Sunday, December 20, 2009

அடங்கிய சுனாமி... அடங்காத பீதி - 4




கனத்த இதயங்களுடன் எங்களில் மிகச் சிலர் கோவிலுக்குள் சென்றோம். ஆள் அரவமே இல்லாமல் இருந்தது. மிக விரைவாக அங்கிருந்து வெளியேறும்படி காவல்துறை ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தது. இந்த பதட்டத்தில் என் அப்பா என்னிடம் 50 ரூபாயை கொடுத்து வேகமாக மெழுகுவர்த்தி வாங்கி வா. அதை ஏற்றிவைத்து கும்பிட்டுவிட்டு சென்றுவிடுவோம் என்றார். நானும் கோவிலிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளை நோக்கி ஓடினேன். பிறகுதான் தெரிந்தது அந்த கடைகளும் அடித்து செல்லப்பட்டுவிட்டது. இதிலிருந்து நாங்கள் அனைவரும் ஏதோ மனம் பேதலித்த நிலையில் தான் இருந்துள்ளோம் என்பது புரிந்தது.

இந்த ஆழிப் பேரலைகள் வேளாங்கண்ணி புதிய கோவில் வாசல் வரை வந்துள்ளது. ஆனால் கோவிலின் உள்புறம் சேதமில்லை. கோவிலின் வலது புறம் வழக்கமாக நாங்கள் தங்கும் Little Flower Lodge-ப் பகுதி பெருத்த சேதம் அடைந்திருந்தது. நல்லவேளை இந்த முறை நாங்கள் அங்கு தங்கவில்லை. தங்கியிருந்தால் எங்களில் சிலருக்கு அல்லது அனைவருக்குமோ உயிர் உத்திரவாதம் இருந்திருக்காது.

எங்கள் வீட்டு உரிமையாளர் ஏதோ வேளாங்கண்ணி கடலுக்குள் மூழ்கி கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டு, "சார் வாங்க வேகமா கடலுக்கு எதிர் திசையில போயிடுவோம்" என்கிறார். எங்கள் ஒட்டுனரில் ஒருவர் பழனிக்கு மாலை அணிந்திருந்தார். அவர் வேறு அடிக்கடி... "ஐயா நான் வேற மாலை போட்டிருக்கேன்யா. வாங்கய்யா சீக்கிரம் வீட்டுக்குப் போயிருவோம்" எனக் கூறிக் கொண்டிருந்தார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று. அவன் வழக்கம் போல பழக்க தோஷத்தில் தப்பிப்பதற்கு ஏதாவது காரணம் சொல்ல வேண்டும் என்று இதை சொல்லி இருக்கிறான்.


எங்க அப்பா ரொம்ப சின்சியர் ஆனவரு. அவரு என்னிடம், "தம்பி நம்ம வேற உயர்மட்ட பரிந்துரையில இந்த ரூம் வாங்கினோம். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து போச்சு. தங்குமிட வசதி செஞ்சுகொடுக்குற அலுவலகத்துல போயி இந்த ரூம் சாவியக் குடுத்துட்டு... நம்ம எல்லாரும் பத்திரமா இங்கிருந்து கிளம்புரம்னு" பயணஞ் சொல்லிட்டு வரச்சொல்லிட்டாரு. நானும் என் தம்பியும் அந்த மோசமான தண்ணியில பெரும்பாலும் மேட்டுப் பகுதியாப் பார்த்து போயி சாவிய குடுத்துட்டு சொல்லிட்டு வந்துட்டோம். பல வாகனங்களின் புகைக் குழாயில் தண்ணீர் புகுந்ததால் மேலும் செல்ல இயலாமல் பலர் தவித்தனர். எங்கள் ஓட்டுனர் மேட்டுப் பகுதிகள் வழியாக சென்று இப் பிரச்சனைகளை தவிர்த்தான். அதே நேரம், எனக்காகவும் என் தம்பிக்காகவும் காத்திராமல் என் அப்பா கூறியதைக் கூட கேட்காமல்.... நீர் குறைவாக இருந்த பகுதியில் வண்டியை நிறுத்தினான்.


நானும், எனது தம்பியும் அந்த நீரில் நடந்து வந்த பொது சந்தித்த அனுபவங்கள் இன்னும் மிகக் கொடியது. ஒருவர் ஒரு தரை அளவு பாலத்தின் சுவற்றில் உட்கார்ந்து இருப்பது போல இறந்து விறைத்து கை கால்களை மேல் நோக்கி நீட்டியவாறு கால் சட்டையுடன் இருந்தார். அவரது வேஷ்டியை காணவில்லை. நீரின் பல பகுதிகளில் சில மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருந்தன. நீருக்கடியில் சில கம்பு, கம்பி போன்ற பொருட்களும் மூழ்கி எங்கள் கால்களில் தட்டுப்பட்டன. சில சாக்கடை குழிகளில் மாட்டியிருந்த பிணங்களின் கைகளும், கால்களும் எங்கள் கால்களில் உரசியதில் அதிர்ந்து போனோம்.


ஒரு வழியாக அங்கு போக்குவரத்திற்கு சிரமப்பட்டவர்களில் ஒரு சிலரை எங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து வேளாங்கண்ணி நாகபட்டினம் சாலையில் விட்டுச் சென்று நாங்களும் உயிர் பிழைத்தோம். வேளாங்கன்னியை விட்டு வெளியேறியவுடன், அன்றைய காலை எங்களுக்கு தங்கும் வசதிக்காக முயற்சி செய்த என் நண்பர்களையும் தொடர்புகொண்டு அவர்களும் உயிர்தப்பி விட்டார்கள் என்றறிந்து கொண்டேன். நல்ல வேலையாக எனது உள்ளூர் நண்பனின் வீடு ஒரு பெரிய மணல் குன்றின் பின்புறமாக அமைந்ததால், அதிக பாதிப்பின்றி தப்பிவிட்டனர். அன்று முதல் இன்றுவரை, ஏனோ ஏன்னால் வேளாங்கண்ணிக்கு செல்ல முடியவில்லை.

இன்று வரை இந்த சுனாமியால் பாதிப்படைந்து, மனநிலை பாதிக்கப்பட்டு, குடும்பம் பிரிந்து வாடும் நம் உறவுகளை எண்ணி கண்ணீருடன் இந்த பகிர்வை நிறைவு செய்கிறேன்.

இந்த கட்டுரையின் அனைத்துப் பகுதிகளும், உலக நாடுகளில் சுனாமியால் தம் உறவுகளை இறந்த குடும்பங்களின் சார்பாக, இறந்த அந்த சொந்தங்களுக்கு சமர்ப்பணம்.

