Tuesday, January 26, 2010

எங்கே போகிறது நம் குடியரசு?

நாமும் சுதந்திரம் பெற்றுவிட்டோம். நம் நாடும் குடியரசு நாடாகி 60 ஆண்டாகிவிட்டது. எங்கே போகிறது நம் குடியரசு? சமாதானத்திற்கு அடையாளமான வெள்ளை உடையணிந்து வெள்ளையனையும் நாம் வெளியேற்றிவிட்டோம். இன்றுவரை நம் வெள்ளை உடை தான் மாறவில்லை. மற்றவை எல்லாம் மாறிவிட்டது... நம் தலைவர்களின் தியாகம், தேசப்பற்று மற்றும் சரியான வழிநடத்துதல் உட்பட.


வழக்கமாக நம் குடியரசு தின அணிவகுப்பில் பல மாநில கலாச்சார, பாரம்பரியங்களை விளக்கும் வகையில் நடனங்களும், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளும், புதிய போர் கருவிகளும் நமது முப்படைகளுடன் கலந்துகொள்ளும். முப்படைகளின் தளபதியான நம் குடியரசுத் தலைவர் அந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். ஆனால் இன்று அந்த பதவியை நம்மவர்கள் அவ்வணிவகுப்பில் கலந்துகொண்ட மற்றொரு பொம்மையைப் போல மாற்றிவிட்டார்கள். இது நகைப்புக்குரியதன்று. சிந்தனைக்குரியது.


மக்களால், மக்களுக்காக, மக்களாலே நடத்தப்பட வேண்டிய மக்காளாட்சி இன்று சில குடும்பங்களின் மன்னராட்சி போலவே நடந்து வருகிறது. தொண்டற்படைகளைக் கொண்டு வளர்ந்துவந்த நமது அரசியல் கட்சிகள் இன்று தங்களின் குண்டர்படைகளைக் கொண்டு ஆட்சி புரிந்து வருகிறது. லோக் சபாக்கள் லொள்ளு சபாக்கள் போலவும், ராஜ்ய சபாக்கள் அந்ததந்த மாநிலங்களின் ராஜாங்க சபாக்கள் போலவும் செயல்பட்டுவருவது வேதனைக்குரியதே. சட்டசபை ஒன்றும் சளைத்ததில்லை என்பதுபோல அதன் செயல்பாடுகளும் நம் குடியரசின் கால்களை ஊனமாக்கி வருகிறது.


நமது சட்டசபையில் மக்களின் பிரச்சனைகளைக் குரல் கொடுத்து அவற்றை தீர்க்க வேண்டும் என்ற செயல்பாடு மாறிவிட்டது. அங்கே ஆளுங்கட்சியினரின் புகழாரம் மட்டுமே அரங்கேறிவருகிறது. எதிர்கட்சிகள் மக்கள் பிரச்சனைகளை வைத்து அரசியல் பண்ணுவதை விடுத்து, தத்தம் பிரச்சனைகளை முன்னிறுத்தி சேலை அவிழ்ப்புகளும், செருப்பு வீச்சுகளும், கைகலப்புகளும், சபைத் தலைவர் வணக்கம் கூறவில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்த தம் சேலையின் வண்ண பயன்பாடும் நம்மை முகஞ்சுளிக்க வைக்கிறது.


தம் கட்சி அரசாள வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு கொலைகுற்றவாளியுடன் கூட கூட்டு அரசியல் நடத்த எந்த கட்சியும் தயங்குவதில்லை. கூட்டணி பேரங்களும், குதிரை பேரங்களும் என்றோ நம் ஜனநாயகத்தின் முகத்தில் கரி அள்ளிப்பூசி கோரமாக மாற்றிவிட்டது. குறைந்த வருடங்களில் அதிகப் பணம் சம்பாதிக்கும் தொழிலாக நம் ஆட்சி பீடங்கள் அரிதாரம் பூசிக்கொண்டுள்ளன. நீதி மன்றங்கள் அரிதாகப் பேசும் நீதி மொழிகள் கூட இவர்களின் செவிகளில் செத்துவிடுகிறது. உச்சநீதி மன்றங்களின் தீர்ப்புகள் பல மாநிலங்களால் உதாசீனப்படுத்தப் படுகிறது. இதை தட்டிகேட்க நாதியில்லை நம்நாட்டில். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே கூரையின் கீழ் அந்த மாநிலமே சூறையாடப் படுகிறது.


