Wednesday, October 13, 2010

சிங்கபூருக்கு வாரீயளா? - செலவில்லாம...

உலகம் முழுதும் பரவியிருக்கிற என் சொந்தக்காரய்ங்களா!!! நல்லாயிருக்கீகளா? உங்களையெல்லாம் பாக்கனும்னு எங்களுக்கு ஆசை. சிங்கபூர் வாரியளா?? வாய்ப்பை நாங்க தாரோம். வாகையை நீங்க சூடுங்க...


கொடுத்திருக்கிற மூனு பிரிவுல, எது பத்தி நிறைய இருக்கோ உங்க அறிவுல... அதை தெரிவு செய்யுங்க.

தலைப்பை தலைக்குள்ள வாங்கி... தலைக்குள்ள இருக்குறத கட்டுரையா தழைக்க வைங்க..
 
எதுவும் பதிவு பண்ணத் தேவையில்லை... பதிவரா மட்டுந்தான் இருக்கணும்னு அவசியம் இல்ல... யாருவேணும்னாலும் எழுதலாம்... ஆனால் தமிழ்-ல தான் இருக்கணும்.


தலைப்புல அரசியல் பிரிவு இருக்கும்... மணற்கேணி மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் போட்டிகளிலும் வெற்றியாளர்களை கவுரவிப்பதிலும் அரசியலால் பிரிவுகள் இருக்காது... பயப்புடாமா வாங்க...

அறிவுசார்ந்த உங்க நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தப் போட்டியைப் பத்தி சொல்லுங்க...


ஓட்டுக்கும் கூட்டுக்கும் இங்க வேலையில்லை...

கட்டுக்கதைகளை எழுதி எழுதி பழகினது போதும்... மொக்கையே போடாம சக்கையா கட்டுரைகளை தயார் பண்ணுங்க. போட்டில வென்று சிங்கபூர் கிளம்ப தயாராகுங்க...

விதிகளை தெரிஞ்சுக்கிரனுமா?? அட உங்க விதியை இல்லங்க... போட்டிகளுக்கான விதிமுறைகளை இங்க போயி பாருங்களேன்... நல்லா கொடுத்துருக்காங்க டீட்டெயிலு...

இன்னும் என்னா வெயிட்டிங்கு... நாளும் நேரமும் ரன்னிங்கு... எழுதி அனுப்புனாத் தானே கிடைக்கும் வின்னிங்கு... ரெடி ஜூட் மக்கா... ஜூட்...



Saturday, August 7, 2010

எல்லாம் போறவழில....

எல்லா நாட்டு பயபுள்ளைகளுக்கும் இப்ப ஒரு வியாதி தொத்திக்கிச்சுண்ணே... என்னா வியாதின்னா எதாயிருந்தாலும் போறவழில பாத்துக்கலாம்... பண்ணிக்கலாம்னு இருக்குறது...

இந்த வியாதி இப்ப ரொம்ப சீக்கிரமா பரவிகிட்டு வருது. இதுக்கு இனிமே மருந்து கண்டுபிடிச்சாலும் அதை போற வழிலதான் சாப்புட்டுட்டு போவாங்க. அந்த அளவுக்கு வியாதி முத்தீருச்சு. காலையில ஆஃபீசுக்கு போறத்துக்கு முன்னாடி சாப்புட்டு போடான்னு வீட்டுல அம்மாவோ, வீட்டுக்கார அம்மாவோ சொன்னாலும்... நேரமில்ல பிரெட் சாண்ட்விச்சு வை. போறவழில சாப்டுக்கிறேன்-னு சொல்றது இன்னைக்கு பிரபலமாயிடுச்சு. சரி சரி தலையவாவது சீவிட்டு போகலாம்லன்னு சொன்னாலும், சீப்பு பேண்ட் பாக்கெட்டுல இருக்கு போறவழில சீவிக்கிறேன்-னுட்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சிட்டாங்க எல்லாரும். பொண்ணுகளுக்கு இன்னும் வசதி முடிய விரிச்சுப்போட்டுட்டு போறதுல... தலை குளிச்சா காயவைக்க நேரம் ஒதுக்க வேணாம்...


