Friday, January 29, 2010

பேர் வைக்கும் பேறுபெற்றோர் - விகடன் பிரசுரம்

வழக்கம்போல சில பல வலைப்பூக்களை மேய்ந்துகொண்டிருக்கும்போது (படித்துக் கொண்டிருக்கும்போதுன்னு சொல்லக்கூடாதோ??), "ஒரு பேர் வைங்களேன், ப்ளீஸ்!"- னு ஒரு பதிவுத் தலைப்பை பார்த்தேன். ஆஹா, யாரோ ஒருத்தரு இன்னும் பேரு இல்லாம... வலைத்தளங்களும் எழுத வந்து ரொம்ப சிரமப்படுறாரேனு, சுட்டியை அமுக்கி உதவலாமுனு த(க)ளத்துல இறங்குனேன். சுட்டியைப் பார்த்த உடனே தான் தெரிஞ்சது நம்ம ரவிபிரகாஷ் அண்ணனோட "விகடன் டைரி"-னு.

ஆத்தாடி, அண்ணாத்தையே பேரு வைக்கிறதுல கில்லாடின்னு தெரிஞ்சுச்சு. இவரு எதோ உட்டாலக்கடி பதிவு போட்டிருப்பாரோனு முழுசா படிச்சுப் பார்த்தா... அந்தப் பதிவுல அருமையான ஒரு சந்தர்ப்பத்தை வாசக பெருமக்களுக்குக் கொடுத்திருந்தாரு.அதாவது பெரிய மனுசங்க சொன்ன தத்துவ மொழிகளை, நம்ம அண்ணே எளிமையா புரியிறமாதிரி கொஞ்சம் கொஞ்சம் மாத்தி அவள் விகடன்-ல "பத்துவம்"-னும், விகடன்ல "டிக்... டிக்... டிக்..."-னும் தொகுத்திருந்தாரு. பல வாசகர்கள் விரும்பிக்கேட்டதால அத ஒரு தனி புத்தகமா போட்டுரலாம்னு முடிவுபண்ணி அதுக்கான வேலையில விகடன் பிரசுரம் இறங்கிடுச்சு.

தத்துவமெல்லாம் புத்தவ(க)மா வந்தாலும், தலைப்புக்கு தலைய சொரியவேண்டியதாப் போச்சாம். (அண்ணன் சொன்னாரு நானும் நம்பிட்டேன்). நம்ம வாசகப் பெருமக்களுக்கு இந்த அறிய (அதாங்க தலைய சொரிய) வாய்ப்பைக் கொடுத்து நம்மகிட்டையே அன்பா வாயைப் புடுங்கிட்டாரு. பத்தோட ஒன்னு பதினொன்னு அத்தோட ஒன்னு நான் ஒன்னுனு நானும் போட்டியில குதிச்சுப்புட்டேன்.

அரசியல்வாதிங்க ஊருக்குள்ள அதிசயமா புகுந்தா... பெத்த புள்ளை மட்டுமில்லாம செத்த கிழவனையும் தூக்கிகிட்டு ஓடுவாய்ங்க. எதுக்கு? பேரு வைக்கவா?? அட போங்கப்பு... அங்கயும் கொஞ்சம் வசூலு தான். அதுமாதிரி அண்ணேன் கேட்டுருவாரோனு கடகடத்த மனசோட கடைசி வரை படிச்சா... அட அவுக நமக்கு அந்த பொஸ்தகத்தை இலவசமா, அன்பளிப்பா தாரேன்னு சொன்னாக. விடுவமா நாங்க...??

பேருன்னு சொன்னா நூறா எழுதிக்கொடுக்குறது? நறுக்குன்னு நாலு... நானும் எழுதி வச்சேன். பொசுக்குன்னு அதுல மூன போட்டிக்குன்னு பொத்தி வச்ச்சாக.

