Friday, February 26, 2010

உள்குத்து கவிதைகள் - 6



என் முதுகில்
கருமை பூசியவனுக்கும்
அவன் முகபாவமே காட்டுவேன்...
கண்ணாடி!







அவர்கள் மணக்க
என்னை அடிக்கிறார்கள்...
வாசனை திரவியம்!










வெளிப்பக்கம் உள்ளவன்
குறு குறுன்னு பார்ப்பான்...
உள்பக்கம் உள்ளவன்
குறு குறுப்பாய் பார்ப்பான்...
சிறைச்சாலை!



Tuesday, February 23, 2010

தெரிந்துகொள்வோம் - 8

*_/|\_* பூமியில் தண்ணீரின் பரப்பளவு 148 கோடியே 95 லட்சத்து 8 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும்.

*_/|\_* பஹ்ரைன் நாட்டின் தேசிய கீதம் வார்த்தைகளால் பாடப்படாமல் இசையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

*_/|\_* மனிதர்களுக்கு கேட்காத அளவிற்கு ஒலிக்கும் ஒலியை 'கீழான ஒலி' (Infra Sound) என்று அழைப்பார்கள்.

*_/|\_* உலகின் மிகப்பெரிய விளையாட்டரங்கம் பராகுவே நாட்டில் உள்ளது. அதன் பெயர் 'ஸ்ட்ராஹாவ் ஸ்டேடியம்'.

*_/|\_* 'அக்டோபர் புரட்சி' என்றாலும், அதைக் கொண்டாடுவது நவம்பர் 7- ம் தேதி தான்.

*_/|\_* ரஷிய கடற்படைதான் உலகில் மிகப் பெரியது.

*_/|\_* ஆக்ரா நகரின் பழைய பெயர் 'அக்பராபாத்'.

*_/|\_* யானை வேட்டைக்கு 'கெட்டா' என்று பெயர்.

*_/|\_* சோமாலி நாட்டுச் சிங்கங்களுக்கு பிடரி மயிர் கிடையாது.

*_/|\_* உப்பு நிறைந்த கடல் நீரைப் பருகுகிற ஒரே இனம் (பறவை) பெங்குவின் தான்.

*_/|\_* 15 வயதிலேயே பிலிப்பைன்ஸில் ஒட்டு போடலாம்.

*_/|\_* இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ள 58 சுற்றுலா இடங்களில் 11 தமிழ் நாட்டில் உள்ளது.

*_/|\_* தமிழகத்தில் உள்ள கடற்கரையின் மொத்த நீளம் 912 கி.மீ.

*_/|\_* 'மாஸ்டாங்' என்பது குதிரையேற்றத்தை குறிக்கும் சொல்.

*_/|\_* 'எந்திர மனிதர்களின் தீவு' என்று அழைக்கப்படும் நாடு ஜப்பான்.

*_/|\_* 1600-க்கு மேற்பட்ட அழகு மிகுந்த ரோஜாப்பூ வகைகளுடன் 36 ஆயிரம் ரோஜா செடிகளைக் கொண்டுள்ள, இந்தியாவின் மிகப்பெரிய ரோஜா தோட்டம் சண்டிகாரில் உள்ளது.

*_/|\_* முதன்முதலாக முழுவதும் செயற்கை முறைகளில் (Synthetic Methods) உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் பெயர் 'பேக்லைட்'.

*_/|\_* திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் மைசூரின் தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினம்.

*_/|\_* 'பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' என்ற சொல் 'நீச்சல்' விளையாட்டோடு தொடர்புடையது.

*_/|\_* வரண்ட இடத்திற்குத் தக்கவாறு தன்னை வளர்த்துக்கொள்ளும் தாவரங்களை 'சோரோஃபைட்' என்று அழைப்பார்கள்.

*_/|\_* சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அப்போதைய தேர்தல் செலவு ரூ.10.45 கோடி. வாக்காளர்கள் 17.3 கோடி.

*_/|\_* சூயஸ் கால்வாயின் நீளம் 169 கிலோமீட்டார்.

*_/|\_* முள்ளம்பன்றியின் முதுகில் உள்ள முட்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம் ஆகும்.

*_/|\_* ஒட்டகச்சிவிங்கி பிராணிகளிலேயே ஊமையாகும். இதனால் சாதாரண ஒலியைக் கூட எழுப்ப முடியாது.