நம் அரசுகள் விதித்துள்ள வரிகள் நம் பாட்டளிகளின் முகத்திலும் விலக்காகவில்லை. தேர்தல் சமயங்களில் மட்டும் மக்களின் தேவை எங்களின் சேவை. ஆட்சியிலமர்ந்த பிறகு மக்கள் எங்கள் தேவைக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமே அனைத்து கட்சிகளிடமும். தமிழகத்தின் கடன் மட்டும் 90,000 கோடி ரூபாய். அவை மக்களின் தேவைகளுக்கு வாங்கப்பட்டவையாம். இதில் இலவச கலர் டிவி திட்டமும் அடங்கும். எது மக்களின் அன்றாடத் தேவை என்பது தெரியாத மூளை உள்ளவர்கள் முதல்வர்களானால் இப்படியும் நடக்கும். நாம் எப்போதும் வரலாற்றை சிலாகித்து பேசுவதில் பெருமை கொண்டவர்கள். அதுபோலவே நம் வரலாற்றுத் தலைவர்களான காமராஜர், கக்கன் போன்றோரின் வரலாற்றை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். நம் எதிர்கால சந்ததிக்கு இது போன்ற நல்லவர்களின் வரலாறு கூட கிடைக்காது போய்விடும்போல் உள்ளது நம் இன்றைய நிலை.


காவல்துறையில் பெரும்பாலானோர் இந்த அரசியல் வியாதிகளுக்கு காவலாய் செயல்படவேண்டிய நிர்பந்தம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் தம் குடும்பத்திலிருந்து ஒருவன் அரசாண்டாலே அந்த பரம்பரை முழுவதும் ஆண்ட பரம்பரை ஆகிவிடும். ஆனால், மற்றவர்கள் ஆண்டி பரம்பரைக்கு தள்ளப்படுவார்கள். நம் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை விட, அது சார்பாக கொண்டாடப்படும் அரசு விழாக்களே செலவழிக்கப்படுகிறது என்பதை நம் மக்கள் அறிவார்களா? தம் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளுக்காகவே பல கால்வாய்கள் தூர்வாரப் படுகின்றன என்பதை யார் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டும்?


மரியாதைக்குரிய முனைவர். முன்னாள் குடியரசுத் தலைவர். அப்துல் கலாமின் 2020 கனவு நிறைவேறும் வழியிலா நாம் சென்று கொண்டிருக்கிறோம்? நம் நாட்டில் நம் பாரம்பரிய கலைகளை அழிந்துவிடா வண்ணம் காக்க சில பல்கலைகழகங்களில் குழுக்கள் செயல்படுகின்றன. ஆனால், விருதுகள் ஏனோ ஆடை அவிழ்பிற்கு மட்டும்.


நம் அரசியல் வியாதிகளின் மாறாத தேர்தல் அறிக்கைகளில் சில - 33 சதவீத இட ஒதுக்கீடு, நதி நீர் இணைப்புத் திட்டம். இவையெல்லாம் எப்போது நிறைவேறும்? விடை தெரியா பல கேள்விகளுடன் நம் மானுட வர்க்கம். இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் - எங்கே போகிறது நம் குடியரசு?

வந்தேமாதரம்!             வாழ்க ஜனநாயகம்!




31 comments:

Chitra said...

லோக் சபாக்கள் லொள்ளு சபாக்கள் போலவும், ராஜ்ய சபாக்கள் அந்ததந்த மாநிலங்களின் ராஜாங்க சபாக்கள் போலவும் செயல்பட்டுவருவது வேதனைக்குரியதே. சட்டசபை ஒன்றும் சளைத்ததில்லை என்பதுபோல அதன் செயல்பாடுகளும் நம் குடியரசின் கால்களை ஊனமாக்கி வருகிறது.
.................அரசியல்வாதிகள், மக்களை வச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. அது புரியாம மக்களும் சீரியஸா அரசியல்வாதிகளை நம்பிக்கிட்டு இருக்காங்க. :-(

hayyram said...

இந்தியாவில் ஒளிபரப்பாகும் அனைத்து தொலைக்காட்சிகளும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் டில்லி கொடியேற்றத்தை கட்டாயம் காட்ட வ்வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும். அரசியல் வாதிகளின் டி வி க்களில் கூட நடிகர்களும் நடிகைகளும் தான் வருகிறார்கள். தேசியத்தை விட கூத்தாடிகள் முக்கியமாகிப் போய்விட்டார்கள். என்ன செய்ய?