1) அகநானூறு, புறநானூறு போல - பொன்மொழி நானூறு
2) தங்க மொழியில் தங்கிய மொழிகள்
3) விழிதிறக்கும் (பொன்)மொழிகள்
4) பொன்மொழிகள் என்மொழியில்


நம்ம பதிவர்கள் பல பேரும் பலத்த போட்டியில் நிற்க... தோழி கிருபாநந்தினி, அண்ணன் பின்னோக்கி மற்றும் நான் (ரோஸ்விக்) எழுதிய தலைப்புகளை, கடைசியா பரிந்துரை பண்ணியிருந்தாங்க. கிருபாநந்தினி (அதாங்க படித்துறை பதிவர்) சொன்ன புதுமொழி நானூறு (நான் பொன்மொழி நானூறு-னு சொல்லியிருந்தேன்) இறுதியாக முடிவு செய்யப்பட்டது. அண்ணன் பின்னோக்கி - "எனர்ஜிக்கு ஒரு வரி டானிக்"-னு தலைப்பிட்டிருந்தார். அது "எனர்ஜி டானிக்" என சிறிது திரித்து எடுத்துக்கொள்ளப் பட்டது. (எனர்ஜி டானிக்-னு நீங்க வேற எதையும் சொல்லலையில அண்ணே! )

ஹைய்யா...பேர் வெச்சாச்சு!-னு அண்ணே ரவிபிரகாஷும் முடிவை அறிவிச்சிட்டாரு. இப்ப அந்த புத்தகத்தோட பேரு தோழி கிருபாநந்தினி -யின் பரிந்துரையை சிறிது திருத்தி "புதுமொழி 500"-னு வச்சிருக்காங்க... புத்தகம் வெளி வந்த உடனே எல்லாரும் வாங்கி படிங்க மக்கா... :-)

ரவிபிரகாஷ் அண்ணே வாய்ப்பளித்து, புத்தகம் அனுப்பும் உங்களுக்கும், விகடன் நிறுவனத்தாருக்கும் நன்றிகள்.



Tuesday, January 26, 2010

எங்கே போகிறது நம் குடியரசு?

நாமும் சுதந்திரம் பெற்றுவிட்டோம். நம் நாடும் குடியரசு நாடாகி 60 ஆண்டாகிவிட்டது. எங்கே போகிறது நம் குடியரசு? சமாதானத்திற்கு அடையாளமான வெள்ளை உடையணிந்து வெள்ளையனையும் நாம் வெளியேற்றிவிட்டோம். இன்றுவரை நம் வெள்ளை உடை தான் மாறவில்லை. மற்றவை எல்லாம் மாறிவிட்டது... நம் தலைவர்களின் தியாகம், தேசப்பற்று மற்றும் சரியான வழிநடத்துதல் உட்பட.


வழக்கமாக நம் குடியரசு தின அணிவகுப்பில் பல மாநில கலாச்சார, பாரம்பரியங்களை விளக்கும் வகையில் நடனங்களும், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளும், புதிய போர் கருவிகளும் நமது முப்படைகளுடன் கலந்துகொள்ளும். முப்படைகளின் தளபதியான நம் குடியரசுத் தலைவர் அந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். ஆனால் இன்று அந்த பதவியை நம்மவர்கள் அவ்வணிவகுப்பில் கலந்துகொண்ட மற்றொரு பொம்மையைப் போல மாற்றிவிட்டார்கள். இது நகைப்புக்குரியதன்று. சிந்தனைக்குரியது.


மக்களால், மக்களுக்காக, மக்களாலே நடத்தப்பட வேண்டிய மக்காளாட்சி இன்று சில குடும்பங்களின் மன்னராட்சி போலவே நடந்து வருகிறது. தொண்டற்படைகளைக் கொண்டு வளர்ந்துவந்த நமது அரசியல் கட்சிகள் இன்று தங்களின் குண்டர்படைகளைக் கொண்டு ஆட்சி புரிந்து வருகிறது. லோக் சபாக்கள் லொள்ளு சபாக்கள் போலவும், ராஜ்ய சபாக்கள் அந்ததந்த மாநிலங்களின் ராஜாங்க சபாக்கள் போலவும் செயல்பட்டுவருவது வேதனைக்குரியதே. சட்டசபை ஒன்றும் சளைத்ததில்லை என்பதுபோல அதன் செயல்பாடுகளும் நம் குடியரசின் கால்களை ஊனமாக்கி வருகிறது.


