Monday, May 31, 2010

பார்மாலிட்டி எனும் சம்பிரதாயம் ...

பார்மாலிட்டி எனும் சொல்லுக்கு சம்பிரதாயம் சரியான சொல்லா?? வேற ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே!

நம்ம ஊர்ல கொஞ்ச ஆளுங்க இருப்பாங்க... எதாவது ஒரு காரணம் சொல்லி சண்டை பிடிக்கிறதுக்கு. அவங்க எதாவது ஒரு வழில நமக்கு உறவுக்காரரா இருப்பாங்க. அதான் கஷ்டம். நட்புகளுக்குள்ள பெரும்பாலும் பார்மாலிட்டிகள் பார்க்கிறதில்ல. அப்படி அதை எதிர்பார்க்க ஆரம்பிச்சா அப்புறம் அது நட்புமில்ல... அந்த நட்பு அத்தோட நமக்கில்ல...

தேவையில்லாத பார்மாலிட்டி எதிர்பார்க்கிற ஆளுங்களைப் பார்க்கும்போது, கோபம் வந்தாலும், இன்னும் மாறாம இருக்காங்களேன்னு ஒரு பரிதாபம் வேற ஏற்படும். எதுக்கெடுத்தாலும் ஒரு குறையைச் சொல்லி குத்தவச்சுருப்பாங்க. அதைக் குத்தமாவே எப்போதும் வச்சிருப்பாங்க.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லம் கிளம்பி ஒரு காரோ, வேனோ எடுத்து எங்கையாவது குலசாமி கோயிலுக்கு போவாங்க... அடுத்த வீதில இருக்கிற உறவுக்காரவங்களுக்கிட்ட சொல்லிட்டுதான் போவாங்க... அவங்க கிளம்பி போனவுடனே, அந்தப் பகுதில இருக்கிற ஒரு வீடு இல்லாமப் போயி... “நாங்களும் அவங்க சொந்தக்காரங்க தானே... பார்மாலிட்டிக்காகவாவது எங்களை கூப்பிட்டு இருக்கலாம்ல... கூப்பிடவேயில்லைங்க...”-னு பொலம்பீட்டு வந்திருவாங்க...

இன்னும் சில ஆளுங்க இருக்காங்க... கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து சொல்லுங்கன்னு அவங்ககிட்ட சொல்லியிருப்பாங்க. ஆனா, அவங்க வேலைப்பளு காரணமாக்கூட பார்த்திருக்கமாட்டாங்க. வேற எங்கையாவாது பொண்ணு அமைஞ்சு, ஒப்புதல் குடுத்திருந்தா... அதைக் கேள்விப்பட்டு... பொண்ணு முடிக்கும்போது என்கிட்ட சொல்லலை...-னு குத்தம் சொல்றது.

கல்யாணப் பத்திரிக்கை எனக்கு கொடுக்கும்போது கவர்ல எம் பேரைப் போடும்போது, பேருக்கு முன்னால ”திரு”-ன்னு போடலை, பேருக்குப் பின்னால “அவர்கள்”-ன்னு போடலை... அதனால அவன் வீட்டு வாசல் மிதிக்கமாட்டேன்னு முடிவு பண்ணுவாங்க. ஆனா, எனக்குத் தெரிஞ்சு இப்பவெல்லாம் நண்பர்கள் தங்களுக்குள்ள இந்த பார்மாலிட்டி பார்ப்பதில்லை. விடு மச்சி நீ பத்திரிக்கையெல்லாம் கூட அனுப்பவேண்டாம். தேதி, மண்டப விபரம் மட்டும் சொல்லு அது போதும் அப்படின்னு பெருந்தன்மையா இருக்காங்க.

ஒரு சில விஷயங்கள்ள அந்த சம்பிரதாய முறைகளையோ, மரியாதைகளையோ எதிர்பார்த்தா சரி. எதற்கெடுத்தாலும் அதையே புடுச்சு தொங்கிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். சின்ன சின்ன விழாக்களை சுருக்கமா செய்யலாம்னு குடும்பத்தார் முடிவு பண்ணிருப்பாங்க. ஒவ்வொரு உறவுக்காரர்களும் எனக்கு சொல்லலை, ஒரு பேச்சுக்கு கூட என்னைக் கூப்பிடலை-னு சொன்னா... அந்த விழா எப்படி சுருக்கமா முடியும்?? அதையும் கொஞ்சம் யோசிக்க வேணாமா??

மற்ற உறவுகளை விடுங்க... அவங்க நம்ம கூட மனவருத்தமா இருந்தா பெரிசா ஒன்னும் நேரடிப்பாதிப்பு இருக்காது. சம்பந்தம் போட்ட இடங்கள்லையும், மருமகள், மருமகன்கிட்டையும் இருந்து இதே பார்மாலிட்டியை எதிர்பார்த்தா, நேரடியா நம்ம மகன் - மருமகள், மகள் - மருமகன் இவர்களது உறவுகள்-ல கூட விரிசல் வரலாம். சம்பந்த உறவுகளிடம் நல்ல உறவு இல்லையென்றால், நம் சந்ததிகளும் உறவுகளை துயரங்களாகவே நினைப்பாங்க.