*_/|\_* கி.பி. 1610-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை வெறும் 350 பேர்கள்தான்.



Wednesday, February 17, 2010

நக்கல் பேர்()வழியா நீங்கள்?

மக்கா... இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. யாரும் படிச்சுபுட்டு என்னை புட்டு வச்சிராதீக. இது லந்துக்காக எழுதுறதுன்னு புரிஞ்சுக்காம நொந்து போகாதீக. நம்மளும் புனை பெயருல எழுதுவம்னு "ரோஸ்விக்"-னு வச்சு எழுதுனா... பல பேரு நாக்குல பல்லு படமா நாரகாசம் பண்ணிட்டாங்க... ஒருத்தன் என்னடானா ரோஸ் விக்கிறீங்கலானு கேக்குறான்.... இன்னொருத்தன் உங்க விக்கு ரோஸ் கலரான்னு கேக்குறான்... இன்னொரு படவா உம பேர தமிழ்படுத்துன்னு சொல்லி "ரோஜா பொய் முடி"-னு மாத்திபுட்டான்...

நம்ம ஊர்ல பல ஜோதிடங்களைப் பார்த்து நம்ம மன திடத்தை மறந்து, பல பேரு மண்டைய சொரண்டி ஒரு பேரு வைப்பாங்க... அத நம்ம ஆளுக ரொம்ப எளிமையா நக்கலடிச்சு நாக்குல ஊஞ்சல் கட்டி விட்டுருவாய்ங்க. இந்த மாதிரி பெயர்களை நக்கலடிக்கிற குசும்பு எனக்கும் இருந்திருக்குங்க...

என்னோட நண்பர் மணி திருவனந்தபுரத்துல தொழிலதிபரா இருக்காரு. ஒரு நாளு ரொம்ப சுவாரஸ்யமா, அவர் திருமணத்திற்காக பாத்திருந்த பொண்ணை பத்தி ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தாரு... (அந்த பொண்ணு எனக்கு தங்கச்சி முறையா இருந்தாலும் விட்டுவைக்கல...) அப்ப நான், எல்லாஞ்சரிதான் மணி... ஆனா ஒரு சின்ன பிரச்சனை இருக்குன்னு சொல்ல, அவரு சீரியஸா என் மொகத்தை பார்த்து என்ன அண்ணானாரு. நாங்கெல்லாம் வீட்டுக்கு வரும்போது, என் தங்கச்சி காபி கொண்டுவரும். அப்போ நீங்க பேரு சொல்லி கூப்பிடக்கூடாது சொன்னேன். ஏன்னு அவரு கேக்க... நீங்க "சிந்து... சிந்து"-னு கூப்புட்டா புள்ள காபி-யை சிந்திறாதா-னு? கேட்டேன். இதை படிச்ச உடனே நீங்க என்ன ரியாக்சன் கொடுத்திங்களோ அதேதான் அவரும் கொடுத்தாருன்னு வச்சுக்கங்க... :-)

என்னுடன் வேலை பார்த்த தோழி ஹேமா, அவங்க வீட்டுல நடந்த சம்பவங்களை அப்பப்போ சொல்லுவாங்க... அப்படி ஒரு சம்பவத்தை சொல்லும்போது, அவங்க "எங்க அம்மா என் தங்கைய, 'வித்தியா... வித்தியா'-னு கத்துறாங்க... அவ பேந்த பேந்த முழிக்கிறா"-ன்னாங்க. நான் கேட்டேன், "உங்கம்மா தெளிவா, எதை வித்தானு கேட்டிருந்தா? அவ ஏன் அப்படி முழிக்க போறான்னு?". அடுத்த நாள் அம்மணி அரை நாள் லீவு... நான் பயந்துட்டேன் நம்மள அடிக்க தான் ஆள் கூட்டிட்டு வரப் போயிருக்காங்கன்னு.. :-))

எங்களோட பழைய எம்.எல்.ஏ. பேரு சொக்கலிங்கம். அவர ஊரு ஆளுங்க எல்லாரும் சுருக்கமா "சோனா (சொனா) " வராரு... சொன்னாரு-னு சொல்லுவாங்களாம். எங்க அப்பா இதை எங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு. உடனே நான், இதுக்காக நம்ம, இப்போ உள்ள எம்.எல்.ஏ-வை சுருக்கிக் கூப்பிட்டா நல்லாவாப்பா இருக்கும்னு? கேட்டேன். விழுந்து விழுந்து சிரிச்சாரு... (எங்க விழுந்துனு கேக்ககூடாது) ஏன்னா, எங்க தற்கால எம்.எல்.ஏ பேரு "சுந்தரம்". விடுவமா நம்ம... இப்போவும் எங்க வீட்டுல "சூனா" வந்தாரா? "சூனா" என்ன சொன்னாரு? அப்புடின்னு கேட்டுக்குவோம்.