நமது சட்டசபையில் மக்களின் பிரச்சனைகளைக் குரல் கொடுத்து அவற்றை தீர்க்க வேண்டும் என்ற செயல்பாடு மாறிவிட்டது. அங்கே ஆளுங்கட்சியினரின் புகழாரம் மட்டுமே அரங்கேறிவருகிறது. எதிர்கட்சிகள் மக்கள் பிரச்சனைகளை வைத்து அரசியல் பண்ணுவதை விடுத்து, தத்தம் பிரச்சனைகளை முன்னிறுத்தி சேலை அவிழ்ப்புகளும், செருப்பு வீச்சுகளும், கைகலப்புகளும், சபைத் தலைவர் வணக்கம் கூறவில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்த தம் சேலையின் வண்ண பயன்பாடும் நம்மை முகஞ்சுளிக்க வைக்கிறது.


தம் கட்சி அரசாள வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு கொலைகுற்றவாளியுடன் கூட கூட்டு அரசியல் நடத்த எந்த கட்சியும் தயங்குவதில்லை. கூட்டணி பேரங்களும், குதிரை பேரங்களும் என்றோ நம் ஜனநாயகத்தின் முகத்தில் கரி அள்ளிப்பூசி கோரமாக மாற்றிவிட்டது. குறைந்த வருடங்களில் அதிகப் பணம் சம்பாதிக்கும் தொழிலாக நம் ஆட்சி பீடங்கள் அரிதாரம் பூசிக்கொண்டுள்ளன. நீதி மன்றங்கள் அரிதாகப் பேசும் நீதி மொழிகள் கூட இவர்களின் செவிகளில் செத்துவிடுகிறது. உச்சநீதி மன்றங்களின் தீர்ப்புகள் பல மாநிலங்களால் உதாசீனப்படுத்தப் படுகிறது. இதை தட்டிகேட்க நாதியில்லை நம்நாட்டில். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே கூரையின் கீழ் அந்த மாநிலமே சூறையாடப் படுகிறது.


நம் அரசுகள் விதித்துள்ள வரிகள் நம் பாட்டளிகளின் முகத்திலும் விலக்காகவில்லை. தேர்தல் சமயங்களில் மட்டும் மக்களின் தேவை எங்களின் சேவை. ஆட்சியிலமர்ந்த பிறகு மக்கள் எங்கள் தேவைக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமே அனைத்து கட்சிகளிடமும். தமிழகத்தின் கடன் மட்டும் 90,000 கோடி ரூபாய். அவை மக்களின் தேவைகளுக்கு வாங்கப்பட்டவையாம். இதில் இலவச கலர் டிவி திட்டமும் அடங்கும். எது மக்களின் அன்றாடத் தேவை என்பது தெரியாத மூளை உள்ளவர்கள் முதல்வர்களானால் இப்படியும் நடக்கும். நாம் எப்போதும் வரலாற்றை சிலாகித்து பேசுவதில் பெருமை கொண்டவர்கள். அதுபோலவே நம் வரலாற்றுத் தலைவர்களான காமராஜர், கக்கன் போன்றோரின் வரலாற்றை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். நம் எதிர்கால சந்ததிக்கு இது போன்ற நல்லவர்களின் வரலாறு கூட கிடைக்காது போய்விடும்போல் உள்ளது நம் இன்றைய நிலை.


காவல்துறையில் பெரும்பாலானோர் இந்த அரசியல் வியாதிகளுக்கு காவலாய் செயல்படவேண்டிய நிர்பந்தம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் தம் குடும்பத்திலிருந்து ஒருவன் அரசாண்டாலே அந்த பரம்பரை முழுவதும் ஆண்ட பரம்பரை ஆகிவிடும். ஆனால், மற்றவர்கள் ஆண்டி பரம்பரைக்கு தள்ளப்படுவார்கள். நம் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை விட, அது சார்பாக கொண்டாடப்படும் அரசு விழாக்களே செலவழிக்கப்படுகிறது என்பதை நம் மக்கள் அறிவார்களா? தம் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளுக்காகவே பல கால்வாய்கள் தூர்வாரப் படுகின்றன என்பதை யார் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டும்?


