Monday, May 31, 2010

பார்மாலிட்டி எனும் சம்பிரதாயம் ...

பார்மாலிட்டி எனும் சொல்லுக்கு சம்பிரதாயம் சரியான சொல்லா?? வேற ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே!

நம்ம ஊர்ல கொஞ்ச ஆளுங்க இருப்பாங்க... எதாவது ஒரு காரணம் சொல்லி சண்டை பிடிக்கிறதுக்கு. அவங்க எதாவது ஒரு வழில நமக்கு உறவுக்காரரா இருப்பாங்க. அதான் கஷ்டம். நட்புகளுக்குள்ள பெரும்பாலும் பார்மாலிட்டிகள் பார்க்கிறதில்ல. அப்படி அதை எதிர்பார்க்க ஆரம்பிச்சா அப்புறம் அது நட்புமில்ல... அந்த நட்பு அத்தோட நமக்கில்ல...

தேவையில்லாத பார்மாலிட்டி எதிர்பார்க்கிற ஆளுங்களைப் பார்க்கும்போது, கோபம் வந்தாலும், இன்னும் மாறாம இருக்காங்களேன்னு ஒரு பரிதாபம் வேற ஏற்படும். எதுக்கெடுத்தாலும் ஒரு குறையைச் சொல்லி குத்தவச்சுருப்பாங்க. அதைக் குத்தமாவே எப்போதும் வச்சிருப்பாங்க.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லம் கிளம்பி ஒரு காரோ, வேனோ எடுத்து எங்கையாவது குலசாமி கோயிலுக்கு போவாங்க... அடுத்த வீதில இருக்கிற உறவுக்காரவங்களுக்கிட்ட சொல்லிட்டுதான் போவாங்க... அவங்க கிளம்பி போனவுடனே, அந்தப் பகுதில இருக்கிற ஒரு வீடு இல்லாமப் போயி... “நாங்களும் அவங்க சொந்தக்காரங்க தானே... பார்மாலிட்டிக்காகவாவது எங்களை கூப்பிட்டு இருக்கலாம்ல... கூப்பிடவேயில்லைங்க...”-னு பொலம்பீட்டு வந்திருவாங்க...

இன்னும் சில ஆளுங்க இருக்காங்க... கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து சொல்லுங்கன்னு அவங்ககிட்ட சொல்லியிருப்பாங்க. ஆனா, அவங்க வேலைப்பளு காரணமாக்கூட பார்த்திருக்கமாட்டாங்க. வேற எங்கையாவாது பொண்ணு அமைஞ்சு, ஒப்புதல் குடுத்திருந்தா... அதைக் கேள்விப்பட்டு... பொண்ணு முடிக்கும்போது என்கிட்ட சொல்லலை...-னு குத்தம் சொல்றது.

கல்யாணப் பத்திரிக்கை எனக்கு கொடுக்கும்போது கவர்ல எம் பேரைப் போடும்போது, பேருக்கு முன்னால ”திரு”-ன்னு போடலை, பேருக்குப் பின்னால “அவர்கள்”-ன்னு போடலை... அதனால அவன் வீட்டு வாசல் மிதிக்கமாட்டேன்னு முடிவு பண்ணுவாங்க. ஆனா, எனக்குத் தெரிஞ்சு இப்பவெல்லாம் நண்பர்கள் தங்களுக்குள்ள இந்த பார்மாலிட்டி பார்ப்பதில்லை. விடு மச்சி நீ பத்திரிக்கையெல்லாம் கூட அனுப்பவேண்டாம். தேதி, மண்டப விபரம் மட்டும் சொல்லு அது போதும் அப்படின்னு பெருந்தன்மையா இருக்காங்க.

ஒரு சில விஷயங்கள்ள அந்த சம்பிரதாய முறைகளையோ, மரியாதைகளையோ எதிர்பார்த்தா சரி. எதற்கெடுத்தாலும் அதையே புடுச்சு தொங்கிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். சின்ன சின்ன விழாக்களை சுருக்கமா செய்யலாம்னு குடும்பத்தார் முடிவு பண்ணிருப்பாங்க. ஒவ்வொரு உறவுக்காரர்களும் எனக்கு சொல்லலை, ஒரு பேச்சுக்கு கூட என்னைக் கூப்பிடலை-னு சொன்னா... அந்த விழா எப்படி சுருக்கமா முடியும்?? அதையும் கொஞ்சம் யோசிக்க வேணாமா??