*** முற்றும் ***



அடங்கிய சுனாமி... அடங்காத பீதி...- 3

பகுதி - 1
பகுதி - 2


எங்க மாடியிலிருந்து ஒரு மூலையில் பார்த்தால் கடலின் சிறிதளவு தெரியும். அலைகள் மிகப் பெரியதாய் தோன்றுவதை காண முடிந்தது. எங்கள் அறையில் இருந்த பெரும்பாலோர் பயப்படத் தொடங்கினர். மேலே உள்ள மொட்டை மாடிக்கு செல்ல படி இல்லை. அதனால், அந்த அறையில் இருந்த ஒரு இரும்பு கட்டிலை வராந்தாவில் போட்டு அதன் மேல் அங்கு இருந்த மேசையை போட்டு இரண்டு ஆண்களை முதலில் ஏறச் செய்தோம். பிறகு குழந்தைகளையும் மகளிரையும் நாங்கள் இருவர் கீழிருந்து ஒவ்வொருவராக தூக்கி மேலே ஏற்றி விட்டோம். எனது அப்பாயி(அப்பாவின் அம்மா), கொஞ்சம் வயதானவர். ஆனால் நல்ல தெம்பாக இருக்கிறார். வாங்க அப்பாயி நீங்களும் மேல ஏறுங்க என்றால். அட போங்கப்பா, ரூமுக்குள்ள நம்ம கொண்டுவந்த பொருள் எல்லாம் இருக்குது. நான் பாத்துக்கிறேன். நீங்க போங்க என்றார். அட, "கடல் தண்ணி ஊருக்குள்ள வருது... நம்மளே செத்தாலும் செத்துடுவோம். இப்ப போயி பொருள பாதுகாக்கிறேன்னு..." வாங்கன்னா வாங்களே என்றோம். அதற்கு அவர் நீங்க பத்திரமா இருங்கப்பா... நான் இனிமே இருந்து என்ன பண்ணப் போறேன். நான் செத்தா சாகிறேன் என்கிறார். ஒரு வழியாக அவரையும் தூக்கி மேல போட்டுட்டோம்.

அங்க போயி பார்த்தாத்தான் தெரியுது அந்த ஊர்ல எங்க எங்க மொட்டை மாடி இருக்கோ அங்கெல்லாம் மக்கள் வெள்ளம். பக்கத்திலிருந்த கட்டிடத்தை பார்த்தால் அந்த மொட்டை மாடி தளமே தாங்காதோ! அதனால் அவர்களுக்கு பாதிப்பு வருமோ என்று பயம் கொள்ளும் வகையில் கூட்டம். எனது அப்பா அனைவரிடமும், இது தான் நமக்கு அதிகபட்ச பாதுகாப்பு. இத்தளம் வரை தண்ணீர் வராது என நம்புவோம் என்றார். (இந்த நிகழ்வின் பெயர் சுனாமி என்பது நாங்கள் அந்த ஊரை கடக்கும் வரை தெரியாது.) இப்போது எனக்கும், என் தம்பிகளுக்கும், என் அம்மாவிற்கும் மற்றும் என் அப்பாயிக்கும் ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்து, இதை மிக பத்திரமாக உங்கள் ஆடைகளில் முடிந்து வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை நாம் இருக்கும் தளம் வரை நீர் வந்துவிட்டால்.... அப்பாவை காப்பாத்துறேன்.... அம்மாவை காப்பாத்துறேன்... தம்பிய காப்பாத்துறேன்-னு முயற்சி செய்யாமல் நீர் செல்லும் திசையில் நீந்தி தப்பித்து, இப் பணத்தை வைத்துக் கொண்டு ஊர் போய் சேருங்கள் என்றார்.


இதைப் பார்த்த என் உறவினர்களும் அவ்வாறே தங்கள் குழந்தைகளுக்கு செய்து கொண்டிருந்தனர். நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் தன் 2 வயது குழந்தைக்கும், 4 வயது குழந்தைக்கும் இது போல் 500 ரூபாய் பணத்தை தன் குழந்தைகளின் ஆடையில் ஊக்கு வைத்து குத்திவிட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாங்கள் பலர் சிரித்துவிட்டோம். அங்கிருந்த பல பெண்கள் ஆலயத்தை நோக்கி ஜெபிக்க தொடங்கிவிட்டார்கள். ஆண்கள் நாங்கள் கடலில் எழுந்த அலைகளின் உயரங்களை பார்த்து இப்போது அலையின் வேகம் குறைகிறது... இல்லை இல்லை கூடுகிறது என்று அவரவர்களுக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டிருந்தோம். சில மணி நேரம் கழித்து ஒவ்வொரு கட்டிடத்திலிருந்தும் மக்கள் வெளியேறத் தொடங்கினர். அலையின் வேகமும் தணிந்திருந்தது.

அனைவரையும் மேலே ஏற்றும்போது அவசரத்தில் எங்களுக்கு சிரமமாகத் தெரியவில்லை. கீழே இறக்கும் பொது மிகவும் சிரமமாகப் போய்விட்டது. கடைசியில் அந்த மேசையும், கட்டிலும் தங்களின் கால்களை இழந்தன. ஊருக்குள் இருந்த நீரின் அளவும் சில இடங்களில் வெகுவாகக் குறைந்திருந்தது. நாங்கள் உதவிய அந்த குடும்பங்கள் எங்களை கட்டியணைத்து தங்களின் கண்ணீர் மூலம் நன்றி தெரிவித்து சென்றனர். எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் வேனில் ஏற்றிக்கொண்டு, எங்களில் சிலர் என் அப்பா தலைமையில் வந்தது வந்தாச்சு அப்படியே வேகமா கோயிலுக்குள்ள போயி சாமியக் கும்பிட்டிட்டு போயிடுவோம் என்று வேகமாக நடந்தபடியே கடற்கரை பக்கம் இருக்கும் பெரிய கோவிலுக்கு சென்றோம். வேன் எங்களுக்கு முன்பாக சென்று கோவிலின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்தது.


நடந்து செல்லும் வழியில் நாங்கள் பார்த்த காட்சிகள் எங்கள் மனங்களை மறத்துப் போகச் செய்துவிட்டது. எங்கு பார்த்தாலும் பிணக் குவியல்கள். நீரில் மூழ்கிக் கிடந்த பிணங்களை சிலர் தூக்கி கோவிலின் வாசற்படிகளில் கிடத்திக்கொண்டிருந்தனர். சந்து பொந்துகளில் எல்லாம் பிணங்கள் தலை குப்புற நீரின் வேகத்தால் சொருகப்பட்டிருந்தது. பல உள்ளூர் பெண்களும் ஆண்களும் தங்களின் துணைகளை தேடிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்களது துணைகள் பிணங்களாக. இவர்களோ நடமாடும் பிணங்களாக. பெரும்பாலான பிணங்கள் தலை குப்புற கிடந்ததால் இவர்களால் எளிதில் அடையாளம் காண முடியவில்லை. ஒவ்வொரு பிணமாக சென்று முகத்தை திருப்பி பார்த்து அடையாளம் காண முயன்றனர். இதே போல தேடிவரும் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு கண்ணீருடன் "அடியே மொட்டையா போக உன் புருஷன் அந்த கோடி மரத்துக்குப் பக்கத்திலே கிடக்காருடி", "அண்ணே! உங்க பொண்டாட்டி, பஸ் ஸ்டாண்டு காம்பவுண்டுக்குப் பக்கத்திலே சாக்கடை குழில சொருகி கிடக்காக".... இன்னும் பல அடையாளங்களுடன் சொல்லிக்கொண்டிருந்தனர்.