மரியாதைக்குரிய முனைவர். முன்னாள் குடியரசுத் தலைவர். அப்துல் கலாமின் 2020 கனவு நிறைவேறும் வழியிலா நாம் சென்று கொண்டிருக்கிறோம்? நம் நாட்டில் நம் பாரம்பரிய கலைகளை அழிந்துவிடா வண்ணம் காக்க சில பல்கலைகழகங்களில் குழுக்கள் செயல்படுகின்றன. ஆனால், விருதுகள் ஏனோ ஆடை அவிழ்பிற்கு மட்டும்.


நம் அரசியல் வியாதிகளின் மாறாத தேர்தல் அறிக்கைகளில் சில - 33 சதவீத இட ஒதுக்கீடு, நதி நீர் இணைப்புத் திட்டம். இவையெல்லாம் எப்போது நிறைவேறும்? விடை தெரியா பல கேள்விகளுடன் நம் மானுட வர்க்கம். இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் - எங்கே போகிறது நம் குடியரசு?

வந்தேமாதரம்!             வாழ்க ஜனநாயகம்!



Thursday, January 21, 2010

வழுக்கும் மொழியாய் திருநெல்வேலி வழக்குமொழி...

பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும்போது, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சார்ந்த சில நண்பர்கள் எனக்குண்டு. அவர்கள் பேசும் தமிழில் அந்த ஊர் அல்வா தரும் சுவை நான் பெற்றதுண்டு. தூத்துக்குடியில் மஸ்கோத்து அல்வாவும், மக்ரூனும் எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகைகள்.

காலேஜில பட்ட மேற்படிப்பின் மொத வகுப்புல, ஒவ்வொருத்தரா எந்தரிச்சு உங்க பேரு, நீங்க இதுக்கு முன்னாடி படிச்ச காலேஜு, எந்த ஊருன்னு சொல்லச் சொல்லி அறிமுக வகுப்பு நடத்துவாங்க... இத ஒரு வகுப்புல சொல்லி அறிமுகப்படுத்திகிட்டது பத்தாதுன்னு... சில வாத்திமாருங்க அந்த மொத நாலு பூராம் எல்லா வகுப்புலயும் சொல்லச் சொல்லி பொழுத ஒப்பேத்திருவாங்க.

அப்புடி ஒரு சமயத்துல ஒருத்தன் எந்திரிச்சு, எம் பேரு "முத்து", "சதக்", "திருநெல்வேலி"-னு சொல்லிட்டு உக்கார... ஏல மக்கா, இவன் என்னடே வந்த ஒடனையே "ச்சதக் ச்சதக்"-னு பீதியை கிளப்புதான். அவங்கிட்ட ச்சொல்லி "ச்சதக்"குங்கெறது காலேஜுன்னு ச்சொல்ல ச்சொல்லுலே. இங்க உள்ளவனுகளுக்கு "ச்சதக்" காலேஜு பேருன்னு தெரியாதுடே-னு ஒரு குரல். அந்த குரலுக்குச் சொந்தக்காரன் என் நண்பன். இவன் தூத்துக்குடியைச் சேர்ந்தவன். நாங்க எல்லாம் அதே காலேஜுல பட்டப் படிப்பு படிச்சதால அவங்கிட்ட மக்ரூன் வாங்கி வரச் சொல்லி தின்னு தீர்த்திடுவோம் அவன் காசையும். அப்பாடா... திருநெல்வேலி அல்வா திங்க ஒரு அடிமை சிக்கிட்டான்டானு மனசுக்குள்ள சந்தோசம் வேற.

