Wednesday, September 30, 2009

கல்யாணப் பொண்ணுக்கு கண்டிசன்...

மாப்ள மாப்ள...வீட்டுக்குள்ளே உக்காந்துக்கிட்டு என்னையா பண்றீக?

வாங்க மச்சான். ஏய் புள்ள, பெருமாளு மச்சான் வந்துருக்காக டீ போட்டுக்கிட்டு வா.

ஏயா மாப்ள மாணிக்கம்! நீ பாட்டுக்க வியாபாரம் போக்குவரத்துன்னு திரிஞ்சா உம் புள்ளக்கு எப்பையா பொண்ணு பாத்து கலியாணம் கட்டி வைக்கிறது....

மச்சான் நீங்க ஒரு பொட்ட புள்ளைய பெத்துருந்தா எனக்கு அந்த வேலையாவது மிச்சமாயிருக்கும்.

அட போயா மாப்ள. உன் தங்கச்சி ஒத்துக்கிட்டா நான் என்ன இப்பவும் மாட்டேன்னா சொல்ல போறேன்.

மச்சான் உங்களுக்கு வயசாயி பேரன் பேத்தி இருக்குறத மறந்துட்டு இன்னும் மீசையில இருக்குற முறுக்கு உடம்பு பூராம் இருக்குறதா நினைப்பு தான்.

வாங்க அண்ணேன். அத்தாச்சி நல்லா இருக்காகளா? அவுக நம்ம வீட்டுப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... அவுகளையும் கூட்டியாந்திருக்கலம்-ல.
இல்லம்மா வள்ளி. நான் ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தேன். அப்படியே உங்களையெல்லாம் பாத்துட்டு போகலாம்னு வந்தேம்மா...

அடியே! மச்சான் நம்ம பயலுக்கு நாம இன்னும் கலியாணம் பண்ணி வைக்கலையினு திட்டுறார்டி.

நாங்களும் பல எடத்துல சொல்லி வச்சிருக்கோம்னே. இந்தப் பய ஒரு முடிவா எப்புடி பொண்ணு வேணும்-னு சொல்லித் தொலைய மாட்டேங்கிறான். இவன கம்ப்யூட்டர் படிப்பு படிக்க வச்சது தப்பா போச்சு... இவன் கேக்குற மாதிரி பொண்ணு நமக்கு தெரிஞ்ச ஊருகள்ள கிடையாது. இவுகளும் பல பேருக்கிட்ட பட்டணத்துல பொண்ணு பாக்க சொல்லி வச்சிருக்காக. பாப்போம் இவனுக்கு தலையில எங்க எழுதிருக்குன்னு...

அட போங்க மச்சான்....அவன் என்னா கொஞ்ச கண்டிசனா போடுறான். பொண்ணு சிவப்பா இருக்கனுமாம். மயினரு இவரு மட்டும் மாநிறமா இருப்பாராம். இவன விட கொஞ்சந்தான் குட்டையா இருக்கனுமாம். ரொம்ப குண்டாவும், ரொம்ப ஒல்லியாவும் இல்லாம மீடியமா இருக்கனுமாம். தொரைக்கு மட்டும் இப்பவே தொப்பை மடில உக்காருது. நல்லா படிச்ச புள்ள வேணுமாம். ஆனா வேலைக்கு போக கூடாதாம். படிச்ச புள்ளைக இதுக்கு ஒத்துகிட்டாலும், படிக்க வச்ச பெத்தவன் ஒத்துக்க மாட்டாம்போல. மூனுலேருந்து அஞ்சு வயசு கம்மியா இருக்கனுமாம். இவன் போடுற கண்டிசனுக்கு பொண்ணு பாத்தா....பொண்ணு வீட்டுக்காரன் நமக்கு இன்டர்வியூ வைக்கிறான்.

