Saturday, March 27, 2010

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்) - 3

பாகம் -1 மற்றும் பாகம் - 2 - ஐப் படித்துவிட்டு வாருங்களேன்!சில அதிர்ச்சிகரமான மற்றும் சுவாரஸ்யமான புள்ளி விபரங்களுடன் இந்த பதிவு...

அமெரிக்கர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் மாமிசம் உண்ணுவதைத் தவிர்த்தால், அமெரிக்க சாலையில் ஓடும் 8 மில்லியன் கார்களை ஒரு நாள் நிறுத்தியதற்கு சமம்.

உலகில் உள்ள அனைவரும் மாமிசம் உண்ணுவதைத் தவிர்த்தால், 80% உலக வெப்பமயமாதலுக்கான தீர்வு கிட்டிவிடும்.

உலக அளவில் உள்ள 750 மில்லியன் கார்கள் ஒரு வருடத்திற்கு சுமார் 2.25 பில்லியன் டன்கள் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன.

ஒட்டுமொத்த கார்பன்-டை-ஆக்சைடு வெளியீட்டில், 50% -க்கு மேல் தொழிற்சாலைகளால் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக மின் மற்றும் இதர சக்தி (Energy producers) உற்பத்தி தொழில்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

2000 ஆண்டிற்கு பிறகு வருடந்தோறும் சுமார் 7.3 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிவுக்குள்ளாக்கப்படுகின்றன.

வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்தால், உலகின் அனைத்து பனிப்பாறைகளும் உருகி கடல் நீர் மட்டத்தை வெகுவாக உயர்த்திவிடும்.

1970 -களில் உலகில் தோன்றிய வலுவான புயல்களின் எண்ணிக்கை, வருடத்திற்கு வெறும் 8 மட்டுமே. ஆனால், 2000-2004 ஆண்டுகளில், வருடத்திற்கு 18 வலுவான புயல்கள் இவ்வுலகைத் தாக்கியுள்ளன.

ஒரு மனிதன் ஒரு வருடம் முழுவதும் சைவ உணவுகளை மட்டும் உண்டு வந்தால், 3.267 Pounds கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடுவது குறைக்கப்படும். (இது ஒரு வருடம் முழுவதும் ஒரு மனிதன் டிவி, போன், வாஷிங் மெசின், மைக்ரோவேவ் ஓவன், டிவிடி பிளேயர், ரேடியோ, பேன், கணினி, பிரட்டோஸ்டர், ஹேர் ட்ரையர், பிரிண்டர், பிரிட்ஜ், காஃபி மெசின், கேஸ் ஸ்டவ் ஆகியவற்றை உபயோகிக்காததற்கு சமம்) + விலங்குகளுக்கு தானியமிட்டு மாமிசம் வளர்த்து, அந்த மாமிசத்தை உண்ணுவதற்குப் பதிலாக, தானியமாகவே மனிதன் சாப்பிட்டு வந்தால், உலகில் உள்ள 5 மனிதனுக்கு உணவளிக்க முடியும். + மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற 25 உயிர்கள் காக்கப்படும்.

இதே போல, ஒட்டு மொத்த அமெரிக்காவின் மக்கள் தொகையான 301 மில்லியன் மக்களும் 2/3 பங்கு மாமிசம் உண்ணுவதை தவிர்த்தால் = 655 பில்லியன் பவுண்டுகள் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுவது தவிர்க்கப்படுவதோடு + 1 பில்லியன் மக்களுக்கு பசி தீர்க்க முடியும் (இதுவே உலகின் உணவுப்பற்றாக்குறை. ஒட்டு மொத்த மானுடமும் உணவு பெரும்) + 5 பில்லியன் விலங்குகளின் வாழ்வு தவிர்க்கப்படும்.

வருடத்திற்கு 55 பில்லியன் விலங்குகள் உணவுக்காக மட்டுமே பலியிடப்படுகின்றன. அமெரிக்காவில் மட்டும் 10 பில்லியன் விலங்குகள் உணவுக்காக வருடந்தோறும் கொள்ளப்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் 300 மில்லியன் மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகளும், 4 பில்லியன் கோழிகளும் உணவாக்கப்படுகின்றன. கனடாவில் மட்டும் 650 மில்லியன் விலங்குகள் வருடந்தோறும் உணவாக்கபடுகின்றன.

அறிவியலார்களின் கூற்றுப்படி, இந்த உலக வெப்பமயமாதல், இன்னும் 50 வருடங்களில், மக்கள் தொகையில் 150 மில்லியனை குறைத்துவிடும்.

அமெரிக்காவில் உள்ள மாமிசப் பிராணிகளுக்கு வழங்கப்படும் சோயா மற்றும் இதர தானியங்களை மட்டும் கொண்டு, உலகின் 20% (1.4 பில்லியன்) மக்களுக்கு உணவளிக்க முடியும்.