தேர்வு காலங்கள்ல இவங்க அறைக்கு நான் படிக்கப் போகும்போது, இவர்களுது பேச்சே ரொம்ப சுவாரசியமா இருக்கும். சொல்லப் போனா அந்த மொழி மேல எனக்கு ஒரு காதலே உண்டு. போன உடனே, மாமா "ச்சாரம்" கட்டிட்டு வாங்க. நாம படிப்போம்-னு சொல்லுவாங்க. எனக்கு சிரிப்பா வரும். நான் திரும்ப, மாமா எங்க ஊர்ல பெரிய பெரிய கட்டிடத்துக்கு வெள்ளையடிக்க தான் சாரம் காட்டுவாங்க. படிக்கிறதுக்கு எதுக்கு மாமா சாரம்?-னு கேட்பேன். அதுக்கு அவங்க..."ஏடே, மாமா சோக்கு சொல்லுதுடே... எல்லாருஞ்சிரிங்க"-னு சொல்லி ஒரே அமர்க்களமா இருக்கும்.

ஏடே, நம்ம மாமா வந்திருக்குடே... நம்ம அண்ணாச்சி கடையிலே இட்லி சாப்புடுதாம்லே.

போடே அண்ணாச்சி கடையிலே ச்சரக்கு ச்சரியில்லடே. அவன் எங்க ச்சாமான் வாங்குதாம்னு தெரியலே.

விடுடே... விட்டா உள்ள எவ ச்சமைக்குதா... அவ மூஞ்சியப் பாக்கனும்னு நீ உள்ள புகுந்துருவ போலையே...

ஆமாடே... எதோ செத்த மூதிதான் ச்சமைக்கும்போல... அதான் செத்துப்போன மாதிரி இட்லிய கொடுக்காணுவ.

யய்யா... என்னா லாஜிக்குலே?? (என்று கூறியவாறு அவனை கிள்ளுகிறார்)

அதுக்கு ஏன்டே என்னைய முள்ளுதே? மாமா இவன நாலு சவட்டு சவட்டுங்க மாமா...

ஏலே நீ ரொம்பதாம்ல ஆடுத... முதுகுல மூச்சா போய்கிட்டு இருக்க அருவாளுக்கு வேலை குடுத்துடாதைலே...!

இதுக்குப் போயி ஏம்லே இப்புடி கோவிக்கே??

பின்ன என்னடே.... நீ இப்புடி பேசிப் பேசி எஞ்செவ்வி கிழிஞ்சுட்டு...

விடுடே... ரோட்டுல போறவன் எல்லாம் நம்மளையே பாக்கானுவ...

நம்ம பேசி விளையாண்டுட்டு போனா அவன் ஏன்டே நம்மள அப்படி பாக்கான்....??

பொறவு... அவனுக்கு வேலை இல்லையினா இப்புடித்தாண்டே பாப்பான்...

இப்படியே விளையாட்டு நீண்டுகொண்டு போகும் இந்த வழுக்கும் மொழியுடன்...

இந்த திருநெல்வேலி மொழியை நான் காதலிக்கக் காரணமான என் அன்பு நண்பர்கள் சதீஷ், முத்து, அமல், சில்வின், ரஜனி, சுபின், மணிகண்டன் மற்றும் சிவமுருகனுக்கு என் அன்பு நன்றிகள். :-)

பதிவுலகிலும் சிலர் இந்த திருநெல்வேலி வழக்கு மொழியில் எழுதும்போது நான் சிலாகித்துப் படிப்பதுண்டு. மரியாதைக்குரிய தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணனின் பேச்சையும் நான் கேட்க விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம். தொடருங்க மக்கா... நானும் மகிழ்கிறேன்.



Wednesday, January 20, 2010

அ(எ)ருமையாய் பிள்ளை வளர்க்கும் நாய்கள்

தலைப்பில் கடுங்கோபம் தெரிந்தால் என்னை மன்னிக்கவும்.

இப்பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் சம்பவம் உண்மை. எனவே இதில் வரும் வார்த்தைகளும், நிகழ்வுகளும் அப்படியே எடுத்துக் கூறப்பட்டுள்ளன.பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு பெரிய கலை. அதை நயமாக செய்து வருபவர்கள் பல நாயகர்/நாயகிகளை உருவாக்கி வருகின்றனர். பிள்ளை வளர்ப்பு பற்றி பல புத்தகங்கள் தமிழில் உண்டு. அதில் ஒன்றன் தலைப்பே மிக அற்புதமாக இருக்கும். அதன் தலைப்பு என்ன தெரியுமா? - "குழந்தைகள் வெள்ளைக் காகிதம் போன்றவர்கள். அவர்கள் கசங்கும் முன்பே எழுதிவிடுங்கள்".