நான் சில இடங்கள்-ல பார்த்திருக்கிறேன். என் மருமகன்(ள்) எனக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கார்(ள்)... நான் ஊர்ல இருந்து வரும்போது மருமகள் ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேசனுக்கு என்னை வரவேற்க வரலை. நான் குளிக்கிறேன்னு சொன்னேன்... ஒரு பேச்சுக்குக்கூட சுடுதண்ணி போட்டுத்தரவான்னு கேட்கலை... அப்புடி இப்புடின்னு என்னத்தையாவது சொல்லி முக்கி முனங்கி மனசுகள்-ல சஞ்சலங்களை எளிதா ஏற்படுத்திடுவாங்க. இது தேவையாண்ணே??

இப்படி எதாவது குற்றம் கண்டுபிடிச்சுகிட்டே இருந்தா எப்படி மக்களே வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்?? ஒவ்வொருத்தருக்கும் அவரவர் வாழ்க்கை முறை, வசதி, கால அவகாசம் இவைகளைப் பொறுத்து ஒரு வாழ்க்கைத் திட்டம் இருக்கும். அதன்படி சில முடிவுகளின் படி செயல்படுவாங்க. அதன்படி செயல்பட விடுங்க. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

எல்லா எதிர்பார்ப்புகளையும் உதறித்தள்ளிட்டு, உறவுகளைக் கொண்டாட வாங்க சாமிகளா. உங்க புள்ளை குட்டிகளையாவது இந்த பார்மாலிட்டி கருமத்தை விட்டொழிச்சிட்டு வாழப் பழக்கிவிடுங்க. பெரும்பாலான இடங்கள்-ல இந்த பார்மாலிட்டியால உறவுக்கார மாமன், மச்சான்களோட பகையா இருந்துகிட்டு, பழகுகிற நண்பர்களை மட்டும் மாமா, மச்சான்னு கூப்பிட்டு மகிழ்ந்துகிட்டு இருக்கிறோம். நல்ல உறவுகளை நாம் பெற்றிருந்தால், நம்மளோட கடைசி ஊர்வலத்துல எல்லோருமா சேர்ந்து நல்லா நமக்கு பார்மாலிட்டி பண்ணி அனுப்புவாங்க. இல்லையினா, அன்னைக்கும் அவனுகளுக்குள்ள பார்மாலிட்டி எதிர்பார்த்துகிட்டு வீதிக்கு ஒரு ஆளா விலகி நிப்பாங்க...

என்னா அண்ணே, மாமு, மச்சான்ஸ், அக்கா, தங்கச்சி, அத்தாச்சிமார்களே சரிதானே! :-)



Friday, May 14, 2010

விளம்பரங்கள் செய்யும் களேபரம்...!!!

விளம்பரங்கிறது ரொம்ப காலமா இருக்கிறது தான். ஆனா, இப்போ அதன் பரிணாமம் பிரமிக்கிற வகையில முன்னேறி இருக்கு. ஒரு விஷயத்தைக் கவனிச்சிங்களாண்ணே? முந்தியெல்லாம் விளம்பரம் வந்தா நம்மள்ல ரொம்பப் பேரு டிவி, ரேடியோவை அமத்திட்டு போய்கிட்டே இருப்போம். ஆனா, இப்போ அதுதான்ணே நல்லாயிருக்கு. ஒரு காலத்துல, நம்ம தூரதர்ஷன்-ல போடுற விளம்பரங்களைப் பார்த்தாலே ராவா சரக்கடிச்சா தொண்டை எப்படி எரியுமோ அது மாதிரி கடுப்பா இருக்கும். அதுனால, பல ஆளுங்க விளம்பர இடைவேளைகள்-ல பண்றதுக்காகவே சில பல வேலைகளை ஒதுக்கி வச்சிருப்பாய்ங்க...

இப்போ பாருங்க கிராபிக்ஸ் மற்றும் பல தொழில் நுட்பங்களாலையும், விளம்பரங்கள்ல வர்ற அழகு தேவதைகள், தேவன்கள் மற்று குழந்தைகளாலையும் விளம்பரங்கள் ரசிக்கிற மாதிரியா வெளிவருது. அட ஆமாண்ணே, விளம்பரங்களுக்கு ரசிகர்கள் இப்போ நிறையப் பேரு இருக்காங்க. என்னா ஒன்னு, சில ஆளுக அதுல வர்ற ஃபிகருக்கும், குழந்தைகளுக்கும் அல்லது கான்செப்ட்டுக்கும் ரசிகரா இருப்பாங்க. சில விளம்பரம் இருக்கும்... எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காதுன்ணே. அவ்வளவு அருமையா எடுத்துருப்பாய்ங்க.