சைவ உணவு பழக்கவழக்கத்திற்கு மாறுவதன் மூலம், உலக வெப்பமயமாதலின் 80% தீரும். உலகின் அனைத்து பகுதிகளிலும் பசி என்ற ஒன்று இருக்காது. உலகில் 85% சோயாவும், 43% அரிசி, கோதுமை, ஓட்ஸ், சோளம் போன்ற தானியங்கள் உபரியாக இருக்கும். பெரும்பாலான காடுகள் பாதுகாக்கப்படும், விலங்குகளிடமிருந்து பரவும் 75% புதிய வகை நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

கீழ்க் காணும் வழிகளில் நாம் நமது பங்கை செலுத்தலாமே!
1) இன்று முதல் மாமிச உணவுகளை உடனடியாக, வெகுவாகக் குறைத்தல் / தவிர்த்தல்.
2) சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின் சக்திகளை உற்பத்தி செய்து கொள்ளுதல்.
3) குண்டு பல்புகள் பயன்படுத்துவதற்குப் பதிலாக Fluorescent பல்புகளைப் பயன்படுத்துதல்.
4) அத்தியாவசியம் இல்லாமல் மின் சக்தியை வீணாக்குவதைத் தவிர்த்தல்.
5) குளிரூட்டிகளையும், குளிர் சாதனப் பெட்டிகளையும் மிகக் குறைவான அளவில் பயன்படுத்துதல்.
6) வாளியில் நீர் பிடித்து குளிப்பதற்கு பதிலாக, ஷவர் குளியல் செய்தல்.
முடிந்த அளவு மரம் நடுதல்.
7) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை முடிந்த அளவு தவிர்த்தல். ஒவ்வொருவருக்கும் தனி வாகனம் பயன்படுத்துவதற்குப் பதிலாக, குழுவாக ஒரே வாகனத்தில் பயணித்தல்.
8) தேவை இல்லாத பயணங்களையும், ஊர் சுற்றுவதையும் தவிர்த்தல்.
9) பொது போக்குவரத்து வசதிகளையே முடிந்த அளவு பயன்படுத்துதல்.
10) Reduce, Reuse, Recycle. (நான் அலுவலகத்தில் நீர் அருந்துவதற்கு உள்ள use and throw cup ஒன்றை மட்டும் அந்த நாள் முழுவதும் பயன்படுத்துவேன். சிலர் ஏளனமாகப் பார்த்தாலும் நான் கவலை கொள்வதில்லை :-) )Friday, March 26, 2010

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்) - 2

பாகம் - 1 முக்கியமானது படிச்சிட்டு வாங்களேன்...


குளோபல் வார்மிங் எனப்படும், இந்த உலக வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகளில் சில
1) காட்டுத்தீ 2) பருவமழை மாற்றம் 3) பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயருதல் 4) பல வகையான விலங்குகள் அழிதல் (மனிதன் உட்பட) 5) சில இடங்களில் மழை இன்மை, சில இடங்களில் மழையின் வெள்ளப்பெருக்கு இன்னும் பலப்பல...

இதைப்பற்றி பேசும்போது நாம் Greenhouse Effects பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். நாம் வாழும் இந்த பூமியானது இயற்கையான காற்று மண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. 150 மில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள சூரியனிலிருந்து வரும் வெப்பமானது முழுவதும் பூமியை அடைவதில்லை. அதில் மூன்றில் ஒரு பகுதியானது வளிமண்டலத்திலேயே(Atmoshphere) தங்கி விடுகிறது. மீதமுள்ள இரண்டு பகுதியான வெப்பம் மட்டும் நம் பூமியில் இருந்தால், பூமியின் வெப்பநிலை (மைனஸ்) -18 டிகிரி செல்சியஸ் மட்டுமே. இந்த வெப்பம் உயிர்கள் வாழ்வதற்கு உகந்தது அல்ல.Greenhouses Gases எனப்படும், நீராவி(Water Vapor), கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் மற்றும் மேகங்கள்(Non-Gas) போன்றவை, பூமியிலிருந்து வெளிப்படும் அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கி மீண்டும் வெப்பமாக வெளியிடுகிறது. இதன் மூலம் புவியின் சராசரி வெப்பநிலை +14 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்து உயிர்கள் வாழ சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. இந்த நிகழ்விற்குப் பெயர் தான் Greenhouse Effects. இந்த Greenhouse Gases ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்த பொது அவை நமக்கு நன்மையளித்தன. இப்போது, நமது வாழ்கை முறைகளின் மூலம் இவற்றின் அளவு பெருமளவு அதிகரித்ததே இந்த குளோபல் வார்மிங்கிற்கு காரணம்.
Greenhouse Effects -ற்கு, நீராவி 36 - 72% -ம், கார்பன்-டை-ஆக்சைடு 9 - 26% -ம், மீத்தேன் 4 - 9% -ம், ஓசோன் 3 - 7% -ம் பங்களிக்கிறது. நமது இயற்கையானது சீரான சுழற்சியைக் கொண்டிருந்தது. மனிதனும், விலங்குகளும் ஆக்சிஜனை சுவாசித்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன(ர்). அதற்கு நேர்மாறாக, தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி பச்சையம் தயாரித்துக் கொண்டு, ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதே போல, கடல் நீர் ஆவியாகி காற்றோடு கலக்கிறது. இந்த நீராவியும், புவியின் வெப்ப நிலையை உயர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த நீராவி, தாவரங்களால் வெளியிடப்படும் ஆக்சிஜனால் மீண்டும் குளிர்விக்கப்பட்டு மழையாகப் பொழிய வேண்டும். ஆனால், நாம் காடுகளை அழித்துக் கொண்டிருப்பதால், தாவரங்களால் வெளியிடப்படும் ஆக்சிஜனின் அளவு பெருமளவு குறைந்துவிட்டது.

