Sunday, January 3, 2010

தள்ளிப்போகும் திருமணங்கள் யாராலே?

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று ஒரு வழக்கு தமிழில் உண்டு. உண்மைதான். ஒரு திருமணம் என்பது அந்த தலைமுறையோடு முடிந்துவிடுவதல்ல... தம்பதியரின் வளர்ப்புமுறை மற்றும் உயிர் ஜீன்களின் வழியாக, இந்த பந்தமும், பாரம்பரியமும் பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுகிறது. இந்த பயிரில் பூச்சிகள் விழ ஆரம்பித்திருப்பது மிக வருத்தமான விஷயம் தான்.

பழங்காலத்தில் குழந்தை திருமணம் நடைமுறையில் இருந்தது. இது மிகத் தவறான ஒரு வழக்கம். அதில் எந்த ஐயமுமில்லை. அதற்குப் பிறகு பெரும்பாலான குடும்பங்களில் தனது மகனுக்கோ, மகளுக்கோ அரசு நிர்ணயித்த வயதிற்காக காத்திருந்து... அந்த வயது வந்தவுடன் திருமணம் நடத்தி வந்தனர்.

அனால் இன்று, பல்வேறு காரணங்களால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் மிகத் தாமதமாக நடை பெறுகிறது. இந்த காரணங்களை ஆராய்ந்து களைய முடிந்தவற்றை களைந்து புறந்தள்ளுவது அவசியம் என்பதை நாம் உணரவேண்டும். இந்த காரணங்கள் அனைத்தும் நாமே உருவாக்கிக்கொண்டு... நம் சந்ததிகளின் வாழ்விற்கு நாம் போட்ட முட்டுக்கட்டை என்றால் மிகையாகது.

திருமணங்கள் தாமதமாவதற்கான காரணங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம். பெரும்பாலான குடும்பங்களில் ஏன் தங்களின் மகனுக்கு / மகளுக்கு இன்னும் திருமணம் முடிக்கவில்லை என்று கேட்டால், அதிர்ச்சியான பல காரணங்கள் வரும். சில இடங்களில் மிகக் குறைந்த வயது இடைவெளியில் தங்கை இருப்பதால், அவளுக்கு திருமணம் முடித்த பிறகு... நாம் திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்று பொறுத்திருக்கும் அண்ணன்களும் உண்டு. இது சரியான கருத்தும் கூட.

"எம் மக இன்னும் படிக்கணுங்கிறா", "எம் மயன் நல்லா செட்டிலாயிட்டு அப்பறம் பண்ணிக்கிரேங்கிறான்", "ஜாதகப் பொருத்தம் அமையல", "பொண்ணு கிடைக்க மாட்டேங்குது", "நம்ம தகுதிக்கு பொண்ணு கிடைக்கல", "நாம எதிர் பாக்குற ஒன்னு இருந்தா, இன்னொன்னு இருக்க மாட்டேங்குது", - என்று பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போவார்கள்.

இன்னும் சில வேடிக்கையான காரணங்கள் கூட உண்டு. என் நண்பன் ஒருவன் ஜெர்மனியில் இருக்கிறான். திருமணம் செய்து அந்த பெண்ணை ஜெர்மனிக்கு அழைத்து கொண்டு செல்ல வேண்டும். அந்த பெண்ணுக்கு ஜெர்மன் தெரிந்திருந்தால் சிறப்பாக இருக்கும். அதற்காக, ஜெர்மன் தெரிந்த பெண்ணாகவோ அல்லது ஜெர்மன் மொழி படிக்க ஆர்வமுள்ள பெண்ணாகவோ வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறான். இந்த நிபந்தனையோடு, வழக்கில் உள்ள நிறம், உடல் அளவு, அழகு, ஜாதி, மத, படிப்பு, அந்தஸ்து நிபந்தனைகளும் உண்டு... இதை படிக்கும்போது உதட்டோரம் சிரிப்பு வந்தாலும், உள்ளத்தில் நொந்தவர்கள் என்னை போல் பலராக இருக்கக்கூடும்.

