Wednesday, August 19, 2009

முந்தி விரிக்கிற விஷயத்த முந்தி சொன்னாதானே

சிரிச்சு சிரிச்சு பேசுற நமக்கு, சிறப்பா எழுத வந்தாலும் (அட விடுங்கப்பா, வேற யாரும் சொல்ல மாடாங்கல்ல அதான்)...சிரிப்பா எழுத வரலயேனு....நம்ம நண்பர்கள்லாம் சிரிச்சுப்புட்டா! என்ன ஆகுறது? கைப்புள்ள எடுறா வண்டிய......

இங்க படிக்க வர்றவக எல்லாம் நம்ம நாக்கோட நக்கல (ஏய் தப்ப புரிஞ்சுகாதீங்கப்ப!) தெரிஞ்சுகிரட்டும்னு....வாயடிச்சு வாயடிச்சு அத வார்த்தையா ஊத்தி வாக்கியமா வார்த்துடுவோம்னு .....தட்டச்சு பலகைய தடவித்தடவி தமிழைப் பிரசுரிக்கிறேன்(யாருண்ணே அது பிரசவிக்கிறேன்னு தப்பா வாசிக்கிறது?)

கத எழுதுவோமா? கவித எழுதுவோமா?னு கண்ண கசக்கவும், காகித்த கசக்கவும் இந்த வலைப்பூவுல தேவை இல்ல...நம்மளும் என்னத்தையாவது கசக்கி(மூளயத்தாம்பா சொன்னேன்) எழுதிடுவோம். படிக்கிறவன் படுச்சுட்டு போகட்டும்....அடிக்கிறதுக்கு தான் நம்ம அட்ரஸ் இல்லையேனு ஒரு தெகிரியத்துல(தைரியத்துல) எழுத வந்துட்டேன்.

நாட்டுல பத்தி எரியுரத, பத்தி பத்தியா சொன்னாலும், முந்தி விரிக்கிற விஷயத்த முந்தி சொன்னாதானே, படிக்கிறதுக்கு கூட்டம் முந்திக்கிட்டு வருது. கூட்டத்தின் குறிப்பறிந்து நீயும் எழுதுடான்னு சொன்ன நண்பனுக்கு இந்த பதிவு அன்பளிப்பு!

அதுவும் சரி தானே! ரொம்ப ராவி ராவி அப்புறம் நமக்கு ராவ் அவார்ட்(அண்ணே நரசிம்ம ராவ்னு புரிஞ்சுக்கிட்டா...நான் பொறுப்பு இல்ல) கொடுத்துறப் போறிங்க! பதிவுலகத்துல நிறைய அவார்ட் கிடைக்கும்ண்ணே....வேற துறையில விருது வாங்குறது, நம்ம அரசுத் துறைய்லே இருந்து சான்றிதல்கள் வாங்குற மாதிரி ரொம்ப கஷ்டம்௦-ண்ணே...அதான் இந்த உலகத்துல எல்லாத்தையும் சீக்கிரம் வாங்கனும்னு நிறைய பேறு நினைக்கிற மாதிரி....நானும் வாங்குறதுன்னு முடிவு பண்ணீட்டேன்.

இங்க உங்க ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களால அடி வாங்குறது நமக்கு அவார்ட் வாங்குன மாதிரி! எந்த கட்டையையும் (நாட்டு கட்டை மட்டும் விதி விலக்கு) எடுத்துக்கிட்டு வந்து என்னை பதிவர் சந்திப்புக்கு கூப்புடாதீங்கப்பா!

கருத்து கந்தசாமிங்க பல பேரு இருக்கும் போது எதுக்குடா இந்த குருத்து?னு நீங்க மறுத்து சொல்லிடக்கூடாதுள்ள....நம்ம எழுத்து ரசிக்க, ருசிக்க, யோசிக்க, நாலு பேரு கலந்து பேசிக்க முடியிறது மாதிரி இருந்தா நல்லது தானே....