வீட்டைவிட்டு கிளம்பும்போது சாமிகும்பிட்டுட்டு பொண்ணு யாராவது சொன்னாக்கூட... போறவழில கோயில்ல கும்பிட்டுக்கிறேன்-னு சொல்லிட்டு... கோயிலப்பாத்து கும்பிட்டுட்டு ஓடிகிட்டேயிருப்பாங்க. நல்ல வேலை பல்லு விளக்குறது, குளிக்கிறத மட்டுமாவது வீட்டுல பண்ணிட்டு போறாங்க... அப்பவும் பல்லு விளக்கலையான்னு கேட்டா, டாய்லட் போகும்போது சும்மாதானே உக்காந்திருப்பேன்... அப்போ விளக்கிக்கிறேன்-னு சொல்லுவாங்க பாருங்க... அட அட அடா... பல்லு விளக்கதவங்க, குளிக்காதவங்களுக்கு இது பொருந்தாது மக்களே...


இன்னும் சில பேரும் பல்லு விளக்கி, குளிச்சிட்டு போனா போதும். ஆஃபீசுல போயி டாய்லட் போயிக்கிறலாம்னு ஒரு கோஷ்டி இருக்கும். (என்ன மங்குனி இப்புடி வில்லங்கமா போறவழில பிரச்சனை ஆயிடாதான்னு கேக்குற...? ஏற்கனவே வழக்கமா போறவழில பிரச்சனை ஆனதுனாலதானே இப்புடி). இதுனால நம்ம நேரத்தை மிச்சப்படுத்துறமா இல்ல நமக்கு நேரம்பத்தலையான்னு தெரியல. அட அதை யோசிக்கக் கூட நேரமில்லையப்பா (இந்த இடத்துல ஒரு அண்ணே, அப்புறம் எப்புடிடா உங்களுக்கு இப்புடி மொக்கையா எழுதவும், முதுகு சொறிஞ்சுவிடவும் உங்களுக்கு நேரம் இருக்குன்னு மைன்ட் வாய்ஸ்ல கேக்குறது எனக்கு நல்லா கேக்குது).

வீட்டுக்கு காய்கறி, பலசரக்கு வாங்கலையா....? போறவழில வாங்கிக்கலாம். நண்பனோட கல்யாணத்துக்கு நினைவுப்பொருள் வாங்கலையா...? போறவழில வாங்கிக்கலாம். இன்னைக்கு வீட்டுல சமைக்கல. எங்கையாவது சாப்பாடு வாங்கிட்டு அல்லது சாப்டுட்டு போகலாமா...? போறவழில சாப்டுக்கலாம். உள்ளூர் வியாபாரில இருந்து... உலக வியாபாரி வரை இந்த "போற வழில" விஷயத்தை புரிஞ்சுகிட்டாங்க. அவங்களும் போறவழில வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பெரும்பாலான கண்டுபிடிப்புகள் கூட போறவழில பயன்படுத்துற மாதிரிதான் இப்போ கண்டுபிடிக்கிறாங்க. அதுல பல பொருள் போரவழிலே தூக்கிபோட்டுட்டு போற மாதிரிதான் இருக்குங்கிறது தனிக்கதை.


சாட் பண்ணனுமா? மெயில் அனுப்பனுமா? பாட்டுக் கேக்கனுமா? படம் பாக்கனுமா? எல்லாத்துக்கும் இப்போ கையடக்கமா நிறையப் பொருள்கள் வந்திடுச்சு... (இதைப் படிக்கிற யாரோ ஒரு ஆணாதிக்கவாதி, பொண்ணுகளைத் தவிர மத்தது எல்லாம் அடக்கமாத்தான் இருக்குதுன்னு சொல்றது உங்களுக்குக் கேக்குதா?? ;-) ) நம்ம ஆளுக அவசரத்தை புரிஞ்சுகிட்டுத்தான் சுடுதண்ணியை ஊத்தி ரெண்டு நிமிஷம் ஊறவச்சா போதும் அப்புடியே சாப்பிடலாம்னு நூடுல்ஸ் வகையெல்லாம் வந்துச்சு. நம்ம ஆளுக அதையும் பாத்ரூமுக்கு போறவழில ஊறவச்சிட்டுப் போவானுக.
 