மற்ற உறவுகளை விடுங்க... அவங்க நம்ம கூட மனவருத்தமா இருந்தா பெரிசா ஒன்னும் நேரடிப்பாதிப்பு இருக்காது. சம்பந்தம் போட்ட இடங்கள்லையும், மருமகள், மருமகன்கிட்டையும் இருந்து இதே பார்மாலிட்டியை எதிர்பார்த்தா, நேரடியா நம்ம மகன் - மருமகள், மகள் - மருமகன் இவர்களது உறவுகள்-ல கூட விரிசல் வரலாம். சம்பந்த உறவுகளிடம் நல்ல உறவு இல்லையென்றால், நம் சந்ததிகளும் உறவுகளை துயரங்களாகவே நினைப்பாங்க.

நான் சில இடங்கள்-ல பார்த்திருக்கிறேன். என் மருமகன்(ள்) எனக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கார்(ள்)... நான் ஊர்ல இருந்து வரும்போது மருமகள் ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேசனுக்கு என்னை வரவேற்க வரலை. நான் குளிக்கிறேன்னு சொன்னேன்... ஒரு பேச்சுக்குக்கூட சுடுதண்ணி போட்டுத்தரவான்னு கேட்கலை... அப்புடி இப்புடின்னு என்னத்தையாவது சொல்லி முக்கி முனங்கி மனசுகள்-ல சஞ்சலங்களை எளிதா ஏற்படுத்திடுவாங்க. இது தேவையாண்ணே??

இப்படி எதாவது குற்றம் கண்டுபிடிச்சுகிட்டே இருந்தா எப்படி மக்களே வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்?? ஒவ்வொருத்தருக்கும் அவரவர் வாழ்க்கை முறை, வசதி, கால அவகாசம் இவைகளைப் பொறுத்து ஒரு வாழ்க்கைத் திட்டம் இருக்கும். அதன்படி சில முடிவுகளின் படி செயல்படுவாங்க. அதன்படி செயல்பட விடுங்க. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

எல்லா எதிர்பார்ப்புகளையும் உதறித்தள்ளிட்டு, உறவுகளைக் கொண்டாட வாங்க சாமிகளா. உங்க புள்ளை குட்டிகளையாவது இந்த பார்மாலிட்டி கருமத்தை விட்டொழிச்சிட்டு வாழப் பழக்கிவிடுங்க. பெரும்பாலான இடங்கள்-ல இந்த பார்மாலிட்டியால உறவுக்கார மாமன், மச்சான்களோட பகையா இருந்துகிட்டு, பழகுகிற நண்பர்களை மட்டும் மாமா, மச்சான்னு கூப்பிட்டு மகிழ்ந்துகிட்டு இருக்கிறோம். நல்ல உறவுகளை நாம் பெற்றிருந்தால், நம்மளோட கடைசி ஊர்வலத்துல எல்லோருமா சேர்ந்து நல்லா நமக்கு பார்மாலிட்டி பண்ணி அனுப்புவாங்க. இல்லையினா, அன்னைக்கும் அவனுகளுக்குள்ள பார்மாலிட்டி எதிர்பார்த்துகிட்டு வீதிக்கு ஒரு ஆளா விலகி நிப்பாங்க...

என்னா அண்ணே, மாமு, மச்சான்ஸ், அக்கா, தங்கச்சி, அத்தாச்சிமார்களே சரிதானே! :-)Friday, May 14, 2010

விளம்பரங்கள் செய்யும் களேபரம்...!!!

விளம்பரங்கிறது ரொம்ப காலமா இருக்கிறது தான். ஆனா, இப்போ அதன் பரிணாமம் பிரமிக்கிற வகையில முன்னேறி இருக்கு. ஒரு விஷயத்தைக் கவனிச்சிங்களாண்ணே? முந்தியெல்லாம் விளம்பரம் வந்தா நம்மள்ல ரொம்பப் பேரு டிவி, ரேடியோவை அமத்திட்டு போய்கிட்டே இருப்போம். ஆனா, இப்போ அதுதான்ணே நல்லாயிருக்கு. ஒரு காலத்துல, நம்ம தூரதர்ஷன்-ல போடுற விளம்பரங்களைப் பார்த்தாலே ராவா சரக்கடிச்சா தொண்டை எப்படி எரியுமோ அது மாதிரி கடுப்பா இருக்கும். அதுனால, பல ஆளுங்க விளம்பர இடைவேளைகள்-ல பண்றதுக்காகவே சில பல வேலைகளை ஒதுக்கி வச்சிருப்பாய்ங்க...

