Thursday, December 17, 2009

மரணம் இணைக்கும் உறவுகள்

மனிதர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் மட்டுமல்லர். எப்போதும் உணர்வு வயப்பட்டவர்களும் கூட. மனித வாழ்க்கையில், சொந்தங்களும் நாம் அவற்றின் மீது கொண்டுள்ள பந்தங்களும் இன்றியமையாதது என்றே தோன்றுகிறது. வாழ்வின் பல சூழ்நிலைகளில் நாம் எதோ ஒரு வகையில் உணர்ச்சி வசப்பட்டு நம் உறவுக்காரர்களின் மேல் கோபங்கொண்டு அவர்களை வெறுத்து ஒதுக்குவதுண்டு. சில காலம் கழித்து இயல்பாகவே நம் பகையை மறப்பதுண்டு.

கோபங்களை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியும் சில சமயங்களில் கைகலப்பு செய்தும் நாம் பகையை பிரசவித்துக்கொள்வோம். கிராமங்களில் இன்றும் பங்காளிகள் சண்டையும், கொண்டான் கொடுத்தான் பகையும் அவ்வப்போது நிகழ்வது இயல்பே. சில குடும்பங்கள் தங்கள் பகையை, பெரிதுபடுத்திகாட்டாமல் எதிரியுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொள்வார்கள். யாரேனும் இது குறித்துக் கேட்டால் எங்களுக்குள் சின்ன மனஸ்தாபம் அதனால் பேசிக்கொள்வதில்லை என்பர்.

பங்காளிகள் சண்டை பெரும்பாலும் சொத்து தகராறினால் ஏற்படுவதுண்டு. ஐந்து வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பங்காளி எனும் கூற்றை இது போன்ற சொத்து விவகாரங்களில் நிரூபித்துவிடுவார்கள். பிரச்சணையின் சாராம்சம் மற்றும் அதை அவர்கள் கையாண்டவிதன்களைப் பொறுத்து மீண்டும் அவர்கள் இணையும் காலம் அமையும். பல சமயங்களில் இவர்களுக்குள் அடித்துக்கொண்டாலும், வேறு எவரோ ஒருவர் தன பங்காளியை சீண்டி அடிக்க முயலுபோது பெரும்பாலும் தன் பங்காளியை விட்டுக்கொடுக்காமல் எதிரியை நேரிடையாகவே "என்னடா, அவனை அடிச்சா கேட்க யாரும் இல்லையின்னு நினைச்சியா?" என்று கேட்டு மிரட்டுவர்.

கொண்டான் கொடுத்தான் என்பவர்கள் பெண் கொடுத்தோ அல்லது பெண் எடுத்தோ உறவை உருவாக்கி கொண்டவர்கள். இவர்களுக்குள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல் ஏற்பட்டு பகையாகி விடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு ஊர்களில் வசிப்பதாலோ என்னோவோ கையாலோ அல்லது ஆயுதம் கொண்டோ தாக்கி கொள்வதில்லை. விவகாரப் பேச்சு வார்த்தைகள் முற்றி பகைமை பாராட்டுவார்கள். இது போன்ற பகைகள் காலப்போக்கில் அந்தந்த வீட்டுப் பெண்களாலேயே சரி செய்யப்பட்டுவிடும் அல்லது அந்த வீட்டுப் பிள்ளைகள் நட்பாகி இணைந்துவிடுவார்கள்.

இதுபோன்ற பகைகளை சில நேரங்களில் காலம் தீர்த்துவைத்தாலும், பல நேரங்களில் காலன்(எமன்) தீர்த்து வைத்துவிடுவான். ஆம், மரணம் விட்டுப்போன உறவுகளை சேர்த்து வைத்துவிடும். என்னதான் பகையாக இருந்தாலும், அவரவர்களின் இரத்தம் பாசம் கலந்தபடியே ஓடிக்கொண்டிருக்கும். இதனால் தான் அவர்கள் என் இரத்த சொந்தங்கள் என்று கூறுவதன் அர்த்தம் புலப்படும்.

