Thursday, June 10, 2010

நான் மதுரை வியாபாரி....- புனைவு

மதுரை ஒரு தூங்கா நகரம்.

அங்க நடக்கும் வகைவகையான வியாபாரம்.

நிறைய கடைகளின் வரலாறு பழசு.

ஒவ்வொரு முதலாளியோட அப்ப்ரோச்சும் ஒவ்வொரு தினுசு.

அங்க உள்ள மீனாச்சி அம்மன் கோயிலு தான் அந்த ஊரு வர்த்தக மையம்.

நாலு திசைக்கும் ஒவ்வொரு வாசலிருக்கும்.

ஒவ்வொரு வீதிக்கும் ஒரு வாசனை இருக்கும்.
 
பிளைவுடு கடை, இரும்பு பைப்பு கடை, பிளாஸ்டிக் சாமான் கடை, எலக்ட்ரிக்கல் சாமான் கடை, டைல்சு கடை, புத்தகக்கடை, பூக்கடை, ஹார்டுவேர் கடை, அண்டர்வேர் கடை, துணிக்கடை, தூபக்கடை, சாக்கடை, பேக் கடை, கேக்கு கடை, டீ கடை, பெயிண்டு கடை, பொட்டிகடை, போட்டோக்கடை, ஸ்டிக்கர் கடை, ஸ்பீக்கர் கடை, பழக்கடை, பட்டாணிக்கடை, பரோட்டாக்கடை, பாவாடைக்கடை, சிடி கடை, பீடி கடை, கண்ணாடிக்கடை அதுக்கு முன்னாடியும் கடை, டாஸ் மாக் அதுக்கு அடுத்தாப்புல சங்கு மார்க்கு.


அரிசி மண்டி, புண்ணாக்கு மண்டி, எண்ணை மண்டி, பழக்கமிஷன் மண்டி...

எல்லாச் சாமானையும் ஏத்திட்டுப் போக தினுசுதினுசா வண்டி....

இப்படிப்பட்ட மதுரைக்குள்ள போக உங்களுக்கு மனசுவரல??

வாங்க வடக்குமாசி வீதிக்குள்ள... ம்ம்ம்... இதான்ணே எங்கடை... சும்மா உள்ள வாங்க. பரவாயில்லைணே செருப்போடையே வாங்க....


டேய் முருகா... அண்ணனுக்கு அந்த ஸ்டூலை எடுத்துப்போடு...

அண்ணே அப்புடியே ஓரமா உக்காந்து எங்க பொழப்பு எப்புடி ஓடுதுன்னு பாருங்க... உங்களுக்கும் பொழுது போனது மாதிரி இருக்கும்.

முருகா எல்லாரும் டீ சாப்டிகளாடா?

இன்னும் இல்லைண்ணே...

சரி... எல்லாருக்கும் டீ சொல்லு... அண்ணனுக்கும் சேர்த்து... அண்ணே டீயா, காப்பியாண்ணே?

அண்ணனுக்கு காப்பியாம்டா முருகா... நல்லா ஸ்ட்ராங்கா போடசொல்லு...

டேய் குமாரு, நம்ம மினிடாரை கடை வாசல்ல போடாதைன்னு எத்தனை தடவைடா உனக்கு சொல்றது? ரோட்டுக்கு அந்த சைடு பார்க்கின் பக்கமாப் போட வேண்டியதுதானே... இங்குன போட்டீன்னா ரோட்டுல போறவன் எல்லாம் ட்ராபிக் ஆகுதுன்னு பூல் பூல்னு ஆரனடிச்சிட்டு போவான். பெரிய தலைவலிடா...

இல்லைண்ணே.... இந்த சத்தவுடத்துக்குள்ள எடுத்து அங்கிட்டு போட்றேன்...
டேய் என் செல்போனு அடிக்குது பாரு... எங்க குடோனுக்குள்ள வச்சிட்டம்போல எடுத்துட்டு வா... யாருன்னு பாரு...


இந்தாங்கண்ணே செவகங்கை பாலாண்ணே அடிக்கிறாரு...