சாப்புடுற விஷயமாவது பரவாயில்ல... சம்சாரம் தேடுறதும் அப்புடியே போறவழில பொண்ணைப் பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம்னு இப்போ நிறையப் பேரு கிளம்பீட்டாங்க. தம்பி நீ கட்டிக்கிற மாதிரி ஒரு பொண்ணு திருச்சில இருக்குன்னாங்க என்னைக்காவது லீவு நாள்ல போயி பாத்துட்டு முடிவு பண்ணிடலாம்டான்னு வீட்டுல சொன்னா... அவரு, "எனக்கு இப்ப லீவெல்லாம் இல்லம்மா... தீவாளிக்கு சொந்த ஊருக்குப் போவோம்ல... அப்போ போறவழில பொண்ணைப் பாத்துட்டு போயிடலாம்"-னு சொல்றாரு. பல வெளிநாடுகள்ல... இன்னைக்கு நம்ம இந்தியாவுலயும் கூடத்தான்... கல்யாணம் பண்ணின தம்பதிக கூட ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு போகும்போது போறவழில கிட்டத்தட்ட பாதி தாம்பத்தியத்தை முடிச்சிடுறாங்க...மூத்திரம் போறதில இருந்து முத்தம் குடுக்குற வரைக்கும் இன்னைக்கு போறவழிலதான் நடக்குது.


இதுக்கு யாரையும் குத்தம் சொல்லமுடியாது. அவனவன் இருக்குற அவசரத்துல குத்தவச்சும் சொல்லிக்காட்டமுடியாது. இதைப் படிச்சிட்டு சந்தோசமா இருந்தீங்கன்னா அப்புடியே போறவழில நாலைஞ்சு பேருகிட்ட சொல்லி பெருமைப்படுத்தீட்டு போங்க. செம காண்டுல (இதுக்கு எனக்கே அர்த்தம் தெரியாது) இருந்தீங்கன்னா... போறவழில துப்பீட்டுப் போங்க. இங்க துப்பீராதீங்க. அப்பப்ப உங்களைமாதிரி பல நல்லவங்க போறவழில வந்துபோற இடம் இது. :-)


இது எல்லாமே நம்ம மேல போறவழில நடக்குறதுதான்னு உங்க காவிகட்டுன மனசு சொல்லுமே!



Wednesday, July 21, 2010

என்னடா தத்துவ மயிரெல்லாம் பேசுற... (சொற்சித்திரம்)

மகேசு பேசுறேண்டா. எப்புட்றே மாப்ள இருக்க?

நல்லா இருக்கேன்டா. நீ எப்புடி இருக்க?

இருக்கேன்... நாளும் பொழுதும் ஓடிகிட்டு இருக்கு.

ஆமாடா மாப்ள... நமக்கும் கல்யாணம் காட்சின்னு ஆகி ஒரு புள்ளையையும் பெத்துப்புட்டோம். நாளு அவ்வளவு வேகமா ஓடுது.

அதுபாட்டுக்க ஓடட்டும் விட்றா... அது என்ன ஒத்தப் புள்ளையை பெத்துபுட்டு வயசானவனாட்டம் கணக்கு சொல்லிகிட்டிருக்க... அதுக்கும் ரெண்டு வயசாச்சு... சட்டுபுட்டுன்னு அடுத்த புள்ளைய பெக்குற வழியப் பாருடா...

போடா... அடுத்து ஒன்னை பெக்குறதுக்கு பயமா இருக்குடா...