இதில் பெரும்பாலான காரணங்களுக்கு பெற்றோரும், நாம் சார்ந்த இந்த சமுதாயமும் தான் காரணம். நாம் செட்டில் ஆவது என்று எதை அவர்களுக்கு கர்ப்பித்திருக்கிறோம்? இந்த செட்டில் ஆவது என்பது, நாம் ஏற்கனவே கொண்டுள்ள, அர்த்தமிலாத / அர்த்தம் பல கொண்ட "சும்மா" என்ற வார்த்தையை போல் இதுவும் ஒன்றே. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய நகரத்தில் பெரிய அளவிலான வீடு வேண்டும், நிரந்தரமான வேலை வேண்டும், திருமணத்திற்கு முன்பே சொகுசு கார் வாங்க வேண்டும், வெளி நாடுகளில் பணிபுரிய வேண்டும்....என்று பல வேண்டும்கள் இந்த டும்.. டும்... டும்-மை தள்ளிப்போட்டுகொண்டே போகின்றன.

வாழ்கையில் இவற்றை பெற வேண்டும் என்ற ஆவல் இருப்பதில் தவறில்லை. ஆனால், வாழ்கையை தொலைத்துவிட்டு இவற்றை மட்டுமே தேடிகொண்டிருப்பதில் என்ன இலாபம்? இதே போல் தான் இன்னும் படிக்க வேண்டும் என்பவருக்கும்... நான் இந்த டிகிரி படித்தேன், அந்த டிகிரி படித்தேன் என்று காலம் காலமாக ஏட்டு சுரைக்காய்களாக, உலகப் பொருளாதாரம், கொயஸ் தியரி, பேயஸ் தியரி என தியரிகளை மட்டுமே படித்துவிட்டு, குழந்தை வளர்ப்பு பற்றியும், குடும்ப நலம் பற்றியும், இனிமையான தாம்பத்தியம் பற்றியும் அறியாமல் இருப்பவர்களையும் நாம் என்ன சொல்வது?

படியுங்கள்.... வேண்டாம் என்பது என் கருத்து அல்ல. எதை நோக்கி நம் வாழ்வை செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து படியுங்கள். பெற்றோருக்கு பாரமாகவோ , உடன் பிறந்தோருக்கு தடையாகவோ அமைந்து விடாதீர்கள். வாழ்வியலையும் படியுங்கள். இன்று பெரும்பாலான திருமணங்கள் வரதட்சணையை மையமாக வைத்து தடைபெடுவது/தள்ளிப்போவது மிகச் சில இடங்களிலே மட்டுமே உள்ளது.

மேலே குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் இங்கு ஊற வைத்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அடித்து துவைப்போம். தொடருங்கள்... :-)




14 comments:

கோவி.கண்ணன் said...

//மேலே குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் இங்கு ஊற வைத்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அடித்து துவைப்போம். தொடருங்கள்... :-)//

:)

அச்சோ அச்சச்சோ !

பெற்றோர்கள் தவிர்த்து பசங்க திருமணத்தை தள்ளிப் போடவும் 'இயலாமைக்' காரணங்கள் உண்டு.

:)

கிரி said...

நியாயமான காரணங்கள் இல்லாமல் திருமணத்தை தள்ளிப்போடுவது தவறு தான்..

தாமதமா திருமணம் செய்து தாமதமாக குழந்தை பெற்று பின் அவன் பெரியவனாகி ..அவனிடம் இவர் யார் உன் தாத்தாவா! என்று மற்றவர்கள் கேட்கும் நிலைமை வந்து விடும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எந்த வய்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை கடமைகளை முடிக்க முடியும் என்ற தெளிவான கருத்து இல்லாமையே முக்கிய காரணம்..,

வாழ்க்கையில் செட்டில் என்பதற்கு பல அர்த்தம் இருக்கிறது. அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் காலா காலத்தில் குழந்தைகளை பெற்றுக் கொள்வது, அதை யாரும் யோசிக்காமல் போவதும் ஒரு காரணம்,

புலவன் புலிகேசி said...

வெளுத்துக் கட்டுங்க...நல்ல ஆய்வு..

vasu balaji said...

என்ன எதிர் பார்ப்புன்னு தெரியாததும் ஒரு காரணம். :). கடைசியில விட்டுக்குடுத்து குடுத்து கலியாணம் ஆனா போதும்னு பண்றது தான் நிறைய

ஸ்ரீராம். said...

காதல் தோல்வி ஒரு அல்ப காரணம்.

பழங்காலத்தில் குழந்தைத் திருமணம் செய்து வைத்தார்கள்...தவறு என்று கூறினாலும் அதன் ப்ளஸ் பாயண்டஸ் என்றால் திருமணம் இன்னாருடன் என்று நிச்சயமாகி விடுகிறது. பாதை மாற வாய்ப்பு குறைவு. திருமணம் உறுதி செய்யப் பட்டுவிட்டது

சிவாஜி சங்கர் said...