இன்னும் சில விளம்பரம் பார்த்தோம்னு வைங்க, அருமையா மியூசிக் போட்டு அசத்திருப்பாய்ங்க. ஊறுகாய் விளம்பரத்துல இருந்து உள்ளாடை விளம்பரம் வரை சூப்பரா தான்ணே இருக்குது. டிவி-ல வர்ற நிகழ்ச்சிகளை விட இந்த விளம்பரங்கள் தான் நல்லா இருக்குது. ஆனா என்னா, எல்லா விளம்பரத்துக்கும் சம்பந்தமே இல்லாட்டியும் ஒரு அழகான ஃபிகரை நடமாடவிட்டுருப்பாய்ங்க. அண்ணே, பெண்ணியம், பெண்களை அழகு பதுமைகளா மட்டுமே பயன்படுத்துறாங்க அப்புடின்னு பேசுறவங்களுக்கு இந்தப் பதிவுல இடம் இல்ல. நானே அந்த டவுசரை (எத்தனை நாளைக்குத் தான் முகமூடி-ன்னு எழுதுறது/) கழட்டி வச்சிட்டுத் தான் இதை எழுதுறேன். அவங்களை விளம்பரத்துல பயன்படுத்துறதை தவிர்க்கனும்னா சம்பந்தப்பட்ட அம்மணிகள் தான் முடிவு பண்ணனும்.

இந்த விளம்பரங்கள் மூலமா, பல ஜாலங்கள் பண்ணி நம்மை மயக்கி நம்மளையும் அந்தப் பொருளை பயன்படுத்த வைக்கிறது தான் அவங்களோட நோக்கம். ஆட்டா மாவுல இருந்து மூஞ்சில போடுற புட்டாமா(பவுடர்) வரைக்கும் இந்த வியாபார யுக்தியில வெற்றி பெற்றது தான். இவங்க பண்ணுற களேபரத்துல, அக்குள்ள ஆக்ஸ் ஸ்ப்ரே அடிச்சுகிட்டு எத்தனை பேருடா ம்ம்ம்-னு மயங்கி வாராளுகன்னு நம்ம இளசுக திரும்பி பாக்குதுங்க. சோப்பு, பேஸ்ட்டு, வீடு கழுவுற ஆசிட் இப்புடி எல்லா விளம்பரத்துலையும் காட்ற புழு நம்ம கண்ணு முன்னாடி அப்பப்ப வந்து பீதியை கிளப்பும். அந்த புழுவை இந்த சரக்குகளாலை தான் விரட்டி அடிக்க முடியும்னு நம்பி நம்மளும் வாங்குவோம்.


முக்கியமா இந்த விளம்பரங்கள் எல்லாம் நம்ம வீக் பாய்ண்ட்டை தெரிஞ்சுகிட்டு விளையாடுவாய்ங்க பாருங்க அது தாங்க டாப்பு. நம்ம ஊரு பொம்பளைப் புள்ளைகளும், விளம்பரத்துல காட்டுற க்ரீமுகளை அப்பிக்கிட்டு அப்புடியே மெதுவாத் தடவிப் பார்ப்பாங்க... உடனே ஒரு பறவையோட இறகு அவங்க மேனில சறுக்கி விளையாடுற சீன் ஞாபகம் வரும். அப்புறமா தண்ணில கழுவிப்பார்த்தா தான் உண்மைநிலை தெரியும். நம்ம பயபுள்ளைக 300 ரூபாய்க்கு ரேசர் செட்டு வாங்கி தாடியை சவரம் பண்ணிட்டு, ஒரு கண்ணு புருவத்தை உயர்த்தி கண்ணாடில அப்புடியும், இப்புடியுமா மூஞ்சியப் பாப்பாய்ங்க பாருங்க... அட அட அடா கண்ணாடிக்கே காதல் வந்துரும்ணே... 3 ரூபாய்க்கு வித்த பிளேடு-ல சவரம் பண்ணின மூஞ்சிக்கு இப்ப 300 ரூபாய்க்கு பிளேடு வாங்க வேண்டியது இருக்கேன்னு மனசு நினைக்குமா என்ன?

இன்னொன்னை கவனிச்சிங்களா? நவீன யுகத்துல எல்லா ஐட்டங்கள்-லையும் ஆம்பளைக்கு வேற, பொம்பளைக்கு வேறைய்ன்னு பிரிச்சு வச்சுடாய்ங்க. பழைய காலத்துல உடம்புக்கு, மூஞ்சிக்கு, தலைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து துவைக்கிற சவுக்காரக் கட்டிய போட்டுத் தேய்ச்சு குளிச்சிட்டு போய்கிட்டு இருந்தாய்ங்க. இப்ப பாருங்க, மூஞ்சிக்கு ஃபேஷ் வாஷ் லோஷன், உடம்புக்கு சோப்பு, சோப்பு போட்டு குளிச்சதுக்கு அப்புறம் பாடி லோஷன், தலைக்கு ஷாம்பு, அது முடிஞ்ச உடனே கண்டிஷனர்... சோப்பை உடம்புல போட்டு தேய்க்கிற பஞ்சு... அப்புடின்னு பாத் ரூமுக்குள்ளே அவங்க கடைச் சரக்கு எல்லாம் விளம்பரம் மூலமா கொண்டுவரப்படுது. இந்த மாதிரி ஐட்டங்களால இப்பவெல்லாம் பாத் ரூம்-ல நின்னு குளிக்கவே இடம் இல்லைண்ணே. இதுல வேற, சில அந்த துறையால் பரிந்துரைக்கப்பட்டது... அண்ணாத்துரையால் எடுத்துரைக்கப்பட்டதுன்னு நொனைநாட்டியம் வேற...