அதே நேரம், மக்கள் தொகைப் பெருக்கத்தால் கார்பன்-டை-ஆக்சைடு அதிக அளவில் வெளியிடப்பட்டு காற்று மாசுபடுகிறது. அதிகப்படியான மக்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவு தேவை இருக்கிறது. மேலும், நமது வாகனங்களாலும், தொழிற்சாலைகளாலும், குளிர் தரும் சாதனங்களாலும் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுகிறது. இதை கிரகிக்கும் அளவுக்கு பச்சைத் தாவரங்கள் போதிய அளவு இல்லை


மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு இரண்டு வாயுக்களும் நாம் உணவிற்காக வளர்க்கும் பிராணிகளின் கழிவிலிருந்து அதிக அளவு வெளியிடப்படுகிறது. இந்த பிராணிகளிலிருந்து பெறப்படும் உணவுப்பொருட்களான, மாமிசம், பால், முட்டை மற்றும் இதரப் பொருட்களை முறையாகப் பிரித்தெடுத்து பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, உலகத்தில் ஓடும் ஒட்டு மொத்த கார், ரயில் மற்றும் விமானங்களிலிருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்சைடைக் காட்டிலும் அதிகம். பிராணிகளின் மூலம் வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடை விட மீத்தேன் 70 மடங்கும், நைட்ரஸ் ஆக்சைடு 310 மடங்கும் அதிகம் வெளிப்படுகிறது.உலகம் முழுவதும் அழிக்கப்படும் காடுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்த பிராணிகளின் உணவுக்காகவே அழிக்கப்படுகிறது. அதாவது 3.4 மில்லியன் ஹெக்டேர்கள் நிலப்பரப்பு இவற்றின் உணவிற்காக பயன்படுத்தப்படுகிறது. 1 kg மாமிசமானது 36.4 kg கார்பன்-டை-ஆக்சைடை பல வழிகளில் வெளியேற்றுகிறது. மாமிசம் வளர்க்கவும், ஒரு இடத்திலிருந்து பயனாளியின் இடத்திற்கு செல்ல உதவும் வாகனங்களுக்கு செலவிடும் சக்தி, 100 வாட் மின்விளக்கு மூன்று வாரம் எரிய செலவிடும் சக்திக்கு ஒப்பானது. இந்த பிராணிகளின் மூலம் வெளியாகும் இந்த கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு மட்டும் குளோபல் வார்மிங்கிற்கான காரணத்தில் 51% பங்கு வகிக்கிறது என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

பெட்ரோல், எரிவாயு, நிலக்கரி மற்றும் சிமென்ட் உற்பத்தியின் மூலம் வெளிப்படும் கார்பன் 2004 -ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி ஒரு வருடத்திற்கு 8000 மில்லியன் மெட்ரிக் டன்கள். தற்போது மேற்கூறியவற்றின் பயன்பாடு முந்தைய காலங்களை விட மிக அதிக அளவு உயர்ந்துள்ளது எனில், தற்போதைய கார்பன் வெளியீட்டு அளவை கற்பனை செய்து பாருங்கள்.