பிணங்களைத் தூக்கி செல்ல ஆள் கிடைக்காமல் ஒரு சைக்கிளில் இரண்டு பிணங்களை உட்கார வைத்து உருட்டிக்கொண்டு சென்றது ஒரு குடும்பம். ச்சே! என்ன கொடுமையான சம்பவம் இது. முதலில் எனக்கு கண்கள் கலங்கின. பிறகு மறத்துப்போய்விட்டேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகப் போடப்பட்டிருந்த பெரிய தென்னங்கீற்றுக் கொட்டகையில் ஆங்காங்கே பிணங்கள். அழுவதற்கு எங்களுக்கு திராணியும் இல்லை அவர்கள் வளர்த்த பிராணியும் இல்லை.





----- பீதி தொடரும்....



அடங்கிய சுனாமி... அடங்காத பீதி... - 2

பகுதி - 1

நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் இடது புறத்தில் காலியிடங்கள் இருந்திருக்கிறது. அதில் கடல் நீர் புகுந்து ஒரு ஆறு போல் காணப்பட்டது. சில ஆட்டுக்குட்டிகளும், கோழிகளும் அதில் அடித்து வரப்பட்டன. நான் எனது அப்பாவிடம், இன்று பௌர்ணமி அதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, பெரும் அலைகள் தோன்றி நீர் இந்த கால்வாய் வழியாக சென்று கொண்டிருக்கிறது என்றேன். என் அப்பாவோ, மிக அதிகமாக நீர் ஊருக்குள் சென்றுகொண்டிருக்கிறது. இதை வழக்கம் போல சன் டிவியில் flash news-ல் போட்டு விடுவார்கள். நம் உறவினர்கள் அச்சப்படக்கூடும் என்று எமது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் ஒருவருக்கு அலைபேசியில் அழைத்து பயப்பட வேண்டாம் என சொல்லி விடுவோம் என்றார்.

எங்களது உரையாடலை அருகிலிருந்து கவனித்த ஒருவர், சார் இது பௌர்ணமி அலை இல்லை. இதுக்குப் பேரு வேற என்னமோ சொல்றாங்க. சென்னையில இருந்து கன்னியாகுமரி வரை எல்லா கடற்கரைப் பகுதிகள்லையும் கடல் நீர் பெரிய பெரிய அலைகளின் மூலம் உள்ளே புகுந்திருச்சாம்னு சொன்னார். இவை அனைத்தும் ஓரிரு நிமிடங்களில் நடந்தவை. அச் சமயம் ஒருவர் கைக்குழந்தையுடன் அந்த கால்வாய் நீரில் போராடி நீர் செல்லும் திசையிலேயே நீந்தி கொண்டிருந்தார். அதே கணம் ஒரு கூட்டம் எங்கள் மாடிக்கு அலறிய வண்ணம் ஓடி வந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே கூக்குரல். யாருக்கும் எதுவும் புரியவில்லை. அங்கு வந்த ஒரு சிலர் நடந்ததை அவர்கள் அறிந்த வரை கூறியவுடன் தான் விபரீதம் புரிந்தது.

தப்பி வந்து சேர்ந்தவர்களில் எனக்கு நினைவாக ஒரு ஆந்திர குடும்பம், ஒரு மலையாள குடும்பம் மற்றும் ஒரு மீனவ குடும்பம். நான் ஹைதராபாத்-ல் சிறிது காலம் வேலை செய்த அனுபவத்தில் எனக்கு ஓரளவு தெலுகு தெரியும். அதேபோல, அச்சமயம் திருவனந்தபுரத்தில் வேலை செய்துகொண்டிருந்ததால் கொஞ்சம் மலையாளமும் தெரியும். அதனால், அந்த குடும்பத்தினரை ஆசுவாசப்படுத்தி எங்கள் அறையில் அமர செய்திருந்தோம். நாங்கள் கொண்டு சென்றிருந்த இட்லிகளை அவர்களுக்கு அளித்தோம். அவர்கள் சாப்பிட மறுத்தனர். வலுக்கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தோம். அந்த மலையாளி குடும்பத்தில் ஒரு தாய், தந்தை மற்றும் மகன் இருந்தனர். இவ்விரு குடும்பத்தினரும் வேளாங்கண்ணி வேற்று மாநிலத்தில் இருந்ததாலோ என்னவோ பயம் அவர்களை மிக அதிகமாகவே ஆட்டிப்படைத்தது. நான் அவர்களது மொழியில் பேசியதால் அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்ததாக கூறினர்.

எங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக இருந்ததால், எங்களுக்கு இதன் விபரீதம் புரியவில்லை. அந்த மலையாளி ஒரு இதய நோயாளியாகவும் இருந்தததால் அவருக்கு மிக சிரத்தையோடு ஆறுதல் கூற வேண்டியதாயிற்று. மேலும் அவரது மாமியாரும், மாமனாரும் மிக வயதானவர்கள். அவர்கள் நாங்கள் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். அவர்களிடம் அலைபேசியும் இல்லை. கடைவீதிக்கு வந்த இவர்களுக்கு என்ன ஆனதோ என்றோ அவர்கள் பதறியிருக்க கூடும். அந்த வயதானவர்கள் இவர்களைத் தேடி எங்கும் வெளியில் சென்று விடக்கூடாது என்று இவர்களுக்கு பயம். ஆந்திர குடும்பமும் ஒரு சேர அங்கு பத்திரமாக இருந்ததால் ஓரளவு பயம் குறைந்து இருந்தனர். அவ்வப்போது என்னிடம் சில விளக்கங்கள் கேட்டு தெளிவடைந்து கொண்டிருந்தனர்.