அலுவலகத்துல டேமஜர் குடுத்த டாகுமெண்டை படிக்க முடியாம இங்க வந்தா...இவிங்களும் இலக்கியவாதினு காமிக்க....கமா, புல்ஸ்டாப் இல்லாம கருத்து, கத, கவித, காப்பியம்னு எழுதுறாங்கனு நமக்கு வோட்டு போடாம மூடிட்டு(ப்ரொவ்ஸெரைத்தான்) போயிரப் போறாங்க.

எழுதுறதுல எதுவும் அசிங்கம்னு நினச்சு, ஒதுங்கி போயிடாதீங்க! அசிங்கங்கள் இல்லையினா அழகானதை பிரித்து உணரமுடியாம போயிடுவோம். நல்லது கெட்டது (கெட்டதா தோன்றது) எல்லாத்தையும் ரசிப்போம். இது ரகசியமா எல்லார் மனசிலையும் நடக்குறது தானே.... கெட்டதுன்னு நினச்சா சங்கதி சொல்லுறதுக்கு சந்ததி இல்லாம போயிடும்யா...அது சாமி குத்தம்....உங்க மனசு குத்தும்....

நம்மளையும் ஆட்டையிலே சேத்துக்கங்க...அட நானும் உங்க ஆளுதாண்ணே .....அக்காமார்களும், அத்தாச்சிமார்களும் ஆதரவு கொடுங்க...

நீங்க இங்க வர்றதுக்கு அடையாள அட்டையெல்லாம் கேட்க மாட்டேன்...ஆனா வந்ததுக்கு அடையாளமா பின்னூட்டத்தையும், ஒரு வோட்டையும் போட்டுப் போங்க...
Tuesday, August 18, 2009

சிறுவர்களின் இதய அறுவை சிகிச்சைக்கு நாடுங்கள்...

படத்தை கிளிக்கி பெரிதாக்குக...Saturday, August 15, 2009

செந்தில் நாதா! உன் இதயம் துடிக்க

நண்பா! செந்தில் நாதா!
உன் இதயம் துடிக்க
பல இதயங்கள் துடிதுடிக்கின்றன...

பல ஜீவன்கள் உனைச் சார்ந்து!
உன் இதயமும் துடிக்கட்டுமே
உன்னுடன் சேர்ந்து....

பக்திகளோ! சக்திகளோ!
பல உத்திகளின் மூலம்
நட்ப்புக்கள் சேர்ந்தன ஒன்றாக உனக்காய்...

அச்சம் வேண்டாம்
மானிடம் இன்னும் மிச்சமிருக்கிறது...
நண்பர்கள் நிரூபித்து விட்டார்கள்!

மருத்துவம் தன் மகத்துவம்
நிரூபிக்கும் நேரமிது...
இனி மருத்துவர்களின் பாரமிது!

கவலை விடு
கண்ணில் நீர்த் திவலைகள் வேண்டாம்...
கடிகாரம் அல்ல நம் இதயம்
நமக்காக மட்டுமே துடிப்பதற்கு!

நமக்காய் துடித்த இதயம்
நண்பனுக்காய் துடிப்பதில் மகிழ்ச்சி....
கனிந்த இதயங்கள் கூடி
முடிந்த உதவிகள் செய்திடுவோம்

கண்டதில்லை உன்னை
ஒரு போதும் இதற்க்கு முன்...
காத்திருப்பேன் உனக்காய்
இந்த நண்பர்களுக்குப் பின்...........

