Sunday, December 20, 2009

அடங்கிய சுனாமி... அடங்காத பீதி...- 1

(உண்மை சம்பவம். இதை கதை போல் சொன்னால் அதன் வலி தெரியாது என்பதால்... திரைக்கதை போல் எழுத வேண்டிய கட்டாயம். பொறுத்தருள்க)

சுனாமி வந்து ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னும் நம் மக்களிடையே அந்த அச்சம் விலகவில்லை. இதுவரை பலர் சுனாமியைப் பற்றி தாம் அறிந்த செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கக் கூடும். நான் சுனாமியில் இருந்து தப்பிய என் நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பெரும்பாலும் வருடத்திற்கு ஒருமுறை என் குடும்பத்தார்களும் மற்றும் பிற மத நண்பர்களும் வேளாங்கண்ணிக்கு செல்வதுண்டு. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி இரவு நான் என் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டு நண்பர்களுடன் எங்களது Mahindra Pick-Up வேனில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டோம். வழக்கமாக எதோ ஒரு வகையில் தங்குமிடத்திற்கு முன் பதிவு செய்வது வழக்கம். அந்த முறை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட சமயமாதலால் எங்களால் முன் பதிவு செய்ய இயலவில்லை.

காலை 5.30 மணியளவில் வேளாங்கன்னியை அடைந்துவிட்டோம். எனது நண்பரின் சகோதரர் ஒருவர் அங்குள்ள தேவாலய உணவு விடுதியில் பணி புரிகிறார். அவர் வேளாங்கண்ணி பழைய கோவிலுக்கு செல்லும் வழியில் உறங்கி கொண்டிருப்பதாக அறிந்து அங்கு சென்று தங்களுக்கு தங்க விடுதி வேண்டும். யாரவது உனக்குத் தெரிந்த அருட்தந்தையர்கள் மூலம் ஏற்பாடு செய்ய முடியுமா என்றோம். அவன் 8 மணியளவில் வந்து முயற்சி செய்கிறேன். ஆனால் இந்நாட்களில் கிடைப்பது அரிது என்றான்.

இதற்கிடையில் என்னுடன் கல்லூரி பயின்ற என் நண்பன் வில்சன் அதே ஊரைச் சார்ந்தவன். அவனை தொலைபேசியில் அழைத்து உதவி கூறியவுடன், உடனே நேரடியாக வந்து அவனுக்குத் தெரிந்த வழிகளில் முயன்று தோற்றான். வேறு வழியின்றி நானும் எனது தம்பியும் அங்குள்ள தாங்கும் விடுதிகளுக்கு பொறுப்பான அருட்தந்தை ஒருவரை சந்தித்து, எங்களுக்குத் தெரிந்த உயர்மட்ட பரிந்துரையின் பெயரில் வேளாங்கண்ணி பேருந்து நிறுத்தத்திற்கும் கடற்கரைக்கும் இடையில் புதியதாக கட்டப்பட்ட ஆலயத்திற்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் தாங்கும் வசதி பெற்றோம். நாங்கள் மொத்தம் 17 பேர் சென்றிருந்தோம்.

அனால், மொத்தம் 10 பேர் மட்டும் என்று போய் சொல்லி (உண்மைய சொன்னா ஏன்யா ஊரையே கூட்டி வந்துட்டியான்னு கடுப்பாக மாட்டாங்க? ) அந்த வசதியைப் பெற வேண்டியதாயிற்று. பகல் வேலை மட்டுமே அங்கு தங்கப்போவதால் அது யாருக்கும் சிரமாக இருக்காது. இருப்பினும், தங்குவதற்கு பெரிய அறையே ஒதுக்கப்பட்டிருந்தது. நமக்குத் தேவை குளிக்க, சமைத்து அமர்ந்து சாப்பிட ஒரு இடம். அது ஒரு பழைய பள்ளிக்கூடம் என்பதால் அங்கு பெரிய கால்பந்து மைதானமும், கூடைப்பந்து மைதானமும் இருந்தது. எங்கள் வாகனத்தை கால்பந்து மைதானத்தின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அனைவரும் அறைக்குச் சென்றோம்.