தப்பி வந்த அந்த மீனவக் குடும்பத்தில் ஒரு மாமியார், மருமகள், ஒரு மகன்(10) மற்றும் ஒரு மகள்(7) இருந்தனர். அந்த மாமியார் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தார். அவர்களின் உடைகள் முழுவதும் ஈரம். அந்த குழந்தைகள் முகம் பயத்தில் இறுக்கமாகவே இருந்தது. அந்த மாமியார், வேளாங்கண்ணி மாதாவை "ஆத்தா, நீ இங்க இருக்காய்னு தானே நாங்க உசிர் வாழுறோம். நீ எங்களை காப்பத்துவாய்னு தானே கடல்ல பொழப்பு நடத்துறோம். நீ எங்களை இப்படி கை விட்டுட்டியே. உனக்கு அப்படி என்ன கோவமோ எங்க மேல. இது உனக்கே நல்ல இருக்கா? நீயெல்லாம் ஒரு தெய்வமா?? உன்ன கும்பிட இவ்வளவு சனம் வருதே. அவங்க எல்லாம் பாவம் இல்லையா??? நீ இங்க எங்க கூட இருந்தும் இப்புடி நடக்க விட்டுட்டியே"-னு திட்டி கொண்டிருந்தார். மருமகளை நோக்கி, "ஏண்டி, மு***டைகளா, நீங்க பன்ற அட்டூழியத்துக்கெல்லாந்தாண்டி இப்புடி நடக்குது. நீங்கல்லாம் அடங்கி ஒழுங்கா இருந்திருந்தா இப்படியெல்லாம் நடக்குமா? அவஅவ சீவி முடிச்சு, சிங்காரிச்சுகிட்டு போறவன் வர்றவனை எல்லாம் மயக்குனா.... இப்புடித்தாண்டி நடக்கும். வேளாங்கண்ணி ஆத்தாளும் பொறுத்து பொறுத்து பாத்தா... அவ்வளவு தாண்டி அவ பொறுமையோட எல்லா முடிஞ்சிடுச்சி. அதான் இப்புடி பொங்கிட்டா" கத்த ஆரம்பித்துவிட்டார்.









அந்த இரண்டு சிறு பிள்ளைகளும் எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தனர். அந்த சிறவன் தனது ஆயாவிடம், "ஆயா, என் கூட டோனி விளையாண்டுகிட்டு இருந்தான் ஆயா. திடீர்னு ஒரு பெரிய அலை வந்து எங்களை தூக்கி மேல கொண்டுபோயிட்டு அப்புடியே கீழ போட்டுருச்சு. நான் அங்க நின்னுகிட்டு இருந்த வேனு மேல போயி விழுந்தேன். வேனும் அப்பறம் சாஞ்சிடுச்சு... அங்கின நின்ன ஒருத்தரு என்னையும் சேர்த்து பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்து அங்க இருந்த ஒடஞ்ச வீட்டு சுவத்துக்கிட்ட விட்டுட்டு போனாரு. பாவம் ஆயா டோனி அவன தண்ணி இழுத்துக்கிட்டு போயிடுச்சு" என்றான். நல்ல வேலையாக அந்த சிறுமை அவளது தாய் தந்தையுடன் மீன் சந்தையில் இருந்ததால் காப்பாற்றப் பட்டுவிட்டாள். நாங்கள் அவர்களை அழைத்து அவர்களுக்கும் இட்லிகளை கொடுத்து சாப்பிட செய்தோம்.

அனைவரையும் அறையில் பத்திரமாக இருக்கும் படி கூறிவிட்டு, நான் எனது தம்பி, தந்தை மற்றும் எனது மாமா நால்வரும் கிளம்பி கீழே கடை வீதிக்கு சென்று என்ன நடந்தது என்று பார்த்துவிட்டு, காவல்துறையிடம் உதவி கோரலாம் என சென்றோம். இக்கட்டிடத்தின் மாடிப்படிகள் பின்புறமாக இறங்கும் வகையில் அமைந்திருந்தது. படியின் கீழ் இறங்கி கொஞ்ச தூரம் சென்றவுடன் எங்கள் இதயங்கள் சிறிது கணம் நின்றது போல் ஆகிவிட்டது. மூன்று நான்கு கைக்குழந்தைகள் அங்கு கிடந்த சிறிதளவு நீரில் இறந்தபடி மிதந்து கொண்டிருந்தது. எங்களது சுற்றுச் சுவரின் வாயில் கடல் அலை சென்ற திசைக்கு பக்க வாட்டில் இருந்ததாலும் சிறிது மேட்டுபகுதியாக இருந்ததாலும் அதிக வெள்ளம் உள்ளே வரவில்லை.

வாயிலின் வெளியே முக்கிய கடைவீதி. அங்கு வந்து பார்த்த பொது உடல் முழுவதும் இதுவரை நான் உணராத சிலிர்ப்படைந்து ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியது. முழங்கால் அளவுக்கு நீர். அது கலங்கிய சாக்கடை நீரைப்போல இருந்தது. நீரில் ஆங்காங்கே பயன்படுத்தப்படாத CoCo Cola, PEPSI, Bisleri, பனங்கிழங்கு, பாசி மாலைகள், விளையாட்டுப் பொருட்கள், பொறி, பூக்கள் இன்னும் ஏராளமான பொருட்கள் மிதந்துகொண்டிருந்தன. உடனே, மிக மிக அருகிலிருந்த(சுமார் 20 மீட்டர்) காவல்துறை அலுவலகம் சென்று ஒரு பெண் ஆய்வாளர் இருந்தார் அவரிடம் முறையிட்டு, நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். தீயணைப்பு நிலையத்தினரை வரவைக்கலாமே என்றோம். அவரோ சலிப்பாக "போங்க சார், கலக்டர்கிட்ட கூட சொல்லியாச்சு. இது இங்க மட்டும் இல்ல. நாகபட்டினத்துல இங்க விட ரொம்ப பாதிப்பாம். கலக்டர் அங்க போய்ட்டாரு" னு சொல்லிகிட்டு இருக்கும்போதே கடல் பக்கமா இருந்து ஒடுங்க பெரிய அலை வருதுன்னு ஒரு கூட்டம் ஓடிவர ஆரம்பிக்க.... நாங்களும் அந்த தண்ணிக்குள்ள ஓடி வேகமா வந்து எங்க மாடி ஏறிட்டோம்.

----- பீதி தொடரும்....



அடங்கிய சுனாமி... அடங்காத பீதி...- 1

(உண்மை சம்பவம். இதை கதை போல் சொன்னால் அதன் வலி தெரியாது என்பதால்... திரைக்கதை போல் எழுத வேண்டிய கட்டாயம். பொறுத்தருள்க)

சுனாமி வந்து ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னும் நம் மக்களிடையே அந்த அச்சம் விலகவில்லை. இதுவரை பலர் சுனாமியைப் பற்றி தாம் அறிந்த செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கக் கூடும். நான் சுனாமியில் இருந்து தப்பிய என் நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பெரும்பாலும் வருடத்திற்கு ஒருமுறை என் குடும்பத்தார்களும் மற்றும் பிற மத நண்பர்களும் வேளாங்கண்ணிக்கு செல்வதுண்டு. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி இரவு நான் என் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டு நண்பர்களுடன் எங்களது Mahindra Pick-Up வேனில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டோம். வழக்கமாக எதோ ஒரு வகையில் தங்குமிடத்திற்கு முன் பதிவு செய்வது வழக்கம். அந்த முறை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட சமயமாதலால் எங்களால் முன் பதிவு செய்ய இயலவில்லை.

