Monday, November 30, 2009

ஆஸ்திரேலியாவுக்கு அடி ஆள் வேண்டுமா? :-)

தமிழ் வலையுலகப் பதிவர்களே! மற்றும் வாசகர்களே!

தங்களுக்கு என் அன்பு வணக்கம். நமது பதிவர்களும் வாசகர்களும் எழுத்து நடை அல்லது கருத்துக்களின் மேல் பல்வேறு விமர்சனங்கள் அல்லது எதிர் கருத்துக்கள் கொண்டிருப்பினும் அன்பால் இணைந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

இத்தளம் ஒரு சமுதாய முச்சந்தியாகவும் பயன்படுகிறது. எழுத்துக்கள் எதிர்த்து அடித்தாலும், கருத்துக்கள் காயப் படுத்தினாலும், நெஞ்சங்கள் நெருக்கமாகவும், கைகள் கோர்ப்பதற்காகவே காத்திருப்பதாகவும் உள்ளதை இப் பதிவுலகம் பலமுறை நிருபித்துள்ளது. அந்த வகையில் நானும் உங்களோடு இணைந்திருப்பதில் அலாதி ஆனந்தம் தான்.


இப்பதிவுலகில் எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் பல தேசங்களில் பரவியிருப்பது நம் மிகப் பெரிய பலம் தான். அந்த பலத்தின் பயனாக நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதும், பெற்றுக்கொள்வதும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.

அந்த வகையில் ஒரு உதவி கோரி இதை எழுதுகிறேன். எனது சகோதரர் ஒருவர் ஆஸ்திரேலியா-வில் உயர் கல்வி பயில விரும்புகிறார். அதற்காக சில ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் நடத்திய நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று, அக்கல்வி பயில கடக்க வேண்டிய பல படிகளில் ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.

அவருக்குள்ள சில சந்தேகங்களான, ஆஸ்திரேலியாவின் கல்வி முறை, அதன் பயன். செலவு நடைமுறைகள், பாதுகாப்பு, தங்குமிடங்கள் மற்றும் நிதி தேவை பற்றியனவற்றைப் பற்றி அங்குள்ள நண்பர்களுடன் உரையாடி தெரிந்துகொள்ள விரும்புகிறார். இது பற்றிய தகவல்களைத் தர நம் பதிவர்கள் மற்றும் வாசக நண்பர்கள் முன் வந்ததால் மிக மிகிழ்ச்சியடைவேன்.

தங்களது தொலைபேசி எண்களைத் தர விரும்பினால் எனது thisaikaati@gmail.com மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.

"மக்களே இதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையின்னு ஒட்டு போடாம போயிடாதீங்க. நீங்க எல்லாம் ஒட்டு போட்டாத்தான் பல வாசகர்களை சென்றடையும். நிறைய நண்பர்கள் எனக்கு தொடர்புக்கு கிடைப்பாங்க" :-)


மிக்க நன்றியுடன்

ரோஸ்விக்

டிஸ்கி: ஆஸ்திரேலியா-ல இருக்கிற இந்திய மாணவர்களை அடிக்கிறதா செய்திகளைப் பார்த்ததுனால, இவனும் (அ)படிக்க கிளம்பிட்டானோ என்னவோ?? :-) தலைப்பும் அப்படி வச்சாத்தானே, தலைப்புச் செய்திக்கு இது வரும்.


Saturday, November 28, 2009

பெண்களின் (செல்லப்)பெயர்கள்

"pen names" -னு ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது புனைப்பெயர்கள். அது நாமே நமக்கு இட்டுக்கொண்ட செல்லப் பெயர்களாகவும் இருக்கலாம். இந்தப் பதிவுல நம்ம பெண்(களின்) பெயர்களைப் பற்றி துவைப்போம்.(எத்தனை நாலு தான் அலசுவம்னு சொல்றது) நம்ம ஊருகள்-ல நமக்குத் தெரிஞ்ச சில பெண் பெயர்களை கவனிச்சுப் பார்த்தா ஒரு விஷயம் தெரியவரும். அதாங்க பெயரை சுருக்கி கூப்பிடுறது.

இப்பவெல்லாம் பெயர்களை பெரும்பாலும் சின்னதாவே வைக்க எல்லாரும் விரும்புறாங்க. ஆனா, அந்த சின்ன பெயரையும் இன்னும் சுருக்கி கூப்பிடுறதுல பெண்கள் ஒரு படி ஆண்களை விட முன்னாடி தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன். அந்த சுருங்கிய பெயர்கள் மிக செல்லமாகவும், அழகாகவும் இருக்கத் தானே செய்யுது. முந்தியெல்லாம் "அகிலாண்டேஸ்வரி"-னு பெயர் வைப்பாங்க. இப்ப 'அகிலா'-னு சுருக்கி வச்சாலுங்கூட இன்னும் அதை சுருக்கி அல்லது மாத்தி அகி / அகில்-னு கூப்பிடத்தான் நம்ம முயற்சி பண்றோம். இப்படிதாங்க "மகேஸ்வரி" இப்ப "மகி" ஆகிப்போச்சு.