விலங்குகளின் சாணங்களில் இருந்தும், இன்னும் பிற கழிவுப் பொருட்களில் இருந்தும் மீத்தேன் வாயு வெளிப்படும். சில சமயங்களில் சாக்கடை, செப்டிக் டாங் அல்லது கிணறுகள் சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி சிலர் இறந்ததாக செய்திகளில் படித்திருப்பீர்கள். இந்த மீத்தேன் வாயு தான் அந்த விஷ வாயு. இதனை சமையல் எரிபொருளாகவும் உபயோகிக்கலாம். இத்தகைய விஷத் தன்மையுள்ள இந்த மீத்தேன் வாயு, கடலுக்கடியில் உறைந்த நிலையில் உள்ளது. புவியின் வெப்பம் உயரும்போது அவையும் கடலின் மேற்பரப்பு மூலம் காற்றில் கலந்து பல உயிரிழப்புகளையும், வெப்பத்தையும் ஏற்படுத்தும்.

முந்தைய பதிவில் நண்பர் குறிப்பிட்ட அவரது கருத்திற்கு எனது பதில்.
KATHIR = RAY said...
பனி மலைகள் உருகும்போது நீர் ஆவியாகி கொண்டு தான இருக்கிறது அப்போது பூமி முற்றிலும் மூழ்கிவிடும் என்ற அபாயம் இல்லை அல்லவா. அழிவு நிரந்தரம் முன்பு கண்ணுக்கு தெரியாமல் நடந்து வந்தது இப்போது நமக்கு புலப்படுகிறது அவ்ளோதான் சுழற்சி நடந்து கொண்டு தான் இருக்கும் . இதை நாம் அப்டியே ஏற்று கொள்ளத்தான் வேண்டும் இதனை தடுக்கவோ தவிர்கவோ இயலாது. மண்ணில் இருந்து வந்தோம் மண்ணிற்கே செல்கிறோம்

நண்பரே, நீங்கள் சொல்வது போல் பனி மலைகள் உருகி அந்த நீரும் ஆவியாகத்தான் ஆகிக்கொண்டிருக்கும். இந்த நீராவியே வெப்பநிலையை உயர்த்தும் காரணிகளுள் முக்கியமான ஒன்று. இந்த பனி மலைகள் உருகுவதன் மூலம் கடல் நீர்மட்டம் சில அடிகள் மட்டுமே உயரும். இதனால், உலகம் முழுவதும் மூழ்கிவிடாது. கடற்கரை ஓர கிராமங்கள் மூழ்கடிக்கப்படும். அதிக பட்ச நீர் ஏற்கனவே உள்ள அதீத வெப்பத்தால் ஆவியாகி, இன்னும் வெப்ப நிலையை உயர்த்தும். இந்த நீராவியின் ஒரு பகுதி, மீண்டும் குளிவிக்கப்பட்டால் பெருமழை பெய்து வெள்ளம் உருவாகி பெரும் சேதத்தை உண்டு பண்ணும். இந்த அனைத்து காரணிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. மேலும், இது வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வுதான் என நீங்கள் எண்ணுவது சரியே. ஆனால், எதிர் பாராத விதமாக பெரும் வேகத்தில் இந்த அழிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அனைவரும் ஒரு நாள் நீங்கள் கூறுவது போல, மண்ணுக்குத் தான் செல்லப்போகிறோம். நாம் இந்த உலகத்தில் அனுபவித்ததை, நம் சந்ததியினரும் அனுபவிக்க ஒரு வாய்ப்புத் தரலாமே!இன்னும் சில புள்ளி விபரங்களையும், உலக வெப்பமயமாதலை குறைக்க நாம் உடனடியாக செய்ய வேண்டியவற்றையும் அடுத்த பதிவில்(நிறைவு) காண்போம்.பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)...


புவி வெப்பமயமாதல், சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றம் இவற்றால் வரும் பாதிப்புகள் பற்றி பல இடங்களில் பேச்சு அடிபடுவதை நாம் கேட்டும், ஒரு ஜவுளிக்கடையின் விளம்பரத்திற்கு வரும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை. நமது உலகம் நம் கண் முன்னே அழிவதை நாம் திரைப்படக் காட்சிகளைப் போல பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம்.

நமது வாழ்கை முறைகளால், நாம் நமக்கே வைத்துக் கொண்டுவரும் இந்த சூனியத்தைப் பற்றி நம் பதிவர்களில் சிலர் கூடப் பதிந்துள்ளனர். உலக உருண்டை ஒரு உள்ளங்கையில் இருப்பது போல சில படங்கள் பார்த்திருப்போம். உண்மையிலேயே இந்த உலகத்தின் அழிவும் அதை காப்பதும் நம் ஒவ்வொருவரின் கைகளில் தான் உள்ளது. சுனாமி, பெருவெள்ளம், நிலநடுக்கம் மற்றும் கடலோர கிராமங்கள் கடலில் மூழ்குதல் போன்ற இயற்கை சீரழிவுகளால் நம்மில் பலர் இன்று வரை நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. எனவே, இவையெல்லாம் நம்மக்கு ரத்தம் அல்ல... தக்காளி ஜூஸ்.