ஹலோ அண்ணே சொல்லுங்கண்ணே... ஆமாணே கடையிலதான் இருக்கேன்... வாங்க வாங்க... இங்கதான் இருப்பேன். இப்ப எங்க நிக்கிறீக?... ஓ சரி... சரி... அந்த வேலையை முடிச்சிட்டு வாங்க... வாங்க... ஓகேண்ணே.. பை...

ஏண்டா... நேத்து ராத்திரி குஜராத்துல இருந்து கக்கூஸ் கோப்பை லோடு வந்துச்சே... எல்லாத்தையும் பத்தரமா எறக்கீட்டிகளா? எத்தனை ஒடைஞ்சுச்சு?

எறக்கியாச்சுண்ணே... இந்த தடவை அவ்வளவா ஒடசல் இல்ல...

சேட்டு கெடக்கமாட்டானே... இன்னைக்கே காசுக்கு போன் அடிச்சிருவானே....! முருகா இன்னொரு ஸ்டூலை எடுத்து இங்குட்டு போடு... செவகங்க பாலாண்ணே வாராரு... அண்ணே அண்ணே வாங்கண்ணே... எப்புடி இருக்கீக?

நான் நல்லாத்தான் இருக்கேன் மொதலாளி... நீங்க எப்புடி இருக்கீக?

எங்கண்ணே ஒரே அலச்ச... அதான் போனவாரங்கூட கலெக்சனுக்கு வரல... அதுனால வேற பணம் பூராம் மொடங்கி கெடக்கு... ஒருவாரம் தேங்கிப்போனாலே பெரட்டல் உருட்டலுக்கு ஆகமாடேங்குதே... என்னணே ஹார்ட்வேர் சரக்கெல்லாம் ஆர்டர் போட்டாச்சா?

முருகா பாலாண்ணே டீ சாப்புடமாட்டாரு... நிறைய சிரப் ஊத்தி ஒரு சர்பத் போட்டு வாங்கிட்டு வா...

ம்ம். இப்பத்தாண்ணே ஜெயபுஷ்பத்துல போட்டுட்டு வாரேன். அப்புடியே உங்களை பாத்துட்டு, உங்க கடையில கொஞ்சம் படம்போட்ட டைல்சும், அஞ்சாறு கக்கூஸ் கோப்பையும் ஆர்டர் போட்டுட்டு போகலாம்னு வந்தேன்.

நல்லதுண்ணே... நீங்க மூணு நாளைக்கு முன்னாடி சொல்லிருந்த பாத்ரூமுக்கு போடுற ஆறுக்காறு கோல்டன் பிரவுன் டைல்சும் பத்து பெட்டி ரெடியா இருக்குண்ணே... ஆர்டரை சொன்னா, ஒண்ணா இன்னைக்கு சாயந்தரமே உங்க ஊரு ரபீக் ராஜா லாரி சர்வீசுல போட்டு விட்டுரலாம்.

ரொம்பவெல்லாம் ஒண்ணுமில்லண்ணே கிச்சன்-ல ஓட்டுறதுக்கு ஃப்ரூட்ஸ், வெஜிட்டபில்சு படம் போட்ட டைல்சு இருவது இருவது பீசும், புதுசா வந்துருக்குல்ல கண் திருஷ்டி படம் அதுல ஒரு பத்து பீசும் போடுங்க... அப்புடியே வெஸ்டன் டாய்லட்டு கோப்பை மாடில வைக்கிற மாடல் மூனும், தரையில வைக்கிறது மாதிரி ஒரு அஞ்சும் சேத்து போடுங்க...

சரிண்ணே வேற வேற கலர்ல கலந்து போட்டுடுறேன். அண்ணே, இப்ப புதுசா சிம்ரன் டிசைன் பாத்ரூம் வால்டைல்சு வந்திருக்குண்ணே.. அதுல ஒரு பத்து பீசு போட்டு விடவா...?

அட போங்கண்ணே... இன்னும் எங்க ஊருபக்கம் பாத்ரூம்ல வால்டைல்சு போடுறதுக்கே ரெடியாகமாட்டெங்கிறாய்ங்க... இதுல வேற சிம்ரன் டிசைனு.. அதெல்லாம் வேணாம்னே...