ஆண்கள்லையும் பல பெயர்கள் இப்படித்தான் சுருங்கி போச்சு. "வெங்கடேஸ்வரன்" இப்பவெல்லாம் 'வெங்கட்' ஆக அதுவும் சுருங்கி 'வெங்கி' ஆகிப் போயிடிச்சு. "சத்யநாராயணன்" இப்ப 'சத்யா'-வாகிட்டாரு. பெரும்பாலும் ஆண்களோட பெயர்கள்ல உள்ள முதல் எழுத்தையும், தன் தகப்பன் பெயரின் முதல் எழுத்துக்களையும் சேர்த்து ஆங்கிலத்திலோ, தமிழிலோ சுருக்கி கூப்பிடுவாங்க. உதாரணமா மு. க. (முத்து.கருப்பன்), J.P (Joseph. Paulraj)...இன்னும் பலப்பல... இப்படி அழைப்பதும் ஒரு வகையில கவர்ச்சிகரமாத்தான் இருக்குது.

எனக்குத் தெரிந்து கேரள கிறித்தவப்(பெரும்பாலும்) பெண்களுக்கு ரொம்ப சின்னப் பெயர்களாத் தான் வைக்கிறாங்க...ஆங்கிலத்துல அதிகபட்சமா நான்கு எழுத்துக்களும், தமிழ்-ல எழுதிப்பார்த்தா அதிகபட்சமா இரண்டெழுத்துக் கொண்டதாவும் தான் இருக்கும். உதாரணமா "மினி" (mini), "நினி" (nini)-னு இருக்கும். கேட்கவே என்னா இனிமையா இருக்குதுப்பா...:-) (நல்ல வேலை சனி-னு யாருக்கும் வைக்கலை :-))) )

இதுபோல நம்ம தமிழ் பெண்களோட பெயர்களும் மிகச் சிறியதா நிறைய இருக்கு...கீதா, கவிதா, சவிதா, சுகந்தி, லட்சுமி, ஹேமா, நித்தியா, சகிலா, பவித்ரா-னு கலக்கலா இருக்கும். ஆனாலும், இதையும் சுருக்கி கீத்து, கவி, சவி, சுகன், லட்சு, ஹேமு, நித்தி, சகி, பவி-னு கூப்பிடுறதுல தான் நம்ம மக்களுக்கு சுகமே. இது பத்தாதுன்னு வச்ச பேரை விட்டுபுட்டு இன்னும் வேற பேர்களை சொல்லி கூப்பிட்டு மகிழ்வாங்க நம்ம வீடுகள்ல. பப்பி, அம்மு...எனக்கு வேற எதுவும் ஞாபகம் இல்லப்பா...உங்களுக்கு தெரிஞ்சா பின்னூட்டத்துல தெரியப்படுதுங்கய்யா...:-)

சில வீடுகள்ல இன்னும் பெரிய கூத்தெல்லாம் நடக்கும். நம்ம முன்னோர்கள் பேரை நமக்கு சூட்டி மகிழனும்னு விரும்பி அந்தப் பெயர்களை நமக்கு வைப்பாங்க. ஆனா, அந்தப் பெயர சொல்லி கூப்பிட்டா மரியாதை குறைவா நினச்சுகிட்டு வேற பெயரை சொல்லி கூப்பிடுவாங்க....உள்ள குழப்பம் பத்தாதுன்னு இது வேற. பாசக்கார பெத்தவங்களே! பெயரை சொல்லி கூப்பிடுற தைரியம் / மனப்பக்குவம் இருந்தா மட்டும் அந்த பெயர்களை புள்ளைங்களுக்கு வைங்க. அது மாதிரி, அந்த முன்னோர்களின் பெயர்கள் நம்ம புள்ளைங்க வாழுகிற காலக் கட்டத்துக்கு ஏற்ற மாதிரி இருக்குமான்னு யோசிச்சு வைங்க...சும்மா...நம்ம ஐயா பேரு "நஞ்சப்பரு", "சந்தோசம்" அதுனால உனக்கு இந்த பேரை வச்சம்னு சொன்னீங்கன்னா புள்ளைங்க உங்க மேல கொலைவெறி ஆகிடுவாங்க...உஷாரு...


முடிஞ்ச வரை ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளுக்குள்ள பேரு வைங்க...எதிர்காலத்துல எல்லாத்துக்கும் எளிதா இருக்கும். நமக்கு பிடித்த எல்லா பெயர்களையும் ஒரே புள்ளைக்கே வச்சு அழகு பாக்குறம்னு அவன அழ வச்சுப் பாக்காதீங்க. ஒருத்தருக்கு பேரு "அதிவீர ராம பாண்டிய சுந்தர பிறைசூடன்"-னு இருந்தா, அந்த பெயரை சில விண்ணப்பங்கள்-ல எழுதும் போது ஏதோ பக்கம் பக்கமா கட்டுரை எழுதற மாதிரி கஷ்டப்பட மாட்டாரு...? :-)



டிஸ்கி: இதுல வரும் பெயர்கள் எல்லாம் கற்பனை தான். இதுல உங்க பெயரும் இருந்தா மனசப் போட்டு குழப்பிக்காதீங்க...யாரையும் புண்படும் நோக்கத்துல எழுதலைப்பா மக்களே.



Wednesday, November 25, 2009

தெரிந்துகொள்வோம் - 5

*** உலகிலேயே தங்கத்தினால் செய்யப்பட்ட மிகப்பெரிய பொருள் எகிப்திய மன்னர் டூட்டன் ஹாமனுடைய சவப்பெட்டிதான். 1120 கிலோ எடையுள்ளது.











