Wednesday, September 30, 2009

கல்யாணப் பொண்ணுக்கு கண்டிசன்...

மாப்ள மாப்ள...வீட்டுக்குள்ளே உக்காந்துக்கிட்டு என்னையா பண்றீக?

வாங்க மச்சான். ஏய் புள்ள, பெருமாளு மச்சான் வந்துருக்காக டீ போட்டுக்கிட்டு வா.

ஏயா மாப்ள மாணிக்கம்! நீ பாட்டுக்க வியாபாரம் போக்குவரத்துன்னு திரிஞ்சா உம் புள்ளக்கு எப்பையா பொண்ணு பாத்து கலியாணம் கட்டி வைக்கிறது....

மச்சான் நீங்க ஒரு பொட்ட புள்ளைய பெத்துருந்தா எனக்கு அந்த வேலையாவது மிச்சமாயிருக்கும்.

அட போயா மாப்ள. உன் தங்கச்சி ஒத்துக்கிட்டா நான் என்ன இப்பவும் மாட்டேன்னா சொல்ல போறேன்.

மச்சான் உங்களுக்கு வயசாயி பேரன் பேத்தி இருக்குறத மறந்துட்டு இன்னும் மீசையில இருக்குற முறுக்கு உடம்பு பூராம் இருக்குறதா நினைப்பு தான்.

வாங்க அண்ணேன். அத்தாச்சி நல்லா இருக்காகளா? அவுக நம்ம வீட்டுப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... அவுகளையும் கூட்டியாந்திருக்கலம்-ல.
இல்லம்மா வள்ளி. நான் ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தேன். அப்படியே உங்களையெல்லாம் பாத்துட்டு போகலாம்னு வந்தேம்மா...

அடியே! மச்சான் நம்ம பயலுக்கு நாம இன்னும் கலியாணம் பண்ணி வைக்கலையினு திட்டுறார்டி.

நாங்களும் பல எடத்துல சொல்லி வச்சிருக்கோம்னே. இந்தப் பய ஒரு முடிவா எப்புடி பொண்ணு வேணும்-னு சொல்லித் தொலைய மாட்டேங்கிறான். இவன கம்ப்யூட்டர் படிப்பு படிக்க வச்சது தப்பா போச்சு... இவன் கேக்குற மாதிரி பொண்ணு நமக்கு தெரிஞ்ச ஊருகள்ள கிடையாது. இவுகளும் பல பேருக்கிட்ட பட்டணத்துல பொண்ணு பாக்க சொல்லி வச்சிருக்காக. பாப்போம் இவனுக்கு தலையில எங்க எழுதிருக்குன்னு...

அட போங்க மச்சான்....அவன் என்னா கொஞ்ச கண்டிசனா போடுறான். பொண்ணு சிவப்பா இருக்கனுமாம். மயினரு இவரு மட்டும் மாநிறமா இருப்பாராம். இவன விட கொஞ்சந்தான் குட்டையா இருக்கனுமாம். ரொம்ப குண்டாவும், ரொம்ப ஒல்லியாவும் இல்லாம மீடியமா இருக்கனுமாம். தொரைக்கு மட்டும் இப்பவே தொப்பை மடில உக்காருது. நல்லா படிச்ச புள்ள வேணுமாம். ஆனா வேலைக்கு போக கூடாதாம். படிச்ச புள்ளைக இதுக்கு ஒத்துகிட்டாலும், படிக்க வச்ச பெத்தவன் ஒத்துக்க மாட்டாம்போல. மூனுலேருந்து அஞ்சு வயசு கம்மியா இருக்கனுமாம். இவன் போடுற கண்டிசனுக்கு பொண்ணு பாத்தா....பொண்ணு வீட்டுக்காரன் நமக்கு இன்டர்வியூ வைக்கிறான்.

அவன் நினைக்கிறதுளையும் தப்பில்லைய்யா...அவன் வாழப்போறவன். அவனுக்குப் புடிக்கலயினா நாளைக்கு நம்மலயிள்ள குத்தம் சொல்லுவான். நம்மதான் அவன் எதிர்பார்ப்புல கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்னு அவனுக்கு புரிய வைக்கணும். எங்க பய அதிகம் படிக்காததால இங்குன பக்கத்து ஊருலயே பொண்ணு அமஞ்சிருச்சு. நம்ம ஊருக்காட்டுல வாழறதுக்கு அது போதும்னு அவனும் புரிஞ்சுகிட்டான். ஆனா உங்க புள்ள, அதிகம் படிச்துனால பட்டனத்த அண்டி பொளைக்கப் போறான். அவன் தகுதிக்கு சொல்லிக்கிறா மாதிரி பொண்ணு இருந்த தானே அவன் அந்த சமுதாயத்தோட ஒட்டி வாழ முடியும்.