இவ்வாறான, இரத்த சொந்தத்தில் எவருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது ஒருவரின் உயிருக்கு பங்கம் என்றாலோ, பகையாக இருப்பினும் பாசம் விட்டுக்கொடுக்காது. பகை உருவாகும்போது நாம் நிதானமாக ஒரு கட்டுப்பாட்டுக்குள் நமது எதிர்ப்பையோ வருத்தத்தையோ வெளிப்படுத்தியிருந்தால், பகை மறந்து உறவு சேரும் காலத்தில் மனங்கள் ரணங்கள் இன்றி எளிதாக சேரக்கூடும். ரணங்கள் அதிகமிருப்பின் எக்காலத்திலும் உறவுகள் சேர பிற மனிதர்களின் முயற்சி தேவைப்பட்டுவிடும். "என்னையா பெருசா பகை. என்ன இருந்தாலும் அவன் உன் பங்காளி. அல்லது கொண்டான் கொடுத்தானுக்குள்ள இதெல்லாம் சகஜம். போகும்போது என்னத்தையா கொண்டு போகப்போறோம்?" என்று கூறியோ "அங்காளி பங்காளினா இதெல்லாம் இருக்கத்தான்யா செய்யும்" என்று கூறியோ பல மனித மனங்கள் நம் மனங்களோடு சமரசத்தை சாத்தியமாக்க முயலும்.

மரணத்தின் வலிகள் உணர்ந்த நமக்கு இதுபோன்ற தருணங்களில் அது தன் வலிமையையும் உணர்த்திவிடும். அரசியலில் மட்டுமல்ல, நமது வாழ்விலும் உறவும் பகையும் நிரந்தரமல்ல என்பதை இந்த மரணங்கள் நிரூபித்துவிடும். உணர்வுகளுடன் வாழப்பழகினால் உறவுகள் என்றும் சாத்தியமே.22 comments:

நாடோடி இலக்கியன் said...

நல்ல இடுகை.

உறவுகள்தான் என்றைக்குமே பலம்.நட்பு எல்லாமும் செய்யும் ஆனாலும் ஒரு எல்லையோடு நின்றுவிடும்,உறவுகள் அப்படி அல்ல.

ஜெகதீசன் said...

உண்மை.....

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் சரிதான்

vasu balaji said...

/உணர்வுகளுடன் வாழப்பழகினால் உறவுகள் என்றும் சாத்தியமே. /

சரியான கருத்து. யதார்த்தமான வாழ்வியல் சொல்லும் இடுகை. பாராட்டுகள் ரோஸ்விக்.

டவுசர் பாண்டி said...

ஒட்டு போடலாம்னு பாத்தா !! பதிவுலகத்துல மொத தபா படிக்க வரவங்க ஒட்டு போடுங்க !! இன்னு கீதுய் , நானு பதிவுலகு வந்து ஒரு வருஷம் ஆவுது அதுவும் இல்லாம உங்க பதிவுக்கு வேற அடிக்கடி வரேன் ஒட்டு போடறதா ? இல்லியா ? கரீக்டா சொல்லுங்கோ !! சொல்லுங்கோ !!

க.பாலாசி said...

//ஆம், மரணம் விட்டுப்போன உறவுகளை சேர்த்து வைத்துவிடும். என்னதான் பகையாக இருந்தாலும், அவரவர்களின் இரத்தம் பாசம் கலந்தபடியே ஓடிக்கொண்டிருக்கும். //

சரியா சொன்னீங்க...இதுமாதிரி அடிக்கடி எங்க தெருவிலேயே நான் கண்டதுண்டு....நல்ல இடுகை....

ரோஸ்விக் said...

நாடோடி இலக்கியன் - ஆமா தல, நீங்க சொல்றதும் ஒரு வகையில சரிதான். மிக்க நன்றி.


ஜெகதீசன் - வாங்க ஜக்கு பாய் :-)) ரொம்ப நன்றி.


ஆ.ஞானசேகரன் - மிக்க நன்றி நண்பா!


வானம்பாடிகள் - தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா. :-)


டவுசர் பாண்டி - தலீவா, அத்த நம்ப டிவி ஒண்ணுல கூவுவாங்களே அத்த மேரி படிக்கணும். அங்க ஒரு இடை நிருத்தற்குறியும் இருக்குல. :-)

நம்மளாண்ட வந்துட்டு நீ ஒட்டு பூடாம போனீன்னா ... அங்க உன் வீட்டாண்ட வந்து பெர்சா குரலு குட்துருவேன். ஏன்னா நீ நம்ம பங்காளி. :-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல இடுகை

சிவாஜி சங்கர் said...

//உணர்வுகளுடன் வாழப்பழகினால் உறவுகள் என்றும் சாத்தியமே. //

கரீட்டா சொன்ன தல

கண்ணகி said...

மனதை கேள்விக்குட்படுத்தும் பதிவு.