இருங்கண்ணே போன் அடிக்குது... ஆஹா சேட்டு அடிச்சிட்டானே... "ஹான் ஜி.. போலியே ஜி... அச்சா ஹே... கேசா ஹே... ம்ம்ம் ஆகையா... ஆகையா... மணி??... யா ரெடி ஹே... ரெடி ஹே... ஹமாரே செக்... கல் கிளியர் ஹோஹையா... அச்சா... அச்சா... ஓகே சேட்ஜி... ஓகே.. பை...". சேட்டாய்ங்க ரொம்பத் தெளிவா இருக்காய்ங்கண்ணே... சரக்கை அனுப்பிட்டு உடனே காசுக்கும் போன் அடிச்சிர்றாய்ங்க...

இந்தாங்கண்ணே சர்பத்து...

பார்றா முருகா... உங்க மொதலாளி எங்கிட்ட இருந்து வசூல் பண்ணுறதுக்காகவே... ஹிந்தி எல்லாம் பேசுறாரு... ஹஹா...ஹாஹா...

இல்ல பாலாண்ணே... உங்க நக்கலு இருக்கே... யப்பா சாமி... ஆனா, ஒண்ணுணே போனவாரமும் வசூலுக்கு லயனுக்கு போகததால பணத்துக்கு என்னடா பண்ணுறதுன்னு கையை பெசஞ்சுகிட்டு இருந்தேன்... கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்தது மாதிரி நீங்க வந்தீங்க... ஹாஹா... ஹாஹா... வேற என்னணே பண்ணுறது... இப்புடித்தான் பொழப்ப ஓட்டவேண்டியதா இருக்கு... இல்லையினா இந்த மதுரையில நம்மளும் ஒரு வியாபாரியா ஓட்ட முடியுமாண்ணே?உங்களுக்கே தெரியும். என்னோட கஸ்டமர்கள் எங்கிட்ட இல்லாத பொருளை கேட்டாக் கூட நான் இங்க மதுரையில இருந்து வாங்கி அனுப்பி விடுவேன். அதுல நமக்கு லாபமெல்லாம் வேணாம்ணே... அந்த காசு ரெண்டு நாளைக்கு நம்ம கையில உருண்டு பெரண்டா போதும். ரொட்டேசனுக்கு ஆகிப்போயிருதுல்ல... அது போதும் நமக்கு.


ஆமா ஆமா ஞாபகம் இருக்கு... நான் மொத மொத உங்ககிட்ட அந்த மாதிரி வேற சரக்கு கேக்கும்போது அனுப்பி விடுறேன்னு சொன்னீங்க. என்ன என்ன பொருள்தான் நீங்க விக்கிறீங்கன்னு கேட்டதுக்கு, "மனுசனை தவிர மத்த எல்லாம் விப்பேன்னு" குசும்பா சொன்னீங்க.

ஆமாண்ணே அப்புடி பண்ணலையினா எனக்கு ஏதுண்ணே இந்தக்கடை? கூலிக்கு இன்னொருத்தர்கிட்ட வேலை பாத்துக்கிட்டு இருந்த எனக்கு, இப்புடி ஒழைக்காம இருந்திருந்தா எப்புடி இந்த ஸ்தானம் கெடைக்கும்? நீங்களே சொல்லுங்க?

சரிண்ணே நான் கெளம்புறேன்... நம்ம அயிட்டங்களை இன்னைக்கு ராத்திரியே ரபீக் ராஜா லாரி சர்வீசுல ஏத்திவிட்டுருங்க. போய்ட்டுவாறேன்.


போயிட்டுவாங்க பாலாண்ணே... நான் அனுப்பிவிட்டுறேன்... டேய், பாலாண்ணே சரக்கை இன்னைக்கு ஏத்திவிட மறந்துராதீகடா..