அவன் நினைக்கிறதுளையும் தப்பில்லைய்யா...அவன் வாழப்போறவன். அவனுக்குப் புடிக்கலயினா நாளைக்கு நம்மலயிள்ள குத்தம் சொல்லுவான். நம்மதான் அவன் எதிர்பார்ப்புல கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்னு அவனுக்கு புரிய வைக்கணும். எங்க பய அதிகம் படிக்காததால இங்குன பக்கத்து ஊருலயே பொண்ணு அமஞ்சிருச்சு. நம்ம ஊருக்காட்டுல வாழறதுக்கு அது போதும்னு அவனும் புரிஞ்சுகிட்டான். ஆனா உங்க புள்ள, அதிகம் படிச்துனால பட்டனத்த அண்டி பொளைக்கப் போறான். அவன் தகுதிக்கு சொல்லிக்கிறா மாதிரி பொண்ணு இருந்த தானே அவன் அந்த சமுதாயத்தோட ஒட்டி வாழ முடியும்.

ஏன் மச்சான் நம்ம காலத்துல இப்புடி எல்லாம் நம்ம கிட்ட கேட்டா கலியாணம் பண்ணி வச்சாங்க? நாம நல்லா வாழல? புருஷன் பொஞ்சாதி அன்பாவும், சொந்த பந்தங்கள அரவணைச்சுக்கிட்டும் போகல? நல்லாதானே போயிகிட்டு இருக்குது....

என்னய்யா மாப்ள! பைத்தியக்காரத்தனமா பேசுறே...நம்ம காலத்துல கிடச்ச பொருள்களை வாங்கி நம்ம விரும்புன மாதிரி பயன்படுத்துனோம். ஆனா இப்போ, விரும்புற பொருள்களை நினச்சது மாதிரி தனக்குன்னு செய்யச் சொல்லி வாங்குற காலமா-ல இருக்கு.

நம்ம கூரை வீட்டுல இருந்தாலும், உம் புள்ள எத்தன காரை வீடு வச்சிருக்கான்னு கேட்க்க ஆரம்பிச்சுட்டோம்-ல. அதான் அவன் பணத்த தேடி தேடி அலைஞ்சு அதை கண்டு புடிச்சு முடிக்கும் போது வாழ்க்கைய தொலைச்சுப் புடுறாங்க. தெரிஞ்சோ தெரியாமலோ, நம்மலே நம்ம புள்ளைகள அந்த மாதிரி வாழ்க்கை முறைக்கு மாத்திட்டோம்.

நாம சாப்பாட்டுக்காக வேல செஞ்சோம். இப்ப அவங்க சாப்பாட மறந்து வேல செய்யிறாங்க. நம்ம இருந்து, படுக்க ஒரு வீடு கட்டுனோம். ஆனா அவங்க, இருக்க படுக்க நேரமில்லாம வீட்டை கட்டி வீதிலே திரியுறாங்க. சந்தோசமா இருக்கிறதே இப்ப சாகச வாழ்க்கையா ஆகிப்போச்சு. நகரமயமாக்கல்-ல உலகமே நரகமயமாயிடுச்சு.

வீட்ட பெருசா கட்டி, மனச ரொம்ப சின்னதா சுருக்கிக்கிட்டான். மாமம்புள்ளைய மனசார முறையா கூப்புடுரத இப்ப மானக்கேடா நினைக்கிறாங்க....அம்மாவோட அண்ணன் புள்ளக-னு சொல்லி அந்நியப்படுத்தவே விரும்புறாங்க. தனித்துவமா இருந்த மனித இனம் இப்போ தனிமைத்துவதையே நியாயப்படுத்துது.

விபச்சாரத்தை தப்புங்குற உலகம், விவாகரத்தை சரிங்குது. கடமைய காசுக்கு வித்துப்புட்டு கண்ணியத்த காத்துல விட்டுருச்சு. சொந்தங்களை விரட்டிவிட்டு சொத்து மட்டும் சொந்தம்னு சொல்ல நினைக்குது. பெத்த அன்னைய முதியோர் இல்லத்துக்கு தானம் பண்ணிட்டு...கோவில் கோவிலா அன்னதானம் வழங்கி மகிழுது.

