இந்த ஆழிப் பேரலைகள் வேளாங்கண்ணி புதிய கோவில் வாசல் வரை வந்துள்ளது. ஆனால் கோவிலின் உள்புறம் சேதமில்லை. கோவிலின் வலது புறம் வழக்கமாக நாங்கள் தங்கும் Little Flower Lodge-ப் பகுதி பெருத்த சேதம் அடைந்திருந்தது. நல்லவேளை இந்த முறை நாங்கள் அங்கு தங்கவில்லை. தங்கியிருந்தால் எங்களில் சிலருக்கு அல்லது அனைவருக்குமோ உயிர் உத்திரவாதம் இருந்திருக்காது.
எங்கள் வீட்டு உரிமையாளர் ஏதோ வேளாங்கண்ணி கடலுக்குள் மூழ்கி கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டு, "சார் வாங்க வேகமா கடலுக்கு எதிர் திசையில போயிடுவோம்" என்கிறார். எங்கள் ஒட்டுனரில் ஒருவர் பழனிக்கு மாலை அணிந்திருந்தார். அவர் வேறு அடிக்கடி... "ஐயா நான் வேற மாலை போட்டிருக்கேன்யா. வாங்கய்யா சீக்கிரம் வீட்டுக்குப் போயிருவோம்" எனக் கூறிக் கொண்டிருந்தார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று. அவன் வழக்கம் போல பழக்க தோஷத்தில் தப்பிப்பதற்கு ஏதாவது காரணம் சொல்ல வேண்டும் என்று இதை சொல்லி இருக்கிறான்.
எங்க அப்பா ரொம்ப சின்சியர் ஆனவரு. அவரு என்னிடம், "தம்பி நம்ம வேற உயர்மட்ட பரிந்துரையில இந்த ரூம் வாங்கினோம். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து போச்சு. தங்குமிட வசதி செஞ்சுகொடுக்குற அலுவலகத்துல போயி இந்த ரூம் சாவியக் குடுத்துட்டு... நம்ம எல்லாரும் பத்திரமா இங்கிருந்து கிளம்புரம்னு" பயணஞ் சொல்லிட்டு வரச்சொல்லிட்டாரு. நானும் என் தம்பியும் அந்த மோசமான தண்ணியில பெரும்பாலும் மேட்டுப் பகுதியாப் பார்த்து போயி சாவிய குடுத்துட்டு சொல்லிட்டு வந்துட்டோம். பல வாகனங்களின் புகைக் குழாயில் தண்ணீர் புகுந்ததால் மேலும் செல்ல இயலாமல் பலர் தவித்தனர். எங்கள் ஓட்டுனர் மேட்டுப் பகுதிகள் வழியாக சென்று இப் பிரச்சனைகளை தவிர்த்தான். அதே நேரம், எனக்காகவும் என் தம்பிக்காகவும் காத்திராமல் என் அப்பா கூறியதைக் கூட கேட்காமல்.... நீர் குறைவாக இருந்த பகுதியில் வண்டியை நிறுத்தினான்.
நானும், எனது தம்பியும் அந்த நீரில் நடந்து வந்த பொது சந்தித்த அனுபவங்கள் இன்னும் மிகக் கொடியது. ஒருவர் ஒரு தரை அளவு பாலத்தின் சுவற்றில் உட்கார்ந்து இருப்பது போல இறந்து விறைத்து கை கால்களை மேல் நோக்கி நீட்டியவாறு கால் சட்டையுடன் இருந்தார். அவரது வேஷ்டியை காணவில்லை. நீரின் பல பகுதிகளில் சில மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருந்தன. நீருக்கடியில் சில கம்பு, கம்பி போன்ற பொருட்களும் மூழ்கி எங்கள் கால்களில் தட்டுப்பட்டன. சில சாக்கடை குழிகளில் மாட்டியிருந்த பிணங்களின் கைகளும், கால்களும் எங்கள் கால்களில் உரசியதில் அதிர்ந்து போனோம்.
ஒரு வழியாக அங்கு போக்குவரத்திற்கு சிரமப்பட்டவர்களில் ஒரு சிலரை எங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து வேளாங்கண்ணி நாகபட்டினம் சாலையில் விட்டுச் சென்று நாங்களும் உயிர் பிழைத்தோம். வேளாங்கன்னியை விட்டு வெளியேறியவுடன், அன்றைய காலை எங்களுக்கு தங்கும் வசதிக்காக முயற்சி செய்த என் நண்பர்களையும் தொடர்புகொண்டு அவர்களும் உயிர்தப்பி விட்டார்கள் என்றறிந்து கொண்டேன். நல்ல வேலையாக எனது உள்ளூர் நண்பனின் வீடு ஒரு பெரிய மணல் குன்றின் பின்புறமாக அமைந்ததால், அதிக பாதிப்பின்றி தப்பிவிட்டனர். அன்று முதல் இன்றுவரை, ஏனோ ஏன்னால் வேளாங்கண்ணிக்கு செல்ல முடியவில்லை.
இந்த கட்டுரையின் அனைத்துப் பகுதிகளும், உலக நாடுகளில் சுனாமியால் தம் உறவுகளை இறந்த குடும்பங்களின் சார்பாக, இறந்த அந்த சொந்தங்களுக்கு சமர்ப்பணம்.