என் அண்ணியோட மக பேரு "எல்சி". எனக்கு முதன்முதலா அறிமுகம் செஞ்சுவச்சப்ப... நான் சும்மா இருக்காம, "நீ, எல்சி-யா?.... எஸ்.எஸ்.எல்.சி-யா?"-னு கேட்க... இன்னைக்கும் என்னைய பார்த்தா வேகமா ஓடி கட்டிலுக்கு கீழ ஒழிஞ்சுக்குவா அந்த ரெண்டாம் வகுப்பு படிக்கிற குழந்தை. :-)

இது மாதிரி நிறைய கதை இருக்குங்க... அடுத்து எப்பவாவது சந்தர்ப்பம் கிடைக்கும்போது மீண்டும் தொடர்கிறேன். படிக்கிற நீங்க என்னைவிட ரொம்ப குசும்பு புடிச்சவங்கனு தெரியும். இப்புடி பெயர்களை நீங்க கலாய்ச்ச தருணங்களை தனி பதிவாவோ, இல்ல இங்க பின்னூட்டமாவோ போடுங்க... சிரிச்சு சிரிச்சு விளையாடுவோம்.



Wednesday, February 10, 2010

அன்பின் அப்பத்தா...

உலகத்துலேயே உனக்குப் பிடிச்ச ஒரு பெண்மணி யாருன்னு கேட்டா, எல்லாரும் யார் யாரையோ சொல்லுவோம். இல்லையினா என் அம்மா தான்னு சொல்லுவோம். ஆனா, நான் என் அப்பாயியை (அப்பத்தா) தான் சொல்லுவேன். குறைந்தபட்சம் எங்க அப்பாயிக்கு வயது 75 இருக்கும். இன்றும் நல்ல திடகாத்திரமான உடம்புடன், ஆரோக்கியமா இருக்காங்க. ஒரு பல்லு பூச்சி இல்லை. இன்னைக்கும் அவங்களால எனக்கு ஆட்டு எலும்பை கடிச்சி அதுல உள்ள மஜ்ஜையை எடுத்து தர முடியும். இவங்க பல்லு விளக்குறதுக்கு பயன்படுத்துறது ஏதோ வெளிநாட்டு பற்பசையை பயன்படுத்தல.

சொன்னா உங்களுக்கு அசிங்கமாத் தெரியலாம்... இருந்தாலும் சொல்லுறேன். மாடு சில சமயங்கள்ல ஒரு குறிப்பிட்ட பதத்துல சாணத்தை குமிழ் குமிழா போடும். அதை மண்ணுபடாம எடுத்து காயவச்சு, கரி அடுப்புல சுட்டு, சாம்பலா எடுத்து ஒரு டப்பாவுல போட்டு வச்சுக்குவாங்க. காலையில எழுந்ததும் இதை வச்சுதான் பல்லு விளக்குவாங்க. தலைக்கு தேய்க்கிறது பெரும்பாலும் வேப்ப எண்ணைதான். எங்க மரத்துல இருந்து அவங்களே பக்குவமா தயார்பண்ணிகிட்ட வேப்பெண்ணை தான். வெளியூர் விஷேசங்களுக்கு பேருந்தில் செல்லும்போது மட்டும் மற்றவர்களின் சௌகரியம் கருதி தேங்கா எண்ணெய். உடல் அலுப்பு, ஜலதோஷம், காய்ச்சல் வருதல் போன்ற வியாதிகளுக்கு இவர்களின் முதல் மருந்தும் இந்த வேப்ப எண்ணெய் தான்.