ஏன் மச்சான் நம்ம காலத்துல இப்புடி எல்லாம் நம்ம கிட்ட கேட்டா கலியாணம் பண்ணி வச்சாங்க? நாம நல்லா வாழல? புருஷன் பொஞ்சாதி அன்பாவும், சொந்த பந்தங்கள அரவணைச்சுக்கிட்டும் போகல? நல்லாதானே போயிகிட்டு இருக்குது....

என்னய்யா மாப்ள! பைத்தியக்காரத்தனமா பேசுறே...நம்ம காலத்துல கிடச்ச பொருள்களை வாங்கி நம்ம விரும்புன மாதிரி பயன்படுத்துனோம். ஆனா இப்போ, விரும்புற பொருள்களை நினச்சது மாதிரி தனக்குன்னு செய்யச் சொல்லி வாங்குற காலமா-ல இருக்கு.

நம்ம கூரை வீட்டுல இருந்தாலும், உம் புள்ள எத்தன காரை வீடு வச்சிருக்கான்னு கேட்க்க ஆரம்பிச்சுட்டோம்-ல. அதான் அவன் பணத்த தேடி தேடி அலைஞ்சு அதை கண்டு புடிச்சு முடிக்கும் போது வாழ்க்கைய தொலைச்சுப் புடுறாங்க. தெரிஞ்சோ தெரியாமலோ, நம்மலே நம்ம புள்ளைகள அந்த மாதிரி வாழ்க்கை முறைக்கு மாத்திட்டோம்.

நாம சாப்பாட்டுக்காக வேல செஞ்சோம். இப்ப அவங்க சாப்பாட மறந்து வேல செய்யிறாங்க. நம்ம இருந்து, படுக்க ஒரு வீடு கட்டுனோம். ஆனா அவங்க, இருக்க படுக்க நேரமில்லாம வீட்டை கட்டி வீதிலே திரியுறாங்க. சந்தோசமா இருக்கிறதே இப்ப சாகச வாழ்க்கையா ஆகிப்போச்சு. நகரமயமாக்கல்-ல உலகமே நரகமயமாயிடுச்சு.

வீட்ட பெருசா கட்டி, மனச ரொம்ப சின்னதா சுருக்கிக்கிட்டான். மாமம்புள்ளைய மனசார முறையா கூப்புடுரத இப்ப மானக்கேடா நினைக்கிறாங்க....அம்மாவோட அண்ணன் புள்ளக-னு சொல்லி அந்நியப்படுத்தவே விரும்புறாங்க. தனித்துவமா இருந்த மனித இனம் இப்போ தனிமைத்துவதையே நியாயப்படுத்துது.

விபச்சாரத்தை தப்புங்குற உலகம், விவாகரத்தை சரிங்குது. கடமைய காசுக்கு வித்துப்புட்டு கண்ணியத்த காத்துல விட்டுருச்சு. சொந்தங்களை விரட்டிவிட்டு சொத்து மட்டும் சொந்தம்னு சொல்ல நினைக்குது. பெத்த அன்னைய முதியோர் இல்லத்துக்கு தானம் பண்ணிட்டு...கோவில் கோவிலா அன்னதானம் வழங்கி மகிழுது.

சரியா சொன்னீங்க மச்சான். இதையெல்லாம் நம்ம இளசுக புரிஞ்சுகிட்டா உண்மையான வாழ்க்கைய வாழ முயற்சிப்பாங்க. மறந்துடாம எம் மகனுக்கு ஒரு பொண்ணு குட்டிய பாத்து சொல்லுங்க. நம்மளாவது நம்ம கடமையை சரியா செஞ்சுவைப்போம்.

சரி மாப்ள நானும் வந்து ரொம்ப நேரமாச்சு. உங்க தங்கச்சி தேடுவா...நான் கிளம்புறேன். வரட்டாமா வள்ளி...

சரிண்ணே....அத்தாச்சிய கேட்டதா சொல்லுங்க...






1 comments:

ரோகிணிசிவா said...

//வீட்ட பெருசா கட்டி, மனச ரொம்ப சின்னதா சுருக்கிக்கிட்டான். //
SUPERA ELUTHEERKEENGA, NALLA ELUTHU NADAI , ATAKASAMANA PATHIVU