இப்போ பாருங்க கிராபிக்ஸ் மற்றும் பல தொழில் நுட்பங்களாலையும், விளம்பரங்கள்ல வர்ற அழகு தேவதைகள், தேவன்கள் மற்று குழந்தைகளாலையும் விளம்பரங்கள் ரசிக்கிற மாதிரியா வெளிவருது. அட ஆமாண்ணே, விளம்பரங்களுக்கு ரசிகர்கள் இப்போ நிறையப் பேரு இருக்காங்க. என்னா ஒன்னு, சில ஆளுக அதுல வர்ற ஃபிகருக்கும், குழந்தைகளுக்கும் அல்லது கான்செப்ட்டுக்கும் ரசிகரா இருப்பாங்க. சில விளம்பரம் இருக்கும்... எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காதுன்ணே. அவ்வளவு அருமையா எடுத்துருப்பாய்ங்க.

இன்னும் சில விளம்பரம் பார்த்தோம்னு வைங்க, அருமையா மியூசிக் போட்டு அசத்திருப்பாய்ங்க. ஊறுகாய் விளம்பரத்துல இருந்து உள்ளாடை விளம்பரம் வரை சூப்பரா தான்ணே இருக்குது. டிவி-ல வர்ற நிகழ்ச்சிகளை விட இந்த விளம்பரங்கள் தான் நல்லா இருக்குது. ஆனா என்னா, எல்லா விளம்பரத்துக்கும் சம்பந்தமே இல்லாட்டியும் ஒரு அழகான ஃபிகரை நடமாடவிட்டுருப்பாய்ங்க. அண்ணே, பெண்ணியம், பெண்களை அழகு பதுமைகளா மட்டுமே பயன்படுத்துறாங்க அப்புடின்னு பேசுறவங்களுக்கு இந்தப் பதிவுல இடம் இல்ல. நானே அந்த டவுசரை (எத்தனை நாளைக்குத் தான் முகமூடி-ன்னு எழுதுறது/) கழட்டி வச்சிட்டுத் தான் இதை எழுதுறேன். அவங்களை விளம்பரத்துல பயன்படுத்துறதை தவிர்க்கனும்னா சம்பந்தப்பட்ட அம்மணிகள் தான் முடிவு பண்ணனும்.

இந்த விளம்பரங்கள் மூலமா, பல ஜாலங்கள் பண்ணி நம்மை மயக்கி நம்மளையும் அந்தப் பொருளை பயன்படுத்த வைக்கிறது தான் அவங்களோட நோக்கம். ஆட்டா மாவுல இருந்து மூஞ்சில போடுற புட்டாமா(பவுடர்) வரைக்கும் இந்த வியாபார யுக்தியில வெற்றி பெற்றது தான். இவங்க பண்ணுற களேபரத்துல, அக்குள்ள ஆக்ஸ் ஸ்ப்ரே அடிச்சுகிட்டு எத்தனை பேருடா ம்ம்ம்-னு மயங்கி வாராளுகன்னு நம்ம இளசுக திரும்பி பாக்குதுங்க. சோப்பு, பேஸ்ட்டு, வீடு கழுவுற ஆசிட் இப்புடி எல்லா விளம்பரத்துலையும் காட்ற புழு நம்ம கண்ணு முன்னாடி அப்பப்ப வந்து பீதியை கிளப்பும். அந்த புழுவை இந்த சரக்குகளாலை தான் விரட்டி அடிக்க முடியும்னு நம்பி நம்மளும் வாங்குவோம்.


முக்கியமா இந்த விளம்பரங்கள் எல்லாம் நம்ம வீக் பாய்ண்ட்டை தெரிஞ்சுகிட்டு விளையாடுவாய்ங்க பாருங்க அது தாங்க டாப்பு. நம்ம ஊரு பொம்பளைப் புள்ளைகளும், விளம்பரத்துல காட்டுற க்ரீமுகளை அப்பிக்கிட்டு அப்புடியே மெதுவாத் தடவிப் பார்ப்பாங்க... உடனே ஒரு பறவையோட இறகு அவங்க மேனில சறுக்கி விளையாடுற சீன் ஞாபகம் வரும். அப்புறமா தண்ணில கழுவிப்பார்த்தா தான் உண்மைநிலை தெரியும். நம்ம பயபுள்ளைக 300 ரூபாய்க்கு ரேசர் செட்டு வாங்கி தாடியை சவரம் பண்ணிட்டு, ஒரு கண்ணு புருவத்தை உயர்த்தி கண்ணாடில அப்புடியும், இப்புடியுமா மூஞ்சியப் பாப்பாய்ங்க பாருங்க... அட அட அடா கண்ணாடிக்கே காதல் வந்துரும்ணே... 3 ரூபாய்க்கு வித்த பிளேடு-ல சவரம் பண்ணின மூஞ்சிக்கு இப்ப 300 ரூபாய்க்கு பிளேடு வாங்க வேண்டியது இருக்கேன்னு மனசு நினைக்குமா என்ன?