நம்மால் மாற்றப்பட்ட இந்த சீதோஷ்ண நிலையினால், புவியில் உள்ள அனைத்து பனிப் பகுதிகளும் உருகி, கடலில் கலப்பதால், கடற்பரப்பின் வெப்ப நிலை உயர்ந்து, கடலின் அடிப்பகுதியில் உள்ள மீத்தேன் வாயு நாம் சுவாசிக்கும் ஆக்சிசன்னுடன் கலந்து நச்சுக் காற்றாக மாறிவிடும். இந்த பேராபத்து இன்னும் 4-5 ஆண்டுகளில் நிகழத் தொடங்கும். கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இப்புவியின் வெப்பநிலை உயர்வு 1.8 degree F (1 degree C). இதில் கடந்த நூறு ஆண்டுகளில் மட்டும் 1.1 degree F (0.6 degree C).

இயற்கை சீற்றங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. கார்பன்-டை-ஆக்சைடும், மீத்தேன் வாயுவும் புவி தட்பவெப்ப மாற்றத்திற்கு மிக முக்கிய காரணிகள். அதிலும் மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட 25 மடங்கு சக்தி வாய்ந்தது. கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும்போது, சூரிய வெப்பத்தை பூமிக்கு கொண்டுவந்து சேர்த்து பல உயிரனங்களும், தாவரங்களும் வாழ உதவியது. ஆனால், இன்று அதிக அளவில் நம்மால் வெளியேற்றப்படுவாதால், அது நமக்கே ஆபத்தை உருவாக்கி விட்டது.

கடல் நீர்மட்டம் உயர்வது பெரும் ஆபத்தானது. தற்போதைய நிலவரப்படி கடல் நீர்மட்டம் ஆண்டுதோறும் 1.8 mm உயர்ந்துகொண்டிருக்கிறது. 18 -ம் நூற்றாண்டில் 2cm, 19 -ம் நூற்றாண்டில் 6cm மட்டுமே உயர்ந்த கடல் நீர்மட்டம், கடந்த நூற்றாண்டில் மட்டும் 19cm உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டுக்குள் இது ௦0.8meter-க்கும் 1 .5 meter-க்கும் இடைப்பட்ட அளவில் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மட்டம் 1meter-ஐ நெருங்கும்போது உலகின் பெரு நகரங்களான லண்டன், நியூயார்க் மற்றும் டோக்யோ போன்றவை மூழ்கும் அபாயம் ஏற்படக்கூடும்.

நமது சரித்திரம் தொடர வேண்டுமென்றால், சமுத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நம் வாழ்வியல் சங்கதிகள் எதிர்காலத்திலும் ரசிக்கப்பட வேண்டுமென்றால், சந்ததிகள் நலமாய் வாழவேண்டும். கீழ் உள்ள படங்களை பெரிதாக்கி பாருங்கள் நமது தற்கொலையின் பாதச் சுவடுகள் தெரியும்.

விலங்குகள் கூட தனக்கு ஆபத்து என்றால் உரத்து குரலெழுப்பும். தம்மை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நாம்???

இன்னும் பல (அ)சுவாரஸ்யமான தகவல்களோடு, இதே தலைப்பில் விரைவில்....Thursday, March 18, 2010

வண்ணம் பூசு

வண்ணங்களோடு - அவன்
எண்ணங்களையும் பூசி
வெறும் சுவற்றை
விளம்பரச் சுவராகவும்...
மண் சுவற்றை
வெண் சுவராகவும்...
மாற்றுவான்!

இரண்டு நிறம் கொண்டு
மூன்றாம் நிறம் உருவாக்கும்...
பிரம்மனவன்!

தொட்ட வண்ணமெல்லாம் - அவன்
உடைகளில் உரிமையாய்... - அந்த
உடை மட்டுமே - அவனின்
உடைமையாய்...

வண்ணமும் அழுக்கும்
வாஞ்சையாய்
காதல் செய்யும் - அந்த
உடை உடையானுக்கு...
அருகில் அமர
அச்சம் பல()(இ)ருக்கு...

அருவருப்பாய் இருப்பினும்
அவனே தொட்டு தடவ வேண்டும்
வண்ணத்தை இவன் சுவற்றில்....

எண்ணமெல்லாம்
வண்ணமாகக் கொண்டவனுக்கு...
வண்ணம் பூசி அழகு பார்க்க - சொந்த சுவர்
வேண்டுமென...
எண்ணுதல் தவறாகுமோ? - இது
வர்ண பேதமா? - இல்லை
கர்ணனின் குரோதமா?...

