Sunday, December 20, 2009

அடங்கிய சுனாமி... அடங்காத பீதி... - 2

பகுதி - 1

நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் இடது புறத்தில் காலியிடங்கள் இருந்திருக்கிறது. அதில் கடல் நீர் புகுந்து ஒரு ஆறு போல் காணப்பட்டது. சில ஆட்டுக்குட்டிகளும், கோழிகளும் அதில் அடித்து வரப்பட்டன. நான் எனது அப்பாவிடம், இன்று பௌர்ணமி அதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, பெரும் அலைகள் தோன்றி நீர் இந்த கால்வாய் வழியாக சென்று கொண்டிருக்கிறது என்றேன். என் அப்பாவோ, மிக அதிகமாக நீர் ஊருக்குள் சென்றுகொண்டிருக்கிறது. இதை வழக்கம் போல சன் டிவியில் flash news-ல் போட்டு விடுவார்கள். நம் உறவினர்கள் அச்சப்படக்கூடும் என்று எமது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் ஒருவருக்கு அலைபேசியில் அழைத்து பயப்பட வேண்டாம் என சொல்லி விடுவோம் என்றார்.

எங்களது உரையாடலை அருகிலிருந்து கவனித்த ஒருவர், சார் இது பௌர்ணமி அலை இல்லை. இதுக்குப் பேரு வேற என்னமோ சொல்றாங்க. சென்னையில இருந்து கன்னியாகுமரி வரை எல்லா கடற்கரைப் பகுதிகள்லையும் கடல் நீர் பெரிய பெரிய அலைகளின் மூலம் உள்ளே புகுந்திருச்சாம்னு சொன்னார். இவை அனைத்தும் ஓரிரு நிமிடங்களில் நடந்தவை. அச் சமயம் ஒருவர் கைக்குழந்தையுடன் அந்த கால்வாய் நீரில் போராடி நீர் செல்லும் திசையிலேயே நீந்தி கொண்டிருந்தார். அதே கணம் ஒரு கூட்டம் எங்கள் மாடிக்கு அலறிய வண்ணம் ஓடி வந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே கூக்குரல். யாருக்கும் எதுவும் புரியவில்லை. அங்கு வந்த ஒரு சிலர் நடந்ததை அவர்கள் அறிந்த வரை கூறியவுடன் தான் விபரீதம் புரிந்தது.

தப்பி வந்து சேர்ந்தவர்களில் எனக்கு நினைவாக ஒரு ஆந்திர குடும்பம், ஒரு மலையாள குடும்பம் மற்றும் ஒரு மீனவ குடும்பம். நான் ஹைதராபாத்-ல் சிறிது காலம் வேலை செய்த அனுபவத்தில் எனக்கு ஓரளவு தெலுகு தெரியும். அதேபோல, அச்சமயம் திருவனந்தபுரத்தில் வேலை செய்துகொண்டிருந்ததால் கொஞ்சம் மலையாளமும் தெரியும். அதனால், அந்த குடும்பத்தினரை ஆசுவாசப்படுத்தி எங்கள் அறையில் அமர செய்திருந்தோம். நாங்கள் கொண்டு சென்றிருந்த இட்லிகளை அவர்களுக்கு அளித்தோம். அவர்கள் சாப்பிட மறுத்தனர். வலுக்கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தோம். அந்த மலையாளி குடும்பத்தில் ஒரு தாய், தந்தை மற்றும் மகன் இருந்தனர். இவ்விரு குடும்பத்தினரும் வேளாங்கண்ணி வேற்று மாநிலத்தில் இருந்ததாலோ என்னவோ பயம் அவர்களை மிக அதிகமாகவே ஆட்டிப்படைத்தது. நான் அவர்களது மொழியில் பேசியதால் அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்ததாக கூறினர்.

எங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக இருந்ததால், எங்களுக்கு இதன் விபரீதம் புரியவில்லை. அந்த மலையாளி ஒரு இதய நோயாளியாகவும் இருந்தததால் அவருக்கு மிக சிரத்தையோடு ஆறுதல் கூற வேண்டியதாயிற்று. மேலும் அவரது மாமியாரும், மாமனாரும் மிக வயதானவர்கள். அவர்கள் நாங்கள் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். அவர்களிடம் அலைபேசியும் இல்லை. கடைவீதிக்கு வந்த இவர்களுக்கு என்ன ஆனதோ என்றோ அவர்கள் பதறியிருக்க கூடும். அந்த வயதானவர்கள் இவர்களைத் தேடி எங்கும் வெளியில் சென்று விடக்கூடாது என்று இவர்களுக்கு பயம். ஆந்திர குடும்பமும் ஒரு சேர அங்கு பத்திரமாக இருந்ததால் ஓரளவு பயம் குறைந்து இருந்தனர். அவ்வப்போது என்னிடம் சில விளக்கங்கள் கேட்டு தெளிவடைந்து கொண்டிருந்தனர்.