சரியா சொன்னீங்க மச்சான். இதையெல்லாம் நம்ம இளசுக புரிஞ்சுகிட்டா உண்மையான வாழ்க்கைய வாழ முயற்சிப்பாங்க. மறந்துடாம எம் மகனுக்கு ஒரு பொண்ணு குட்டிய பாத்து சொல்லுங்க. நம்மளாவது நம்ம கடமையை சரியா செஞ்சுவைப்போம்.

சரி மாப்ள நானும் வந்து ரொம்ப நேரமாச்சு. உங்க தங்கச்சி தேடுவா...நான் கிளம்புறேன். வரட்டாமா வள்ளி...

சரிண்ணே....அத்தாச்சிய கேட்டதா சொல்லுங்க...





Monday, September 28, 2009

காதல் கரு...


மோதலான வார்த்தைகளின்
மோகத்தில்...
கயல்விழிக் கண்களின்
கலவியில்...
உன்னுள்ளும்
என்னுள்ளும்
உருவான கரு - காதல் !

இதயங்களின் இணைவில்
இரட்டிப்பானது இன்பங்கள்
துன்பங்கள் தூரம் போனது...

காதலோடு

களவில் வாழ்ந்தோம்!
நெஞ்சங்கள் இரண்டும்
நிஜங்களுக்கு அப்பால்...

கனவுகள் அனைத்தும்
காதல் வலைக்குள்...

நடைபயண நட்பில்
நலமாய் வளர்த்தோம்
நம் காதலை...

உதவாக்கரைகளின்
உளறல்கள் கூட
உரமாய் அமைந்தது - நம்
உறவின் வலுவுக்கு...

காதல் கரு உன் வாயில்
பிரசவமாகட்டும்
என நானும்...
என்னில் பிரசவமாகட்டும்
என நீயும்...
வெகுகாலம் வெகுளிகளாய்......


அடர்நிறம் உனக்குப் பொருத்தமாம் !




அடர்நிறம் உனக்குப் பொருத்தமாம் !
அடம்பிடித்து என் மனது...

அனுதினமும் உனைக் காண
அலைகளென பாய்கிறது...

அவளிடம் உனக்கு
பிடித்து என்னவென்றால்? - பித்து என்கிறது...

உன்னோடு இணைந்திருந்தால்
என்றென்றும் இன்பமடி...

உனைத் துறந்தால்
அப்பிரிவே துன்பமடி...

தூங்காத என் இதயம்
தாங்காத சோகத்திலும்
நீங்காத நினைவுகளில்
நித்தம் உன் வழியெங்கும்
மலர் தூவி மகிழ்ந்திடுமே....




Saturday, September 26, 2009

காண்டமும் நமது வாழ்வும்!


- நன்றி யூத்ஃபுல் விகடன்


நம்மில் எத்தனை பேருக்கு காண்டமும் நமது வாழ்வும் பற்றி தெரியும்? எத்தனை வகை காண்டங்கள் மனித வாழ்வில் குறுக்கிடுகின்றன? பல வகையான காண்டங்கள் நம்மை நோயிலிருந்தும், உயிரிழப்பிலிருந்தும் காக்கின்றன. அனால் நம் வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க விடாமல், நம்மை வாழ்வின் விளிம்பு நிலைக்கு தள்ளுகின்ற எத்தனையோ வகை காண்டங்கள் இவ்வுலகில் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன.

புராண காலத்திலிருந்தே இந்த காண்டங்கள் குறிப்பிடப்பட்டு பட்டு இருக்கின்றன. நம்மில் சிலர் இது பற்றி படித்தோ அல்லது தங்கள் வாழ்வில் உணர்ந்தோ வந்திருக்கிறோம்.