இன்னொன்னை கவனிச்சிங்களா? நவீன யுகத்துல எல்லா ஐட்டங்கள்-லையும் ஆம்பளைக்கு வேற, பொம்பளைக்கு வேறைய்ன்னு பிரிச்சு வச்சுடாய்ங்க. பழைய காலத்துல உடம்புக்கு, மூஞ்சிக்கு, தலைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து துவைக்கிற சவுக்காரக் கட்டிய போட்டுத் தேய்ச்சு குளிச்சிட்டு போய்கிட்டு இருந்தாய்ங்க. இப்ப பாருங்க, மூஞ்சிக்கு ஃபேஷ் வாஷ் லோஷன், உடம்புக்கு சோப்பு, சோப்பு போட்டு குளிச்சதுக்கு அப்புறம் பாடி லோஷன், தலைக்கு ஷாம்பு, அது முடிஞ்ச உடனே கண்டிஷனர்... சோப்பை உடம்புல போட்டு தேய்க்கிற பஞ்சு... அப்புடின்னு பாத் ரூமுக்குள்ளே அவங்க கடைச் சரக்கு எல்லாம் விளம்பரம் மூலமா கொண்டுவரப்படுது. இந்த மாதிரி ஐட்டங்களால இப்பவெல்லாம் பாத் ரூம்-ல நின்னு குளிக்கவே இடம் இல்லைண்ணே. இதுல வேற, சில அந்த துறையால் பரிந்துரைக்கப்பட்டது... அண்ணாத்துரையால் எடுத்துரைக்கப்பட்டதுன்னு நொனைநாட்டியம் வேற...


ஊருக்கு எங்கையாவது கிளம்பிப்போனா, முந்தியெல்லாம் சைடு ஜிப்புல இருந்த இந்த ஐட்டம் பூராம் இப்ப பெரிய ஏரியாவுக்கு ஷிஃப்ட் ஆயிடுச்சுண்ணே... என்னாது ட்ரெஸ்ஸா??... போங்கண்ணே எந்த காலத்துல இருக்கீங்க... ஒரு ஜீன்ஸ், ஒரு டி-ஷர்ட்-ல தானே ஒரு மாசம் ஓடிகிட்டு இருக்கு. அதுக்கு சைடு ஜிப்பே ஜாஸ்தி-ண்ணே. விளம்பரத்துல வர்ற பொண்டாட்டி, குடும்பம், வீடு மாதிரி நமக்கும் அமையணும்னு கனவு வேற கண்டுக்கிட்டே இருப்போம். அவ்வளவு அழகா இருக்கும்ணே எல்லாம். இதைத் தான் அப்துல் கலாம் ஐயா சொல்லிருப்பாரோ...? இந்த மாதிரி விளம்பர யுக்திகளாலதான் நுகர்வுக் கலாச்சாரம் வளர்ந்துச்சு. உஷாரா இருந்துக்கங்க அண்ணே... இந்தக் கலாச்சாரம் பல பேருடைய பர்சை பதம் பார்த்திருக்கு. பண சேமிப்பையெல்லாம் பஞ்சராக்கிருக்கு.

உள்ள விளம்பரம் பத்தாதுன்னு ஒரு டிவி நிறுவனம் கண்ட கண்ட கருமாந்திரத்தையும் கதையினு ஜோடிச்சு படம் எடுத்து இருபது நிமிஷத்து ஒரு தடவை விளம்பரப் படுத்துவாய்ங்க பாருங்க... ங்கொக்கா மக்கா... சாவடிச்சிருவாய்ங்கண்ணே. அவங்க படம் ஓடுதோ ஓடலையோ... இவனுக விளம்பரத்தை பாத்தீங்க உங்களுக்கு நிக்காம ஓடும். சூதானமா பொழைச்சுக்கங்க...