காலை 5.30 மணியளவில் வேளாங்கன்னியை அடைந்துவிட்டோம். எனது நண்பரின் சகோதரர் ஒருவர் அங்குள்ள தேவாலய உணவு விடுதியில் பணி புரிகிறார். அவர் வேளாங்கண்ணி பழைய கோவிலுக்கு செல்லும் வழியில் உறங்கி கொண்டிருப்பதாக அறிந்து அங்கு சென்று தங்களுக்கு தங்க விடுதி வேண்டும். யாரவது உனக்குத் தெரிந்த அருட்தந்தையர்கள் மூலம் ஏற்பாடு செய்ய முடியுமா என்றோம். அவன் 8 மணியளவில் வந்து முயற்சி செய்கிறேன். ஆனால் இந்நாட்களில் கிடைப்பது அரிது என்றான்.

இதற்கிடையில் என்னுடன் கல்லூரி பயின்ற என் நண்பன் வில்சன் அதே ஊரைச் சார்ந்தவன். அவனை தொலைபேசியில் அழைத்து உதவி கூறியவுடன், உடனே நேரடியாக வந்து அவனுக்குத் தெரிந்த வழிகளில் முயன்று தோற்றான். வேறு வழியின்றி நானும் எனது தம்பியும் அங்குள்ள தாங்கும் விடுதிகளுக்கு பொறுப்பான அருட்தந்தை ஒருவரை சந்தித்து, எங்களுக்குத் தெரிந்த உயர்மட்ட பரிந்துரையின் பெயரில் வேளாங்கண்ணி பேருந்து நிறுத்தத்திற்கும் கடற்கரைக்கும் இடையில் புதியதாக கட்டப்பட்ட ஆலயத்திற்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் தாங்கும் வசதி பெற்றோம். நாங்கள் மொத்தம் 17 பேர் சென்றிருந்தோம்.

அனால், மொத்தம் 10 பேர் மட்டும் என்று போய் சொல்லி (உண்மைய சொன்னா ஏன்யா ஊரையே கூட்டி வந்துட்டியான்னு கடுப்பாக மாட்டாங்க? ) அந்த வசதியைப் பெற வேண்டியதாயிற்று. பகல் வேலை மட்டுமே அங்கு தங்கப்போவதால் அது யாருக்கும் சிரமாக இருக்காது. இருப்பினும், தங்குவதற்கு பெரிய அறையே ஒதுக்கப்பட்டிருந்தது. நமக்குத் தேவை குளிக்க, சமைத்து அமர்ந்து சாப்பிட ஒரு இடம். அது ஒரு பழைய பள்ளிக்கூடம் என்பதால் அங்கு பெரிய கால்பந்து மைதானமும், கூடைப்பந்து மைதானமும் இருந்தது. எங்கள் வாகனத்தை கால்பந்து மைதானத்தின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அனைவரும் அறைக்குச் சென்றோம்.

ஒவ்வொருவராக குளித்து விட்டு கொண்டுவந்திருந்த இட்லிகளை சாப்பிடுமாறு எனது தந்தை கூறினார். எங்களது வாகன ஓட்டிகள் இருவரும் எனது தந்தையிடம் ஐயா, நாங்க போயி கடல்ல குளிச்சுட்டு வர்றோம். அப்புறம் வந்து சாப்பிட்டுக்கிறோம் என்றார்கள். அதற்கு என் தந்தை, டேய், காலங்காத்தால கடல் ஓரமா விஷ பாம்புகள் கிடைக்கும்னு சும்மா சொல்லி, நாம எல்லாம் அப்புறமாக போயி ரொம்ப நேரம் குளிக்கலாம். இரவு முழுவதும் கண் விழித்து ஓட்டியதால் இப்போ போயி தூங்குங்க. அதிசயமா அவங்க ஒத்துக்கிட்டாங்க. :-)

இது எல்லாம் சுமார் 7:30 மணிக்குள் நடந்தது. நான், எனது அப்பா, அம்மா, தம்பிகள், மாமா, எங்கள் வீட்டின் உரிமையாளர் மற்றும் இரண்டு அத்தைகள் மீன் மற்றும் விறகு வாங்குவதற்காக மீன் சந்தைக்கு வந்தோம். மீன் வாங்கிய பிறகு அதை சுத்தம் செய்ய நேரம் ஆனபடியால் எங்களில் சிலர் விறகு மற்றும் சில பொருட்களை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றோம். சிறிது நேரத்தில் நான் குளித்துவிட்டு சாப்பிடுவதற்காக அமரும்போது எங்கள் ஓட்டுனர் ஒருவர் குளித்துவிட்டு துண்டை காயப்போடுவதற்காக அறைக்கு வெளியில் வந்தார். நாங்கள் தங்கி இருந்தது முதல் தளம். அதற்கு மேல் மொட்டை மாடி தான்.

அந்த வளாக சுவரை சுற்றி தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிகளும், கடைகளும் இருந்தன. எங்கள் அறை வாசலுக்கு எதிரே விளையாட்டு இடம் அதற்கடுத்து தனியார் விடுதிகளின் பின் பகுதிகள் சுற்று சுவராய். அதற்கும் கடலுக்கும் இடையில் சில வீடுகளும் கடைகளும். துண்டு காயப்போடச் சென்ற ஓட்டுனர் என்னை அழைத்து, அண்ணே! இங்க பாருங்க கடல் பக்கத்துல எவ்வளவு காக்கைகள் பறக்குத்துன்னு சொல்ல, நான் சாப்பாட்டில் கைவைக்கும் முன் ஓடிச்சென்று பார்த்தேன்.

எண்ணிலடங்கா காகங்கள் பறந்துகொண்டிருந்தன. கடற்கரையில கருவாடு காயப்போட்டிருப்பாங்க... அதனால இப்படி சுத்துதுன்னு நினைக்கிறேன் என்று சொல்வதற்கும் மீன் சுத்தப்படுத்தி வாங்கிக்கொண்டு என் அப்பாவுடன் அனைவரும் முதல் தளம் சேர்வதற்கும் சரியாக இருந்தது.

நான் எனது அத்தை மகளிடம், இங்க பாரு உங்க அண்ணனுக்கு நீ கோழி அடிச்சு போட்டு பாசத்த காட்ட வேண்டாம்.... இதுல (காகம்) அஞ்சு ஆறை புடிச்சு வறுத்துக் குடுத்தீன்னா அவன் உன் மேல ரொம்ப பாசமா இருப்பான்னு சொல்லி கிண்டல் பண்ணி கொண்டிருந்தேன். அப்படியே, எம் அறையின் முன் இருந்த தனியார் விடுதிகளின் பின் புறமிருந்து சுமார் ஐந்து அடி உயரத்தில் உள்ள ஜன்னல்கள் வழியாகவும், சில விடுதிகளின் கொல்லைப்புற கதவுகளின் இடுக்குகள் வழியாகவும் மிக மிக கேவலமான துர்நாற்றத்துடன் கூடிய நீர் விளையாட்டு மைதானங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. உடனே எங்கள் ஓட்டுனர் ஒருவரை அழைத்து... நம் வண்டியும் நாறிப்போகும் உடனே அதை எடுத்து கூடைபந்து விளையாட்டு மைதானத்தின் மேல் நிறுத்து என்றோம். (அதன் தளம் சற்று உயரமாக இருந்தது). அதிசயமாக, அவசரமாக மின்னல் வேகத்தில் அவனும் செயல்பட்டான்.

