசத்துக்கு இவுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் இல்லையாம். நீங்க வேலைக்கு போய்ட்டு வரும்போது இவனுக்கு ஒரு பிளாஸ்டிக் சிலேட்டும், ஒரு சப்பட்டைகுச்சி பாக்கெட்டும், ஒரு உருண்டைகுச்சி பாக்கெட்டும், இதையெல்லாம் கொண்டுபோக ஒரு பையும் வாங்கிட்டு வாங்க. ம்ம்ம்... நரம்புப் பைய்யா வாங்கிக்கங்க. அதுதான் தாங்கும்.

சரி சரி வாங்கிட்டு வாரேன். ஆமா, பள்ளியோடத்துல சேக்கும்போது எல்லாருக்கும் முட்டாயி குடுக்கணுமே அதுவும் வாங்க வேணாம்??

அதை இப்பவே வாங்க வேணாங்க. இன்னும் பள்ளியோடந்தொறக்க ரெண்டு வாரம் கெடக்கு. முட்டாயி பாக்கெட்டு மட்டும் நம்ம சத்துனாரு கடையில வாங்கிக்கலாம். அது சும்மா அஞ்சு பைசா புளிப்பு முட்டாயி வாங்கிக்கலாம்.

இந்த வருஷம் என்னைய பெரிய பள்ளியோடத்துல பேரு சேக்கப் போறாங்களே! ஊர் பூராம் தம்பட்டம். சேரும்போதே அனைத்து படிப்புகளையும் முடித்துவிட்டது போல பெருமை. ரெண்டு வாரம் கழித்து அந்த நாளும் வந்தது.

இன்னைக்கு பொதன்கிழமை... நல்ல நாளு. இருங்க இவனை குளிப்பாட்டி பொறப்பட வைக்கிறேன். ரெண்டு பேருஞ்சேந்து போயி இவனை சேத்துவிட்டுட்டு வருவோம்.

சிஸ்டர்... இவன் எங்க மூத்தவன். இவனை இன்னைக்கு பள்ளியோடத்துல பேரு எழுதீரலாம்னு இருக்கோம்.

ரொம்ப நல்லதும்மா. இப்ப இவனுக்கு வயசு என்ன??

வர்ற ஜூலையில அஞ்சு முடிஞ்சு ஆறாகுது.

இப்ப என்ன ஜூன் மாசந்தானே ஆகுது. அஞ்சு வயசு முடிஞ்சாத்தாநேம்மா இங்க சேக்க முடியும்.

இல்ல சிஸ்டர்... இந்த ஒரு மாசத்துக்காகப் பாத்தம்னா ஒரு வருஷம் லேட் ஆயிடும்.

எங்க இவன் வலது கைய தலைக்கு மேல கொண்டுவந்து இடது காதை தொட சொல்லுங்க...

தம்பி சிஸ்டர் சொன்னது மாதிரி தொடு. எங்க இன்னும் கொஞ்சம் எட்டி தொடு... ம்ம்ம்... அப்புடித்தான். அய் நடுவிரலு காதை தொட்டுருச்சு டா. சிஸ்டர் இந்தா தொட்டிருச்சு.

ம்ம்ம்... வாடா உம் பேரு என்ன? ஒழுங்கா படிப்பியா?? வாத்தியார் மயன் மக்குன்னு இருந்துறமாட்டியே... ஒழுங்காப் படிக்கணும் என்ன??

சரி சிஸ்டர்.

வாங்க ஹெட்மாஸ்டர்கிட்ட நான் சொல்லுறேன். சார்... இந்த பையனையும் பேர் சேத்துக்கலாம். இவனுக்கும் அஞ்சு வயசு முடியுது.

(இப்பவெல்லாம் இவ்வளவு எளிதா, மலிவா பள்ளியில் சேர்க்க முடியுமா?? இரண்டரை வயது பிள்ளைகளுக்கே பள்ளிகட்டணம் கட்ட கடன் வாங்கவேண்டிய நிலமையில இருக்கு நம்ம கல்வி அமைப்புகள்... பேஷ் பேஷ்...)Wednesday, April 21, 2010

உள்குத்து கவிதைகள் - 7

கார்ப்பரேட் சாமிகள்

கருவறையில்
கரு வரையில் படமெடுத்தாலும்
கார்ப்பரேட் சாமிகள்
கர்ப்ப ரேட் கேட்டாலும்
காவியிடமே - கடவுளின்
சாவி உள்ளதென
கூவி கூடிடும் - பாவிகளே
நம்மா(ட்)க்கள்!


அகநானூறாயிரம்

அகநானூறு படைத்தவன்
படைத்திருப்பான்....
அகநானூறாயிரம் - நம்
காதலைப் பார்த்திருந்தால்...!!!


மரண அறிவிப்பு

தன் முனையில் கருமையேற்றி
தன்முனைப்பில்
தனக்குத் தானே
மரண அறிவித்தல் ...
மின்விளக்கு!