ஒவ்வொருவராக குளித்து விட்டு கொண்டுவந்திருந்த இட்லிகளை சாப்பிடுமாறு எனது தந்தை கூறினார். எங்களது வாகன ஓட்டிகள் இருவரும் எனது தந்தையிடம் ஐயா, நாங்க போயி கடல்ல குளிச்சுட்டு வர்றோம். அப்புறம் வந்து சாப்பிட்டுக்கிறோம் என்றார்கள். அதற்கு என் தந்தை, டேய், காலங்காத்தால கடல் ஓரமா விஷ பாம்புகள் கிடைக்கும்னு சும்மா சொல்லி, நாம எல்லாம் அப்புறமாக போயி ரொம்ப நேரம் குளிக்கலாம். இரவு முழுவதும் கண் விழித்து ஓட்டியதால் இப்போ போயி தூங்குங்க. அதிசயமா அவங்க ஒத்துக்கிட்டாங்க. :-)

இது எல்லாம் சுமார் 7:30 மணிக்குள் நடந்தது. நான், எனது அப்பா, அம்மா, தம்பிகள், மாமா, எங்கள் வீட்டின் உரிமையாளர் மற்றும் இரண்டு அத்தைகள் மீன் மற்றும் விறகு வாங்குவதற்காக மீன் சந்தைக்கு வந்தோம். மீன் வாங்கிய பிறகு அதை சுத்தம் செய்ய நேரம் ஆனபடியால் எங்களில் சிலர் விறகு மற்றும் சில பொருட்களை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றோம். சிறிது நேரத்தில் நான் குளித்துவிட்டு சாப்பிடுவதற்காக அமரும்போது எங்கள் ஓட்டுனர் ஒருவர் குளித்துவிட்டு துண்டை காயப்போடுவதற்காக அறைக்கு வெளியில் வந்தார். நாங்கள் தங்கி இருந்தது முதல் தளம். அதற்கு மேல் மொட்டை மாடி தான்.

அந்த வளாக சுவரை சுற்றி தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிகளும், கடைகளும் இருந்தன. எங்கள் அறை வாசலுக்கு எதிரே விளையாட்டு இடம் அதற்கடுத்து தனியார் விடுதிகளின் பின் பகுதிகள் சுற்று சுவராய். அதற்கும் கடலுக்கும் இடையில் சில வீடுகளும் கடைகளும். துண்டு காயப்போடச் சென்ற ஓட்டுனர் என்னை அழைத்து, அண்ணே! இங்க பாருங்க கடல் பக்கத்துல எவ்வளவு காக்கைகள் பறக்குத்துன்னு சொல்ல, நான் சாப்பாட்டில் கைவைக்கும் முன் ஓடிச்சென்று பார்த்தேன்.

எண்ணிலடங்கா காகங்கள் பறந்துகொண்டிருந்தன. கடற்கரையில கருவாடு காயப்போட்டிருப்பாங்க... அதனால இப்படி சுத்துதுன்னு நினைக்கிறேன் என்று சொல்வதற்கும் மீன் சுத்தப்படுத்தி வாங்கிக்கொண்டு என் அப்பாவுடன் அனைவரும் முதல் தளம் சேர்வதற்கும் சரியாக இருந்தது.