நீயேண்டா பயப்புட்ற... புள்ளை பெக்கப்போற என் தங்கச்சில பயப்படனும். உன்னைய கட்டிக்கிறதுக்கே அது பயப்புடல. இதுக்கா பயப்புடப் போகுது...?


இந்த எகத்தாள பேச்சு மசுத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல. என்னமோ இவரு அஞ்சாறு புள்ளையப் பெத்ததுமாதிரி அள்ளிவிடுவாரு... பெக்குறது பெருசில்லடா... இந்தக் காலத்துல அதுகளை படிக்க வைக்கனுமே... அதான் பயமே...

அதென்னாடா... எல்லாரும் சொல்லி வச்சமாதிரி பெக்குறதே ரெண்டு... அதுகள வளக்கவும், படிக்க வைக்கவும் கஷ்டம்னு பொலம்பிகிட்டு இருக்கீங்க... அந்தக் காலத்துல அஞ்சாறை பெத்து படிக்க வச்சு வளக்கல?

வெண்ணை பெத்தாய்ங்க... பெருசா எங்க படிக்க வச்சாய்ங்க?? எங்கையாவது ஒருசில குடும்பத்துல வசதி இருக்கிறதால நல்லா படிக்க வச்சாங்க...

ஊரு ஒலகத்தை விடுறா... ஒங்க வீட்டுலையும், எங்க வீட்டுலையும் என்ன வசதியாவ இருந்தாய்ங்க...? நீயும், நானும் என்ன படிக்காமையா போயிட்டோம்?

அப்பவெல்லாம், எம்.ஜி.ஆர் கொடுத்த காக்கி டவுசரும், வெள்ளை சட்டையும், எம்.ஜி.ஆர் பல்பொடியும் போதும்டா... புத்தகமும் இலவசமா எட்டாவது வரைக்கும் கொடுப்பாய்ங்க... நம்மளும் கவட்டையில கிழிஞ்ச டவுசரை போட்டுக்கிட்டு, பல்பொடில பாதிய தின்னுபுட்டு... மீதியை வச்சு பல்லு வெளக்கீட்டு பள்ளிகொடத்துக்குப் போயிடுவோம். இப்போ புள்ளைய பள்ளி கொடத்துல சேக்க போயிப்பாரு... நீ போட்டுருக்குற எல்லாத்தையும் உருவுராய்ங்கடி...

இருக்குறவன் ஒழுங்கா இருந்தா செரைக்கிரவன் ஒழுங்கா செரைப்பான்னு சொல்லுவாய்ங்க... அந்த மாதிரி நாட்டை ஆளுரவனும், அதிகாரியும் ஒழுங்கா இருந்தா எல்லாஞ்சரியா இருக்கும்... அவனுக தான் லாட்டரியை சொரண்டக்கூடாதுன்னு தடை போட்டுட்டு மத்த எல்லாத்தையும் சொரண்டிகிட்டு இருக்கானுகளே...

நீ சொல்றது அந்தக்காலம்டா... அப்பா செரைக்கிரவன் சுத்தி சுத்தி வந்து செரைச்சான். இப்பா பாரு நாக்காலில ஒக்கார வச்சு அவன் ஒரு எடத்துல நின்னுகிட்டு உன்னைய சுத்தவிட்டு செரைக்கிறான். இப்ப வர்றவங்கதான் முடிஞ்ச வரைக்கும் சுருட்டிட்டு போகல்ல பாக்குறானுக.

சுருட்டட்டும் சுருட்டட்டும்டா எங்க போகப்போராணுக? காசு நெறைய இருக்குங்கிறதுக்காக கண்ண மூடாமையேவா வாழப்போறாய்ங்க?? ஒன்னு தெரிஞ்சுக்கடா மாப்புள... வாழ்க்கைங்கிறத வாழணும்டா... ஓடக்கூடாது...

என்னடா தத்துவ மயிரெல்லாம் பேசுற... ம்ம்ம் பெரிய ஆளாயிட்டடா...