----- பீதி தொடரும்....



Thursday, December 17, 2009

மரணம் இணைக்கும் உறவுகள்

மனிதர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் மட்டுமல்லர். எப்போதும் உணர்வு வயப்பட்டவர்களும் கூட. மனித வாழ்க்கையில், சொந்தங்களும் நாம் அவற்றின் மீது கொண்டுள்ள பந்தங்களும் இன்றியமையாதது என்றே தோன்றுகிறது. வாழ்வின் பல சூழ்நிலைகளில் நாம் எதோ ஒரு வகையில் உணர்ச்சி வசப்பட்டு நம் உறவுக்காரர்களின் மேல் கோபங்கொண்டு அவர்களை வெறுத்து ஒதுக்குவதுண்டு. சில காலம் கழித்து இயல்பாகவே நம் பகையை மறப்பதுண்டு.

கோபங்களை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியும் சில சமயங்களில் கைகலப்பு செய்தும் நாம் பகையை பிரசவித்துக்கொள்வோம். கிராமங்களில் இன்றும் பங்காளிகள் சண்டையும், கொண்டான் கொடுத்தான் பகையும் அவ்வப்போது நிகழ்வது இயல்பே. சில குடும்பங்கள் தங்கள் பகையை, பெரிதுபடுத்திகாட்டாமல் எதிரியுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொள்வார்கள். யாரேனும் இது குறித்துக் கேட்டால் எங்களுக்குள் சின்ன மனஸ்தாபம் அதனால் பேசிக்கொள்வதில்லை என்பர்.

பங்காளிகள் சண்டை பெரும்பாலும் சொத்து தகராறினால் ஏற்படுவதுண்டு. ஐந்து வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பங்காளி எனும் கூற்றை இது போன்ற சொத்து விவகாரங்களில் நிரூபித்துவிடுவார்கள். பிரச்சணையின் சாராம்சம் மற்றும் அதை அவர்கள் கையாண்டவிதன்களைப் பொறுத்து மீண்டும் அவர்கள் இணையும் காலம் அமையும். பல சமயங்களில் இவர்களுக்குள் அடித்துக்கொண்டாலும், வேறு எவரோ ஒருவர் தன பங்காளியை சீண்டி அடிக்க முயலுபோது பெரும்பாலும் தன் பங்காளியை விட்டுக்கொடுக்காமல் எதிரியை நேரிடையாகவே "என்னடா, அவனை அடிச்சா கேட்க யாரும் இல்லையின்னு நினைச்சியா?" என்று கேட்டு மிரட்டுவர்.

கொண்டான் கொடுத்தான் என்பவர்கள் பெண் கொடுத்தோ அல்லது பெண் எடுத்தோ உறவை உருவாக்கி கொண்டவர்கள். இவர்களுக்குள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல் ஏற்பட்டு பகையாகி விடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு ஊர்களில் வசிப்பதாலோ என்னோவோ கையாலோ அல்லது ஆயுதம் கொண்டோ தாக்கி கொள்வதில்லை. விவகாரப் பேச்சு வார்த்தைகள் முற்றி பகைமை பாராட்டுவார்கள். இது போன்ற பகைகள் காலப்போக்கில் அந்தந்த வீட்டுப் பெண்களாலேயே சரி செய்யப்பட்டுவிடும் அல்லது அந்த வீட்டுப் பிள்ளைகள் நட்பாகி இணைந்துவிடுவார்கள்.

இதுபோன்ற பகைகளை சில நேரங்களில் காலம் தீர்த்துவைத்தாலும், பல நேரங்களில் காலன்(எமன்) தீர்த்து வைத்துவிடுவான். ஆம், மரணம் விட்டுப்போன உறவுகளை சேர்த்து வைத்துவிடும். என்னதான் பகையாக இருந்தாலும், அவரவர்களின் இரத்தம் பாசம் கலந்தபடியே ஓடிக்கொண்டிருக்கும். இதனால் தான் அவர்கள் என் இரத்த சொந்தங்கள் என்று கூறுவதன் அர்த்தம் புலப்படும்.

இவ்வாறான, இரத்த சொந்தத்தில் எவருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது ஒருவரின் உயிருக்கு பங்கம் என்றாலோ, பகையாக இருப்பினும் பாசம் விட்டுக்கொடுக்காது. பகை உருவாகும்போது நாம் நிதானமாக ஒரு கட்டுப்பாட்டுக்குள் நமது எதிர்ப்பையோ வருத்தத்தையோ வெளிப்படுத்தியிருந்தால், பகை மறந்து உறவு சேரும் காலத்தில் மனங்கள் ரணங்கள் இன்றி எளிதாக சேரக்கூடும். ரணங்கள் அதிகமிருப்பின் எக்காலத்திலும் உறவுகள் சேர பிற மனிதர்களின் முயற்சி தேவைப்பட்டுவிடும். "என்னையா பெருசா பகை. என்ன இருந்தாலும் அவன் உன் பங்காளி. அல்லது கொண்டான் கொடுத்தானுக்குள்ள இதெல்லாம் சகஜம். போகும்போது என்னத்தையா கொண்டு போகப்போறோம்?" என்று கூறியோ "அங்காளி பங்காளினா இதெல்லாம் இருக்கத்தான்யா செய்யும்" என்று கூறியோ பல மனித மனங்கள் நம் மனங்களோடு சமரசத்தை சாத்தியமாக்க முயலும்.

மரணத்தின் வலிகள் உணர்ந்த நமக்கு இதுபோன்ற தருணங்களில் அது தன் வலிமையையும் உணர்த்திவிடும். அரசியலில் மட்டுமல்ல, நமது வாழ்விலும் உறவும் பகையும் நிரந்தரமல்ல என்பதை இந்த மரணங்கள் நிரூபித்துவிடும். உணர்வுகளுடன் வாழப்பழகினால் உறவுகள் என்றும் சாத்தியமே.


Sunday, December 13, 2009

சிங்கை பதிவர்களின் மெக்ரிட்சி மலைக்காட்டு உலா!

திடீரென திட்டமிட்டாலும், மிகச்சிறப்பாக அமைந்த இந்த மலைக்காட்டு உலா மிக நல்ல அனுபவமாக அமைந்தது. மொத்தம் ஆறு சிங்கைபதிவர்கள் கலந்துகொண்டார்கள். ஜோசெப் பால்ராஜ், முகவை ராம், ஜெகதீசன், வெற்றிக்கதிரவன், அன்புத்தம்பி டொன்லீ மற்றும் ரோஸ்விக் ஆகிய நான். என்னையும், வெற்றிக்கதிரவனையும் சிங்கை பதிவுலகத்தலைமை ஜோசப் தனது மகிழ்வுந்தில் ஏற்றிச்சென்று எங்கள் பயண சிரமங்களை வெகுவாகக் குறைத்துவிட்டார். செல்லும் வழியில் சில நொறுக்குத்தீனிகளையும் சில மெதுபான வகைகளையும் வாங்கிக்கொண்டு சென்றோம். அனைவரும் குறித்த நேரத்தில் மெக்ரிட்சி நீர்த்தேக்கப் பகுதியில் சந்தித்து எங்களது மலைக்காட்டு உலாவைத் தொடங்கினோம்.