தப்பி வந்த அந்த மீனவக் குடும்பத்தில் ஒரு மாமியார், மருமகள், ஒரு மகன்(10) மற்றும் ஒரு மகள்(7) இருந்தனர். அந்த மாமியார் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தார். அவர்களின் உடைகள் முழுவதும் ஈரம். அந்த குழந்தைகள் முகம் பயத்தில் இறுக்கமாகவே இருந்தது. அந்த மாமியார், வேளாங்கண்ணி மாதாவை "ஆத்தா, நீ இங்க இருக்காய்னு தானே நாங்க உசிர் வாழுறோம். நீ எங்களை காப்பத்துவாய்னு தானே கடல்ல பொழப்பு நடத்துறோம். நீ எங்களை இப்படி கை விட்டுட்டியே. உனக்கு அப்படி என்ன கோவமோ எங்க மேல. இது உனக்கே நல்ல இருக்கா? நீயெல்லாம் ஒரு தெய்வமா?? உன்ன கும்பிட இவ்வளவு சனம் வருதே. அவங்க எல்லாம் பாவம் இல்லையா??? நீ இங்க எங்க கூட இருந்தும் இப்புடி நடக்க விட்டுட்டியே"-னு திட்டி கொண்டிருந்தார். மருமகளை நோக்கி, "ஏண்டி, மு***டைகளா, நீங்க பன்ற அட்டூழியத்துக்கெல்லாந்தாண்டி இப்புடி நடக்குது. நீங்கல்லாம் அடங்கி ஒழுங்கா இருந்திருந்தா இப்படியெல்லாம் நடக்குமா? அவஅவ சீவி முடிச்சு, சிங்காரிச்சுகிட்டு போறவன் வர்றவனை எல்லாம் மயக்குனா.... இப்புடித்தாண்டி நடக்கும். வேளாங்கண்ணி ஆத்தாளும் பொறுத்து பொறுத்து பாத்தா... அவ்வளவு தாண்டி அவ பொறுமையோட எல்லா முடிஞ்சிடுச்சி. அதான் இப்புடி பொங்கிட்டா" கத்த ஆரம்பித்துவிட்டார்.

அந்த இரண்டு சிறு பிள்ளைகளும் எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தனர். அந்த சிறவன் தனது ஆயாவிடம், "ஆயா, என் கூட டோனி விளையாண்டுகிட்டு இருந்தான் ஆயா. திடீர்னு ஒரு பெரிய அலை வந்து எங்களை தூக்கி மேல கொண்டுபோயிட்டு அப்புடியே கீழ போட்டுருச்சு. நான் அங்க நின்னுகிட்டு இருந்த வேனு மேல போயி விழுந்தேன். வேனும் அப்பறம் சாஞ்சிடுச்சு... அங்கின நின்ன ஒருத்தரு என்னையும் சேர்த்து பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்து அங்க இருந்த ஒடஞ்ச வீட்டு சுவத்துக்கிட்ட விட்டுட்டு போனாரு. பாவம் ஆயா டோனி அவன தண்ணி இழுத்துக்கிட்டு போயிடுச்சு" என்றான். நல்ல வேலையாக அந்த சிறுமை அவளது தாய் தந்தையுடன் மீன் சந்தையில் இருந்ததால் காப்பாற்றப் பட்டுவிட்டாள். நாங்கள் அவர்களை அழைத்து அவர்களுக்கும் இட்லிகளை கொடுத்து சாப்பிட செய்தோம்.

அனைவரையும் அறையில் பத்திரமாக இருக்கும் படி கூறிவிட்டு, நான் எனது தம்பி, தந்தை மற்றும் எனது மாமா நால்வரும் கிளம்பி கீழே கடை வீதிக்கு சென்று என்ன நடந்தது என்று பார்த்துவிட்டு, காவல்துறையிடம் உதவி கோரலாம் என சென்றோம். இக்கட்டிடத்தின் மாடிப்படிகள் பின்புறமாக இறங்கும் வகையில் அமைந்திருந்தது. படியின் கீழ் இறங்கி கொஞ்ச தூரம் சென்றவுடன் எங்கள் இதயங்கள் சிறிது கணம் நின்றது போல் ஆகிவிட்டது. மூன்று நான்கு கைக்குழந்தைகள் அங்கு கிடந்த சிறிதளவு நீரில் இறந்தபடி மிதந்து கொண்டிருந்தது. எங்களது சுற்றுச் சுவரின் வாயில் கடல் அலை சென்ற திசைக்கு பக்க வாட்டில் இருந்ததாலும் சிறிது மேட்டுபகுதியாக இருந்ததாலும் அதிக வெள்ளம் உள்ளே வரவில்லை.