* பால காண்டம்
* அயோத்திய காண்டம்
* ஆரணிய காண்டம்
* கிட்கிந்தா காண்டம்
* சுந்தர காண்டம்
* யுத்த காண்டம்


- இவையாவும் ராமாயணத்தில் கூறப்பட்ட காண்டங்கள் ஆகும். ஒவ்வொரு காண்டமும், அந்தந்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளையும், வாழ்க்கை முறைகளையும் விளக்குவனவாக உள்ளன.

இன்றைய காலத்தில் ஒவ்வொரு மனிதனும் சில காண்டங்களில் வாழ்ந்தோ, அல்லது அவற்றை கடந்தோ வந்து கொண்டிருக்கிறான். அவற்றில் எனக்குத் தெரிந்த சில காண்டங்களைப் பற்றி கூறவே இப்பதிவு.

பண காண்டம் - மனிதன் தான் வாழ்வதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்க்காக உருவாக்கப்பட்ட இந்தப் பணம் எதோ சூட்சுமத்தால் அவனின் வாழ்வை மறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னை தேடித் தேடி வாழ்க்கையைத் தொலைக்கச் செய்தது.

அரசியல் காண்டம் - மனிதகுலம் தனக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கி, தமக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அனைவருக்கும் பத்திரமான ஒரு வாழ்விட வசதிகளை உருவாக்கித் தரவும் ஏற்படுத்தப்பட்டதுதான் அரசாங்கம். அனால், அரசியல் சாசனங்களையும், பதவிகளையும் பயன்படுத்தி, தனக்கும் தனக்கு வேண்டப் பட்டவர்களுக்கும் வசதியான வாழ்விடங்களைப் பத்திரம் போட்டுக் கொள்ளவும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதையும் அடிப்படை கொள்கைகளாக ஏற்படுத்திகொண்டது நமது அரசியல் கட்சிகள்.


ஜாதி-மத காண்டம் - ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்பதில், ஒருவனே தேவன் - அவன் நான் வழிபடுவனே ! என்று மனித மனங்களில் விஷ மருந்து பாய்ச்ச போட்டி போட்டுக்கொண்டு வேஷம் பல போட்டுத் திரியும் மதம்பிடித்த இந்த மாக்கள்(மாடுகள்) குலத்தை மட்டும் ஒன்றாக இணைத்துக்கொள்ள தயங்குவதேன்? ஜாதிகளின் பெயராலும், மதங்களின் பெயராலும் மனித குலத்தைப் பிரித்தாளும் இந்த கருப்பு ஆடுகள் வெளியேறிய வெள்ளையர்களைவிட மோசமானவர்கள்.


கல்வி விற்பனைக் காண்டம் - முறையான கல்வியை இலவசமாகக் கற்றுக் கொடுத்தால், அறிவை வளர்த்து அளப்பரிய சாதனைகள் செய்து இவ்வுலகம் போற்ற வாழ்ந்து, தனது தேவைகளையும், தன்னைச் சார்ந்தவர்கள் தேவையும் பூர்த்தி செய்து கொள்வான். அனால், இன்று கல்வி விற்கப்பட்டு, அன்னதானங்கள் மூலமாகவும், இலவசங்கள் மூலமாகவும் நம்மை அறியாமல் நம்முள் வாழ்க்கைத் தர வேறுபாடுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.


கலாச்சார காண்டம் - நாம் செய்த அற்ப இன்பம் தரக்கூடிய செயல்களை நமது இளைய தலைமுறையினறோ அல்லது நம் சந்ததியோ செய்து அனுபவித்திடக் கூடாதெனவோ, நமக்குக் கிடைக்காத வாய்ப்பை அவர்கள் பெற்று அனுபவித்திடக் கூடாதெனவோ ஒரு குழுவும், எதிலுமே எல்லை மீறி இன்பம் காண்போம் வா என ஒரு குழுவும் கலாச்சாரத்தைப் பந்தாடிப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அன்பர்களே! நம் சந்ததிகளுக்கு ஒழுக்கத்தையும் அதன் பயன்களையும் கற்றுக் கொடுங்கள். நம் கலாச்சாரம் காக்கப்படும்.