இவங்க உடம்பைவிட(உடல் நலத்தை விட) இவங்க மனத்தை பார்த்து நான் ரொம்பவே வியந்து போயிருக்கேன். இவங்க பொறந்த இடம் அந்த காலத்துல ஓரளவு வசதியான குடும்பம். வாக்கப்பட்டது (திருமணம் ஆனது) அதே உள்ளூரான மிகச் சிறிய கிராமத்துல தான். எங்க அய்யாவும் ஓரளவு வசதியா இருந்தவருதான். பங்காளிகளின் பாகப்பிரிவினையால் ஏதோ இவருக்கு கொஞ்சம் ஓர வஞ்சகம் செய்ததாக கேள்விபட்டிருக்கிறேன். அவரு ஒரு படிக்காத மேதை. நான் சிறு பிள்ளையா இருக்கும் போதே அவர் இறந்துவிட்டார். விவசாயம், ஆடு வளர்த்தல் எல்லாம் செய்து தான் பார்த்தார்கள். ஆனால், ஒரு நாளைக்கு பெரும்பாலும் ஒரு வேலை மட்டுமே சோறு உண்ண முடியும். சில மாதங்களில் இருவேளை உணவு உண்ணும் அளவுக்கு வசதி வரும்.

பசிக்கும் நேரம் பெரும்பாலும் காபித் தண்ணி தான். அதுவும் சர்க்கரை இல்லாமல். எப்போதாவது குடும்பத்துடன் அமர்ந்து காப்பி அருந்தினால், காப்பியுடன் சேர்த்து ஒரு சிறிய வெல்லக்கட்டி அனைவருக்கும் கையில் அளிக்கப்படும். இப்போது விளம்பரங்களில் வருவது போல ஒரு மடக்கு காப்பி, ஒரு நக்கு வெல்லக்கட்டி. ஒரு அனா சம்பளத்திற்கு ரயில் தண்டவாளம் அமைக்கும் வேலைக்கு சென்று மூன்று மகள், ஒரு மகனை வளர்த்து வந்தார். அனால் இதுவரை அவர் ரயிலில் பயணம் செய்ததில்லை. வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தவர்களின் வரலாறு படித்த எனக்கு... வரலாறாய் வாழ்ந்து காட்டிக்கொண்டு எனக்கு பிரமிப்பூட்டுகிறார் என் அப்பாயி.


எவ்வளவு வறுமையிலும், தன் குடும்ப உறுப்பினர்களை கவனித்து வளர்த்து ஆளாக்குவது ஒன்றும் வரலாறு ஆகிவிட முடியாது. கூடவே, அதே கிராம வெள்ளந்தி தனத்துடன், உறவுகளையும் பேணி வளர்ப்பது தான் சிறப்பு. தனக்கே மிகுந்த சிரமங்களுக்கு இடையில் உணவு கிடைக்கும்போது, வேறு வேலையாக அந்த கிராமத்திற்கு வந்த பிறரின் உறவினர்களையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து படைக்கும் குணம் என் அப்பாயிக்கு உண்டு. இவள் காட்டும் பாசத்தில் பல உறவுகள், இவள் வீட்டுக்கு சென்றால் நல்ல உரையாடல்களுடன், உணவும் அருந்திவிட்டு வரலாம் என்று எண்ணுவது உண்டு. இன்றும் அவ்வாறு வருவதும் உண்டு. பொதுவாக பெண்களுக்கு கொஞ்சம் பொறுமை அதிகமாக இருக்கும். இவரின் பொறுமைக்கு அளவு எங்கே இருக்கிறது என்று நான் பலமுறை தேடியதுண்டு.

ஒவ்வொரு பிள்ளையும், தன் தாயின் மேல் கொண்டிருக்கும் பாசம் அளப்பரியது. நான் இவர் மேல் கொண்டிருக்கும் அன்பு என் தாய்க்கு கிடைப்பதை விட அதிகம் என்று என் தாயும் அறிவாள். என் தந்தை படித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்த பிறகு வறுமை வெளுத்துவிட்டிருந்தது. என் தந்தைக்கு திருமணம் ஆன பிறகும், அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து வீட்டு வாசல் கூட்டி, சாணம் தெளித்து விட்டு, டீ போட்டுவிட்டு என் தந்தையை, "தம்பி, தம்பீ" எந்திரிப்பா விடிஞ்சிருச்சு என்று எழுப்புவார். இந்தா வாரேன் ஆயா என்று அவரும் எழுந்து சென்று, தாயும் மகனும் டீ குடித்துக் கொண்டே வாழ்வின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி எதார்த்தமாக பேசிக்கொண்டு இருப்பார்கள். நானும் சிறு வயதில் இருந்தே இது போன்ற பேச்சுகளில் அவர்களுடன் பங்கேற்பதுண்டு. என் தந்தைக்கு நான் மூத்த பையன் என்ற கடமையும், பெருமையும் என்னை அவர்கள் கலந்துரையாடலில் விரும்பி என்னை அமர வைத்திருக்கும்.

எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவருக்குள்ளும், ஒரு நக்கலும், நையாண்டியும் இருக்கும். வாழ்வின் சீரியஸ் ஆன தருணங்கள் தவிர எங்களுக்கும் கேலி பேச்சுகள் இருக்கும். அனால், எதையும் மனதில் வைத்து கொண்டு எவரின் மீதும் பகை பாராட்டுவதில்லை. அவ்வப்போது என் அப்பா... என் அப்பாயியிடம், "ஆயா, நம்ம ரெண்டு பேரையும் இவனுக எல்லாம் லூசுன்னு தானே நினைச்சிருக்காங்க" என்று சில வேடிக்கையான தருணங்களில் சொல்லி அனைவரயும் நகைப்புக்குள்ளாக்குவார். அப்போதும், சிரித்து கொண்டே, படிச்ச புள்ளைக எப்புடி வேணாலும் வச்சிகிரட்டும் என்று சினத்தை சிந்தையிலிருந்தே விரட்டிவிடுவார். அவர் அதிகம் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.

இவர் பல நேரம், எங்களுக்கு பாதுகாப்பாளராகவும், பணிவிடையாளராகவும், தாயாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருந்ததுண்டு. எனது உறவினர்களில் பெரும்பாலோர், இவரை தெய்வமாக மதிக்கப் பட வேண்டியவர் என்றும், இவர் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று சொல்வர். அதை கேட்கும்போதெல்லாம் என் நெஞ்சம் மகிழ்ச்சியின் எல்லைகளை தொட்டு வருவதுண்டு. பல வீடுகளில், இது போன்ற வயதானவர்களை, "இந்த கிழவி சும்மா இருக்காது... ஏதாவது பேசிக்கொண்டோ, திட்டிக்கொண்டோ இருக்கும். பக்கத்து வீடுகளில் சென்று இல்லாத, பொல்லாததுகளை சொல்லி நம் குடும்ப மானத்தை குறைக்கும்" என்று பேசி நான் கேட்டதுண்டு. சில வயதானவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதும் உண்டு. ஆனால், என் அப்பாயி, இது போன்ற சங்கட சந்தர்ப்பங்களை எங்களுக்கு தந்தது இல்லை.

சிறிய தலைவலிக்கு கூட சில வயதானவர்கள் கூப்பாடு போடுவதுண்டு..."எனக்கு வியாதி வந்தா மட்டும், இந்த வீட்டுல யாருமே கண்டுக்கிறது இல்ல. எங்குட்டோ செத்து தொலையட்டும்னு தானே எல்லாரும் இப்புடி விட்டுட்டாங்க"-னு பல புலம்பல்கள் கேட்டதுண்டு. என் அப்பாயிக்கு ஏதாவது ஒன்று என்றால், நாங்கள் வைத்தியம் பார்க்க முனையும்போது, "எனக்கு எதுக்குப்பா இதெல்லாம். நான் இனிமே இருந்து என்னா பண்ணப்போறேன். செத்தா தூக்கி போடுங்க அதுபோதும்" என்று மன நிறைவாய் சொல்லிக்கொள்வார். இதுவேண்டும், அதுவேண்டும் என்று எதுவுமே கேட்டதில்லை. அவள் வேண்டாம் என்று கூறியது தான் அதிகம் இருக்கும் உறவுகளைத் தவிர. என் திருமணத்திற்கு பெண் தேடும்போது, என் அப்பாயி போன்ற ஒரு பெண் எனக்கு கிடைக்க வேண்டும் என்று நான் கூறியதை என் உறவுகள் விழிகளை அகல விரித்து தான் பார்த்தார்கள். இது போல இப்போது கிடைக்குமா என்று. எனக்கு கிடைத்தவளும் இதுவரை அவரைப்போல நடந்து கொள்வதில் 75% தேறிவிட்டாள். :-)