*** நாம் ஒரு வாக்கியத்தை எழுதி முடித்ததும் வைக்கப்படும் முற்றுப்புள்ளியை அறிமுகப்படுத்தியவர் "ஆல்டஸ் மனுசியஸ்" எனும் அச்சகத் தொழிலாளி.

*** தொழுநோய் மனிதனைத் தவிர வேறு மிருகங்கள், பறவைகள் முதலியவைகளுக்கு வருவதில்லை.

*** கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் உலகின் மக்கள் தொகை இருபது கோடிதான்.

*** பலூனில் பரந்த முதல் இந்தியர் - ராமச்சந்திர சட்டர்ஜி.

*** உலக அழகிப் போட்டி 1951-ம் ஆண்டிலிருந்துதான் நடந்து வருகிறது.

*** 1216-ம் ஆண்டு ரோம் நகரில் 'சாண்டா சபினா' என்ற தோட்டத்தில் தான் இத்தாலியின் முதல் ஆரஞ்சு மரம் நடப்பட்டது.

*** உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை மைனஸ் 83.3 டிகிரி சென்டிகிரேட். அண்டார்டிக்காவில், 'வோஸ்டாக்' என்ற இடத்தில் ஏற்படுகிறது.


*** ஆஸ்திரேலியாவில் உள்ள 'பிரஷ் டர்க்கி' என்னும் ஒருவகைப் பறவையின் குஞ்சு மட்டும் முட்டையவிட்டு வெளியே வந்ததும் பறக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.





*** பெயரளவுக்குக் கூட ஆறு இல்லாத நாடு - லிபியா.

*** ஒரு பாறையின் வயதை அதில் உள்ள காரியத்தின் அளவை வைத்து கணக்கிடப்படுகிறது.

*** உடலில் ஹார்மோனைச் சுரக்காத உயிரினம் பாக்டீரியா.

*** இந்தியாவில் விளையாட்டுப் பொருள்கள் அதிகமாகத் தயாரிக்கப்படும் நகரம் ஜலந்தர்.

*** பிரபல வங்கக் கவிஞர் தாகூர் மிகச்சிறந்த ஓவியரும்கூட. அவர் மூவாயிரம் ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.













*** ரவீந்திரநாத் தாகூர் பாடல் வரியிலிருந்துதான் ரேடியோவில் பயன்படுத்தப்படும் 'ஆகாஷ்வாணி' என்ற சொல் எடுக்கப்பட்டது.

*** சுவிட்சர்லாந்தில் 1971 முதல் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

*** பல்லி நீர் அருந்தாது வாழ்நாள் முழுவதும் உயிர் வாழும்.

*** அலகிலேயே பற்களைக் கொண்ட பறவை 'ஆர்க்கியோப் டெரிக்ஸ்'.

*** சந்திரனில் வாயு மண்டலம் கிடையாது. அதனால் எந்த ஒலியும் சந்திரனில் கேட்காது.
*** குட்டி போடும் பாம்பு 'ரஸ்ஸல் வைப்பர்' (விரியன்).



*** பப்பாளியில் ஆண்மரம் காய்க்காது.

*** இறைச்சியைவிட வேர்க்கடலையில் புரதம் அதிகம்.

*** இந்தியாவின் தட்பவெப்ப நிலை, குறைந்தபட்சம் -45 டிகிரி செல்சியஸ். அதிகபட்சம் 56 டிகிரி செல்சியஸ்.

*** பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள சர்வதேச எல்லைக் கோடு "டுராண்ட்".

*** சட்டக்கல்லூரி நிறுவப்படும் முன்பு சென்னை மாநிலக் கல்லூரியில் சட்டம் பயிற்றுவிக்கப்பட்டது.

---> 0O0 <---




Saturday, November 21, 2009

கிரியேட்டிவ் மூளைகள் - 1

நம்ம ஆளுங்ககிட்ட படைப்பாற்றல் / ஆக்கும் திறனுக்கு குறைவில்லங்க...ஒரு சின்ன சந்து கிடச்சா போதும்...கலக்கீடுவாங்க. நான் படிக்கும்போது எனது பள்ளி, கல்லூரியில் நடந்த கலைவிழாக்களில் எம் நண்பர்கள் அரங்கேற்றிய சில படைப்பாற்றல உங்களோட பகிர்ந்துக்கிறேன். கீழ் வருபவையெல்லாம் விளம்பர நிகழ்ச்சியாக நடித்து காட்டப்பட்டது.

1 ) பனியன் - ஜட்டி விளம்பரம்

நண்பன் ஒருத்தன் விளம்பர தொனியில சத்தமா, "ஆனந்த் பனியன்கள் - ஜட்டிகள். அணிய அணிய சுகம்.... ஏழு வண்ணங்களில்....மென்மையிலும் மென்மையாக......அணிந்து மகிழுங்கள் ஆனந்த் பனியன்கள் - ஜட்டிகள்..." -னு விளம்பரப்படுத்திகிட்டு இருந்தான்.

உடனே இன்னொரு நண்பன்: ஆமா மச்சி, ஆனந்த் யாரு உன் ரூம் மேட்டா? அப்படின்னு கேட்க...கூட்டத்தின் சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆகிவிட்டது.


2 ) சொட்டு நீலம் விளம்பரம்

இது பள்ளியில் படிக்கும்போது நடந்தது...ஒரு 11 -ம் வகுப்பு நண்பர் ஒருவர், ஒரு வாளியில தண்ணிய வச்சிக்கிட்டு, ஒரு கையில ஒரு சொட்டு நீலம் போத்தலும், மற்றொரு கையில ஒரு பனியனும் வச்சிக்கிட்டு விளம்பரப் படுத்த ஆரம்பிச்சாரு....