 
எனது முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டது போல, குழந்தைகளுக்குப் பாசம் காட்டுங்கள். செல்லம் காட்டாதீர்கள். தொட்டதெற்கெல்லாம் தண்டித்து வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கண்டித்து வளர்ப்பது மிக மிக அவசியம். உங்கள் கண்டிப்பில் உறுதியாக இருங்கள். பிள்ளைகள் தவறும்போது அன்பாக திருத்த முயலலாம். ஆனால், அந்த அன்பினால், அந்த தவறுகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

 
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் பிள்ளை வளர்ப்பு நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்தது. இதைப் பகிர்வதால் பல பாதிப்புகள் தவிர்க்கப்படலாம் என்பதே என் நோக்கம். பல குடும்பங்களில் செய்யும் மற்றொரு மாபெரும் தவறு, தமக்கு தாமதாமாக குழந்தை பிறந்தது / ஒரே ஒரு ஆண் குழந்தை என்ற காரணத்திற்காக அவர்களை கண்டிப்பில்லாமல் வளர்ப்பது. இத்தகைய வளர்ப்பு முறைகள் அவர்கள் தவறான பாதையில் செல்லும்போது தடுக்காமல் போய்விடக்கூடும்.

 
நான் குறிப்பிட்ட அந்த குடும்பத்தில், தனது பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து வளர்த்து வருவதோடு மட்டுமல்லாமல், தவறான வார்த்தைகளை பிரயோகிக்கவும் பெற்றோர்களே மறைமுகமாகக் கற்றுக் கொடுத்தும், அனுமதித்தும் விடுகிறார்கள். பிள்ளைகள் ஏதாவது செய்யும்போது, அவர்களை "நீ ஒன்னாம் நம்பர் லூசு டா" / "நீ ஒரு stupid" என்றோ அந்த தாயும், தகப்பனும் சொல்லி விடுகிறார்கள். இப்போது அந்த குழந்தைகள் எந்த கணத்திலும் தன் தாய் தந்தையிடம் மேற்சொன்ன வார்த்தைகளைக் கூறத் தயங்குவதில்லை.

 
அதே போல, குழந்தைகளிடம் "உங்க அப்பன் ஒரு லூசு டா. அந்த ஆளு எப்போதும் இப்படித் தான் பண்ணுவாரு" / "உங்க ஆத்தா ஒரு அறிவுகெட்டவ" என்றோ சொல்லாதீர்கள். இப்படி பேசும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் தன் தாய் தந்தையருக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறிவிடுகிறார்கள். இது நான் காணும் அந்த குடும்பத்தில் தினமும் அரங்கேறுகிறது. இதன் விளைவாக தாயோ, தந்தையோ தன் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் "தம்பி, எனக்கு குடிக்க தண்ணி எடுத்துகிட்டு வா" போன்ற சிறு உதவிகள் கூட மிக எளிதாக மறுக்கப்படுகின்றன.

 
இப்போதெல்லாம், பிள்ளைகள் பெரும்பாலான நேரங்களை தொலைகாட்சியின் முன்பு செலவிட்டு, படிப்பில் கவனம் செலுத்த தவறுகின்றனர் என்ற விஷயம் வருத்தமளிக்கக்கூடியது. இந்த வீட்டு குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் தகப்பனார், திடீரென்று தெய்வ பக்தி/பயம் அதிகமாகி, பல மணி நேரங்களை பூஜை அறையில் கழித்து வருகிறார். அவர் பூஜை செய்யும் நேரம் நடக்கும் கூத்துகளை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. பூஜை செய்யும் போதெல்லாம் மணி அடித்துக்கொண்டு செய்வார். அவரது பிள்ளைகள் சத்தம்போட்டு விளையாடிக்கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ இருப்பார்கள். சில மணியாட்டல்கள்... சில ஜெபங்கள்... "டேய் எருமை, சத்தம் போடாம விளையாடு", மீண்டும் சில மணியாட்டல்கள்... சில ஜெபங்கள்... "டேய் நாயி, டிவி சவுண்டை கொறை" இவ்வாறு கூறிக்கொண்டே இருப்பார்.