ஊருக்கு எங்கையாவது கிளம்பிப்போனா, முந்தியெல்லாம் சைடு ஜிப்புல இருந்த இந்த ஐட்டம் பூராம் இப்ப பெரிய ஏரியாவுக்கு ஷிஃப்ட் ஆயிடுச்சுண்ணே... என்னாது ட்ரெஸ்ஸா??... போங்கண்ணே எந்த காலத்துல இருக்கீங்க... ஒரு ஜீன்ஸ், ஒரு டி-ஷர்ட்-ல தானே ஒரு மாசம் ஓடிகிட்டு இருக்கு. அதுக்கு சைடு ஜிப்பே ஜாஸ்தி-ண்ணே. விளம்பரத்துல வர்ற பொண்டாட்டி, குடும்பம், வீடு மாதிரி நமக்கும் அமையணும்னு கனவு வேற கண்டுக்கிட்டே இருப்போம். அவ்வளவு அழகா இருக்கும்ணே எல்லாம். இதைத் தான் அப்துல் கலாம் ஐயா சொல்லிருப்பாரோ...? இந்த மாதிரி விளம்பர யுக்திகளாலதான் நுகர்வுக் கலாச்சாரம் வளர்ந்துச்சு. உஷாரா இருந்துக்கங்க அண்ணே... இந்தக் கலாச்சாரம் பல பேருடைய பர்சை பதம் பார்த்திருக்கு. பண சேமிப்பையெல்லாம் பஞ்சராக்கிருக்கு.

உள்ள விளம்பரம் பத்தாதுன்னு ஒரு டிவி நிறுவனம் கண்ட கண்ட கருமாந்திரத்தையும் கதையினு ஜோடிச்சு படம் எடுத்து இருபது நிமிஷத்து ஒரு தடவை விளம்பரப் படுத்துவாய்ங்க பாருங்க... ங்கொக்கா மக்கா... சாவடிச்சிருவாய்ங்கண்ணே. அவங்க படம் ஓடுதோ ஓடலையோ... இவனுக விளம்பரத்தை பாத்தீங்க உங்களுக்கு நிக்காம ஓடும். சூதானமா பொழைச்சுக்கங்க...



Friday, April 30, 2010

பள்ளிக்கூடத்துல பேரு சேக்கனும்...

கிராமத்துல பொறந்து, அங்கையே படிச்சு வளந்த வாழ்க்கைய நெனச்சுப் பாத்தா... அந்த ஊரு வயக்காடுக மாதிரி ரொம்ப பசுமையாத் தான் இருக்கு.

பயலுக்கு நாலு வயசாச்சு, அவனைக் கொண்டுபோய் பால்வாடியில சேத்துவிட்டா அவம் பாட்டுக்க போயி, அங்க போடுற சோத்த தின்னுப்புட்டு, அங்க வர்ற புள்ளகுட்டிகளோட வெளையாண்டுட்டு, அங்கிட்டே சத்த தூங்கிட்டு சாயந்தரமா வருவான். அதுக பாட்டுக்க இப்புடி தெனோம் போயிட்டு வந்தா, நம்ம காடு கரைக்கு போகலாம், வீட்டு வேலைகளைப் பாக்கலாம். இந்த வருஷம் பால்வாடி ஆயா பாப்பா அக்காகிட்ட சொல்லி தெனமும் இவனையும் கூட்டிகிட்டு போக சொல்லணும்.

தம்பி இன்னையிலருந்து நீ, பட்டவரு பேரன் ராபட்டு, பரிபூரணம் பேரன் ஜோசப்பு கூட தெனமும் பால்வாடிக்கு போகணும். தெனமும் காலையில பாப்பாக்கா வந்து உங்கள கூட்டிகிட்டு போவாக. போகும்போது ரோட்டு ஓரமா போகணும். பஸ்சுகிஸ்சு வரும். பாத்து போகணும். அங்க போயி யாருகூடயும் சண்டைபோடாம வெளையாண்டுட்டு, சாப்புட்டுட்டு சாயந்தரம் எல்லாரோடவும் சேந்து வீட்டுக்கு வந்துரு. சரியா?

இது மாதிரி தெனமும் நாங்க கொஞ்சப்பேரு பால்வாடிக்கி போய்ட்டு வந்துக்கிட்டு இருந்தோம். தூக்கிகிட்டு போறதுக்கு எந்த புத்தகமும், பைக்கட்டும் கிடையாது. நடந்து போகும்போதே, ரோட்டோரம் போற ஓந்திய (ஓணான்) கல்லைவிட்டு எறிஞ்சு வெளையாண்டுக்கிட்டு போறது வழக்கம். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பழக்கம் இருக்கும். ஒருத்தன் லூசா இருக்குற டவுசர ஒரு கையாள புடிச்சுகிட்டும், இன்னொருத்தன் ஒழுகி முட்டை விடுற மூக்கை அப்பப்ப உறிஞ்சிகிட்டும், சட்டை காலரை வாயில வச்சு கடிச்சு உறிஞ்சிகிட்டும் போவானுக.