அடடே! நீங்க வேற ஒக்காந்து என் வாழ்க்கையை பாத்துகிட்டு இருந்தீகளே! ஒன்னும் போரடிக்கலையே? ஆமாணே உழைப்பும் இந்த வாய்ப்பேச்சும் இருந்தாத்தான் முன்னுக்கு வரமுடியுது... இந்த மதுரையிலன்னு இல்லண்ணே எல்லா ஊர்லயும் இதான் நெலம... நீங்க வேண்ணா இன்னொரு டீ சாப்புடுரீகளா? என்னது கெளம்புரீகளா? சரிண்ணே போய்ட்டு வாங்க. இன்னொரு நாள் பாப்போம்.Monday, June 7, 2010

களவாணித்தனமா கல்வி விற்போம் / வாங்குவோம் வாங்க...

நம்ம நாட்டுல தான் வாழ்க்கையையும், உடல் நலத்தையும் சீர்குழைக்கும் மதுக்கடையை அரசு ஏற்று நடத்துது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான கல்வியை மதுக்காய்ச்சியவர்கள்(ளும்) விற்கிறார்கள் அப்படின்னு நாம சொல்லி நம்மளே நம்ம தலையை சொறிஞ்சு சிரிச்சுக்கிட்டு போயிடுவோம். வேற என்னா பண்றது... நம்மளால முடிஞ்சது அதுதான் அப்படின்னு நம்ம கையாலாகாத தனத்தை நாமளே மெச்சிக்கிட்டு போயிடுவோம்.

ஒவ்வொருத்தருக்கும் நமது பிள்ளைகள் எதிர்காலத்துல நிறைய ச(ம்பா)திக்கனும்னு நினைக்கிறதுல தப்பே இல்லை. அது பேராசை-னு சொல்ல யாருக்கும் மனசு வராது. இதை சாதகமா தனியார் கல்வி வியாபாரிகள் பயன்படுத்திக்கிட்டாங்க. மிகச்சிலரைத் தவிர மற்றவங்க யாரும் இதை சேவையாக பண்ணுவது கிடையாது. இதில் வரும் இலாபங்களைக் கணக்கில் கொண்டே, இதற்கான உரிமம் பெறுவதற்கு கோடி கோடியாகக் கொட்டியும், தேவைப்பட்ட அளவு கூட்டியும் (பணத்தை) நமது அரசியல்வியாதிகள் மற்றும், சம்பத்தப்பட்ட அரசு (சர்வா)அதிகாரிகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

வியாபாராத்துல ஒரு யுக்தி உண்டு. கொஞ்சம் தரம் குறைவான ஒரு பொருளையும், கொஞ்சம் தரம் கூடிய பொருளையும் வைத்துக்கொண்டு, இரண்டிற்கும் உற்பத்தி செலவு மிகுந்த வித்தியாசம் இல்லாதிருப்பினும், அந்த தரம் கூடிய பொருளை மிக மிக விலை வித்தியாசத்துடன் விற்பார்கள். அதே யுக்தி கல்வி வியாபாரமாகிவிட்ட இந்த காலத்தில் பயன்படுத்தப்படுகிறதே என்ற வருத்தம் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்டு.

வீட்டுக்கு வாங்குற பூட்டுல இருந்து, விருப்பத்துக்கு வாங்குற ஆடைகள் வரை Branded பார்க்கும் நம் மக்களின் மனநிலைக்கு, தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை குறித்த பயம் இருப்பதில் நாம் அதிர்ச்சி அடைய முடியாது. அடையவும் கூடாது.  இந்த விருப்பத்தை வியாபாரமாக்கி கொள்ளை லாபத்தில் சுகபோக வாழ்வில் குளிர்காயும் குள்ள நரிகளுக்கு தூபம் அனைத்து ஆட்சிகளிலும் போடப்படுவது கண்டனத்துக்குரியதே. இதில் கண்டிக்கவும், தண்டிக்கவும் பட வேண்டியவர்கள் தனது ஆசிரியர் பணியை கடமையாகச் செய்யாமல், கடமைக்காகச் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனைகளை செயல்படுத்த முயலாமல் / முடியாமல், பெரும் பதவிகளில் பகட்டாகத் திரியும் அதிகாரிகளும் தான்.