வண்ணம் பூசி
வாழ்கை நடத்தும் - அவன்
ஆசைகளுக்கும் - அவன்
ஆசையின் பாசைகளுக்கும்...
அறியாமலே வளர்ந்துவிட்ட மேனிக்கும்
ஒரே நிறம்...
வறுமையாகவும்! கருமையாகவும்!!...


Friday, March 12, 2010

செல்வாக்கில்லா செல்வம்...

செல்வத்துட்ச் செல்வம் செவிச்செல்வம்...
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்...
மழலைச் செல்வம்...

- என்றெல்லாம் நாம் செல்வங்களை பல உருவங்களில் பொதித்து வைத்திருக்கிறோம். ஒருவரை வாழ்த்தும்போதும் கூட "பதினாறு செல்வமும் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என வாழ்த்துவதுண்டு. எவ்வடிவில் இருந்தாலும் மனிதனின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவை அனைத்தும் செல்வங்களே.

நாம் விரும்பும் செல்வங்களை அறிவின் உதவியாலும், அறிவியலின் உதவியாலும் ஒரு குறிப்பிட்ட அளவு வரை அடைந்திருக்கிறோம். இதிலும் குறிப்பாக நோயற்ற வாழ்வு என்பது வழியற்ற நோவாகவே இருக்கிறது. எவ்வளவோ பொருட்செல்வம் இருந்தும் பலர், தீராத வியாதிகளால் அவதிப்படுவதை நாம் அன்றாட வாழ்வில் கண்டுவருகிறோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக பொருட்செல்வம் பெற்றிருந்தாலும், அது செல்வாக்கிலா செல்வமாகிவிடுகிறது.

பாடுபட்டு பெற்ற செல்வங்களை, முறைப்படுத்தாமல் பல சமயங்களில் அவற்றை நாம் இழந்தும் வருகிறோம். அறியாமையும், பேராசையும் கடிவாளமற்ற குதிரைகளாக திசைக்கொருபுறம் இழுத்து நாம் பெற்ற செல்வங்களை சிதைத்து, நம்மையும் சிதைக்குள் சிக்க வைத்துவிடுகிறது. உபரி செலவுகள் நம்மை ஊதாரி ஆக்கிவிடுகிறது.

நம் செல்வத்தின் நிலை (Wealth) எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒவ்வொரு மாதமும், நாம் பெரும் ஊதியத்தினை வைத்து எத்தகைய வாழ்க்கைத் தரத்தில் நாம் இன்று வாழ்கிறோமோ அதே வாழ்கைத் தரத்தில், இந்த வருமானம் இல்லாமல் எத்தனை நாட்கள் / மாதங்கள் வாழ முடியுமோ அதே நமது Wealth. இத்தகைய வருமானத்தை, அதாவது ஒரு தனி மனிதன் சம்பளமாகவோ, தொழிலின் வருவாயாகவோ பெரும் பணத்தை முதல் நிலை வருமானம் (Active Income) எனலாம். இத்தகைய வருமானத்திற்கு ஒவ்வொரு தனி மனிதனின் உடல் உழைப்பு முக்கியம்.

இத்தகைய வருமானம் தொழில் நசிவாலோ, உடல் உழைப்பு தரும் நபரின் இயலாமையிலோ இழக்க நேரிடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நம் வாழ்க்கைத்தரம் குறைய, நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனை தவிர்க்க, நாம் இரண்டாம் நிலை வருமானத்திற்கான (Passive Income) சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து ஏற்படுத்த வேண்டும். இந்த வருமானம் நமது உடல் உழைப்பின்றி வருவதாகும். நம் பரம்பரை வசதிகளை வைத்தோ, நாம் முன்னர் ஈட்டிய பொருளாதரத்தை வைத்தோ இதை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். கட்டிடங்களின் மூலம், வாகனங்களின் மூலம் வாடகையாகவோ அல்லது எவ்வித உடல் உழைப்பும் இன்றி மேற்பார்வையின் மூலமே ஒரு வருமானம் வர வேண்டும். நம்மில் எத்தனை பேர் இத்தகைய வருமானத்திற்கு வழி வகை செய்துள்ளோம்??

ஒருவேளை சிறிது தேவைக்கு அதிகமாக வருமானம் நமக்கு வரப் பெற்றிருந்தால், நாம் என்ன செய்கிறோம்? விலை உயர்ந்த வாகனம், சொகுசான வீடு அதுவும் நகரின் மையப்பகுதியில் அல்லது இன்னும் பல ஆடம்பர செலவுகள். வாழ்கையை அனுபவிக்க வேண்டும் தான் அனால், ஒட்டு மொத்த குடும்பமும் ஒரே வருவாயை நம்பி இராமல், இரண்டாம் நிலை வருமானத்திற்கும் வழி செய்தால் நம் குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்தலாம்.

