நம்ம நாட்டுல தான் வாழ்க்கையையும், உடல் நலத்தையும் சீர்குழைக்கும் மதுக்கடையை அரசு ஏற்று நடத்துது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான கல்வியை மதுக்காய்ச்சியவர்கள்(ளும்) விற்கிறார்கள் அப்படின்னு நாம சொல்லி நம்மளே நம்ம தலையை சொறிஞ்சு சிரிச்சுக்கிட்டு போயிடுவோம். வேற என்னா பண்றது... நம்மளால முடிஞ்சது அதுதான் அப்படின்னு நம்ம கையாலாகாத தனத்தை நாமளே மெச்சிக்கிட்டு போயிடுவோம்.
ஒவ்வொருத்தருக்கும் நமது பிள்ளைகள் எதிர்காலத்துல நிறைய ச(ம்பா)திக்கனும்னு நினைக்கிறதுல தப்பே இல்லை. அது பேராசை-னு சொல்ல யாருக்கும் மனசு வராது. இதை சாதகமா தனியார் கல்வி வியாபாரிகள் பயன்படுத்திக்கிட்டாங்க. மிகச்சிலரைத் தவிர மற்றவங்க யாரும் இதை சேவையாக பண்ணுவது கிடையாது. இதில் வரும் இலாபங்களைக் கணக்கில் கொண்டே, இதற்கான உரிமம் பெறுவதற்கு கோடி கோடியாகக் கொட்டியும், தேவைப்பட்ட அளவு கூட்டியும் (பணத்தை) நமது அரசியல்வியாதிகள் மற்றும், சம்பத்தப்பட்ட அரசு (சர்வா)அதிகாரிகளுக்கு கொடுத்து வருகின்றனர்.
வியாபாராத்துல ஒரு யுக்தி உண்டு. கொஞ்சம் தரம் குறைவான ஒரு பொருளையும், கொஞ்சம் தரம் கூடிய பொருளையும் வைத்துக்கொண்டு, இரண்டிற்கும் உற்பத்தி செலவு மிகுந்த வித்தியாசம் இல்லாதிருப்பினும், அந்த தரம் கூடிய பொருளை மிக மிக விலை வித்தியாசத்துடன் விற்பார்கள். அதே யுக்தி கல்வி வியாபாரமாகிவிட்ட இந்த காலத்தில் பயன்படுத்தப்படுகிறதே என்ற வருத்தம் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்டு.
வீட்டுக்கு வாங்குற பூட்டுல இருந்து, விருப்பத்துக்கு வாங்குற ஆடைகள் வரை Branded பார்க்கும் நம் மக்களின் மனநிலைக்கு, தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை குறித்த பயம் இருப்பதில் நாம் அதிர்ச்சி அடைய முடியாது. அடையவும் கூடாது. இந்த விருப்பத்தை வியாபாரமாக்கி கொள்ளை லாபத்தில் சுகபோக வாழ்வில் குளிர்காயும் குள்ள நரிகளுக்கு தூபம் அனைத்து ஆட்சிகளிலும் போடப்படுவது கண்டனத்துக்குரியதே. இதில் கண்டிக்கவும், தண்டிக்கவும் பட வேண்டியவர்கள் தனது ஆசிரியர் பணியை கடமையாகச் செய்யாமல், கடமைக்காகச் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனைகளை செயல்படுத்த முயலாமல் / முடியாமல், பெரும் பதவிகளில் பகட்டாகத் திரியும் அதிகாரிகளும் தான்.