எனக்கு ஒரு நீண்ட நாள் ஆவல். என் அப்பாயியை ஒரு முறையேனும் விமானத்தில் ஏற்றி அவரது மகிழ்வை பார்க்க வேண்டும். என் பக்கம் அனைத்தும் தயார். ஆனால், அவர்தான் வழக்கம்போல மறுப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

சிறு வகுப்புகளில், ஒரு கதை சொல்வார்கள். "உன் மூதாதையருக்கு எவ்வளவு மரியாதையுடன், எந்த தட்டில் நீ சோறு போடுகிறாயோ, அதே மரியாதையுடன், அது போன்ற ஒரு தட்டில் உனக்கு சோறு கிடைக்கும். உன் பிள்ளை அவன் வாழ்வில் பார்ப்பதை தான் கற்றுக்கொள்வான். அதை தான் செயல்படுத்துவான். எனவே, உன் பெற்றோருக்கோ, மாமனார், மாமியாருக்கு உரிய மரியாதை செலுத்த மறவாதே" என்று குடும்ப பெரியவர்களுக்கு சொல்லி இருப்பார்கள். இன்றும் இது போன்ற வாழ்வியல் பாடங்கள், வகுப்பறைகளில் உயிரோடு இருக்கிறதா என்று தெரியவில்லை.

வழக்கமாகவே குடும்பத்திலிருந்து ஒருவர் வெளி நாடு செல்லும்போது, அந்த வீட்டிலுள்ளவர்கள் கண்கலங்கி அழுது வழியனுப்பி வைப்பார்கள். ஒவ்வொருமுறையும் நான் கிளம்பும்போது என் அப்பாயியும் என்னை கட்டிக்கொண்டு அழுவார்... இதை எழுதும்போது கூட கண்கலங்கி தான் எழுதுகிறேன். அவர் வயதானவர் என்பதால், அவர் அழுகை எனக்கு "இருவரும் மறுமுறை காண்போமா? இல்லை நீ மட்டும் என் உடல் காண்பாயா?" என்ற பாடல் வரிகளை ஏனோ நினைவுக்கு கொண்டு வரும். அவர் இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ வேண்டும். என் குழந்தைக்கு அவரை சுட்டி காட்டி வாழ்கை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை.

என் அன்பிற்கும், பாசத்திற்கும், பண்பிற்கும், போற்றுதலுக்குமுரிய என் அன்பின் அப்பத்தா, I LOVE YOU SO MUCH.

இதுபோன்ற நற்குணம் படைத்த, அனைத்து பெண்மணிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.



Friday, February 5, 2010

அசலும், வட்டியும் - திரை விமர்சனம் அல்ல...

அண்ணே! நிறையபேரு தலைப்பை சரியா படிச்சுட்டு தான் வந்திருப்பீகன்னு நினைக்கிறேன். என் மச்சானின் சகோதிரியான எனக்கு இன்றும் பிடித்த, எனது ஒன்று விட்ட மாமா மகளான, ஷாலினியின் அன்புக் கணவர், அண்ணன் அஜீத் நடித்த படத்தைப் பற்றியதல்ல இந்த பதிவு. அவர் ஒரு நேயமுள்ள மனிதர் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது...

கடன் வாங்குறது தப்புன்னு, கணக்கு வாத்தியாரை தவிர எல்லாரும் சொல்லி இருக்காங்க. ஆனா, எந்த வாத்தியாரு அறிவுரை சொன்னாரோ, முக்குக்கு முக்கு... மூக்கு கண்ணாடிய போட்டுக்கிட்டு, வட்டிகடை வச்சிருக்காங்க... முந்தியெல்லாம், அந்த கடைக்குள்ள போறதுக்கு, பலான இடத்துக்கு போற மாதிரி ஒளிஞ்சு மறைஞ்சு முடிஞ்சா தலையில துண்டை போட்டுக்கிட்டு போவாங்க... கடன வாங்குனவன் கட்டலையினா, அந்த கடைக்காரன் துண்டை போட்டுகிட்டு திரிவான். கொஞ்சம் விவகாரமான ஆளா இருந்தா வாங்குனவன் கழுத்துல துண்டை போட்டு கேட்பான்.