அவ்வவ்வ்வ்வ்...
என்ன தலைவரே செய்றது.. நமக்கு தலையில என்ன எழுதி இருக்கோ.. அவ்வவ்வ்வ்வ்

ரோஸ்விக் said...

கோவி.கண்ணன் - அண்ணே மிக்க நன்றி.! இயலாமைக் காரணங்கள் பலருக்கும் மனதளவில் உள்ள நோய் மட்டுமே. அதை அவர்கள் உணர்ந்து பக்குவப்படுத்திக்கொண்டால் திருமண பந்தங்களில் ஈடுபடலாம். இயலாமையை தவிர்க்கமுடியவில்லை எனில் அவர்கள் திருமண முயற்சிகள் செய்யாமல் இருப்பது நலம். :-)


கிரி - ஆமா கிரி, மிக்க நன்றி. நீங்கள் சொல்வதும் சரிதான். :-)


SUREஷ் (பழனியிலிருந்து) - ஆமாங்க சுரேஷ். பல அர்த்தமில்லாத காரணங்களைக் கூறி (உருவாக்கி) பலர் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்கள். மிக்க நன்றி.


புலவன் புலிகேசி - மிக்க நன்றி. நான் ஏற்கனவே கட்டிட்டேன் நண்பா! இப்ப நண்பர்களுக்காக வெளுக்கிறேன்.... :-))


வானம்பாடிகள் - பாலாஜி அண்ணே! மிக்க நன்றி. காதல் திருமணங்கள் சில இடங்களில் வெட்டு குத்துடன்... வெற்றி பெரும். நிச்சயம் செய்த திருமணங்கள் விட்டுக் கொடுத்தலுடன் வெற்றி பெரும். :-)


ஸ்ரீராம். - வாங்க நண்பா! அல்பக் காரணத்தை அடுத்த பதிவில் சொல்லி இருக்கிறேன். மிக்க நன்றி.

ரோஸ்விக் said...

Sivaji Sankar - வாங்க தல. தலையெழுத்தை ஜாதக நோட்டுல எழுதீருப்பாங்களா? :-)

ஹேமா said...

ஆழமாகச் சிந்தித்த பதிவு.சில நேரங்களில் சின்ன வயசுப் பெண்ணை வயது போனவருக்குக் கொடுக்கிறார்கள்.காரணம் வெளிநாட்டு மாப்பிள்ளையாம்.
அதேபோலத்தான்.கலயாணம் த்ள்ளிப் போவதுக்கும் ஆயிரம் காரணம் பெற்றோர் தரப்பிலும் பிள்ளைகள் தரப்பிலிருந்தும் வருகிறது.

Senthil said...

திருமணங்களே தவறு..அதை தள்ளி போட வேண்டாம் தள்ளி விடவேண்டும்..

ப்ரியமுடன் வசந்த் said...

மிக அருமையான பதிவு சில நேரம் அல்ல பல நேரம் நானும் யோசித்து கொண்டே இருக்கிறேன்....

சிலர் காசுக்கு,சிலர் கலருக்கு,சிலர் ஆசைக்கு இப்பிடி பல எதிர்பார்ப்புகளோட நேரத்தை வேஸ்ட் செய்துட்டு இருக்காங்க இதை ஒழித்து கிடைத்த வாழ்க்கையை சந்தோசமாய் ஏற்று வாழ கற்று கொள்ள வேண்ட்யிருக்கிறது ரோஸ்விக்...!

ரோஸ்விக் said...

ஹேமா - ஆமா தோழி... மிக நன்றி. நீங்க சொல்ற மாதிரி பல இடங்கள்ள நடக்குது.


Meriaza - உங்கள் கருத்துக்கு நன்றி. வாழ்த்துகள்.


பிரியமுடன்...வசந்த் - நன்றி வசந்த். எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டும் தான். ஆனால், நிறைய இருக்கக்கூடாது. சிலவற்றில் விட்டுக்கொடுக்க வேண்டும். எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் ஒரு தீர்க்கம் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. :-)

ஹுஸைனம்மா said...

இன்னிக்குத்தான் இந்தப் பதிவு என் கண்ணில பட்டுது. இதே கருத்தை வலியுறுத்தி முன்பு நானும் ஒரு பதிவு எழுதியிருக்கேன், பாருங்க.

செட்டிலானதுக்கப்புறம் மேரேஜ்