பல அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கும் போதிய அடிப்படைத் தேவைகளை செய்து தராமல் இருப்பதற்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் ”எனக்கென்ன வந்தது” என்று பல காரணங்களை உருவாக்கிக் கொண்டும், காரணமே இல்லாமல் தவிர்த்துக் கொண்டும் வருபவர்களுக்கு நாம் என்ன பெயர் சூட்டலாம்? எப்படி அவர்கள் தலையில் குட்டலாம்? அதே நேரம் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த இடங்களில், யாரும் பின் நின்று தங்களை கண்காணிக்கவும், மேய்க்கவும் தேவையற்று சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் என்னோடு ஒத்த கருத்துள்ள நண்பர்கள் சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 

தம் பணியை மறந்தவர்கள் கொஞ்சமேனும் சுரணையோடு இருங்களேன். உங்களிடம் அல்லது உங்கள் ஆளுகையின் கீழ்வரும் பள்ளியில் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க உங்களுக்கு மனம் வராததற்கு காரணம் நீங்களும் தான் என்பதில் என்றேனும் வெட்கப்பட்டிருக்கிறீர்களா? கலைத்துறை என்ற பெயரில் திரை விலகும் முன்னே ஆடை விலக்கி நல்லவளாக நடிக்கும் நடிகைக்கு உள்ள அங்கீகாரம் நல்லாசிரியர்களுக்கு கொடுக்காததற்கு சம்பந்தப்பட்டவர்களின் பதில் என்ன? தமிழில் என்ன கருமாந்திரத்தையாவது பெயராக வைத்துவிட்டு கழிசடைகளை எங்களுக்கு கற்பிக்கும் கழிவறை சினிமாக்களுக்கு கொடுக்கும் வரிவிலக்கை ஏன் எமது அரசு நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு கொடுக்க என்றுமே முன் வருவதில்லை. அங்கீகாரம் செய்யப்படவேண்டும் தானே?

நல்ல கல்வியை அனைவருக்கும் தந்துவிட்டால், எங்கே எல்லோரும் விழித்துக் கொள்வார்கள் என்ற உங்களின் அச்சத்தை வெளிப்படையாக உங்களால் ஒத்துக்கொள்ள முடியுமா? இந்த கல்வி வியாபாராத்தை ஆங்காங்கே, சிறுசிறு போராட்டங்கள் மூலம் தெரிவித்த பெற்றோர்களுக்கு நமது அரசும், அரசு அதிகாரிகளும் வாக்கு எனும் பேரில் கொடுப்பது பேச்சுவார்த்தை எனும் பேரீச்சம்பழம்... உள்ளெ பெரிய கொட்டையுடன். அவ்வப்போது கண்துடைப்பாக அரசு போடும் கட்டளைகளுக்கு, வியாபாரிகள் உடனே நீதி மன்றம் செல்வதும், தடைபெறுவதும் கேலிக்கூத்தான செயல்தான்.   நிதிக்கும் நீதிக்குமுள்ள சம்பந்த உறவு அவர்களுக்குத் தெரியாதா என்ன?

அரசியலே சாக்கடையாகக் கிடக்கும்போது, அதில் உல்லாசமாகத் திரியும் இவர்கள் சாக்கடையில் நெளியும் புழுக்களாக (நன்றி பதிவுலகம்) இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? பணம் பார்த்த பிணங்கள் என்றும் இறங்கி வராது. ஆனால், எத்தனை அரசு அதிகாரிகள், அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இதை சவாலாக எடுத்து திறம்பட செயல்பட்டு, தமது பள்ளியின் தரத்தை எமக்கு உறுதிப்படுத்த முடியும்? இதில் முழுவதும் பெற்றோர்களைக் குறை சொல்ல முடியாது. யாரும் முழு விருப்பத்தோடு கல்வி வியாபாரிகளிடம் கல்வி வாங்குவதில்லை. 