அன்புடன்
ராம்.

www.hayyram.blogspot.com

சிவாஜி சங்கர் said...

இன்னும் விடை கிட்டா கேள்வி..

பித்தனின் வாக்கு said...

ரோஸ்விக் குடியரசுக்காக நான் தமிழ்க்குடினாடு என்னும் பதிவு இட்டுள்ளேன். உங்களின் கருத்துக்களைப் போலவே நானும் தமிழகம் குறித்த எனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளேன். இது தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது எனபது வேதனை.

புலவன் புலிகேசி said...

தல இது நம்ம அரசியல்வியாதிகளுக்கு குடியரசு...மாற்றிக்கொள்ளுங்கள்

"குடும்ப உறுப்பினரால் குடும்பத்திற்காக நடத்தபடும் அரசியலுக்கு புதுப்பெயர் கு(டும்பரசு)டியரசு"

ஆதி மனிதன் said...

//ஆனால் இன்று அந்த பதவியை நம்மவர்கள் அவ்வணிவகுப்பில் கலந்துகொண்ட மற்றொரு பொம்மையைப் போல மாற்றிவிட்டார்கள்.//

உண்மையை உரக்க சொன்னீர் திசை காட்டி.

vasu balaji said...

நியாயமான கேள்விகள்தான். பதில் சொல்ல யாருக்கு நேரம்?

கிரி said...

//நம் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை விட, அது சார்பாக கொண்டாடப்படும் அரசு விழாக்களே செலவழிக்கப்படுகிறது என்பதை நம் மக்கள் அறிவார்களா?//

இது தாங்க கொடுமையா இருக்கு!

//வாழ்க ஜனநாயகம்//

ரொம்ப கஷ்டம் தான் :-)

Menaga Sathia said...

நல்ல அலசல்...

ரோஸ்விக் said...

Chitra - கட்டாய வாக்களிப்பு சட்டம் வந்தால் ஒருவேளை இந்நிலை மாறுமோ என்னவோ...??

பனித்துளி சங்கர் said...

ஏதாச்சும் பண்ணனும் நண்பரே ! என்ன பண்ணலாம் அதுதான் புரியவில்லை . இன்னும் சுயனலத்தில் குடை பிடிக்கும் பலர் இருக்கிறார்களே . என்ன செய்வது நாம் போது நலம் விரும்பி நனைந்துதான் ஆகவேண்டும் .

என்ன பண்ணலாம் அதுதான் புரியவில்லை .!!!

ரோஸ்விக் said...

hayyram - மக்களுக்கு அனைத்தும் தெரிந்துவிட்டால் அவர்கள் நாடாள முடியாது. எதோ ஒன்றைக் காட்டி இவர்களை கட்டிப்போட வேண்டும். அதற்கு கூத்தாடிகள் தேவைதானே.

ரோஸ்விக் said...

Sivaji Sankar - புதிய தலைமுறைகளாவது தெளியவேண்டும்...நன்றி சிவாஜி

ரோஸ்விக் said...

பித்தனின் வாக்கு - நன்றி தலைவா! நமக்குத் தெரிந்ததை பதிவு செய்வோம். எவனோ ஒருவனுக்கு இது உரைக்குமல்லவா??

ரோஸ்விக் said...

புலவன் புலிகேசி - இந்த விளக்கம் அருமை புலி. :-) நன்றி

ரோஸ்விக் said...

ஆதி மனிதன் - நன்றி நண்பரே. இன்னும் உரக்கச் சொல்ல வேண்டிய உண்மைகள் நிறைய இருக்கு... :-)

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - நேரம் வருமென்று நம்புகிறேன் பாலா அண்ணே! :-)

பனித்துளி சங்கர் said...

என்ன நண்பரே இதுபோன்ற குழப்பங்களும் , பிழைப்பபட்ட மனிதர்களும் கலையெடுக்கப்படும் வரை . இதுபோன்றஆதங்கங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் . சிறந்த பதிவு வாழ்த்துக்கள் பகிர்வுக்கு .

ரோஸ்விக் said...

கிரி - நன்றி கிரி. ஜனநாயகம் வாழட்டும் ஆனால் அதன் உண்மையான வழியில். :-)

ரோஸ்விக் said...

Mrs.Menagasathia - தங்களின் முதல் வருகைக்கு நன்றி மேனகா. தொடர்ந்து அலசுவோம். :-))

ரோஸ்விக் said...