பெரிய ஆளெல்லாம் ஆகலைடா... எங்கையா மூணாவது வரைக்கும் படிச்சாரு... எங்கப்பா பத்தாவது வரைக்கும் படிச்சாரு... நான் டிகிரி வரை படிச்சிருக்கேன். இன்னைக்கு நல்லா வேலையில தான் இருக்கேன். அதேமாதிரி உங்கையா அஞ்சாவது வரை படிச்சாரு... ஏதோ உங்க அப்பா கொஞ்சம் நல்லா கஷ்டப்பட்டு படிச்சதால எம்.ஏ வரைக்கும் படிச்சிட்டு வாதியாரானாறு. நீ அவரைவிட கொஞ்சம் அதிகமா படிச்சு எம்.சி.ஏ வரை படிச்ச... இப்போ நல்லா வேலையில இருக்க... இதுக்கு பேருதாண்டா முன்னேற்றம்.

ங்கொய்யால எங்கிட்டோ போயி சரக்கை போட்டுட்டாய்னு நெனைக்கிறேன்...

சரக்கும் போடல... ஒரு மசுரும் போடல... எல்லாங்கலந்ததுதாண்டா வாழ்கை. எல்லாரும் படிச்சு டாக்டராவோ, எஞ்சிநியராவோ போனா... மத்த வேலையெல்லாம் எவன்டா பார்ப்பான். மத்ததெல்லாம் வாழ்க்கைக்கு தேவையில்லாததா என்ன? படிப்பாளி, உழைப்பாளி, அறிவாளி, படைப்பாளி, தொழிலாளி எல்லாரும் சேந்ததுதாண்டா உலகம். இது தான் பெருசு... அதுதான் பெருசுன்னு சொல்லி மத்ததெல்லாம் இளக்காரமா பாக்குறது வீனாப்போனவய்ங்க மனசுதாண்டா..


மாப்ள புல்லரிக்குதுடா... என்னடா என்னென்னமோ சொல்ற... ?

அப்பறமென்னடா மயிரு... நீனே சொல்லு... நம்ம ஆளுகளுக்கு அவன்கிட்ட இருக்கதெல்லாமே பெருசு பெருசா வேணும்... பெரிய வீடு... பெரிய காரு... பெரிய டிவி... பெரிய ஃப்ரிட்ஜு-னு லிஸ்டும் பெருசாவே இருக்கும். ஆனா மனசு மாத்திரம் ரொம்ப சிறுசா இருக்கும். அதமாதிரி மத்த எல்லாமே ரெண்டு அல்லது அதுக்கு மேல வேணும்... ஆனா புள்ளைகுட்டி ஒன்னை பெத்துக்குறதுக்கே அழுது பொழம்புவாய்ங்க... அப்பறம் என்ன மசுத்துக்குடா இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிராய்ங்க...? புள்ள பாக்கியம் இல்லாதவங்ககிட்ட கேட்டா தெரியும் புள்ளையோட அருமை... எதுக்கு ஓடி ஓடி உழைக்கிரம்னே தெரியாம திரியிராய்ங்கடா ரொம்பப் பேரு... அதான் கடுப்பு மசிரா வருது...


டாய் அப்புடியெல்லாம் சொல்லாத... நிறைய காசு பணம் இருந்தாத்தானடா எல்லாத்தையும் அனுபவிக்க முடியுது...