பல அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கும் போதிய அடிப்படைத் தேவைகளை செய்து தராமல் இருப்பதற்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் ”எனக்கென்ன வந்தது” என்று பல காரணங்களை உருவாக்கிக் கொண்டும், காரணமே இல்லாமல் தவிர்த்துக் கொண்டும் வருபவர்களுக்கு நாம் என்ன பெயர் சூட்டலாம்? எப்படி அவர்கள் தலையில் குட்டலாம்? அதே நேரம் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த இடங்களில், யாரும் பின் நின்று தங்களை கண்காணிக்கவும், மேய்க்கவும் தேவையற்று சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் என்னோடு ஒத்த கருத்துள்ள நண்பர்கள் சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
தம் பணியை மறந்தவர்கள் கொஞ்சமேனும் சுரணையோடு இருங்களேன். உங்களிடம் அல்லது உங்கள் ஆளுகையின் கீழ்வரும் பள்ளியில் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க உங்களுக்கு மனம் வராததற்கு காரணம் நீங்களும் தான் என்பதில் என்றேனும் வெட்கப்பட்டிருக்கிறீர்களா? கலைத்துறை என்ற பெயரில் திரை விலகும் முன்னே ஆடை விலக்கி நல்லவளாக நடிக்கும் நடிகைக்கு உள்ள அங்கீகாரம் நல்லாசிரியர்களுக்கு கொடுக்காததற்கு சம்பந்தப்பட்டவர்களின் பதில் என்ன? தமிழில் என்ன கருமாந்திரத்தையாவது பெயராக வைத்துவிட்டு கழிசடைகளை எங்களுக்கு கற்பிக்கும் கழிவறை சினிமாக்களுக்கு கொடுக்கும் வரிவிலக்கை ஏன் எமது அரசு நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு கொடுக்க என்றுமே முன் வருவதில்லை. அங்கீகாரம் செய்யப்படவேண்டும் தானே?
நல்ல கல்வியை அனைவருக்கும் தந்துவிட்டால், எங்கே எல்லோரும் விழித்துக் கொள்வார்கள் என்ற உங்களின் அச்சத்தை வெளிப்படையாக உங்களால் ஒத்துக்கொள்ள முடியுமா? இந்த கல்வி வியாபாராத்தை ஆங்காங்கே, சிறுசிறு போராட்டங்கள் மூலம் தெரிவித்த பெற்றோர்களுக்கு நமது அரசும், அரசு அதிகாரிகளும் வாக்கு எனும் பேரில் கொடுப்பது பேச்சுவார்த்தை எனும் பேரீச்சம்பழம்... உள்ளெ பெரிய கொட்டையுடன். அவ்வப்போது கண்துடைப்பாக அரசு போடும் கட்டளைகளுக்கு, வியாபாரிகள் உடனே நீதி மன்றம் செல்வதும், தடைபெறுவதும் கேலிக்கூத்தான செயல்தான். நிதிக்கும் நீதிக்குமுள்ள சம்பந்த உறவு அவர்களுக்குத் தெரியாதா என்ன?
அரசியலே சாக்கடையாகக் கிடக்கும்போது, அதில் உல்லாசமாகத் திரியும் இவர்கள் சாக்கடையில் நெளியும் புழுக்களாக (நன்றி பதிவுலகம்) இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? பணம் பார்த்த பிணங்கள் என்றும் இறங்கி வராது. ஆனால், எத்தனை அரசு அதிகாரிகள், அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இதை சவாலாக எடுத்து திறம்பட செயல்பட்டு, தமது பள்ளியின் தரத்தை எமக்கு உறுதிப்படுத்த முடியும்? இதில் முழுவதும் பெற்றோர்களைக் குறை சொல்ல முடியாது. யாரும் முழு விருப்பத்தோடு கல்வி வியாபாரிகளிடம் கல்வி வாங்குவதில்லை.