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! - மதமாய், சாதியாய், கட்சியாய் பிளவுபட்டு நில்லாமல், மனிதனாய் நல்ல மனிதனுக்கு கட்டாயம் வாக்களிப்போம். நிலைமை ஒரு நாள் மாறும். நன்றி சங்கர். :-)

ரிஷபன் said...

எதுவும் பண்ணமுடியலன்னு சொல்லி சொல்லியே பல வருஷங்களை தள்ளியாச்சு.. அவனைக் குறை சொல்லி.. இவனைக் குறை சொல்லி..பிழைப்பு நடத்தியே இப்ப இவனுங்களை யாரும் டச் பண்ணமுடியாத உயரத்துக்கு போயிட்டாங்க.. கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தவங்களுக்கு அல்வா!

ரிஷபன் said...

எதுவும் பண்ணமுடியலன்னு சொல்லி சொல்லியே பல வருஷங்களை தள்ளியாச்சு.. அவனைக் குறை சொல்லி.. இவனைக் குறை சொல்லி..பிழைப்பு நடத்தியே இப்ப இவனுங்களை யாரும் டச் பண்ணமுடியாத உயரத்துக்கு போயிட்டாங்க.. கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தவங்களுக்கு அல்வா!

Paleo God said...

தாமதத்திற்கு மன்னிக்கனும் ரோஸ்விக். நல்ல இடுகை. மனசு கொதிக்குது. மக்கள மர மண்டைகளா ஆக்கியாச்சு. காலத்துக்கும், குடி தண்ணிக்கும், நல்ல சாலைக்கும், ரேஷனுக்கும் ஓட விட்டே கல்லா கட்டிடறாங்க.. நாம முழிக்காம அவங்கள சொல்லி ஒரு பயனுமில்லை.

காசு வாங்கிதான ஓட்ட போட்ட போய்கிட்டே இருங்கறதுதான் இனி எல்லாவற்றிற்குமான பதில்..:((

ஸ்ரீராம். said...

பொங்கல், தீபாவளிக்கு மைக் கைல கிடைச்ச மேடைப் பேச்சாளர் மாதிரி பொரிஞ்சிட்டீங்க... ஆடியன்ஸ் இப்போ என்ன பண்ணணும்? கை தட்டணும்...
தட்டிட்டு..
அவ்வளவுதான் மறந்து விட்டு அடுத்த வேலை, அடுத்த கை தட்டு...
வாழ்க ஜன நாயகம்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மக்களுக்கு "100% படிப்பறிவு" + "வேலை வாய்ப்பு"...மற்றும் "அத்யாவசிய பொருட்களின்
விலையை" கட்டுக்குள் வைத்திருந்தால் போதும்..

அரசியலை தொழிலாக்கொண்டவர்களுக்கு ,
புழலில் முன்னுரிமை.. எல்லா பிரச்சனையும்
ஈஸியா முடிந்துவிடும் சார்...

ரோஸ்விக் said...

ரிஷபன் - ஏதோ நம்மளால முடிஞ்ச மாற்றங்களை சிறிய அளவிலாவது பண்ணுவோம். புதிய தலைமுறைகளாவது சிறப்பாக இருக்கட்டும்.

ரோஸ்விக் said...

பலா பட்டறை - இதுல மன்னிக்க வேண்டியது என்ன தல இருக்கு. நீங்க எல்லாப் பதிவுகளையும் படிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும்.

நீங்க சொல்ற மாதிரி நாமளும் முழிச்சு ஏதோ ஒரு சிறு கூட்டத்தையாவது முழிக்க வைப்போம் தல. :-)

ரோஸ்விக் said...

ஸ்ரீராம். - நல்ல விஷயங்களை மேடை போட்டுப் பேசுறதுல தப்பில்லை தல.

ஆடியன்சும் கை தட்டட்டும். அதுல ஒரு ரெண்டு மூணு பேராவது நல்ல வழிக்கு வர மாட்டாங்களா? (Something is better than nothing)

அதுக்குத்தான்..... :-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - தலைவா புழல் சிறையில ரொம்ப நல்ல வசதிகள் எல்லாம் இருக்காம். இவங்களுக்கு அங்க இடம் ஒதுக்கக் கூடாது. :-))

malarvizhi said...

சிந்திக்க வைக்கும் நல்ல ஒரு பதிவு. வாழ்த்துக்கள்.