Wednesday, November 10, 2010

கோயம்பத்தூருக்கே குடை பிடித்து நடந்த "என்"கவுண்டர்?

அண்ணே! கோயம்பத்தூர்ல நடந்த என்கவுண்டர் சரியாத் தப்பான்னு பதிவுலகத்துல ஒரு பெரிய ஹிட் கவுண்டரைத் தொறந்து வைச்சுகிட்டு நம்மல்ல பல பேரு பதிவு போட்டாச்சு. "என்"கவுண்டர் பண்ணினது (அதனால) சரிதான்னு ஒரு கூட்டமும்.... குடை பிடிக்காம "என்"கவுண்டரை 'நடத்தினது' தப்புன்னு ஒரு கூட்டமும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆக மொத்தம் கோயம்பத்தூர்ல கவுண்டர் எண்ணிக்கையில ஒன்னு கூடிடுச்சு. இதுக்கெல்லாம் PCR Act-ல கேஸ் போடமாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

இந்த என்கவுண்டர் வசதியை நம்ம காவல்துறைக்கிட்ட எளிதா ஒப்படைச்சா, ரொம்ப ஆபத்து இருக்குங்கிறது உண்மை. ஏன்னா இது ரெண்டு பக்கமும் கூர்மையான கத்தி. இந்த நேரத்துல இதை எவ்வளவுதான் கத்தி கத்தி சொன்னாலும் இந்த கத்தி மேட்டர் எடுபடாது. மனுசங்க மனசு அப்புடி. இங்க இரும்பிலே இதயம் முளைத்த எந்திரர்கள் யாரும் இல்ல. சும்மா எந்த ஆதாரமும் இல்லாம பெட்டி கேசு போடுற காவல் துரைங்க... இதுமாதிரி என்கவுண்டர் அதிகாரத்தையும் கையில வைச்சிருந்தா, சும்மா பொடிப்பசங்களைக்கூட போட்டுத்தள்ளிருவேன் தெரியுமா... போட்டுத்தள்ளிருவேன் தெரியுமான்னு போட்டு வாங்கிடுவாணுக... வில்லா ஹவுஸ் வாங்குற அளவுக்கு.

எனக்குத்தெரிய சென்னை வியாசர்பாடி ஏரியாவுல சில ரவுடிகளின் மிரட்டல் தொல்லை தாங்க முடியாம, பொம்பளைப்புள்ள பெத்து வைச்சிருந்த பல குடும்பம் வேற ஏரியாவுக்கு ஷிஃப்ட் ஆயிடுச்சு. என்ன பண்றது மானத்தைக் காப்பாத்தணும், மகளைக் காப்பத்தனும், பணத்தைக் காப்பாத்தனும்.... அதுக்கு வேற ஏரியாவுல தான் காஃபி, டீ ஆத்தனும்னு தெரிஞ்சே, அந்த ரவுடிக இவங்களைக் காலி பண்றதுக்கு முன்னாடி, தானாகவே ஏரியாவையே காலி பண்ணிட்டு போயிட்டாங்க. அந்த ரவுடிகளை அரசாங்கம் இந்த மாதிரி என்கவுண்டர்-ல போட்டுத் தூக்கிடுச்சு. அந்த தகவலைக் கேட்ட பல குடும்பம். அப்பாடா-ன்னு ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டுச்சு. இதுல கொலைகளை கொண்டாடுற மனோபாவம் எங்கையாவது இருக்கானு தேடிப்பாருங்க. அப்படி கொலைகளைக் கொண்டாடும் மனோபாவம் இருந்திருந்தால், அந்த கோயம்பத்தூர் பிஞ்சுக செத்தப்பக் கூட கொண்டாடியிருக்கனுமே! இல்லையில்ல... அப்பா நம்ம ஆளுக இன்னும் சைக்கோவாகலை. நீங்க இங்க மூச்சு விட்டுக்கங்க.

குற்றம் செய்தவனை மனநல மருத்துவரிடம் காட்டவேண்டும், மயிலிறகால் வருட வேண்டும் என்றெல்லாம் சமூக நற்ச்சிந்தனையாளர்கலான நாம் கூறிக்கொண்டிருந்தாலும்.... அந்த குற்றவாளியின் மனநிலையை குறைந்த பட்சம் ஒரு குற்றம் செய்த பிறகே கண்டுபிடித்து மாற்ற முயலும் சூழ்நிலையில் உள்ளோம். இவனது மனநிலையை அறிந்துகொள்ள/ இவனுக்கு சிகிச்சை அளிக்க, பாதிக்கப்பட்டவர்கள் என்ன ஆராய்ச்சி எலிகளா?