ஒவ்வொரு தேர்தலுக்கும் தங்களின் கைகளை இந்த வியாபாரிகளை நோக்கி நீட்டும்போது... அரசியல்வாதிகள் எப்படி இந்த வியாபாரிகளின் கைகளை மடக்க முடியும்? சாட்சிகளைக் கொலை செய்யும் இவர்கள் அனைவருக்கும் எப்படி மனசாட்சி உயிராயிருக்கும்? ஏனோ தெரியவில்லை போராடுபவர்கள் மீது மட்டும் இந்த சட்டம் பல கொம்புகளுடன் முடிந்தவரை ஆழமாகப் பாயும். ஆனால் இந்த வியாபாரிகளின் தோள்களில் காதலி போல் இதமாக சாயும். பெரும்பாலும் அரசு இயந்திரங்கள் ஒழுங்காக இயங்காது. ஆனால், எவரேனும் ஒரு அப்பாவிக் கூட்டம் இந்த இயந்திரத்தின் சக்கரங்களில் சிக்கிக்கொண்டால், மிக கொடூரமாக இயங்கி, சக்கையாக முடிந்தவரைப் பிழிந்துவிடும். எப்படி அடுத்தவன் தயாராவான் என்ற பெரும் சப்தத்தோடு.

கல்வித்தரம் நன்றாக இருப்பதாக நாம் மதிப்பெண்களை வைத்து மட்டும் முடிவு செய்துகொண்டே இருப்போம். எப்படி பெரும்பாலான அந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது? எவர் வேறு பள்ளியில் படித்தாலும், அவரின் மதிப்பெண் அதிகாமாக இருந்தால் அவருக்கே தமது பள்ளியில் படிக்க அனுமதி என்று எழுதப்படாத சட்டம் அமலில் இருப்பதை எங்கு போய் முட்டிக்கொள்வது?

பதினான்கு வயதுவரை இலவசக் கல்வி... நல்ல திட்டம்தான். எந்த அளவுக்கு வெற்றி? இலவசம் தானே, இதில் தரம் எதிர்பார்க்க முடியாது என்பது கல்விக்கும் பொருந்துமா? பாலர் பள்ளிகளுக்கே பல லட்சம் கட்ட தயார்நிலையில் இருக்கும் பெற்றொர்களை அந்த முடிவுக்கு இழுத்துச் சென்ற பயம் / மிரட்டல் எது? ஏட்டுச்சுரைக்காய்களாய் வளர உற்சாகமூட்டுவது நம் நடைமுறைகளா? அல்லது அதுதான் இயல்பா / சாத்தியமா? அரசும், அரசுப்பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகளின் நற்கல்விக்கு உத்திரவாதம் தந்தால்... நாம் நமது பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு அப்போதாவது தயாராவோமா? எனும் கேள்விகள் என்னுள்ளும் எழுகிறது. 

பலருக்கும் இந்த கல்வி வியாபாராத்தின் மேல் எரிச்சல் இருந்தாலும், அதை எப்படி எதிர்ப்பது / தவிர்ப்பது / தடுப்பது என்று தெரியாமல் சிலர். தெரிந்தாலும் தலைக்கு மேல் வேலை என சொல்லுவதற்கும் எளிதான காரணம். அல்லது அது தான் நம்மில் பலரின் வாழ்க்கை முறை. என்ன செய்யலாம்? இந்த கல்வி முறையும், வியாபாரமும் ஏழைக்கும் பணக்காரனுக்கும் பெருத்த வித்தியாசத்தை ஏற்படுத்திக்கொண்டே போகிறது. வருத்தம் தான்.

இந்த பதிவும் என்னால் ஆன ஒரு அதிர்வு. பலரும் இந்த அதிர்வுகளை ஏற்படுத்தலாம். இன்னும் விபரம் தெரிந்தவர்கள் தங்களின் பதிவுகள் மூலம் விவரிக்கலாம். மாற்றம் வருமென்ற நம்பிக்கையில் நானும்....

முன்பே அதிர்வு ஏற்படுத்திய அன்பு நெஞ்சங்கள் - மதுரை சரவணன், தருமி இருவருக்கும் நன்றிகள். வாசியுங்கள்.

இந்த பதிவை எழுதத் தூண்டிய தருமி ஐயாவுக்கு நன்றிகள்.