"எங்க கம்பெனியோட சொட்டு நீலம் வாங்குங்க....பக்கெட்டுக்கு பத்து சொட்டு போதும். உங்கள் துணிகளெல்லாம் பளிச்சிடும். இதுல இன்னுமொரு சிறப்பு என்னான்னா...சொட்டு நீலத்தை ஒரு பக்கெட்டு தண்ணில கலந்து பிராவைப் போட்டீங்கன்னா....ஜட்டி வரும். ஜட்டிய போட்டீங்கன்னா...பிரா வரும்...." அப்படின்னு சொன்னபடி கையில வச்சிருந்த பனியனை வாளிக்குள்ள போட்டுட்டு..வாளிக்குள்ள ஏற்கனவே யாருக்கும் தெரியாம போட்டு வச்சிருந்த ஜட்டிய தூக்கி காமிச்சாரு...திரும்ப ஜட்டிய வாளிக்குள்ள போட்டுட்டு...பனியனை எடுத்தாரு.... இப்படியே ரெண்டு மூணு தடவை செஞ்சு காமிச்சாரு பாருங்க....எல்லோரும் அசந்து போய்ட்டாங்க...(அது வெறும் ஆம்புள புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடம் அதனால பனியனை பிரா-னு சொல்லி அமர்க்களப் படுத்தீட்டாரு...)



Saturday, November 14, 2009

சுதந்திரமடைந்த ஃபிலிப்பினோ விபச்சாரி - (சி)சந்திக்க...



பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெண்களில் பலருக்கு, பெண் சுதந்திரம் என்பது என்னவென்று தெரியாமல் போனது வருத்தம்தான். பெண்ணடிமை எங்கெல்லாம் உள்ளதோ, அதை களைய முனையும் ஆண்களில் ஒருவனாக என்னை புரிந்துகொண்டு படியுங்கள்.


பெண் சுதந்திரம் பற்றி நம் நாட்டில் மட்டுமல்ல, இன்னும் பல வெளிநாடுகளிலும் தவறான புரிதலைக் கொண்ட பெண்டிர் அதிகம் உள்ளனர் என்பதிற்கு எடுத்துக்காட்டாகத் தான் இந்தப் பதிவு. இது ஒரு விபச்சாரியின் மூலம் நான் அறிந்துகொண்ட அனுபவம். உடனே இவனுக்கும் விபச்சாரிக்கும் எப்படி உறவு? என்ற குறுக்குப் புத்தியை தவிர்க்கவும். எய்ட்ஸ் நோய் பற்றி விளக்குபவன் எய்ட்ஸ் நோயின் கொடூரத்தை அனுபவித்தவனாக இருக்க வேண்டியதில்லை. :-)




இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் மாடல்களே


அவளது பார்வையில் பெண் சுதந்திரம் - கீழே உரையாடல் வடிவில்:


நீ எந்த நாடு?



ஃபிலிப்பைன்ஸ்.



நீங்க எந்த நாடு?


இந்தியா.


ஓ! எனக்கு இந்தியப் பெண்களை ரொம்ப பிடிக்கும்.


எதனால?


அவர்களுடைய நீண்ட மூக்கு. அப்புறம் அவர்களின் டிரஸ் சாரீ. அவங்க பொதுவாவே ரொம்ப அழகானவங்க.


அதுசரி. உங்க மூக்கு எங்க ஆளுங்க அளவுக்கு நீளம் இல்லைதான். ஆமா, உனக்கு இந்தியப் பெண்களை மட்டும் தான் பிடிக்குமா? அப்ப எங்க ஆம்புளைங்கள?


இல்ல இல்ல அவங்களையும் பிடிக்கும். அவங்களும் ரொம்ப ஹேண்ட்சம். அவங்களுடைய மீசை ரொம்ப பிடிக்கும்.




ம்க்க்கும்...இப்பவெல்லாம் மீசை இருக்கது எங்க நாட்டு பொண்ணுங்களுக்கே புடிக்க மாட்டேங்குது...


உங்க நாட்டுல மேரேஜ் ஃபங்க்சன் ரொம்ப நல்லா இருக்குமாமே...? எப்படி பண்ணுவாங்க? கல்யாணம் பண்ணினா பொண்ணு எங்க தங்குவா?


எங்க ஊர்ல கல்யாணம் பல விதமா நடக்கும். அவங்கவங்க ஜாதி, மதத்துக்கு ஏற்ற மாதிரி. கல்யாணம் முடிச்ச பொண்ணுங்க அவ புருசனோட வீட்டுல, சில சமயம் மாமனார், மாமியாரோட இருப்பாங்க.


அப்படியா! எப்படி கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் மாமனார், மாமியாரோட இருக்காங்க? அது டிஃபிகல்ட்டா இருக்காது? ஆமா, எத்தனை ஜாதி மதம் இந்தியாவுல இருக்கு?


ஆத்தா, இந்த கேள்விக்கு எனக்கே பதில் தெரியாது... ஆமா, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?


இல்ல. ஆனா, நான் சிங்கள் மதர்.


அப்புடின்னா?


எனக்கு கல்யாணம் ஆகல. ஆனா, எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு.