இந்த என்கவுண்டர் அபாயத்தால், பொதுப்படையான புது ரவுடிகள் உருவாவது வெகுவாகக் குறைந்துதான் உள்ளது. ஆனால், உருவான சில ரவுடிகள் வட/தென் பகுதியின் கழகச் செயலாளர்களாகவும், அமைப்புத் தலைவர்களாகவும் வெள்ளை வேட்டிக்குள் விறகுக்கட்டைகளாக வலம்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு அதிகார பலம் இருப்பதால், உடல் பலமுள்ள தண்டங்கள் முண்டங்களாக கையாள்(ல்) வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களில் பலர் சட்ட மன்றம், பாராளு மன்றங்களில் "மேற்பார்வையாளராக" பணியாற்றுகிறார்கள். (முதல்ல ரெண்டு மன்றத்தோட பேருகளை மாத்தனும்டா சாமி... நமக்கு அசிங்கமா இருக்கு).

இது குறித்த விவாதங்களின் போது நித்தியானந்தாவிற்கு இதே தண்டனை ஏன் வழங்கப்படவில்லை? என்று கேட்டிருந்தார்கள். நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரம் என்றால், அதில் சட்டத்திற்கே வேலையில்லை. அவர் வேறு ஏதேனும் குற்றச் செயல்கள் புரிந்திருந்தால், குற்றங்களின்படி அவருக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும். அதுவும் விரைவாக. நமது கையாலாகாத அரசுகளும் அவரையோ, பாதிரி ராஜரத்தினத்தையோ கடுமையாகத் தண்டித்தால், வாக்கு வங்கிகளான காவி மதமும், வெள்ளையாடை மதமும், வாக்கு சீட்டில் குத்த வேண்டியதை நமது பின் சீட்டில் குத்திவிடுவார்களோ என்ற கழிச்சலுடனே அணுகுவார்கள் என்பது நமது துரதிர்ஷ்டம். அந்தக் காரணங்களினால்தான் பெரியவாக்களும் இன்னும் மிகவும் சவுகரியமாக வாழை இலையில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஜனநாயகத்துல பணம் உள்ளவனுக்கு ஒரு மாதிரியும், பணம் இல்லாதவனுக்கு ஒரு மாதிரியும் சட்டமும், காவல் துறைகளும், ஆளும்(?)கட்சிகளும் வளைஞ்சு கொடுத்துப்போகுது... என்னத்தையாவது வாங்கிக்கிட்டு. உங்க விருப்படி இதை ஜனநாயகம்னோ இல்ல பணநாயகம்னோ நீங்க வைச்சுக்கலாம்.

தேர்தல் முடிவுகளை மட்டும் உடனே தெரிஞ்சுக்க வருஷா வருஷம் ஏதாவதொரு முன்னேற்றத்தை கொண்டுவருகிற நம்ம அதிகாரிகளும், அதுக்கு ஒத்துழைக்கிற அதிகாரிகளும், இந்த நீதித்துறையில ஒரு மாற்று வழியைக் கொண்டுவந்து வழக்குகளை விரைவா நிறைவேற்றி, தண்டணைகள சரியா வழங்க என்ன ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க? ஒரு FIR எழுதுற காவலர்கிட்டையும், கோர்ட்டு அலுவல்களை கவனிக்கிற காவலர்கள்கிட்டையும் அதிலிருக்கிற கஷ்டங்களை கேட்டுப்பாருங்க. அதை ஏன் இன்னும் நம்மளால எளிமைப்படுத்த முடியல? தெளிவான ஆதாரங்கள் உள்ள வழக்குகளின் விசாரணையைக் கூட, சம்பந்தமில்லாம பல வருடங்களுக்கு இழுத்தடித்து, பல சமயங்களில் ஏனோதானோ என்ற தண்டனைகளையும் கொடுத்தால் (போபால் வழக்கு ஒன்னு போதுமா நம்ம லட்சணம் தெரிய) இது போன்ற என்கவுண்டர் கொலைகளைக் கொண்டாடத்தான் செய்யும் இவ்வுலகம்.