என்ன பெருசா அனுபவிக்கிற? நானும் சோறுதான் திங்கிறேன்... நீயும் அதான் திங்கிற... மிஞ்சிப்போனா நீ வேறமாதிரி சுவையில திம்ப... ஆனா கடைசியில கொழுப்பு வந்துருச்சு... சக்கரை வந்திருச்சுன்னு டாக்டர்கிட்ட போயி பணத்தை கொடுப்ப... அதுக்குத்தான அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரிச்ச...? எப்ப பார்த்தாலும்... இது வாங்கணும், அது வாங்கனும்னு டென்சனா இருந்துகிட்டே எல்லா வியாதியையும் வாங்கிக்குவ... அதுக்கும் தியானம் பண்ட்றேன்... சாமிகிட்ட போயி தீட்சை வாங்குறேன்... நோய் வெரட்ட மந்திரிக்கிரேன்னு போயி அவனுக கால்ல விழுந்து விழுந்து எந்திரிப்ப... பாத பூஜை-னு அவனுக கால கழுவி விடுவ... இதுக்குத்தானாடா இவ்வளவு கஷ்டப்பட்ட...? அதுக்கு உன் காலையே ஒழுங்கா ஆற அமர கழுவி வீட்டுல சந்தோசமா இருந்துருக்கலாமேடா...

தக்காலி... எங்கயும் போதி மரத்துல படுத்துகிட்டே ஃபோன் பேசுறியா?

இல்லடா மாப்புள.. நக்கல் வெங்காயதுக்கொன்னும் கொறைச்சல் இல்ல... நான் சொல்றதுல கொஞ்சமாவது உண்மையிருக்கா இல்லையா...? ரொம்பப் பேரு வாழ்கையில நிமிந்து நிக்கணும்... நிமிந்து நிக்கனும்னே சொல்லி மனசையும் இறுக்கமாக்கிட்டு எதுக்கும் வளைஞ்சு நெளிஞ்சு... நெளிவு சுழிவா வாழத்தெரியாமத்தான் சின்ன சின்ன கஷ்டம் வரும்போதெல்லாம் ஒடிஞ்சு போயிடுராணுக.. சரி அதை விடு... ஏதோ நீனாவது பேசுறதுக்கு நேரம் ஒதுக்குறேன்னு உன்கிட்ட இதெல்லாம் சொன்னேன். இதுக்குமேல சொன்னா எம் மூஞ்சில குத்து விட்டுருவ...

அட வெண்ணை இந்த வாரம் குத்து வாரம்னு உனக்கும் தெரிஞ்சு போச்சா...??



Wednesday, July 14, 2010

நாம் ஏங்கும் புதுவுலகம்...!!!

அண்ணே! நாம இந்த உலகத்துல நமக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோமா? இல்ல நம்மளைப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோமா?-னு சரியாப் புரியலைண்ணே.

ஆனா ஒன்னுண்ணே... எப்போதும் நம்ம ஏதாவது ஒன்னுக்கு ஏங்கிக்கிட்டே இருப்போம். நம்ம அறிவு மூலமாகவும், அறிவியல் மூலமாகவும் நாம கண்டுபிடிச்ச பல கண்டுபிடிபுகளால நமக்கு கண்ணு போனதும், மூலம் வந்ததும் உண்மைதான்.

இப்ப உள்ள வாழ்க்கை முறையால, நானும் ஜெயிக்கனும், நானும் ஜெயிக்கனும்-னு நம்ம எல்லாரும் மனசால பல மைல் தூரம் ஓடிக்கிட்டும்... மணிக்கணக்கா உட்கார்ந்து வேலை பார்த்துக்கிட்டும் போராடிக்கிட்டே இருக்கோம். இதுல அப்பப்ப வாழ்க்கை போரடிக்குதுன்னு ஒரு புலம்பல் வேற.

நம்ம வாழ்க்கையை சுத்தியும், வாழுமிடத்தை சுத்தியும் நம்மளே பல குப்பைகளை குமிச்சு வச்சுகிட்டு மனசுக்குள்ளே குமைஞ்சுகிட்டு இருக்கோம். ஆத்தா அப்பன்கிட்ட பேசுறதுக்குக்கூட அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிற நிலைமையிலதான் நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

வாழ்க்கையில முன்னேறனும், முன்னேறனும்னு பல வழிகளையும், வலிகளையும் கண்டுபிடிச்சுட்டு... நம்ம வாழ்க்கைய தொலைச்சுப்புட்டோம். நாம பயன்படுத்துகிற பொருட்கள்-ல பிரச்சனையினாலும், நாம் நிறுவனங்களிடமிருந்து பெரும் சேவைகள்-ல சந்தேகம்னாலும் தொடர்புக்கு நிறைய வாடிக்கையாளர் சேவைகள் அதுவும் இலவச தொடர்பு எண்ணில்...  நம்ம ஒவ்வொருவருக்கும் ஒரு (அதற்கு மேற்பட்ட) தொடர்பு எண்கள் இருந்தும் தொடர்புகொள்ள நேரமில்லாமல் இருப்பது வெட்கக்கேடானது தான்.