குரு said...

Very nice article...

ஹேமா said...

நல்ல வாழ்வியல் பதிவு ரோஸ்விக்.
எத்தனை வெளிநட்புக்களோடு பழகினாலும் எமக்கென்ற உறவைக் கண்ட நேரம் மனம் படும் சந்தோஷம் என்பது சொல்ல முடியாத உணர்வு.உறவின் வலிமை இதுதான்.

ஸ்ரீராம். said...

சரியாச் சொன்னீங்க....

பா.ராஜாராம் said...

மகனே,கலக்குறீங்க!

ரோஸ்விக் said...

T.V.Radhakrishnan - மிக்க நன்றி நண்பா.

Sivaji Sankar - அப்பாடா.... இப்பத்தான்யா உங்க முகத்தை பாக்க முடியுது. :-)


vattukozhi - மிக்க நன்றி தோழி!


குரு - மிக்க நன்றி நண்பா!


ஹேமா - ஆமா தோழி! உறவின் வலிமை இதுதான்.


ஸ்ரீராம். - நம்ம ஆளு வந்துட்டாருய்யா. :-) மிக்க நன்றி நண்பா!

திருவாரூர் சரவணா said...

சுபகாரியத்துக்கு வந்து கலந்துக்காட்டியும் பரவாயில்ல. ஆனால் மரணத்திலும் ஒரு குடும்பம் சேரவில்லை என்றால் அவ்வளவுதான். கட்டுரையில் கூறப்பட்டவை உண்மையே...

ப்ரியமுடன் வசந்த் said...

//நமது வாழ்விலும் உறவும் பகையும் நிரந்தரமல்ல //

சரியான கருத்துக்களுடைய சிறப்பான இடுகை ரோஸ்ஸ்...!

புலவன் புலிகேசி said...

நல்ல ஒரு உறவுப் பகிர்வு..நன்றீ நண்பா..

பூங்குன்றன்.வே said...

சிந்திக்கவைக்கும் சிறப்பான பதிவு..

எனக்கு மட்டும் இதை மாதிரி அழகா எழுத வரமாட்டேங்குது :)

Ravivarma said...

உங்க மெயில் id குடுங்க ....ரோஸ்விக்

V.N.Thangamani said...

அவசியமான, அற்புதமான பதிவு.
கொஞ்சம் நீளத்தை குறைத்து
விஷயத்தை சுருக்கமாக
சொன்னீர்களானால் இன்னும்
சிறப்பாக இருக்கும். ரோஷ்விக்.
நன்றி, வாழ்க வளமுடன்.

ரோஸ்விக் said...

பா.ராஜாராம் - சித்தப்பா.... உங்க எழுத்து தான் கலக்கல். மகன் இப்ப தான் எழுத படிக்கிறேன். :-)
பல தடவ பின்னூட்டம் போடமுடியாம உங்க பதிவ படிச்சிட்டு மட்டும் வந்துடுவேன். அருமை அருமை -னு சொல்றது டெம்ப்ளேட் பின்னூட்டம் மாதிரி இருப்பதால். மன்னிக்கவும்.


சரண் - தல உங்களை மரண வீடுகளுக்கு புகைப்படம் எடுக்க யாராவது கூப்பிட்டிருக்காங்களா?
ஏன்னா எனக்கு தெரிஞ்சு ஒரு வீட்டுல இந்த சம்பவத்தையும் வீடியோ எடுத்து வச்சிருக்காங்க.


பிரியமுடன்...வசந்த் - மிக்க நன்றி பேச்சிலர் :-))


புலவன் புலிகேசி - மிக்க நன்றி நண்பா!


பூங்குன்றன்.வே - நன்றி நண்பா! டபால்னு நீங்க அதிரடியா ஒரு கவிதைய போட்டு சோலிய முடிச்சிருவீங்களே! :-))


ravi - வாங்க ரவி! புடுச்சுக்கங்க (thisaikaati@gmail.com) :-))


வி.என்.தங்கமணி - மிக்க நன்றிங்க ஐயா! முயற்சிக்கிறேன். சில சமயங்களில் நீளமாக எழுதும்போது. வார்த்தைகளும் வாக்கியங்களும் ஒரு சிலரை பெரிதும் கவர்ந்துவிடும். இருந்தாலும் வளவளன்னு எழுதுவது நல்லதில்லை தான்.

அய்யய்யோ பின்னூட்டமும் பெருசா போச்சா?? :-)) அவ்வ்வ்வ்.....