இதென்னா புதுக்கதையா இருக்கு. அப்புறம் எப்படி அந்த குழந்தை?


எனக்கு ஒரு பாய் ஃபிரெண்டு இருந்தான். அவனுக்கும் எனக்கும் பொறந்த குழந்தை தான் இது.



இப்ப உன் பாய் ஃபிரெண்டு இறந்து போயிட்டானா?


இல்ல. ஓடிப் போயிட்டான்.


கல்யாணம் ஆகமலே புள்ள பெத்துகிட்டியா? அப்ப எப்ப கல்யாணம் பண்ணிக்குவே?


ஆமா. எவனாவது கல்யாணம் பண்ணிக்கிற ஆசையோட எனக்கு கிடச்சா. உங்க இந்தியாவுல கல்யாணம் எப்படி பண்ணிக்கிறீங்க?


அங்க பெரும்பாலும் அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க.
அப்ப உங்க நாட்டுல லவ் மேரேஜ் கிடையாதா?



இருக்கு. ஆனா, ரொம்ப கஷ்டம். சில பேமிலில ஏத்துக்க மாட்டாங்க.


ஓ! அப்ப உங்க நாட்டுல சுதந்திரம் கிடையாதா?


அப்படி சொல்ல முடியாது.


உங்க நாட்டுல எல்லாரும் டிரஸ் ஃபுல்லா கவர் ஆகுற மாதிரி போடுறாங்களே...அது ஏன்?


அது அப்படி தான். அது தான் எங்க கலாசாரம்....வழக்கம்.


எங்க நாட்டுல, எங்களுக்கு முழு சுதந்திரம். நாங்க எப்படி வேணும்னாலும் டிரஸ் போட்டுக்கலாம். எப்படி வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். பேரண்ட்ஸ் ஒன்னும் சொல்ல முடியாது.


உன் டிரெஸ்ஸை பார்த்தாலே தெரியுது. இதை எங்க நாட்டுல ப்ரீகேஜி குழந்தைங்க தான் போடும். ஆமா, உனக்கு ஒரு குழந்தை இருக்கதா சொன்னியே...இப்ப யாரு பாத்துக்கிருவா? நீ இங்க சிங்கப்பூர்-ல இருக்க...


ஃபிலிப்பைன்ஸ்-ல எங்க அம்மா பாத்துக்குவாங்க. நான் அப்ப அப்ப சிங்கப்பூர்-க்கு இந்த தொழிலுக்காக வந்துடுவேன்.


ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆகிட்டு இப்படி இந்த தொழில் செய்யுறியே, ஏன்?


என்ன பண்றது? தினசரி வாழ்கை ரொம்ப எக்ஸ்பென்சிவா இருக்கு. பணம் வேணும்-ல.




அதுசரி. இப்புடி சம்பாதிச்சு...ஃபியூச்சர்ல உன் குழந்தைய என்ன பண்ணப் போற??


அவள நல்லா படிக்கவச்சு...நல்லா வேலைக்கு அனுப்பலாம்னு இருக்கேன்.


--- இவளின் வாழ்க்கையில் இருந்தே எது பெண் சுதந்திரம்? எது பெண்ணடிமை? எனப் புரிந்துகொள்ள முடிகிறதா உங்களால்?


அவள் விரும்பியதை உடுத்தியதிலோ, விரும்பிய படியெல்லாம் அவள் வாழ்க்கையை வாழ்ந்ததிலோ அவளுக்கு சுதந்திரம் கிடைத்து விடவில்லை. அவளது பாய் ஃபிரெண்டு-ம் அவளுக்கு விடுதலை கொடுத்து விடவில்லை.


மாறாக, அவள் தன் பெண் குழந்தையை நல்லா முறையில் படிக்க வைத்தால் அதுவே அவளுக்கு கிடைத்த சுதந்திரம். இல்லையா?


நம் நாட்டிலும் பெண்கள் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளையும், வசதிகளையும் நாம் வழங்க வேண்டும். அவர்கள் நம் குடும்ப வாழ்வில் சிறந்து விளங்க தேவையான தைரியத்தையும், மன உறுதியையும் நாம் ஊட்ட வேண்டும்.


நல்ல குடும்பங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட நல்ல குடும்பங்களை உருவாக்கும் உயரிய பொறுப்பு என் அருமை பெண் குலத்திற்கு உண்டு என்பதை பெண்களே நீங்கள் உணருங்கள். அடிமைத்தளையிலிருந்து பெரும்பாலான பெண்கள் விடுபட்டுவிட்டார்கள். இன்னும் அடிமையாய் நடத்தப் படுபவர்களை விடுவிக்க சரியான முறையில் முயலுங்கள். உங்களுக்குத் தோள்கொடுக்க பல பாரதிகளும், பெரியார்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் உங்கள் தந்தையாகவோ, அண்ணன் தம்பியாகவோ அல்லது கணவன்மார்களாகவோ வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து நல்ல சமுதாயம் படைக்க வாரு(ழு)ங்கள்.





Saturday, November 7, 2009

தெரிந்துகொள்வோம் - 4

உலகில் உள்ள விஷ மரங்களில் இந்தோனேசியாவில் உள்ள 'உபர்ஸ்' மரம்தான் அதிக விஷமானது.

ஒவ்வொரு முழு நிலவுக்கும் இடைப்பட்ட காலம் 291/2 நாட்கள்

புகழ்பெற்ற ஈஃபில் டவரின் பிளானை வரைய ஆறாயிரம் சதுர கஜம் காகிதம் தேவைப்பட்டதாம்.