அங்க பால்வாடி டீச்சரு, தெனுமும் வகை வகையா "அம்மா இங்கே வா வா..., தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை....," போன்ற பாட்டுகளச் சொல்லிக்குடுப்பாங்க. வெளையாடுரதுக்கு பொம்மையோ, விளையாட்டு சாமான்களோ, பிளே க்ரௌண்டோ எதுவும் இருக்காது. ஒரே ஒரு நீண்ட ஹால் தான் எங்க பால்வாடி. வீதியோரம் விறகடுப்ப பத்த வச்சு எல்லாப் புள்ளைகளுக்கும் ஒண்ணாப் போட்ட சோறு (காய்கறி, கொழம்பு, சோறுன்னு தனித்தனியா இல்லாம) பாப்பா அக்கா சமைக்க ஆரம்பிச்சுருவாங்க.


அதே வீதில கொட்டாச்சில (தேங்காய் ஓடு) மண் அள்ளி விளையாடுறது தான் எங்க பொழுதுபோக்கு. அப்புடியே அங்க சாப்புட்டுப்புட்டு, அந்த ஹால்ல படுத்து தூங்க சொல்லுவாங்க... நாலு மணிக்கு எழுப்பிவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவாக. இப்புடியே ரெண்டு வருஷம் ஓடும்.

ஏங்க இவனுக்கு இந்த வருசத்தோட அஞ்சு வயசு முடியுது. வர்ற ஜூன் மாசம் இவன பெரிய பள்ளியோடத்துல பேரு சேக்கனும். நீங்க ஹெட்மாஸ்டரையும், ஒண்ணாங்கிளாஸ் அம்மாங்களையும்(கிறிஸ்டியன் சிஷ்டர்களை அம்மாங்க-ன்னும் கிராமத்துல சொல்லுவாங்க) பார்த்தா சொல்லி வையுங்க.

சரிடி சொல்லிருவோம். அடுத்த வருசமும் இந்த சளி முழுங்கி(காறி உமிழும்போது சளி வந்தா முழுங்குற பழக்கம் இவங்களுக்கு) அம்மாங்க தான் ஒண்ணாங்கிளாஸ் டீச்சரா??

அமாங்க, இன்னும் மூணு வருசத்துக்கு இவுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் இல்லையாம். நீங்க வேலைக்கு போய்ட்டு வரும்போது இவனுக்கு ஒரு பிளாஸ்டிக் சிலேட்டும், ஒரு சப்பட்டைகுச்சி பாக்கெட்டும், ஒரு உருண்டைகுச்சி பாக்கெட்டும், இதையெல்லாம் கொண்டுபோக ஒரு பையும் வாங்கிட்டு வாங்க. ம்ம்ம்... நரம்புப் பைய்யா வாங்கிக்கங்க. அதுதான் தாங்கும்.

சரி சரி வாங்கிட்டு வாரேன். ஆமா, பள்ளியோடத்துல சேக்கும்போது எல்லாருக்கும் முட்டாயி குடுக்கணுமே அதுவும் வாங்க வேணாம்??

அதை இப்பவே வாங்க வேணாங்க. இன்னும் பள்ளியோடந்தொறக்க ரெண்டு வாரம் கெடக்கு. முட்டாயி பாக்கெட்டு மட்டும் நம்ம சத்துனாரு கடையில வாங்கிக்கலாம். அது சும்மா அஞ்சு பைசா புளிப்பு முட்டாயி வாங்கிக்கலாம்.

இந்த வருஷம் என்னைய பெரிய பள்ளியோடத்துல பேரு சேக்கப் போறாங்களே! ஊர் பூராம் தம்பட்டம். சேரும்போதே அனைத்து படிப்புகளையும் முடித்துவிட்டது போல பெருமை. ரெண்டு வாரம் கழித்து அந்த நாளும் வந்தது.

இன்னைக்கு பொதன்கிழமை... நல்ல நாளு. இருங்க இவனை குளிப்பாட்டி பொறப்பட வைக்கிறேன். ரெண்டு பேருஞ்சேந்து போயி இவனை சேத்துவிட்டுட்டு வருவோம்.

சிஸ்டர்... இவன் எங்க மூத்தவன். இவனை இன்னைக்கு பள்ளியோடத்துல பேரு எழுதீரலாம்னு இருக்கோம்.

ரொம்ப நல்லதும்மா. இப்ப இவனுக்கு வயசு என்ன??

வர்ற ஜூலையில அஞ்சு முடிஞ்சு ஆறாகுது.

இப்ப என்ன ஜூன் மாசந்தானே ஆகுது. அஞ்சு வயசு முடிஞ்சாத்தாநேம்மா இங்க சேக்க முடியும்.

இல்ல சிஸ்டர்... இந்த ஒரு மாசத்துக்காகப் பாத்தம்னா ஒரு வருஷம் லேட் ஆயிடும்.

எங்க இவன் வலது கைய தலைக்கு மேல கொண்டுவந்து இடது காதை தொட சொல்லுங்க...

தம்பி சிஸ்டர் சொன்னது மாதிரி தொடு. எங்க இன்னும் கொஞ்சம் எட்டி தொடு... ம்ம்ம்... அப்புடித்தான். அய் நடுவிரலு காதை தொட்டுருச்சு டா. சிஸ்டர் இந்தா தொட்டிருச்சு.