நிறைய இருக்குன்னு சொல்றதுக்கு... நேரமில்லை... (இத்தோடவா விடப்போறேன்... அப்பப்ப சாவடிப்பேன்). நீங்க மறந்துடாம, சோம்பேறியா இருந்துடாம, இந்தப் படத்தைப் (ஒன்பது பாகத்தையும்)பாருங்க... முக்கியமா கீழ வரும் Sub Title - ஐப் படிங்க.

இந்த திரைப்படத்திற்கு விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது!

பிரபலப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இந்தப் படத்தை தங்கள் தளத்திலும் அறிமுகப்படுத்துங்க. நிறைய நண்பர்கள் கண்டு களி(ழி)க்கட்டும். :-)


http://www.youtube.com/watch?v=C5CmMm_SRpM

http://www.youtube.com/watch?v=wbfKRx1glD4&feature=related

http://www.youtube.com/watch?v=dsh4IXjTeQU&feature=related

http://www.youtube.com/watch?v=9HEkEavkZJY&feature=related

http://www.youtube.com/watch?v=FMqOmb96SA0&feature=related

http://www.youtube.com/watch?v=x7YvR8rjV3k&feature=related

http://www.youtube.com/watch?v=EBvesLTYNDY&feature=related

http://www.youtube.com/watch?v=9dK3wVFMnS8&feature=related

http://www.youtube.com/watch?v=S28DaG-IJq8&feature=related

நன்றி இப்படத்தை இணையம் மூலம் பகிர்ந்த நண்பருக்கு!


Friday, July 9, 2010

உடையும் பிம்பங்கள்...

ஒருவரை நேரில் பார்க்காமல் நாம் பழகும்போதோ அல்லது ஒருவரைப்பற்றி கேள்விப்ப்படும்போதோ அவரைப்பற்றிய பிம்பம் நம் மனதில் உருவாவது இயற்கையே. அந்த பிம்பத்திற்கு நாம் ஒரு உருவம் கூட உருவாக்கி வைத்திருப்போம். அந்த பிம்பத்திற்கான இயல்புகள் மற்றும் பண்புகள் நம்மாலேயே கற்பனையில் கலந்து பிசையப்பட்டு அந்த கற்பனை உருவத்தோடு பொருத்தி வைத்திருப்போம்.

இது அனைவருக்கும் இயல்பானதே. சில சமயங்களில் நாம் கேட்கும் கதைகளுக்கும், சம்பவங்களுக்கும் கூட, சுற்றுப்புறத்தை நமது மனதே கற்பனை செய்து ஒரு திரைப்படம்போல மனத்திரையில் ஓட்டிக்கொண்டிருக்கும். இந்த சுவாரஸ்யம் இல்லையெனில் நமது ரசனையும், கற்பனையும் வறண்டுவிடும்.

சில சமயங்களில் நாம் உருவாக்கிய பிம்பத்திற்கும், நிஜத்திற்கும் அதிக வித்தியாசம் இருக்காது. அப்படிப்பட்டவர்களை நாம் நேரில் சந்திக்கும்போது ஏற்படும் ஆனந்தம் அளவிட முடியாதது. சிலர் வாய்விட்டு "அப்புடியே நான் நெனைச்சது மாதிரி இருக்கீங்க"-ன்னு வெளிப்படையாகச் சொல்லக்கேட்டிருப்போம். இன்னும் சில சமயங்களில் அவர்களது சொற்களும் செயல்களும் நாம் எதிர்பார்த்ததை விட இன்னும் சிறப்பாக இருக்கும். இத்தகைய நற்செயல்கள் நாம் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்திற்கு வலு சேர்க்கும்.
 