ஒவ்வொரு தேர்தலுக்கும் தங்களின் கைகளை இந்த வியாபாரிகளை நோக்கி நீட்டும்போது... அரசியல்வாதிகள் எப்படி இந்த வியாபாரிகளின் கைகளை மடக்க முடியும்? சாட்சிகளைக் கொலை செய்யும் இவர்கள் அனைவருக்கும் எப்படி மனசாட்சி உயிராயிருக்கும்? ஏனோ தெரியவில்லை போராடுபவர்கள் மீது மட்டும் இந்த சட்டம் பல கொம்புகளுடன் முடிந்தவரை ஆழமாகப் பாயும். ஆனால் இந்த வியாபாரிகளின் தோள்களில் காதலி போல் இதமாக சாயும். பெரும்பாலும் அரசு இயந்திரங்கள் ஒழுங்காக இயங்காது. ஆனால், எவரேனும் ஒரு அப்பாவிக் கூட்டம் இந்த இயந்திரத்தின் சக்கரங்களில் சிக்கிக்கொண்டால், மிக கொடூரமாக இயங்கி, சக்கையாக முடிந்தவரைப் பிழிந்துவிடும். எப்படி அடுத்தவன் தயாராவான் என்ற பெரும் சப்தத்தோடு.
கல்வித்தரம் நன்றாக இருப்பதாக நாம் மதிப்பெண்களை வைத்து மட்டும் முடிவு செய்துகொண்டே இருப்போம். எப்படி பெரும்பாலான அந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது? எவர் வேறு பள்ளியில் படித்தாலும், அவரின் மதிப்பெண் அதிகாமாக இருந்தால் அவருக்கே தமது பள்ளியில் படிக்க அனுமதி என்று எழுதப்படாத சட்டம் அமலில் இருப்பதை எங்கு போய் முட்டிக்கொள்வது?
பதினான்கு வயதுவரை இலவசக் கல்வி... நல்ல திட்டம்தான். எந்த அளவுக்கு வெற்றி? இலவசம் தானே, இதில் தரம் எதிர்பார்க்க முடியாது என்பது கல்விக்கும் பொருந்துமா? பாலர் பள்ளிகளுக்கே பல லட்சம் கட்ட தயார்நிலையில் இருக்கும் பெற்றொர்களை அந்த முடிவுக்கு இழுத்துச் சென்ற பயம் / மிரட்டல் எது? ஏட்டுச்சுரைக்காய்களாய் வளர உற்சாகமூட்டுவது நம் நடைமுறைகளா? அல்லது அதுதான் இயல்பா / சாத்தியமா? அரசும், அரசுப்பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகளின் நற்கல்விக்கு உத்திரவாதம் தந்தால்... நாம் நமது பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு அப்போதாவது தயாராவோமா? எனும் கேள்விகள் என்னுள்ளும் எழுகிறது.
பலருக்கும் இந்த கல்வி வியாபாராத்தின் மேல் எரிச்சல் இருந்தாலும், அதை எப்படி எதிர்ப்பது / தவிர்ப்பது / தடுப்பது என்று தெரியாமல் சிலர். தெரிந்தாலும் தலைக்கு மேல் வேலை என சொல்லுவதற்கும் எளிதான காரணம். அல்லது அது தான் நம்மில் பலரின் வாழ்க்கை முறை. என்ன செய்யலாம்? இந்த கல்வி முறையும், வியாபாரமும் ஏழைக்கும் பணக்காரனுக்கும் பெருத்த வித்தியாசத்தை ஏற்படுத்திக்கொண்டே போகிறது. வருத்தம் தான்.
இந்த பதிவும் என்னால் ஆன ஒரு அதிர்வு. பலரும் இந்த அதிர்வுகளை ஏற்படுத்தலாம். இன்னும் விபரம் தெரிந்தவர்கள் தங்களின் பதிவுகள் மூலம் விவரிக்கலாம். மாற்றம் வருமென்ற நம்பிக்கையில் நானும்....
முன்பே அதிர்வு ஏற்படுத்திய அன்பு நெஞ்சங்கள் - மதுரை சரவணன், தருமி இருவருக்கும் நன்றிகள். வாசியுங்கள்.
இந்த பதிவை எழுதத் தூண்டிய தருமி ஐயாவுக்கு நன்றிகள்.