வேலை வாய்ப்பு உறுதியின்மை நிலவும் இந்த காலக்கட்டத்தில் நாம் முதல் நிலை வருமானத்தை கொண்டு இரண்டாம் நிலை வருமானத்திற்கு வழிவகை செய்தல் பாதுகாப்பானது. நமது சேமிப்பை பகுதிகளாகப் பிரித்து முதலீடு செய்யலாம். உதாரணமாக, 4 லட்சத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கு பதிலாக 2 லட்சத்திற்கு 2 இடங்களாக வாங்கி போட்டால், எதிர்காலத்தில் தொழில் செய்ய பணம் தேவைப்படும் பொது ஒன்றை மட்டும் விற்று மற்றொன்றை எதிர் காலத்திற்கான பொருளாதார பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

நிகழ்காலத்தில் இரண்டாம் நிலை வருமானத்திற்கு வழிவகை செய்துகொள்ளாமல், ஆடம்பரமாக வாழ்ந்து பிற்காலத்தில் பொருளாதார பற்றாக் குறையால் வாடும் குடும்பத்தினரை "வாழ்ந்து கெட்ட குடும்பம்" என்று சமுதாயம் அழைப்பதை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம். அத்தகைய நிலை நம்மில் யாருக்கும் வந்து விடக்கூடாது. தாங்கிப்பிடிக்கும் பொருளாதாரம் இருந்தால் தான் நம் வாழ்வும் அதே நிலையில் தாக்குப்பிடிக்கும் என்பதை உணரவேண்டும்.

வட்டமிட்டு செலவு செய்யுங்கள்... திட்டமிட்டு சேமியுங்கள்...


Friday, March 5, 2010

(நா)மீறிப்போன மீடியாவின் மிடுக்கு...!

ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் இன்று ஆபாசங்களாலும், கவர்ச்சியாலும் கம்பீரமிழந்து அம்மணமாகவே நிற்கிறது. ஜனங்களையும், ஜனநாயகத்தையும் காக்க தம்மால் முடியும் என்ற கூற்றை இந்த ஊடகங்கள் பூடகமாகக் கூட நம்ப மறுக்கிறது. தன்னிலை மறக்கிறது. மூளை வளர்க்க உதவும் என்று ஒவ்வொரு வீட்டிலும் மூலைக் கல்லாக்கப்பட்ட ஊடகங்கள், இன்று தங்கள் கோரப் பற்களைக்காட்டி எங்களை சோரம் போகச் செய்கிறது.

தாய் தந்தைக்கு இடமில்லாத வீடுகள் கூட உண்டு. அனால், அங்கும் தொலைகாட்சிப்பெட்டிக்கு என்று ஒரு நிரந்தர இடம் உண்டு. அதுவும் அலங்கார மேஜைகளுடன். பலரின் வாழ்கை வண்ணங்கள் அவர்களின் தொலைகாட்சிப்பெட்டிக்குள் மட்டுமே. தொலைக்காட்சி காண தவம் கிடந்த நாங்கள்... இன்று தொலைகாட்சியின் முன்பே தவமாக. எங்கள் மனநிலையை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மாற்றிக்கொள்கிறோம் மாயமாக. எதிர்த்து கேட்க உரமில்லாத எங்கள் மனதும் மக்கித்தான் போனது நம் மண்வளம் போல... உங்களின் வியாபார பணப் பயிர்களால்.

உங்கள் கடமை பணம் பண்ணுவது மட்டுமே. கண்ணியம் பெண்ணியம் போல பேச்சுகளில் மட்டும். கட்டுப்பாடு விதிக்க துப்பிலாத அரசும் வியாதி பிடித்து இன்று வீதிகளிலும்... ஜாதிகளிலும். பகுத்தறிவு பேசிய தலைவர்களும், தம் பணங்களை பாங்காக, பங்கு பகுப்பதிலும், பதுக்குவதிலும் தங்கள் அறிவை முதலீடு செய்துவிட்டனர். சைடு டிஷுக்கு வக்கில்லாத குடும்பங்கள் கூட உங்க டிஷுக்கு ஆசைப்பட்டு, வட்டிக்கு பணம் வாங்கி உங்கள் பெட்டிக்கு அனுப்பி விடுவர்.

பணத்தை படங்களாகத் தயாரித்து, பத்து நிமிடத்திற்கு ஒருமுறை நீங்கள் செய்யும் விளம்பரம், சினிமா பார்த்தே வளர்ந்தவர்களுக்குக் கூட இனிமா கொடுத்தது போல் ஆக்கிவிடுகிறது. உங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் தொலைகாட்சி கண்டுபிடித்தவன் பித்து பிடித்து, அதன் டையோடு ஆணோடுகளை கட்டியணைத்தே மண்ணோடு மாண்டுபோவான். இதுவே சத்தியம். அவனுக்கும் அது சாத்தியம். படம் எடுத்து அதை செய்தியில் தொடுத்து பலரின் உயிரெடுக்கும் வித்தை உங்கள் ஊனோடு மட்டுமல்ல உதிரத்தோடும் பதியமிடப்பட்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது.