மக்களே, மொத்த 11.5 கி.மீ. தூர மலைகாட்டு பயணம் இது... சுற்றிலும் உயர்ந்து வளர்ந்த மரங்களின் அடர்த்தியான காடுகள். அதன் ஊடே வளைந்து நெளிந்த பாதை. நடந்து போறதுக்கே அவ்வளவு அருமையாக இருந்தது. நிறைய ஏற்ற இறக்கங்கள்... அந்த மலை பெண்டுகள்ள எங்க பெண்டு கழன்டுருச்சுப்பா... வெளில சிறிதளவு வெயில் கொடுமை இருந்தாலும் காட்டுக்குள்ள அது சுறுசுறுப்பா எங்களை மாதிரி வந்து சேரல. வழியில ஆங்கங்கே அமர்ந்து கொண்டுசென்ற மெது பானங்கங்களையும், நொறுக்குத்தீனிகளையும் வயித்துக்குள்ள அமுக்கிகிட்டு இன்னும் சுறுசுறுப்பா நடந்தோம்.








டொன்லீயை கட்டளைத்தளபதியாக செயல்படுமாறு எங்கள் தலைமை பணித்தது. ஆனால் அவர் எங்களை பின் புறமிருந்து இயக்கியது கடைசி மூன்று கி.மீ வரை மர்மமாகவே இருந்தது. :-) இவ்வளவு அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏகப்பட்ட படிகளை மரத்தாலும் இரும்பாலும் மிகச்சிறப்பாக அமைத்திருந்தார்கள். பல இடங்களில் குறைந்தபட்சம் 50 படிகள் ஏறி இறங்கவேண்டியிருந்தது. இவ்வனப்பகுதியில் கூட பிளாஸ்டிக் பைகள் மற்றும் இதர குப்பைகளை காண முடியவில்லை. சில இடங்களில் மிக செங்குத்தாக ஏறும்படியாகவும், இறங்கும்படியாகவும் அந்த பாதைகள் அமைந்துள்ளன. சரி பத்தி தூரம் சென்றவுடன் கிட்டத்தட்ட ஒரு 500 மீட்டர் அளவுக்கு தொங்குபாலம் அமைத்திருந்தார்கள். அதிலிருந்து கீழே பார்க்கும்போது செத்துப்போன எங்கள் அய்யா தெரிந்தார். (அப்பாடா ஒரு வழியா அவரையும் பார்த்தாச்சு).









சுற்றிலும் மலைப்பகுதி நடுவில் நீர்நிலை. மிக அருமையாக இருந்தது. நான்கு கி. மீ. முன்பாக ஒரு Golf மைதானம். நாங்கள் சத்தம்போட்டு பேசிக்கொண்டு மகிழ்ச்சியா வந்துகொண்டிருந்தோம். அங்கு விளையாடியவர்களில் இருவர் எங்களை நோக்கி உஷ்ஷ்ஷ் என்று அமைதியாக இருக்குமாறு கூறினார்கள். இது என்ன மருத்துவமனையா? என்ன விளையாட்டுயா இது? ஒரு ஆளு ஓங்கி அடிக்கிற பந்தை எங்க விழுந்துருக்குனு எல்லோரும் சேர்ந்து போயி பாக்குறாய்ங்க...:-)) குழிய ரொம்ப தூரத்துல வச்சிக்கிட்டு விளையாடுறது நல்லாவா இருக்கு? ஆனா அந்த மைதானம் மிக மிக அழகு.









இப்பொழுதுதான் எங்கள் கட்டளைதளபதியின் சூட்சுமம் புரிந்தது. ஒரு குரங்கு கூட்டம் எங்களை எதிர்கொண்டு தாக்குதலுக்கு தயாராகி இருந்தது. அட பக்கிகளா எங்ககிட்ட எல்லா நொறுக்குத்தீனியும், மெதுபானமும் தீர்ந்து போன விஷயம் உங்களுக்குத் தெரியாம போச்சே... நாங்க கடமை வீரர்களா இந்த பகுதியில குப்பை போடாம... குப்பைத்தொட்டில போடுவோம்னு கொண்டுபோறத இப்படி புடுங்க வாறீங்களே... சரியான தருணத்தில் எங்கள் தலைமை ஒரு காலி போத்தலை சாதுர்யமா எதிரி படைக்கு கொடுத்து மொத்தக் குழுவும் தப்பியது.










இதன் பிறகு வெளியில் நடந்த சந்திப்பை அண்ணன் பிரபாகரின் இந்தப் பதிவில் படிக்கலாம். மனுஷன் வயசு ரொம்ப கம்மியா தான் தெரியுது. பதிவர் நாடோடி இலக்கியனும் உடன் இருந்தார். நான் அவரை சந்திப்பது இதுவே முதல் முறை. மிக சாந்தமாக இருக்கிறார். ஆனால் பதிவுல மட்டும் பட்டைய கிளப்புகிறார்.

அடுத்த பதிவர் சந்திப்பையும், இது போன்ற உலாக்களையும் தொடர்ந்து நடத்துமாறு அனைத்துப் பதிவர்களும் தலைமையை கேட்டுகொண்டது.




Wednesday, December 9, 2009

ஆட்டோ மீட்டருக்கு சூடு வைப்போம் வாங்க...

மக்கா, நம்ம ஊர்ல எதுக்கு பயப்படுரமோ இல்லையோ ஆட்டோவுக்கு மட்டும் ரொம்பவே பயப்படுவோம். அய்யய்ய...அரசியல் வியாதிகளை தாக்கி நம்ம பதிவு எழுதும்போது சொல்லுவாங்களே வீட்டுக்கு ஆட்டோ வரும்னு நான் அதை சொல்லலை. அதுக்கெல்லாம் நம்ம பயந்தா பதிவு எழுத எதுக்கு வரனும்???

நான் சொன்னது, ஆட்டோக்காரன் போடுற மீட்டருக்கு பல பேரு பயப்படுவாங்க. சென்னையில மட்டுமில்லாம, இந்தியாவின் பெரிய நகரங்கள்ல ஓடுற ஆடோக்கள் எல்லாம் அதை ஓட்டுற டிரைவருக்கு சொந்தமானது இல்ல. சில லோக்கல் அரசியல் பெரிய (தறு) தலைகளுக்கும், காவல்துறையைச் சார்ந்த துரைகளுக்கும் சொந்தம். ஐயா நான் சில நல்ல முதலாளிகளை இங்க குறிப்பிடல. அப்படி நல்ல வழில பொழைக்கிரவங்க மனசு வருத்தப் படாம போயி சாப்பிட்டிட்டு பொழைப்ப பாருங்க.