உலகில் மிக அகலமான பாலம் சிட்னி ஹார்பர் பாலம்.








உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடு ஜப்பான் அல்ல; மெக்சிகோ

நண்டுக்கு ஐந்து ஜோடி கால்கள் உண்டு. செவுல்களால்தான் அது மூச்சுவிடும்.

வைக்கோலால் ஆன தொப்பிகளை ஈக்வடாரில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்

இந்தியாவில் அதிகம் பயிராகும் மிளகாய் ரகம் - ஹங்கேரியன் 'பாப்ரிகா'


இந்தியாவில் மலை ஏறுவதற்கான கிளப்புகள் அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில்தான் உள்ளன.

சுறா மீனை ஜப்பானியர்கள் 'கடல் தங்கம்' என்று அழைக்கிறார்கள்

'சிரிப்' என்ற பறவை நீர்ப்பரப்பின் மேல் தன் கூட்டைக் கட்டுகிறது.

முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை.

இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1945-ம் ஆண்டு 'உலக ஐக்கிய நாடுகள் சபை' அமைக்கப்பட்டது.

பழந்தமிழர் காலம் சுமார் கி.மு.10,000 ஆண்டில் தொடங்குவதாக கூறப்படுகிறது.

லட்சத்தீவில் மொத்தமுள்ள 36 தீவுகளில் 11 மட்டும் மக்கள் வசிக்கிறார்கள்.

இறந்து போனவர்களின் உடலை பதம் செய்து காப்பாற்றுவதற்கு பெயர் 'எம்பாம்'.

'இம்பாலா' என்ற மான் ஒரே தாவலில் 8 அடி உயரம் துள்ளி 25 அடி தூரம் பாயும்.


அமெரிக்காவில் ஹெலிகாப்டர்களை டாக்சிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை 'சாப்பர்ஸ்' என்று அழைக்கிறார்கள்.

தலைவலிகளில் 47 விதங்கள் இருக்கின்றன.

மனித சிந்தனையின் வேகம் மணிக்கு 150 மைல் செயல்படுகிறதாம்.

'செரியம்' எனப்படும் பொருளை நகத்தால் கீறினாலே தீப்பற்றிக் கொள்ளும்.

கழுகு பறக்கும்போது அதன் கால்களும், தலையும் கீழ் நோக்கியே இருக்கும்.

உலகில் மிகுதியான மக்களால் பயன்படுத்தப்படுவது ரோமன் எழுத்துக்கள்தான்.

வெயில் 150 டிகிரிக்கும் மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.




Friday, November 6, 2009

தண்டனைகள் தப்பினால் தப்புக்கள் குறையுமா?


நம்ம ஊர்ல குற்றங்கள் பெருகிகிட்டே வருது. இது எப்ப குறையும்னு நமக்கெல்லாம் ஒரே ஏக்கமா இருக்குது. எப்படி குறையும்?

குற்றங்கள் குறையனும்னா, அது குறையிரதுக்கான வழிமுறைகளை நம்ம ஏற்படுத்தணும் / கடைபிடிக்கணும். இந்திய குற்றவியல் தடுப்பு சட்டம் வருசையா எண்களையும், ஆங்கில எழுத்தையும் கூட்டு சேர்த்துகிட்டு சில புத்தகங்கள்ல தூங்கிகிட்டு இருக்குது. ஒரே சட்டத்துக்கு பல உட்பிரிவுகள். அது சில வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்குமே புரியாது போல. சிவாஜி படத்துல வருமே செக்சன் 49D, 498B....இது மாதிரி இன்னும் என்னென்னமோ இருக்குது போல.

சட்டத்தை படிக்கும் போது எல்லாத்தையும் படிக்கிற நம்ம ஆளுக, களத்துல இறங்குன உடனே அதுல உள்ள எல்லா ஒட்டைகல்லையும் புகுந்து இவங்க வெளிய வர்றதுமட்டுமில்லாம குற்றவாளிகளையும் வெளிய கொண்டுவந்துடுறாங்க.

தேசப்பிதா சொன்னதுல எதை பின்பற்றுகிறார்களோ இல்லையோ, 1000 குற்றவாளி தப்பிக்கலாம் அனால், ஒரு நியாயவாதி கூட தண்டிக்கப்படக் கூடாது அப்படிங்கிறதுல மட்டும் கடைபிடிக்கிறாங்க. ஆனா என்ன, லட்சக் கணக்குல குற்றவாளிங்க தப்பிச்சிட்டாங்க, தப்பிச்சுகிட்டு இருக்காங்க...ஒருத்தன்கூட தண்டிக்கப்படல. பாவம் அந்த அரைநிர்வாணக் கிழவனுக்கு தெரியல, நம்ம ஆளுங்களோட நேர்மை, யோக்கியதை.


நம்மில் பல பேர் நம்ம நாடு ரொம்ப பெரிய நாடு அதுனால, இதுல அவ்வளவு எளிமையா எல்லா குற்றங்களையும் குறைச்சிட முடியாதுன்னு சொல்லிக்கிட்டு திரிவோம். குற்றங்களை நம்ம வீடு, பள்ளி, நம் ஊர், நம் மாவட்டம், மாநிலம், நாடு-ன்னு பார்த்த இடங்களில் எல்லாம் திருத்தியோ, குற்றங்களுக்கேற்றாற்போல் தண்டனைகள் வழங்கியோ தடுக்க முயன்றால் முடியாதா என்ன?