பெண்ணிய காண்டம் - பெண்ணை அடிமைப்படுத்தும் ஆண்கள் ஒருக்காலும் சந்தோசமோ வெற்றியோ பெற முடியாது. அடிமைத் தனத்திலிருந்து வெளியேறுவதாக எண்ணி, தாமே தமக்கு அடங்காமல் திரியும் பெண்களுக்கு விடுதலை விடுகதை ஆகிவிடும். ஆணும் பெண்ணும் சமம் - அடிமை சங்கிலிகள் அறுத்தெறிவோம். அன்பால் இணைவோம். பண்பால் அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம். உங்கள் உண்மையான உரிமைகளுக்கு விடுதலை வேண்டுங்கள். உடைகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டு, விபச்சார விளம்பரங்களாக விலை போக உங்கள் விடுதலையை பயன்படுத்தாதீர்கள். உடை குறைப்பதே எங்கள் விடுதலை என ஒரு கூட்டமும், அப்படிப்பட்ட பெண்களை விளம்பரப் பொருளாகப் பயன்படுத்துவோரை எதிர்த்துப் பேசுவதே விடுதலை என ஒரு கூட்டமும் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் வெவ்வேறு திசைகளில் விடுதலையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட ஆணுக்கும், அவன் விரும்பும் பெண் தான் வாழ்வின் மையம் என்பதை உணருங்கள். வாழ்வில் வெற்றி கொள்ளுங்கள்.

மேற்குறிப்பிட்ட காண்டங்களையும், இன்னும் உங்களுக்குத் தெரிந்த காண்டங்களையும் முறையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றியும் இன்பமும் பெறுங்கள்! வாழ்வியல் அபாயம் தவிருங்கள்!


Friday, September 25, 2009

தெரிந்துகொள்வோம் - 1





கணித மேதை ராமனுஜம் வீட்டில் இருக்கும்போது தன தாயுடன் ஆடு-புலி விளையாட்டு ஆடுவார்.

முதலைக்கு வாழ்நாளில் எத்தனை பற்கள் விழுந்தாலும் முளைத்துவிடும்.

சர்க்கஸ் நடத்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களிடம் இருந்தது.

உலகில் மூன்றாவது கண் உள்ள ஒரே பிராணி "ஸ்பினோடயூன்". நியூஜிலாந்து தீவின் கரையில் உள்ளது.

1690-ஆம் ஆண்டில் இங்கிலந்துக்காரர்களால் கண்டறியப்பட்ட நகரம் இன்றைய "கொல்கொத்தா".

இதுநாள் வரை ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் வராத ஒரே மாநிலம் - மேகாலாயா.

வீரமாமுனிவர் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் உணவு உட்கொள்வார்.

பூரானுக்கு நாற்பது கால்கள்.

கீரியும் - பாம்பும் போல தேளும் - எட்டுக்கால் பூச்சியும் இயற்கையிலே பரம எதிரிகள்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குதிரைகள் காட்டுப்பூனைகள் அளவிற்கே இருந்தனவாம்.

பாம்பு நுனி நாக்கினால் வாசனையை நுகர்கிறது.

நட்சத்திர மீனை எத்தனை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டாலும், ஒவ்வொரு சிறிய துண்டும் ஒரு முழு நட்சத்திர மீனாக வளரும் சக்தி உடையதாம்.

புலிகள் கடுமையான சூரிய ஒளியை விரும்பாது.

புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் வரும்.

சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.

யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.

Tsetse fly - இந்தப் பூச்சி கடித்தால் ஏற்படும் நோய் என்ன தெரியுமா? தூக்கம்தான். தூங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.