உன் நலம் விரும்பி,
ரோஸ்விக்


Monday, August 10, 2009

திரு. நந்தன் நிலேகனி - அடையாள அட்டை


- நன்றி யூத்ஃபுல் விகடன்


திரு. நந்தன் நிலேகனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அறிவு சார்ந்த ஒருவருக்கு இந்த பதவியை வழங்கிய உயர்திரு. முனைவர் மன்மோகன் சிங்-கிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

திரு. நந்தன் அவர்களே,
உங்களுக்கு அளிக்கபட்டிருக்கும் இந்த பதவி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய குடிமகன் ஒவ்வொருவனுக்கும் தனி நபர் அடையாள அட்டை வழங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை அனைவரும் அறிவர். இது உங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால். தங்களின் அறிவும், அனுபவமும் இதை எளிதாக முறியடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த அடையாள அட்டை என்பது மிகவும் தரமான, கயவர்களால் எளிதில் உருவாக்க முடியாத ஒன்ற இருக்க வேண்டும். இதில் எந்த விதமான எழுத்து பிழையோ, பெயர்களில் தவறோ இல்லாத வண்ணம் உருவாக்கிட வேண்டும். இந்த அடையாள அட்டை ஒவ்வொரு தனி நபருக்கும் பன்னிரெண்டு இலக்கம் அல்லது அதற்க்கு மேலான இலக்கங்களை கொண்ட குறயீடாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விரல் ரேகைகளை பதிவு பெற்றிருக்க வேண்டும். அந்த அடையாள அட்டையில் புகைப்படம் அச்சிடப் பட்டிருக்க வேண்டும்.

ரேசன் கார்டைப் போல், வருமானத்தின் அடிப்படையிலோ, வேறு எந்தவொரு அடிப்படையுலும் இந்த அடையாள அட்டை வழங்கப் படக்கூடாது. இந்த அடையாள அட்டை ஒருவரை இந்தியன் என அடையாளம் காணவும், அவர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் எனவும், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த எந்த ஒரு தேவைக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அனைவருக்கும் அறிவுறுத்தப் பட வேண்டும்.

இந்த அட்டையும் வழக்கமான ரேசன் கார்டு, பான் கார்டு மற்றும் தேர்தல் அடையாள அட்டை போல, ரயிலில் பயணம் செய்வதற்கு மட்டும் பயன்படக் கூடாது. அனைத்திற்கும் இது முதன்மையானதாய் அமைய வேண்டும்.

முகங்களையே மாற்றும் இன்றைய உலகில் முகவரி மாற்றம் தவிர்க்க முடியாதது. தற்பொழுது உள்ள நடைமுறையில் மேற்குறிப்பிட்ட எந்தவொரு அட்டையிலும் முகவரியை மாற்றிக்கொள்ள எளிதான முறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. அதையும் எளிமைப் படுத்த வேண்டும். சமையல் எரிவாயு சேவை மற்றும் வங்கி கணக்குகள், புதிதாக இடம் பெயர்ந்த முகவரியின் சான்றிதழ்கள் இல்லையென காரணம் காட்டி மறுக்கப் படுகின்றன. இது கண்டனத்திற்கும், கவலைக்கும் உரியது. இந்த புதிய அடையாள அட்டை கொண்டிருப்பவர் இந்த பிரச்சனைகளை அனுபவிக்க கூடாது.

இந்த அடையாள அட்டையில் உள்ள தனித்துவம் பெற்ற அடையாள எண்ணின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள ஓட்டுனர் உரிமம், இன்னும் பல உரிமங்கள், வரி செலுத்துதல் மற்றும் வங்கி கணக்குகள் இதன் அடிப்படையிலே செயல்படுத்தப் பட வேண்டும்.

இதன் மூலம் திருமணப் பதிவுகள் கட்டாயமாக்கப் பட வேண்டும். அவ்வாறு செய்தால், திருமணப் பதிவின் பொது ஒருவர் முன்பே திருமணம் ஆனவரா? அவரது முந்தய மனைவி(கள்) முறையாக விவாகரத்து பெற்றுள்ளனரா? அதற்கான காரணம் என்ன? என்ற விபரங்களையும் தெரிந்து கொள்வது எளிதாகும்.

மருத்துவ மனைகள், ஆயுட்காப்பீடு முதலியனவும் இதன் அடிப்படையிலே கையாளப்பட வேண்டும்.