ஒரு மனித சமுதாயம் வீட்டில் தான் தொடங்குகிறது. ஒரு தாயும், தந்தையும் தன் பிள்ளையின் மீது உண்மையான அக்கறை கொண்டு அவர்களை நல்ல முறையில் வளர்த்தால், ஒரு பள்ளி ஆசிரியர் புத்தகப் பாடங்களை போதிப்பதை மட்டும் செய்யாமல் (அதை மட்டுமாவது செய்யுங்க-ன்னு இப்ப கெஞ்சுற நிலமையில இருக்குது), வாழ்க்கை பற்றிய புரிதலை, சாதித்தவர்களின் (சாதித் தலைவர்களின் அல்ல)வாழ்க்கையும் எடுத்துக்கூறி வளர்த்தால் குற்றங்கள் குறைக்கப்படுவது மிக மிகச் சாத்தியமே.

சிறு குற்றங்கள் ஆனாலும், அவற்றின் பாதகத்தை குற்றம் புரிந்தவருக்கு உணர்த்தவேண்டும். வெறுமனே தண்டித்தலிலும் முழுப் பலன் கிட்டாது. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு "Low Crime doesn't mean No Crime". சிறிய குற்றங்கள் மன்னிக்கப்படக் கூடியதாக இருக்கலாம். ஆனால், குற்றவாளி தன் குற்றத்தையும் அதன் பாதகங்களையும் உணர்ந்தால் அவராகவே அது போன்ற குற்றங்களையாவது எதிர்காலத்தில் செய்யத் தயங்குவர்.

தன் பிள்ளை செய்வதெல்லாம் சரியென எல்லா விஷயங்களிலும் நினைப்போர், தாங்களே தங்கள் பிள்ளைகளை குற்றவாளி கூண்டின் முதல் படியில் ஏற்றுகிறார்கள் என்று அர்த்தம். பிள்ளைகளுக்கு பாசம் காட்டுங்கள். செல்லம் என்றுமே காட்டாதீர்கள். பாசத்திற்கும், செல்லத்திற்கும் மிகக் குறைந்த இடைவெளி என்பதை அறிந்திருப்பீர்கள். பாசம் உங்கள் குழந்தையின் எதிர் கால வாழ்விற்கு நீங்கள் அளிக்கும் ஊட்டச் சத்துள்ள உணவு. செல்லம் நீங்களும் உங்கள் குழந்தையும் சேர்ந்து அருந்தும் விஷமான போதைப்பொருள். செல்லத்தால் விளையும் விபரீதங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு குற்றத்தின் பின்னணியைப் பார்த்து, சில சமயங்களில் மன்னிக்கப்படுவதில் உடன்படலாம். சில குற்றங்கள் நிரூபிக்கப்பட்டும், அவற்றிற்கு சரியான தண்டனை வழங்காமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பது உயரிய கருத்தாக இருக்கலாம். அனால், அந்த குற்றவாளி மட்டும் தான் திருந்த வாய்ப்பிருக்கிறது. கடும் தண்டனை அளித்திருந்தால் இது போன்ற குற்றம் செய்ய பல குற்றவாளிகள் உருவாவது தடுக்கப்பட்டிருக்கும். குற்றம் செய்பவர்களுக்கு திருந்த வாய்ப்பளிப்பது என்பது மற்றும் பலருக்கு குற்றவாளி ஆகும் வாய்ப்பளிப்பதாகவே பொருள்படாதோ?

கணவன் மனைவி விவாகரத்து வழக்குகளில், பலமுறை அவர்கள் ஒன்றுகூட வாய்பளித்து கடைசியில் தீர்ப்புக் கூறுவது பொருத்தமாக இருக்கும். அதே சமயம், இன்னும் பிற குற்ற வழக்குகளில், விசாரணைகள் ஒத்தி போடப்படுவது எதனால்? குற்றவாளி திருந்தவா? வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை இன்னும் அருமையாக ஜோடிக்கவா? சட்டங்களின் ஓட்டைகளை முற்றிலும் தெரிந்துகொண்டு தப்பிக்கவா? பல குப்பை வழக்குகள் கூட பல ஆண்டு காலம் நடந்துகொண்டிருப்பது நமது நாட்டின் முக்கிய தூண் பழுதடைந்து விட்டதைத்தான் காட்டுகிறது. அல்லது நம் நீதித்துறையின் கையாலாகாத்தனம் எனப் பொருள் கொள்ளும்படி உள்ளது.

நீதிமன்றங்கள், நமது தொல்லைக்கட்சிகளில் பண்டிகை தினங்களில் இடம்பெறும் பட்டிமன்றங்களுக்கும், வழக்காடுமன்றங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் செயல்படுவது வெட்கக்கேடு. இதைவிடக் கேவலம் சட்டம் பயிலும் மாணவர்களின் சாதீய நிலைப்பாடு. எதை நோக்கி போகிறது நம் நீதித்துறை? நீதித்துறையில் நீதி குறைந்து நிதித்துறையின் கிளையாக செயல்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இரு தரப்புகளுக்கு கொடுக்கப்பட்ட உரிமை தான் வாதம். அது மருந்தில்லா நோயாகி, வாதத் திறமைக்கு தீர்ப்பு பரிசாக அளிக்கப்படுகிறது.