வாயிலின் வெளியே முக்கிய கடைவீதி. அங்கு வந்து பார்த்த பொது உடல் முழுவதும் இதுவரை நான் உணராத சிலிர்ப்படைந்து ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியது. முழங்கால் அளவுக்கு நீர். அது கலங்கிய சாக்கடை நீரைப்போல இருந்தது. நீரில் ஆங்காங்கே பயன்படுத்தப்படாத CoCo Cola, PEPSI, Bisleri, பனங்கிழங்கு, பாசி மாலைகள், விளையாட்டுப் பொருட்கள், பொறி, பூக்கள் இன்னும் ஏராளமான பொருட்கள் மிதந்துகொண்டிருந்தன. உடனே, மிக மிக அருகிலிருந்த(சுமார் 20 மீட்டர்) காவல்துறை அலுவலகம் சென்று ஒரு பெண் ஆய்வாளர் இருந்தார் அவரிடம் முறையிட்டு, நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். தீயணைப்பு நிலையத்தினரை வரவைக்கலாமே என்றோம். அவரோ சலிப்பாக "போங்க சார், கலக்டர்கிட்ட கூட சொல்லியாச்சு. இது இங்க மட்டும் இல்ல. நாகபட்டினத்துல இங்க விட ரொம்ப பாதிப்பாம். கலக்டர் அங்க போய்ட்டாரு" னு சொல்லிகிட்டு இருக்கும்போதே கடல் பக்கமா இருந்து ஒடுங்க பெரிய அலை வருதுன்னு ஒரு கூட்டம் ஓடிவர ஆரம்பிக்க.... நாங்களும் அந்த தண்ணிக்குள்ள ஓடி வேகமா வந்து எங்க மாடி ஏறிட்டோம்.

----- பீதி தொடரும்....
10 comments:

சிவாஜி சங்கர் said...

நானும் சுனாமியை நேரடியாய் பார்த்திருக்கிறேன்.. உங்கள் வலி உணரமுடிகிறது உங்கள் வார்த்தையில்...!
(நானும் ஒரு பார்ட் போடலாமா தல..)

ரோஸ்விக் said...

கண்டிப்பா போடுங்க தல. அது வரலாறு நமக்கு விட்டுச்சென்ற வலி. அந்த வரலாற்றை நேரில் கண்ட நாம் பதிய வேண்டும்.
போட்டுட்டு சொல்லுங்க நான் ஓடி வந்து பார்க்கிறேன். :-)

ரோஸ்விக் said...

நண்பா பூங்குன்றன்.வே,


நீங்க இங்க வருவீங்கன்னு தெரியும். அதனால இத எழுதறேன். உங்க கவிதைகள் அருமை. ஆனால் என்னால் அலுவலக்த்திலிருந்து பின்னூட்டம் போடா முடியவில்லை. (உங்கள் கமேண்ட் பகுதி embeded ஆக இருப்பதால்). இது போல பலரும் இப் பிரச்னையை சந்திக்கலாம்.

நண்பர் மீன் துள்ளியானின் வேண்டுகோளுக்கிணங்க pop-up window-வை மாற்றி விட்டீர்கள். பரவாயில்லை. "Full Page" option-யாவது பயன்படுத்துங்கள். pop-up window-ல் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அதில் ஒரு பயன் என்பது நீங்கள் எழுதிய பகுதியில் இருந்து சிறு பகுதியை copy செய்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

http://thisaikaati.blogspot.com/2009/10/pinnootam.html

புரிதலுக்கு நன்றிகள்.

பித்தனின் வாக்கு said...

நல்ல கட்டுரை. விரிவுரை போல இல்லாமல். வழக்கு நடை சொல்லாடையில் எழுதவும். எனது சுனாமி கட்டுரைகளைப் படித்தால் உணர்ச்சியுடன் இருக்கும்.

// மூன்று நான்கு கைக்குழந்தைகள் அங்கு கிடந்த சிறிதளவு நீரில் இறந்தபடி மிதந்து கொண்டிருந்தது. //

உதாரணத்திற்க்கு
இதை அங்கு நான் கண்ட காட்சி என் நெஞ்சை உறைய வைத்தது. மூன்று ,நாலு இளம் தளிர்கள் சுனாமியின் கோரப்பசிக்கு ஆளாகி தம் உயிரைத் இழந்து மிதந்தது. கண்கள் பணிக்க கனத்த மனதுடன் நடந்தோம். என்று அழகாக எழுதலாம். இது தான் உங்கள் மன நிலையாகவும் இருந்து இருக்கும். மிக நிதானமாக சொற்களை யோசித்து, ஒரு முறைக்கு இரு முறை எழுதியவற்றைப் படித்து மாற்றி எழுதுங்கள்.
கூறியவற்றில் தவறு இருப்பின் மன்னிக்கவும் நண்பா. நன்றி.

creativemani said...