சில சமயங்களில் இந்த கற்பனை பிம்பம் போல, நிஜத்தின் செயல்பாடுகளும், உருவமும் இல்லாமல் பொய்த்துவிடுகிறது. இந்த பிம்பம் உடைபடுதல் ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால் பலருக்கு அதிர்ச்சியானதாகும். இந்த பிம்பம் உடைதலின் வெளிப்பாடுதான் "ச்சே இவரை என்னமோன்னு நினைச்சிருந்தேன். ஆனா இப்புடி இருக்காரே!?", "இவரு நான் நினைச்ச மாதிரி இல்லை", "இப்பத்தான் தெரியுது இவரோட உண்மையான முகம்" என்ற புலம்பல்களும், அலுத்துக்கொள்ளுதலும்.


இந்த பிம்பங்கள் உருவாதலும், உடைதலும் எல்லா வகையான உறவுகளுக்குள்ளும் இருக்கத்தான் செய்யும். இத்தகைய தருணங்களில் தான் சகிப்புத்தன்மை நம்மை காக்கும். சகித்துக்கொள்ளுதல் எனும் பண்பு நம்மிடம் இல்லாத போதுதான் உறவுகளில் சிக்கலும், மன இறுக்கமும் அதிகமாகிறது. நாம் உருவாக்கிக்கொண்ட பிம்பங்களின் மீதான அதிகமான பற்றுதலே இச்சிக்கல்களை அறியாமலே வளர்த்துவருகிறது. எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்நோக்கும் அசாத்திய குணம் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது?

இந்த பிம்பங்கள் உருவாவது எப்படி இயற்கையோ, அதுபோலத் தான் உடைதலும்! எல்லா மனிதனும், எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் நல்லவனாகவோ, ஒரே மாதிரியாகவோ இருக்க முடியாது. சூழ்நிலைகள் தாமாகவே நமக்கு முகமாற்றம் செய்துவிடும். நல்லது/கெட்டது - சரி/தவறு என்பவை ஒவ்வொருவருக்குள்ளும் அந்தந்த சூழ்நிலைகள் உருவாக்கும் கோட்பாடுகளே. வழக்கம்போல பெரும்பான்மையே வெற்றிகரமானதாக / வெற்றிபெற்றதாகக் கருதப்படும். அதுதான் சரியா? அதுவும் சரியா? அதுவே சரியா? என்பவை கேள்விக்குறிகளாகவே தொங்கிக்கொண்டிருக்கும்.

இந்த பிம்பங்களை எப்போதும் திடமான நிலையில் உருவாக்கி விடாதீர்கள். திரவநிலையிலோ, அரை திரவநிலையிலோ இருப்பின் உடைதல் சாத்தியமில்லை. பல்வேறு பாத்திரங்களுக்குள் பொறுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். என்னைப்போல அவன் இல்லை / நான் விரும்பியது போல அவன் இல்லை என்பது தான் நமது முரண்பாடுகளின் முச்சந்தி. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை", "குணம்நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்" இவை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். இவற்றை கடைபிடித்தாலே நாம் இன்பமாக வாழலாமே!

பொறுப்பு துறப்பி: இவ்வளவு சீரியசாக இருக்கும் இந்த பதிவை படித்து என்மீதான பிம்பம் உங்களில் உடைபட்டால் திசைகாட்டி பொறுப்பல்ல.


(ரொம்ப நாள் கழிச்சு வந்து எழுதும்போது இவ்வளவு சீரியஸா எழுதுறது எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு... பொறுத்துக்கங்க) - (பட்டாபட்டி இதை காப்பி பண்ணி கமெண்டு போட்டேன்னு வையி... மவனே இந்த பதிவை மாச மாசம் மீள்பதிவு போட்டுருவேன்)