காவல்துறை ஒழுங்காகச் செயல்பாடாலே நாட்டில் பல வகையான குற்றங்கள் கட்டுக்குள் இருக்கும். ஆனால், காவல் துறையின் செயல்பாடுகள் பணக் கட்டுக்குள் அடிமையாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. புகார்கள் முறையாகப் பதியப்படுவதில்லை. எவ்வளவு பெரிய குற்றமாகினும் வழக்குப் பதிவதில் காவல்துறை மும்முரம் காட்டுவதில்லை (எமக்கு நடந்த அனுபவம்....அது தனிபதிவாக எதிர்காலத்தில் வரலாம்). நெருங்கிப் பழகிய காவல்துறை அதிகாரியிடம் கேட்டால், ஒரு வழக்குப் பதியப்பட்டால், அதற்க்கு தேவையான, சாட்சியங்கள் சரியாக விசாரித்து சேர்க்கப்பட வேண்டும். நிறையா எழுத்துவேலைகள் இருக்கும். சரியான செக்சன் பார்த்துப் போட வேண்டும். இந்த வழக்கு சம்பந்தமான கோப்புகளை நீதி மன்றத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். இன்னும் பல நடைமுறை சிரமங்கள் உள்ளதாகச் சொல்கிறார் (வேலை செய்வதற்குத்தானே கூலி. கூலி உயர்விற்கு மட்டும் முதலில் கொடி பிடிக்கிறார்கள்). இது வேதனையான மற்றும் அதிர்ச்சியான விஷயமாகப்படுகிறது.

நீதி மன்றங்கள், எவ்வித பாகுபாடுமின்றி நமது அரசாங்கத்தை கண்டிக்கவோ, தண்டிக்கவோ உரிமை இருந்தும் அவற்றை பயன்படுத்தாமல் அரசியல் வியாதிகளின் அடிவருடிகளாக ஆகிப்போனது வருத்தத்திற்குரியது. ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்களான நம்மால் கண்டிக்கப்படக் கூடியதுமாகும். நீதி தேவதையின் கண் கட்டியிருப்பதை தமக்கு சாதகமாக்கி, நீதி தராசின் ஒரு பகுதியில் வாதமும், மறு பகுதியில் பணமும் மட்டுமே வைத்து நிறுக்க / நிரூபிக்கப்படுகிறது. இந்த நீதித்துறை தன் பலம் அறியாத செத்த யானையாக உள்ளது. (பரியது கூர்ங்கோட்டதாயினும் யானை வெறும் புலிதாக்குரின் - வள்ளுவன்)

காவல்துறையும், நீதித்துறையும் ஒரு குடும்பத்தின் கணவன் மனைவி போன்ற நெருக்கம் இருக்கப்பட வேண்டியவர்கள் (குற்றமற்ற தேசம் உருவாக்க). இவர்களே விவாகரத்து கோரும் அளவிற்கு இன்றைய சூழல் இருப்பதை எங்கு போய் சொல்வது? கட்டப் பஞ்சாயத்து தடுப்பு சட்டம் முதலில் காவல் துறையில் தான் அமுல் படுத்தப்பட வேண்டும்.

இப்போதெல்லாம் குற்றவாளிகளை வேறெங்கும் போய் தேடவேண்டியதில்லை. பெரும்பாலான குற்றவாளிகள், நீதித்துறை, காவல்துறை மற்றும் அரசியல் ஆகியவற்றிலோ அல்லது அவர்களின் பின் புலத்திலோ தான் இருக்கிறார்கள் என்பதை விஜய் படத்தின் குத்து பாடல்களுக்கு ஆடும், டவுசர் போடாத குழந்தைகள் கூட சொல்லும்.

மேலே குறிப்பிட்ட துறையில் மிக மிகச் சில நல்லவர்களும், வல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை மேல சொன்ன கருத்துக்கள் எந்த விதத்திலும் பாதிக்காது. அவர்கள் இத்துறைகளில் பெருகிய களைகளை களைய தூவப்பட்ட களைக்கொல்லிகள்.

இனியொரு விதிசெய்ய வேண்டிய அவசியமில்லை. கொண்டவிதிகளை செம்மைப்படுத்தி, சரியான முறையில் பயன்படுத்தி புதிய உலகம் படைப்போம்.




Tuesday, November 3, 2009

உள்குத்து கவிதைகள் - 3


பெண் குழந்தை



மரபுக்கவிதையாக - ஒரு
புதுக்கவிதை வேண்டுமென்ற
மனைவிக்கு....
பெண் குழந்தை!









தொலைபேசி


நாங்கள் எதுவும்
பேசுவதில்லை - ஆனால்
எங்கள் பெயர் மட்டும்
தொலைபேசி...







மழலை


எழுதவும் தெரியாது
படிக்கவும் தெரியாது - நீ
எழுதுகிறாய் . . .
ஓராயிரம் ஹைக்கூ !
மழலையின் பேச்சுக்கள்







ஊடல் கூடல்


மறக்க நினைத்த பொழுதுகளும்
மறைந்து நினைத்த பொழுதுகளும் - என்
மனதில் ஊசலாடிக் கொண்டிருகின்றன...
நம் ஊடலும் கூடலும்!







செயற்கைக்கோள்


உலகிலேயே அதிக
நீலப்படம் எடுத்தவருக்கு
வானுயரத்தில் வாழ்வு!
செயற்கைக்கோள்....