இப்படி பல ஆட்டோக்களுக்கு முதலாளியா இருக்கிறவங்க அந்த ஆட்டோவை ஓட்டத் தெரிந்த(?) சிலருக்கு வாடகைக்கு விடுவாங்க. சவாரி வருதோ வரலையோ அது பத்தி அவங்களுக்கு கவலை இல்ல. ஆனா கொடுக்க வேண்டிய தொகைய சரியா கொடுத்திடனும். இப்படி ஒரு முதலாளிக்கிட்ட வேலை பாக்குற பல ஆட்டோ டிரைவருங்க அவங்களுக்கு அடியாள் வேலை பார்ப்பது உபரி பலன். எல்லாம் முதலாளி விசுவாசம் தான். இப்படி சில பல அடிபொடிகளோட இருக்கதால இயல்பாவே அவருக்கு அரசியல் பலமும் வந்துடும்.

ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து பகல்ல ஒருத்தரும், இரவுல ஒருத்தரும் கூட ஓட்டி பிழைப்பாங்க. பெரும்பாலான நகரங்கள்ல ஆட்டோவுக்கு மீட்டர் போட்டு ஒட்டுரதில்ல. அரசு விதிய(?) கடை பிடிக்காம வாழ்வது தானே நம்ம விதி...! இப்படி முறையா ஓட்டி சம்பாதிக்கிற காசு கட்டுபடியாகுறதில்ல... சிலருக்கு கட்டுபடி ஆனாலும் அந்த வருமானம் போதிய அளவு இல்ல..(இந்த போதிய அளவுக்கு எப்போதுமே உயர் எல்லை என்பதில்லை). அதுனால, நம்ம குதர்க்கமா யோசிக்கிற புத்திய வச்சி கண்டுபிடிச்சது தான் இந்த மீட்டருக்கு சூடு வைக்கிற வேலை.

சில சமயம் நம்ம மக்கள் மீட்டர தொட்டு பாத்துட்டு... என்னப்பா மீட்டர் ஆம்ப்லேட் போடுற அளவுக்கு சூடா இருக்கு... அப்படின்னு நக்கலா கேக்குறது உண்டு. நம்மள்ள பல பேரு இவங்க என்ன ஒவ்வொரு சவாரி முடிஞ்ச உடனே பீடி, சிகரட்ட பத்த வச்சு சூடு வைப்பாங்கலோனு நினைப்பதுண்டு. ஆனா, சூடு என்பது சரியான வார்த்தை இல்ல. அது "ஜூட்".

ஆட்டோ மீட்டருக்கும், ஆட்டோ சக்கரத்திற்கும் இடையே ஒரு வயரு இருக்கும். இது சில பல பற்ச்சக்கரங்களின் மூலம் தொடர்ந்து இயங்கி நம்ம ஆட்டோ மீட்டர்ல காசு எவ்வளவு கொடுக்கணும்னு காட்டும். இந்த பற்ச்சக்கரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுல இருக்கணும். அதன் மூலம், ஆட்டோ இயங்க ஆகும் அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் கணக்கிடப்பட்டு குறைந்த பட்ச கட்டணம், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப் படனும்.

இந்த பற்ச்சக்கரங்கள் பெரிதாக(அதாவது குறிப்பிடப் பட்ட அளவில்) இருந்தால் மீட்டரின் கட்டணம் உயர சிறிது நேரம் பிடிக்கும். இந்த பற்ச்சக்கரங்களின் அளவுகளை நம்ம மெக்கானிக் உதவியுடன் சிறிய அளவுகளில் மாற்றி அமைத்தால் அந்த பற்ச்சக்கரத்தின் சுற்றும் நேரம் குறைந்து மீட்டரில் பணம் கூடுதலாக காண்பிக்கும். இதற்கு "ஜூட்" வைத்தல் என்று பெயர். அதாவது ஜூட் என்றல் வேகமாக. இதைத் தான் நம்ம...முக்கியமா சென்னை மக்கள் அவர்களது தமிழில் (ஸ்டைலில்) "சூடு" என்று மாற்றிவிட்டார்கள். இந்த ஜூட் வைக்கும் கலையை(?) அந்த ஆட்டோ முதலாளிகளும் அறிந்து கொண்டு இதை ஊக்கப் படுத்துகின்றனர். இதனால், வழக்கமாக வசூலிக்கும் நாள் வாடகையை விட கூடுதலாக ஓட்டுனர்களிடம் இருந்து வசூலிக்கின்றனர். அந்த டிரைவர்களுக்கு ஏமாற்று வழியில் கிடைத்த இந்த பணம் இப்போது கிடைப்பதில்லை. எல்லாம் முதலாளிகள் வசம். அதனால் தான் பல ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களில் மீட்டர் போட மறுக்கிறார்கள். டிஜிட்டல் மீட்டர் வைக்குமாறு அரசாங்கம் வற்புறுத்தினாலும்(?) தங்களின் அரசியல் செல்(லா)வாக்குகளால் அதை கடைபிடிப்பதில்லை.


இப்படி புதுப்புது மாறுதல்களை அரசாங்கம் செயல்படுத்தினால், புதிய உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து அந்த துறை சார்ந்த அரசியல் வியாதிகளுக்கும், அதிகா(ர)(வியாபா)ரிகளுக்கும் கப்பம் மொத்தமாக வந்துவிடுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த மாறுதலை கடைபிடிக்காத ஆட்டோ ஒட்டுனர்களிடமிருந்தும் தவணை முறையில் அங்காங்கே ரோடுகளில் மறித்து தண்டனைத் தொகையாக எந்த அரசு ரசீதுகளும் இல்லாமல் வசூலிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.

ஐயோ நான் ஜூட்... அட ஒட்டு போட்டுட்டு நீங்க ஜூட்டுங்கப்பா... :-)



Thursday, December 3, 2009

உள்குத்து கவிதைகள் - 4


செம்மொழி மாநாடு

தமிழினமே அழிந்து கொண்டிருக்கிறது - ஆனால்
தமிழைக் காக்க உலக செம்மொழி மாநாடு...
வீட்டை எரித்துவிட்டு
விறகைக் காப்பாற்றும்
வீர(ண)ர்கள்!...



ஊழல்

தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும்... - இது பழமொழி
நிரூபித்து விட்டனர் - எம்
அரசியல் வியாதிகள்!
தொட்டில் குழந்தை திட்டம் முதல்
சுடுகாட்டு கூரை வரை....



பெண்

நான் அணிகிறேன்
இரு
உள்ளாடைகளும்...
இரு மேலாடைகளும்...
எதிர் வரும் ஆணின்
காமம் மறைக்க!



செருப்பு

அமைச்சரின் கூட்டத்தில்
நிருபர்களுக்கு செருப்பணிய தடை...
அடுத்தமுறை
அண்டர்வேரால் அடித்துப் பாருங்களேன்!
வெட்கங்கெட்ட அரசியலும்...
வெளங்காத காவல்துறையும்...