ம்ம்ம்... வாடா உம் பேரு என்ன? ஒழுங்கா படிப்பியா?? வாத்தியார் மயன் மக்குன்னு இருந்துறமாட்டியே... ஒழுங்காப் படிக்கணும் என்ன??

சரி சிஸ்டர்.

வாங்க ஹெட்மாஸ்டர்கிட்ட நான் சொல்லுறேன். சார்... இந்த பையனையும் பேர் சேத்துக்கலாம். இவனுக்கும் அஞ்சு வயசு முடியுது.

(இப்பவெல்லாம் இவ்வளவு எளிதா, மலிவா பள்ளியில் சேர்க்க முடியுமா?? இரண்டரை வயது பிள்ளைகளுக்கே பள்ளிகட்டணம் கட்ட கடன் வாங்கவேண்டிய நிலமையில இருக்கு நம்ம கல்வி அமைப்புகள்... பேஷ் பேஷ்...)



Wednesday, April 21, 2010

உள்குத்து கவிதைகள் - 7

கார்ப்பரேட் சாமிகள்

கருவறையில்
கரு வரையில் படமெடுத்தாலும்
கார்ப்பரேட் சாமிகள்
கர்ப்ப ரேட் கேட்டாலும்
காவியிடமே - கடவுளின்
சாவி உள்ளதென
கூவி கூடிடும் - பாவிகளே
நம்மா(ட்)க்கள்!


அகநானூறாயிரம்

அகநானூறு படைத்தவன்
படைத்திருப்பான்....
அகநானூறாயிரம் - நம்
காதலைப் பார்த்திருந்தால்...!!!


மரண அறிவிப்பு

தன் முனையில் கருமையேற்றி
தன்முனைப்பில்
தனக்குத் தானே
மரண அறிவித்தல் ...
மின்விளக்கு!



Tuesday, April 20, 2010

(முன்னாள்) மதிப்பிற்குரிய டோண்டு சார் அவர்களுக்கு,

(முன்னாள்) மதிப்பிற்குரிய டோண்டு சார் அவர்களுக்கு,

வணக்கம். நலம். நீங்களும் நலமாயிருப்பதாகவே தங்களின் பதிவின் மூலம் அறிய வருகிறேன்.

திருமதி. பார்வதி அம்மா அவர்களின் மருத்துவ உதவியினை வந்தாரை வரவேற்கும் தமிழகத்தின் வாயில் வரை கொண்டுவந்து, திருப்பியனுப்பி... வந்தாரை வாழவைக்கும் தமிழரின் மரபை ஒரு தமிழ் இனத்தை சேர்ந்த ஒரு முதியவருக்கு மறுத்ததில் நான் மனிதன் என்ற முறையில் சிறுமையாகவே கருதுகிறேன். இது பற்றி பல பதிவர்கள் தங்களது கருத்துக்களை ஆதரித்து பதிவு செய்துள்ளனர் உங்களைத் தவிர.

அவரை பிராபாகரனின் தாயாராகவோ, தமிழச்சியாகவோ கூட தாங்கள் கருத வேண்டாம். அவளை ஒரு வயது முதிர்ந்த, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பெண் என்பதாக தாங்களும் கருதுவீர்கள் என நினைக்கிறேன்.

மத்த தமிழனுக எல்லாம், இந்த அம்மாவை பிரபாகரன் அம்மாவாவே மட்டும் பார்ப்பானுங்க. அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா, உடனே கொந்தளிச்சுப் போயி தமிழகத்துல கலவரம் பண்ணி சுடுகாடா ஆக்கிடுவானுகன்னு நினைக்கிறீங்களா?? அட போங்க சார். அந்த அளவுக்கு நம்ம ஆளுங் கட்சித்தலைவர்களும் விட மாட்டானுக. எதிர்கட்சி ... ஓ அப்புடி ஒன்னு இருக்கான்னு தெரியலையே.. சரி அதை விடுங்க. இங்க நீங்க நினைக்கிற மாதிரி புலி ஆதரவு தலைவர்கள் நிறையப் பேர் இருக்காங்க. அவங்க எல்லாம் தனித்தனி குழுவா செயல்பட்டு எப்பேர்ப்பட்ட போராட்டமா இருந்தாலும் ஆளுக்கொரு பக்கமா இழுத்து சொதப்பிருவாணுக சார். ஆளுங்கட்சிக்கு கவலையே இல்லை.

தமிழன் நண்டு மாதிரின்னு நம்மளே பெருமையா சொல்லிக்கிட்டு திரியிற கூட்டம் தானே சார் நம்ம... (நீங்களும் என்னோட சேர்ந்து இந்த கூட்டத்துல இருப்பீங்கன்னு நல்லாவே தெரியும்). இன்னொரு விஷயம், இதுவரை கலவரம் ஏற்படுத்துற மாதிரி நம்ம நாட்டுல பல கலகங்களை நம்ம கழகங்கள் உருவாக்கிடுச்சு சார். ஆனா அது எல்லாம் அவனுங்க நலனுக்கு செஞ்சுக்குருவானுகளே ஒழிய மக்களுக்கு பயன்படுற மாதிரி அல்லது நாட்டுக்கு விடிவு காலம் பொறக்குற மாதிரி உருப்படியா செஞ்சுரமாட்டாணுக. நம்ம மகா பொது ஜனங்களும் அவ்வளவு வொர்த் இல்ல சார் (ஆமா ஆமா நீங்களும், நானும் அங்க தான் இருக்கோம்).