பணம் வருகிறது என்றால் நீங்கள் லேகியம் விற்பவனையும் ஆதரிப்பீர்கள். கோமியம் விற்பவனையும் ஆதரிப்பீர்கள். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை உங்கள் இதயம் இறந்துவிடும் போலும். அது உங்களை கைது செய்த நடவடிக்கையாயினும் சரி... நடிகையின் கவரேஜ் ஆயினாலும் சரி. பேருக்கு, பேரை தமிழில் வைத்துவிட்டு ஊருக்கு உறுப்பாட்டி காட்டும் உங்கள் விவசாயம் விண்ணைத் தாண்டியும் அருவடையாகிகொண்டே இருக்கிறது.

ஒழுக்க சீலரா நீங்கள் என்று எங்களில் யாரையும் வினவவும் வேண்டாம். உம்மாலும், எம்மாலும் கட்டப்பட்ட சமுதாயம் எமக்குச் செய்த சவரத்தால் ஒழுகித்தான் போய்கொண்டிருக்கிறது எங்கள் ஒழுக்கமும் கமுக்கமாய். வாழ்வில் காதல் வேண்டும், காமம் வேண்டும், கவர்ச்சி வேண்டும் இனிமையாய் கழிக்க. இந்த வேண்டும் என்ற வேண்டுதல்களில் முக்கி முக்கியே இனியும் முயலாதீர்கள் எங்களை இனி மையாய் கரைக்க. இதில் எல்லை அமைக்க முடியாத மானுடத்தின் இந்த தடுமாற்றம் உங்களின் நடமாட்டத்தை நடனமாட விட்டுக்கொண்டிருக்கிறது.

கத்திரிக்காய்க்கு இட்ட தடையை பத்திரிக்கைக்கு இடமுடியாதது ஜனநாயகத்தின் விரிசல். குமுதத்திலிருந்து வரும் கட்டுரைகள், அதன் பெயரில் உள்ள "மு"-வை மூழ்கி சாகடித்துவிட்டு (குமுதத்தில்-மு-வை நீக்கிவிட்டு படித்துப் பாருங்கள்), வெளியிடப்படுவது போல இருப்பது அனைவருக்கும் ஏமா(நா)ற்றமே! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறிக்கொண்டு காமெராக் கண்களையும் திறந்துவிட்டது ஒரு பத்திரிகை. முழுவதுமாகப் பார்க்கவேண்டுமா... காசு கொடு என்று கை நீட்டி மண்டியிடுகிறது. மீசைகளில் பணத்தாசைகள் மறைத்து வைக்கப்படுகிறது போலும். புலனாய்வுப் பத்திரிக்கைகள் பலரின் புலன்கள் வரை தன் பார்வைகளை பரப்பித் தான் வைத்திருக்கிறது. கிரைம் பத்திரிக்கைகள் எழுதும் பேனாக்களின் ரசம் முழுவதும் கிரிமினல்களின் வசமோ என்று கூட ஐயம் எழுகிறது.

ஊடகங்களே நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு தகவலுக்கும் சாட்சிகளாக உங்கள் மனசாட்சிகளை வையுங்கள். உங்கள் பேனா முட்களின் பரிணாமமும், பரிமாணமும் ரோஜாக்களாக இருக்கட்டும். களைக்கொல்லிகலாக இருக்க வேண்டிய நீங்கள் களைகளாகிப் போனது வருத்தம் தான். வருமானம் பற்றியே யோசிக்கும் நீங்கள் வரும் மானம் பற்றியும் யோசிக்கலாம் தானே. ஜனங்களின் நாயகர்கள் நீங்கள். அதை மறவாதீர்கள். வாழ்வில் நித்தமும் ஆனந்தம் வரலாம் போகலாம். அது நிலையல்ல... அதுவே உங்கள் தொழிலின் நிலையும் அல்ல. மனோரஞ்சிதமாக மணக்க வேண்டியவர்கள்.

மனதை திறந்து வைத்து எழுதுங்கள்... பிறரின் மானத்தை திறந்து வைத்து வேண்டாம். உங்கள் கதவுகளைத் திறங்கள் காற்று வரட்டும்... ஒரு போதும் உங்களைப் பற்றிய தூற்று வேண்டாம். இது தான் பலரின் கூற்று என்றும் நினைக்கிறேன்.

நின்று கொன்றது போதும்... இனியாவது நிறுத்திக்கொள்ளுங்கள்...