என்னதான் தண்டனைகளைக் கொடுத்தாலும் குற்றங்களை இல்லாமல் அழிக்கமுடியாது என்பது பலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால், குற்றங்களைக் குறைக்கமுடியும் என்பது என் திண்ணம். என்னாண்ணே பண்றது... வீட்டுப்பாடம் செய்யலையினா வாத்தியாரு அடிப்பாருன்னு இருந்தாத்தான் நம்ம செய்யுவோம். இல்லை இல்லை அடிக்கலையினாலும் நான் என் அறிவு வளர்ச்சிக்காக செய்வேன் அப்படிங்கிற சொம்பு எத்தனை யோக்கியவான்கள்ட்ட இருக்குன்னு எனக்கு தெரியாது. தண்டனைகளால குற்றங்களைக் குறைக்ககூட முடியாதுன்னு நீங்க நம்புனா, பக்கம் பக்கமா, அதுல பல உட்பிரிவா தண்டணைகள விவரிக்கிற சட்டப்புத்தகங்கள் எதுக்குன்னு ஒருதடவை கேட்டுச் சொல்லுங்க.

என்கவுண்டர்களை எப்போதும் நம்ம ஆதரிக்கக்கூடாது தான். அதுக்கு மாற்றா என்னாண்ணே பண்ணலாம்? நீதி ஏண்ணே நியதியா எப்போதும் இருக்க மாட்டேங்குது? ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது - என்பது ஒரு பெரிய பாராட்டக்கூடிய கொள்கைதான். நிரபராதியைக் காப்பாத்துறேன்னு ஒவ்வொரு குற்றவாளியாத் தப்பிக்க விட்டுட்டு, தேசத்தில அமைதி சீர் குழைஞ்சிருச்சுன்னு சோறு குழைஞ்சது மாதிரி எளிதா சொல்லிட்டுப் போறதுல யாருக்கு லாபம். ஹெல்மெட் போடலையினா காவல் துரைக்கு (எழுத்துப் பிழையில்லை) இருபது ரூபாயாவது தண்டம் அழுகனுமேன்னு தன் தலையைக் காப்பத்துற தறுதல ஜாதி தானே நம்ம. நம்மகிட்ட தண்டனை வரும் வரும்னா... மூல வியாதிக்காரன் முக்கிக்கிட்டே இருக்கிற மாதிரிதான் இருக்கும். காலம் கடந்து கிடைக்கும் நீதியும் ஒரு அநீதி தானே!

மொத்தத்துல காவல்துறையே இது போன்ற என்கவுண்டர் நடத்துவது மிக மிக ஆபத்தானது. நீதித்துறையும் மிக விரைவாக செயல்பட்டு, கடுமையான தண்டனைகளை வழங்கவேண்டும். நீதித்துறையின் செயல்பாடுகளிலும், காவல்துறையின் குற்றம் தவிர்க்கும் அடிப்படைப் பணிகளிலும் அரசியல்வியாதிகள் மூக்கை மட்டுமல்ல எதையுமே நுழைக்கக்கூடாது (துண்டுச்சீட்டு உட்பட). மக்களிடம் தவறுகள் குறைவதற்கான விழிப்புணர்வையோ, நல்லெண்ண மனநிலையோ வளர்க்க தேவையான வழிகளைக் கண்டு நடைமுறைப்படுத்தலாம். குற்றம் செய்தவர்களை கடுமையாகத் தண்டிப்பது எந்த ஆண்மைக்கும் இழுக்காகாது. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் தவறுகள் செய்தால் கண்டிச்சு வளருங்க சாமிகளா. அங்க தண்டனை தேவையில்ல. ஆனா, தேசம்னு வந்துட்டா தண்டிச்சே ஆகணும். இங்க வைச்சு ஊலலால்லா பாடிக்கிட்டு இருக்கமுடியாது கூடாது.


இந்த மோகன்ராஜ் என்கவுண்டர் விஷயத்தில் வழக்கம் போல இட்டுக்கட்டப்பட்ட கதையை காவல்துறை அவிழ்த்துவிட்டாலும், அவர்களின் இந்த துரித தண்டனைக்கான மர்மம் விளங்கவில்லை. இந்த ஆயுதத்தை காவல்துறையிடம் வழங்கும் முன்னர் பலமுறை யோசிக்க வேண்டும். தீயவன் ஏதோ ஒரு வழியில் அழிந்தால், கொண்டாடு எனச் சொல்லிக்கொடுத்தது நமது சமூகம் தானே! எனவே, இதைக் கொண்டாடியவர்களை அரபுதேச குடிமகன்களாக எப்படி முத்திரை குத்தி புறந்தள்ளமுடியும்?

தண்டிக்காம விட்டா மட்டுமல்ல, காவல்துறையிடம் என்கவுண்டர் வசதிகள் ஒப்படைக்கப்பட்டால் கூட வலியது மட்டுமே வாழும். மற்றவர்களுக்கு "வலி"யது மட்டுமே மிஞ்சும்.