நான் எனது அத்தை மகளிடம், இங்க பாரு உங்க அண்ணனுக்கு நீ கோழி அடிச்சு போட்டு பாசத்த காட்ட வேண்டாம்.... இதுல (காகம்) அஞ்சு ஆறை புடிச்சு வறுத்துக் குடுத்தீன்னா அவன் உன் மேல ரொம்ப பாசமா இருப்பான்னு சொல்லி கிண்டல் பண்ணி கொண்டிருந்தேன். அப்படியே, எம் அறையின் முன் இருந்த தனியார் விடுதிகளின் பின் புறமிருந்து சுமார் ஐந்து அடி உயரத்தில் உள்ள ஜன்னல்கள் வழியாகவும், சில விடுதிகளின் கொல்லைப்புற கதவுகளின் இடுக்குகள் வழியாகவும் மிக மிக கேவலமான துர்நாற்றத்துடன் கூடிய நீர் விளையாட்டு மைதானங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. உடனே எங்கள் ஓட்டுனர் ஒருவரை அழைத்து... நம் வண்டியும் நாறிப்போகும் உடனே அதை எடுத்து கூடைபந்து விளையாட்டு மைதானத்தின் மேல் நிறுத்து என்றோம். (அதன் தளம் சற்று உயரமாக இருந்தது). அதிசயமாக, அவசரமாக மின்னல் வேகத்தில் அவனும் செயல்பட்டான்.

----- பீதி தொடரும்....
10 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

screebplay மாதிரியே சுவாரஸ்யம் தொடருங்கள் ரோஸ்விக்

சிவாஜி சங்கர் said...

2nd பார்ட்டையும் போடுங்க தல..

பூங்குன்றன்.வே said...

சுனாமி மோசம் என்றாலும்,உங்க இந்த கட்டுரை மோசமில்லை.. !!!
நல்ல நடையில் இருக்கு..

அ. நம்பி said...

//அதிசயமாக, அவசரமாக மின்னல் வேகத்தில் அவனும் செயல்பட்டான்.//

அப்புறம்...?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சுவாரசியமாகக் கொண்டு செல்கிறீர்கள். ஆனால் மனம் அடித்துக் கொள்கிறது வேளாங்கண்ணியில் நடந்த கதை தெரிந்ததால். விரைவில் தொடருங்கள்.- 5 வருட நினைவு நாள்நெருங்குகிறதே!

பிரபாகர் said...

ஆஹா! பகீரென இருக்கிறதே... வரும் அடுத்த இடுகைகளுக்கு மனத்தினை தயார் படுத்திக்கொண்டிருக்கிறேன்...

பிரபாகர்.

ரோஸ்விக் said...

பிரியமுடன்...வசந்த், Sivaji Sankar, பூங்குன்றன்.வே, அ. நம்பி, ஜெஸ்வந்தி, பிரபாகர் - அன்பு நெஞ்சங்களே மிக்க நன்றி. பெரிய கட்டுரையாக இருப்பதற்கு மன்னிக்கவும். இன்னும் மூன்று பாகம் உள்ளது. பொறுமையாகப் படித்து ஒட்டு போட்டு, பின்னூட்டமும் போட்டு செல்லவும். அநேகமாக 2& 3 பகுதிகள் மிக வலி கொண்டதாகவும் எதார்த்தமாகவும் இருக்கும்.

ஸ்ரீராம். said...

மேடும் பள்ளமும் போல இரவும் பகலும் போல சந்தோஷமும் துக்கமும் அடுத்தடுத்துதான் வரும் போலும். இது வரை கலகலப்பாக எல்லாம் நடக்கிறது...சந்தோஷ அனுபவங்கள்...பின்னர் நடந்தது கடினமாக இருந்திருக்கும் என்று தெரிகிறது...ஆயினும் ஆரோக்ய மாதா உங்களை காத்திருப்பதன் நிதர்சனமே இந்தத் தொடர் இடுகை...

vasu balaji said...

தொடருங்கள் ரோஸ்விக். நன்றாக எழுதுகிறீர்கள்.

ரோஸ்விக் said...

ஸ்ரீராம். - நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே. இனிமேல் தான் சோகமான சம்பவங்கள். ஆரோக்கிய மாதா என்றில்லை. ஏதோ ஒன்று எனை காத்திருக்கிறது.


வானம்பாடிகள் - மிக நன்றி பாலா அண்ணே.