 
இவர் திடீரென அக்கறை கொண்டு திட்டுவது போல இருக்கும். கொஞ்ச நேரம் கழித்து பிள்ளைகளை கட்டியணைத்து முத்தமிட்டு கொஞ்சி மகிழ்வார். இப்படி கண்ட கண்ட நேரங்களில் திட்டுவதைவிடுத்து, அவர்களுடன் ஓய்வாக இருக்கும் நேரத்தில், நல்ல புத்தி மதிகளை ஓரிருமுறை சொல்வது சிறந்தது என்பதை அவர் ஏனோ அறியவில்லை.

எவரேனும் இவரது குழந்தைகள் தவறுகள் செய்வதை சுட்டிக் காட்டினால், அவர்களை கண்டித்து திருத்த முயலாமல், "இவனுகளாவது பரவாயில்லை. இவனுக பெரியப்பா பசங்க எப்படியெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா" என்று அவரது பிள்ளைகளின் முன்னிலையிலேயே சில நிகழ்வுகளை சொல்லிக் கொண்டிருப்பார். இச்செயல் தம் பிள்ளைகளை மேலும் தவறான வழிகளுக்கு இழுத்துச் செல்லும் என்பதை அறியாத இவரை நினைத்து பரிதாபம்தான் படமுடிகிறது.

 
இதுபோன்ற பல காரணங்களால் இவரது பிள்ளைகள் படிப்பில் கவனம் சிதறி, குறைவான மதிப்பெண்களை எடுக்க ஆரம்பித்திருந்தனர். இவர்களது ஆசிரியை அந்த பசங்களிடம் ஏன் ஒழுங்காகப் படிக்கவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் மிகவும் நகைப்புக்குரியது. அது, "டீச்சர், எங்க அப்பா எப்போதும் சாமி கும்பிட்டுகிட்டே இருக்கதால, எங்களால படிக்க முடியலை(!?)". இந்தப் பெற்றோரும், பிள்ளைகளிடம் "உங்க ஆசிரியை என்ன சொன்னங்க" என்று கேட்பதற்கு பதிலாக, "உங்க ஆசிரியை என்ன சொன்னா?" என்று கேட்டால் எப்படி அவர்கள் பிறருக்கு மரியாதை தருவார்கள்?

கண்முன்னே இந்த வெள்ளைக் காகிதங்கள், வெற்றுக் குப்பைகளாய் கசக்கி எறியப்படுவதை பார்க்கும்போது நெஞ்சு தீப்பற்றிய பஞ்சாய்...



Saturday, January 16, 2010

உள்குத்து கவிதைகள் - 5

ஆர்ப்பாட்டம்
கொள்கை(ளை) கூட்டத் தலைவர்
கொடநாட்டில் கொட்டம்
அடுத்தவேளை மட்டும்
அன்னதானத்திற்கு உத்திரவாதமளித்த
அமைச்சர் பெருமக்களுடன்
ஆயிரக் கணக்கானோர்
ஆங்காங்கே ஆர்ப்பாட்டம்!



முன்பதிவு
விருந்தினர் வருவதையறிந்து
அவருக்கு முன் விரைந்து
வெளிமுற்றத்திலமர்ந்து
மிஞ்சும் சோற்றுக்கு - கரைந்து
முன்பதிவு செய்கிறது...
காகம்!



கடை(ட்)சித் தொண்டர்
செயலற்ற தலைவர்
கட்சிக்கும், நாட்டுக்கும்
செய்யவில்லை ஒன்றும்...
ஏதோ மாநாடாம்
அழைக்கிறார்...
அலைகடலென திரண்டு வாரீர்
கழகச் "செயல்" வீரர்களே!



இளசுகள்
அங்கே தீ விபத்தாம்
ஓடி அணைக்கத் தோன்றவில்லை!
இங்கே மழைச் சாரல்
ஓரமாய் அணைத்துக்கொண்டே
இருக்கத் தோன்றுகிறது
காதலியின் அருகாமை...