ஏன் சார்... வீரமாக மரண மடல் எழுதி, இலங்கைப் பிரச்சணைக்கு முற்றுப்புள்ளி வைக்க தனது உடலை காணிக்கையா கொடுத்தானே சார் ஒருத்தன்... அவனை நம்ம கோழையின்னு சொல்ற கூட்டம் தான் சார் இந்த ஆறரைக் கோடி கூட்டம். அவன் என்ன லவ் பண்ணி அப்பனுக்கும், ஜாதி சண்டைகளுக்கும் பயந்தா சார் செத்தான்...?? சாகிறது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை தான். ஆனா அந்த சாவுக்கு நம்மள காவு கொடுக்குற துணிச்சல் நம்மள்ல எத்தனை பேருக்கு சார் வரும். அவன் என்ன சாகும்போது என்னை காப்பாத்துங்க காப்பத்துங்கன்னா செத்தான்?? அவன் எழுதுன கடிதத்தை படிச்சிட்டு எவ்வளவு பெரிய கலவரம் சார் வெடிச்சிடுச்சு நம்ம நாட்டுல?? ஓ இதுல கழகங்கள் கலந்துக்கிரலையில்ல... பாத்தீங்களா நம்ம ஆளுகளோட ஒற்றுமையும், வீரதீரச் செயல்களையும்...

அட போங்க சார்... நம்ம ஆளுங்க இது மாதிரி நடந்துக்கிதால, அவ்வளவு பக்குவப்பட்டவங்களா?? இல்ல பயந்தாங்கொள்ளிகலான்னு?? பல பேரு புரியாமத் திரியிராணுக. பாத்தீங்களா வழவழன்னு பேசி நானும் தமிழன்னு சரியா நிரூபிச்சிட்டேன். சரி சரி விஷயத்துக்கு வருவோம்... இந்த அம்மாவுக்கு இங்க சிகிச்சை அளித்தால் புலி ஆதரவு தலைவர்கள் பேட்டி கொடுப்பாங்கன்னு சொன்னீங்க... இன்னமுமா சார் நம்புறீங்க? இலங்கை சுற்றுலாவுக்கு இலவச டிக்கெட் அப்புடின்னு இனமானக் கம்பெனி ஒரு விளம்பரம் குடுத்தாப் போதும் சார். ஒரு விக்கெட் காலி. ஒரு தேர்தல் அறிவிப்பு வரட்டும் இன்னொரு டிக்கெட் காலி. அப்புறம் இந்த வைகோ... அவரு பேரை சுருக்குனதுனாலையோ என்னவோ அவர் அரசியல் வாழ்க்கையும் போச்சு சார்... (வைகோ சார் நீங்க திரும்ப கோபால்சாமின்னு வாங்க சார்).

அப்புறம் பிரபலமா / பிராபலமா யாரு சார் இருக்கா?


அந்த பார்வதி அம்மா நல்லாயிருக்கட்டும் சார். ஒருவேளை அவங்க உயிருக்கு இங்க இழப்பு நேர்ந்தால் கலவரம் வெடிக்கும்னா எதிர் பாக்குறீங்க?? அப்புடியே நடந்தாலும், இங்க உள்ள சில மூத்த தலைவர்கள் இயற்கை மரணம் அடைந்தால் கூட, நடக்குமே ஒரு வாரத்துக்கு கூத்து... அதை விட ரொம்ப கம்மியா இருக்கும் சார். அப்புடி அவங்க பன்ற கலகத்துக்கு என்னா பேரு சார் நீங்க வைப்பீங்க?? இன்னொன்னு என்னா சொன்னீங்க...? பாதுகாப்புக்குன்னு ஒரு தொகை செலவழிஞ்சிருக்கும்னா... அட போங்க சார்... சிமரன், சிநேகா, நமிதா (கடை) தொறப்புவிழவுக்கு நம்ம அரசாங்கம் செலவழிக்காமையா இருக்கு?? அப்புறம், நம்ம அமைச்சருங்க, கட்சிக்காரன் வீட்டு விஷேஷங்களுக்கு என் காசையும் பயன்படுத்தி வெய்யில்ல கொடுமையா பல கிலோமீட்டர்களுக்கு பாதுகாப்பு போட்டிருப்பானுகலே அதெயெல்லாம் நம்ம ஏன் சார் கண்டுக்கிறது இல்ல?? அவனுகளை அல்லைக்கைகள் தவிர எவனும் சீண்டுறது இல்ல?? அவனுகளுக்கு என்ன உயிர் பயமா?