அன்பின் ரோஸ்விக்..
நானும் சுனாமியை நேரில் கண்டேன்.. அதன் பாதிப்பை கவிதையாக்கியிருக்கிறேன்..
இங்கு வந்து பார்க்கவும்..
http://anbudan-mani.blogspot.com/2009/07/26-2004.html

ஸ்ரீராம். said...

கலைந்த கனவுகள்...கலையாத நினைவுகள்.

ரிஷபன் said...

முன்பு பேப்பரில் படித்தபோது மனசு கனத்தது.. இப்போது மீண்டும்.. நேரில் பார்த்தது போல் அதிர்ச்சி..

மீன்துள்ளியான் said...

ரோச்விக் சுனாமி நமக்கு கற்று கொடுத்த பாடங்கள் ஏராளம் .. ஆனாலும் நாம் திருந்த மறுக்கிறோம் .. அது ஏற்படுத்திய காயங்கள் பலரது வாழ்வில் நிரந்தர காயங்கள் .. எங்களை போன்றவர்கள் அது பற்றி அறிய இது போன்ற பதிவுகள் தேவை .

சி.வேல் said...

வணக்கம் ரோச்விக்

சுனாமி பதிவு அருமை என்றுகூட சொல்ல முடியவில்லை , நான் கடலூர்காரன் சுனாமியை நேரில் பார்த்தவன், இன்றும் உலகில் எங்கு நில நடுக்கம் என்றாலும் பயம் தொடர்கிறது

ரோஸ்விக் said...

பித்தனின் வாக்கு - தலைவா உங்கள் ஆலோசனையில் தவறில்லை. இது மிக விரைவாக எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை(கள்). மேலும், இதில் சொற்களை அடுக்கி எழுதவேண்டும் என்பதைவிட, என் தற்போதைய மன ஓட்டத்தை அப்படி எழுதி இருக்கிறேன்.
இனிமேல் எழுதிப் பழகுகிறேன். :-)
மிக நன்றி.


அன்புடன்-மணிகண்டன் - நண்பா மிக அழகான வார்த்தைகளில் சுனாமியை (வ)அடித்திருக்கிறீர்கள். மிகவும் நன்று. :-)


ஸ்ரீராம். - அட... ஒரு வரியில் கவிதை போல ஆறுதல். மிக நன்றி நண்பரே!


ரிஷபன் - அன்பு நண்பா! இதை நினைக்கும் போதெல்லாம் மனசு எனக்கும் கனக்கும். கடலை பார்த்தாலே ஒருவித கோபம் வரும். தங்களின் அன்புக்கு நன்றி.

நம்ம மனசு கனத்தை இறக்க.... நகைச்சுவையாய் கீழ் வசனம்.

ரிஷப ராசி நேயர்களே! உங்களின் மனசு கனக்கும் நேரமிது... :௦-). சுனாமி குறித்து படிக்காதீர்கள். உங்களின் ராசியான நிறம் நீலம் மற்றும் வெள்ளை. அனுகூலமான திசை... இந்த திசைகாட்டிய கேளுங்க. :-)) (தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.)


மீன்துள்ளியான் - மிக்க நன்றி செந்தில்! நம்ம ஆளுங்க வடிவேல் பாணியில எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க. (தாங்குற மாதிரி நடிப்பாங்க). இது பற்றிய விழிப்புணர்வு இன்னும் தேவை தான்.


Mr.vettiபைய்யன் - மிக்க நன்றி சிங்காரம் (Mr.vettiபைய்யன்). நான் இன்றும் கடல் அலையை கண்டால் ஒருவித அச்ச உணர்வு மேலிடுகிறது. எங்கு நிலா நடுக்கம் நடந்தாலும், எந்த நாட்டானுக்கும் சுனாமி பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று மனம் பதறுகிறது.
இக்கட்டுரை ஏதும் அழகைப் பற்றி வர்ணித்து எழுதவில்லை. இது வர்ணிக்கும் சம்பவமும் இல்லை. சுனாமியின் கோரத்தை நான் முழுதும் பெற்றிடவும் இல்லை. பெற்றிருந்தால் நான் இதை எழுத உயிரோடு இருந்திடப் போவதும் இல்லை. இது எனது அன்றைய நிகழ்வுகள். :-)

தங்களின் மேலான கருத்துக்கு நன்றியும் அன்பும் நண்பா.