பல வீடுகள்ளையும், நாடுகள்ளையும் பட்ஜெட்டுல துண்டு விழுகுரதுனால தான் கடன் வாங்குறாங்க. யோவ், பக்கெட்டுல துண்டு விழுந்த துவைச்சு புழிஞ்சு காயப்போட்டுடலாம். பாருங்கய்யா... இந்த கடனுக்கும், துண்டுக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்குன்னு... நம்ம, கடன்காரன்கிட்ட... அய்யய்யோ கடன் கொடுக்குற கடைகாரன்கிட்ட, வாங்குற பணத்துக்குப் பேரும் அசல் தான். இந்த அசலை கடைகாரன், கள்ளப் பணமா கொடுத்தாலுஞ் சரி, கள்ள நோட்டா கொடுத்தாலுஞ் சரி நாம அதுக்கு வட்டி கட்டனும்.

இந்த வட்டியோட விகிதம் சில இடத்துல சோமாலியா குழந்தை மாதிரியும்(இப்ப எங்க இருக்கு??), சில இடத்துல கறிக்காக வளக்குற வெள்ளை பன்னி மாதிரியும் இருக்கும். இந்த வட்டிய கணக்கு பண்றதுக்கு, நம்ம பய புள்ளிக குட்டிய கணக்கு பண்றதுக்கு வச்சிருக்குற மாதிரி பல சூத்திரம் இருக்கு. இதுல தனி வட்டி, கூட்டு வட்டி அது போடுற குட்டின்னு நம்ம தல (யோவ், நான் அவர சொல்லலைய்யா...) மேல ஏறி உக்காந்துக்கிட்டு... நம்ம கழுத்த நெரிச்சுகிட்டு இருக்கும். இந்த அசலும், வட்டியும் சேர்ந்து ரத்தம் குடிச்ச குடும்பம் எல்லாம் சத்தமில்லாம, விஷ மருந்துக்கு பிரெஞ்சு முத்தம் குடுத்துருக்காங்க. ரொம்ப சோகமான எளவுகள் (இழவுகள்) எல்லாம் நடந்திருக்குய்யா இதுனால...

ஏதோ இந்த பணங்கள் மட்டும், ஜாதி மத பேதமில்லாம பல இடங்கள்ல சமத்துவமா இருக்குன்னு பார்த்தா... எல்லாருகிட்டயும் சமமா இல்லாம போயிடுச்சு. எல்லாரும், வசதியா இருக்கணும், வசதியா வாழணும்னு நினைச்சுகிட்டு, பணக்காரனா வாழ ஆசைப்பட்டு, தன் வசதிய இழந்துடுறாங்க. பணக்காரனா வாழ்றது வேற.. வசதியா வாழ்றது வேற-னு இன்னும் நிறைய பேறு புரிஞ்சுகிறது இல்ல...

வெள்ளைக்காரன் மொழியில இந்த அசலுக்குப்(படத்தை சொல்லலை சாமி) பேரு principal amount... அவரு பணத்தை ஏன்யா இங்க இழுக்குராய்ங்கன்னு நான் நினைச்சதுண்டு... இதவிட கொடும அந்த வட்டிக்கு பேரு Interest ... யாருய்யா அவ்வளவு interest-ஆ கொடுக்குறான்? இந்த கொடுக்கல் வாங்கல் கணக்குல கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மட்டுமில்ல அய்யா.... திரும்ப கொடுக்கலேன்னா அடித்தல், வகுந்தல் (உடம்பை), பறித்தல் (உயிரை)-னு நிறைய வ(லி)ழிவகை வச்சிருப்பாய்ங்க...

இப்பவெல்லாம், சில தேன் குரல் கொண்ட, கருங்குயில்களையோ, இல்லை பெருங்குயில்கலையோ விட்டு நம்ம தொலைபேசியில் தொல்லை குடுத்து, கடன் குடுக்குராய்ங்க... கொஞ்சம் கவுரவமாத்தான் இருக்கு... அவயங்களும், நம்மளும் ஒழுங்கா நடந்துகிட்டா... இருந்தாலும் மக்களே, தேவைகளை தேவை இல்லாம கூட்டி, தேவையே இல்லாம கடன வாங்கி... தேவையில்லாத பிரச்சனைகள்ல மாட்டிக்காதீங்க... இது நமக்கு தேவையில்லாத பிரச்சனை... அப்பறம் கடன் குடுத்தவன், அசல் பட காமெரா மாதிரி நம்ம பின்னாடியே வருவாய்ங்க... உஷாரா இருங்க... உங்க நிஜார கழட்டிடுவாய்ங்க...