ஒரு குத்துமதிப்பா யோசிச்சுப் பாருங்க... எதிர்கட்சிக்காரனுக வெட்டுனதுல செத்த கழகக் கோமான்களை விட, உள்கட்சிக்காரனுக வெட்டுக் குத்து தான் சார் அதிகம். அப்போக்கூட நம்ம அவங்க அராஜகத்தைப் பாத்துட்டு உச்சுக் கொட்டியோ, உச்சாப் போயோ நம்ம எதிர்ப்பைக் காட்டிக்கிட்டு இருக்கோம். ஆமா, பிராபகரன் செத்துட்டாரு, எரிச்சுட்டோம், உரிச்சிட்டோம்னு சொன்னானுகளே , அப்போ என்னா சார் இங்க நடந்துச்சு... என்ன தினசரிகளும், மற்ற பத்திரிக்கைகளும் அதிக அளவுல வித்துச்சு... அதைவிட என்னத்தை சார் நாங்க புடிங்கிட்டோம்?? பிரபாகரனை கண்ணுல காட்டாம எரிச்சதுல இவ்வளவு சந்தோசப்படுறீங்க... ஆமா, ஆமா அவருக்கிட்ட நாங்க பாக்க அப்புடி என்ன பெருசா இருக்கு?? பிரபலமே இல்லாத பல பன்னாடைகளுக்கு நினைவு மண்டபம் இருக்கும் பொது அவருக்கும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டுமே... உங்ககிட்ட எதுவும் பணம் கேட்டானுகன்னா சொல்லுங்க சார்... நான் அவனுகள செருப்பால அடிக்கிறேன்.

சரி உங்களுக்கு பிராபாகரன் பிரச்சனையா இல்ல அவரு ஆத்தா பிரச்சனையா?? இல்ல வெள்ளை வேட்டிக்குள்ள வெட்க, மானத்தை அடை காக்குற எங்க தலைவர்கள் பிரச்சனையா??

சூப்பர் சார்... நாட்டின் நலனுக்கு இது உகந்ததில்லை... நமது மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை.. சூப்பர்... சூப்பர். இருங்க இருங்க... ஆமா அப்புடிப் பாத்தா, நம்ம நாட்டுல நிறைய, நாட்டு நலனுக்கு பங்கம் விலைவிக்கிரமாதிரி இருக்குறதுங்களை என்ன சார் பண்ணலாம்? என்னது நான் சொல்லவா? அடப் போங்க சார் நான் உங்க பேரன் வயசுள்ளவன் சார். நீங்களே சொல்லிடுங்க...

கேட்க மறந்துட்டனே, நம்ம நாட்டுல முளையிலே கிள்ளி எரிஞ்ச விஷயம் நிறைய இருக்குல்ல... ஐய்யயோ கொஞ்சம் டயம் குடுங்க டிவி-ல ஒரு முக்கிய டான்சு ப்ரோக்ராமு இருக்குப் பாத்துட்டு வந்துடுறேன்.

மருத்துவ உதவி மறுக்கப்பட்டாலும் அது கொலை செய்வதற்கு சமம்னு என் மன சாட்சி சொல்லுது...? நம்ம ஊர்ல இருக்குற கருப்பு கோட்டு சட்டம் என்ன சார் சொல்லுது?? ஓ அதையும், தலைமைச் செயலகம் தான் சொல்லுமோ... நீதி மன்றம் இப்பவெல்லாம் பல நேரங்கள்ல சும்மா வாயசைக்குது சார்... டப்பிங் வேற யாரோ குடுக்குரானுகோ...

அப்புறம் இந்த தர்மத்துக்குப் பொறந்த சு.சாமி என்னமோ சொன்னுச்சாமே! இந்தியா ஒன்னும் தர்மசாலையில்லை-னு, அவங்க தர்ம ஆஸ்பத்திரிக்கு வரல சார். காசு குடுப்பாங்க... இவனுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு குடுக்குறாங்க பாருங்க... அது தான் தர்மத்துக்குப் பன்றது. நான் அந்த ஆளை பார்த்தா சொல்லிடுறேன். நீங்களும் பார்த்தா சொல்லிடுறீங்களா??

சரி சார். இந்த ஜென்மம் தான் எளவெடுத்த ஜென்மமாப் போச்சு... அடுத்த ஜென்மத்துலையாவாது இந்த கழகக் கம்பெனிகள்ல புள்ளையாப் பொறக்கனும்னு எனக்காக வேண்டிக்கங்க சார்.


குறிப்பு : அண்ணே! இங்க யாரும் பார்ப்பனர்களைப் பற்றி பேச வேண்டாம். இந்தக் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தா மட்டும் சொல்லுங்க.
பார்ப்பான் என்ற பதம்/அர்த்தம் தாங்கிய பின்னூடங்கள் மட்டுறுத்தப்படும்.
தம் பெயரும் / தகப்பன் பெயரும் இல்லாத அனானிகளுக்கு ஏற்கனவே இங்கு வாய்ப்பு இல்ல. விரும்புபவர்கள் ஏதோ ஒரு பெயரை தாங்களுக்கு வைத்துக் கொண்டு... தகப்பன் பெயரில் என்னைப் போட்டுக்கொள்ளலாம். அட ஆமாங்க....

அன்புடன்,
ரோஸ்விக்.