மேற்கூறியவை அனைத்தும் உங்களுக்கு வழங்கப் பட்ட ஆலோசனைகள் அல்ல. இவையனைத்தும் எதிர் கால திட்டமிடலின் சிறப்பான அம்சங்களாக நான்/நாம் விரும்பிகின்றவை.

மேற்குறிப்பிட்ட கருத்தக்கள் போக ஆக்கப்பூர்வமான சில கருத்தக்களை பின்னூட்டத்தில் எதிர் பார்க்கலாம் என நினைக்கிறேன்.புது உலகம் இந்த பதிவுலகம்

இந்த பதிவுலகில் என் முதல் நடையை உரைநடையாய் பதிவு செய்கிறேன். என்னை வாழ்த்தவும், வழி நடத்தவும் பண்பு உள்ளங்களை அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

இது நாள் வரை பதிவுலகை வாசித்தும், சுவாசித்தும் வந்த நான்...நிறைய யோசித்து என் முதல் அடி எடுத்து வைக்கிறேன்.
விஞ்ஞானம் தந்த இந்த புதுவுலகை நம் மெய்ஞானம் கொண்டு, நம் அறிவு சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து விவாதம் செய்வோம் எனவும், வாதம், ஒரு பக்க-வாதம் தவிர்ப்போம் எனவும் நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைக்கிறேன்.

இந்த உலகில், பதிவிடுவதும், பின்னூட்டமிடுவதும் கத்தி மேல் நடப்பது போன்றது என்பதை உணர்ந்து, ஒருவரை ஒருவர் தாக்க கத்தியோடு நடப்பது அல்ல என்பதை புரிந்து, தன் பக்க கருத்துகளை உரிமையோடு எடுத்து சொல்ல அனுமதிப்போம்.

ஏற்கத்தகாத கருத்துக்களை கூறியிருப்பின், அதை நாகரிகமாகவும், பக்குவமாகவும் மறுத்து சொல்ல வேண்டிய மனப்பாங்கு நமக்கு வேண்டுமென நான் விரும்புகிறேன்.

இந்த பதிவுலகம், நமது தனிப்பட்ட கருத்துக்களை பிறர் மீது திணிக்க உருவாக்கப்பட்ட தளம் அல்ல என்பதை, அனைத்து பதிவர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். இத்தளத்தில் பதிவு செய்யபடுபவை அனைத்தும் அப்பதிவர் அறிந்த, அனுபவித்தவற்றின் மீதான அவரின் கோணப்பார்வையே! ( அது கோணல் பார்வையாகவும் இருக்கலாம். ;-) )

இத்தளத்தின் மூலம், நாம் வாழும் பூவுலகில் சில விழிப்புணர்வுகளையும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் மற்றும் உபயோகமான ஆலோசனைகளையும் பதிவு செய்வோம். அக்கருத்துக்கள், சமுதாயம், காதல், காமம், உணர்வுகள், உணவுகள், தொழில்நுட்பம் மற்றும் இதர வகையை சார்ந்ததாகவும் இருக்கலாம்.

இப்பதிவுலகில், தனக்கென ஒரு குழு உருவாக்குவது, அவர்களுக்கு மட்டுமே பின்னூட்டமிடுவது, வாக்களிப்பது என்பது நாம் அன்றாடம் காணும் அநாகரீக அரசியல் வாதிகளையும் அவர்களின் கீழ்த்தரமான அரசியலையும் போன்றது என்றே நான் எண்ணுகிறேன்.

நம் பொன்னான நேரங்களை, பலரை புண்ணாக்க செலவிட வேண்டாம். அரசியல் ஒரு சாக்கடை என பல அறிவாளிகள் ஒதுங்கி விட்டதுபோல, இந்த பதிவுலகையும் ஆக்கிவிட நாம் காரணமாக இருக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

கடைமை அறிந்து காரியம் செய்வோம்! மடைமைகள் களைந்து மானுடம் வெல்வோம்!