Monday, January 11, 2010

தெரிந்துகொள்வோம் - 6

*&* நேப்பாள வீரர் "ஆக்ரிட்டா ஷெர்பா" என்பவர் பத்து முறை எவரெஸ்ட்டை அடைந்ததால், அவருக்கு "பனிச் சிறுத்தை மனிதன்" என்ற சிறப்பு பட்டம் உண்டு.

*&* தேசியக் கொடியில் "ஆலமரம்" இடம்பெற்றுள்ள நாடு லெபனான்.


*&* மாட்டுச்சாண எரிபொருளில் உள்ள முக்கியமான வாயு "மீத்தேன்".

*&* முயலின் உடலில் அபாய அறிவிப்புக் கொடுக்கும் பகுதி வால்.

*&* முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் ஆண் இன மீன் "கடல் குதிரை".


*&* பாங்க ஆஃப் இங்கிலாந்து 1804-ம் ஆண்டு முதல் 1806-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் டாலர்களான வெள்ளி டாலர் நாணயங்களை கொள்ளுப் பட்டறையால் அடித்து வெளியிட்டது.

*&* விண்வெளியில் ஆறுமுறை பயணித்த பெருமை "கேப்டன் ஜான் வாட்ஸ் எங்" என்ற அமெரிக்கருக்கு உண்டு.

*&* சயாமிய மொழியில் "நான்" என்ற சொல்லை ஒன்பது விதமான சொற்களால் வெளிப்படுத்தலாம். உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு இல்லை.

*&* 13 நாட்டு எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா.

*&* உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்ஸிகோ வளைகுடா.

*&* நீர் பனிக்கட்டியாக உறையும்போது அதன் பரிமாணம் அதிகமாகும்.

*&* அமெரிக்காவின் கொடி "ஓல்டு குளோரி" எனப்படுகிறது.


*&* "அமாரிக்" எத்தியோப்பியாவில் பேசப்படும் மொழி.

*&* மூங்கிலில் சுமார் 500 வகைகள் உள்ளன.

*&* குரங்குகளுக்குப் பல வகையான நிறங்களைப் பிரித்தறியும் ஆற்றல் உண்டு.

*&* முப்பதாம் வருட விழாவை ஆங்கிலத்தில் "பெர்ல் ஜூப்ளி" என்று அழைப்பார்கள்.

*&* பிச்சைக்காரர்களுக்கு பென்ஷன் வழங்கிய நாடு - இலங்கை.

*&* சீக்கியர்களின் கடைசி குரு - "குரு கோவிந்த் சிங்".

*&* "சகாரா" 35 லட்சம் சதுர மைல் பரப்பில் உள்ளது.

*&* சந்திரனைப் போன்று வீனஸ் கோளுக்கும் பிறைகள் உண்டு.

*&* பாலில் இல்லாத சத்து "இரும்புச்சத்து".

*&* நமது நாட்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கும் மையம் "டோராடூன்" என்ற இடத்தில் உள்ளது.

*&* நமது இந்திய நேரம் "அலகாபாத்" என்ற இடத்தின் நேரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.






Sunday, January 10, 2010

கோத்தா திங்கியில் கொட்டமடித்த மங்கிகள்...


பொறுப்பி-1 - இது சிங்கைப் பதிவர்கள் சிலரின் மலேசிய இன்பச் சுற்றுலா.

பொறுப்பி-2 - நாங்கள் அங்கு கண்ட நம் முன்னோர்களான குரங்குகளைப் பற்றி இந்தப் பதிவில் ஒரு வரியே சொல்ல முடிந்த வருத்தத்தாலும்... நம் முன்னோர்களை சிறப்பிக்கும் வகையிலும் மட்டுமே இந்த தலைப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்பி-3 - இச்சுற்றுலாவில் கலந்து இன்பம் பெற்ற அன்பு பதிவர்களுக்கும்... இந்த இடுகையின் தலைப்பிற்கும் நேரடி சம்பந்தமில்லை (முன்னோர்களுடனான சம்பந்தம் தவிர) .

பக்கத்துல உள்ள நாடுகளை சடுகுடு விளையாட்டுல கோட்டைத் தொடுற மாதிரி குடுகுடுன்னு போயி பார்க்க முடியுங்கிறது தான் சிங்கையில் உள்ளவங்களுக்கு உள்ள ஒரு பெரிய கொடுப்பினை. அப்புடித் தாங்க நம்ம சிங்கைப் பதிவர்களில் நான்(ரோஸ்விக்), வெற்றி கதிரவன், ஜெகதீசன், அப்பாவி முரு மற்றும் சென்னையிலிருந்து வந்திருந்த அவரது நண்பர் பிரேம் குமார் அனைவரும் மலேசியாவில் உள்ள கோத்தா திங்கி (Kotta Tinggi)-க்குப் போனோம். யாருணே திட்டுறது... அந்த ஊருப் பேரை தமிழ்ல அப்படித் தான் எழுதீருந்தாங்க. இந்த சுற்றுலா மிகக் குறைந்த செலவில்(ஏறத்தாழ S$20), அதிக அலைச்சல் இல்லாமல் மிகவும் இன்பம் தரும் வகையில் இருந்துச்சு.

காலையில 9 மணிக்கு சிங்கப்பூர் Woodlands Interchange-ல இருந்து டவுன் பஸ்சுல மலேசியாவுக்குக் கிளம்புனோம். எங்கே காலச் சாப்பாடுக்கு நம்மள அலையவிட்டுருவானுகலோனு மூணு சுவையில பன்னு வாங்கிட்டுப் போனேன். கடைசியா நமக்கு பன்னு கொடுத்துட்டாய்ங்க... மலேசியா எல்லையில உள்ள ஜோகூர் பாரு (Johar Bharu) போயி சேர்ந்தவுடனே, ஏல மக்கா நேரம் ஆச்சு வாங்க சீக்கிரமா கோத்தா திங்கிக்குப் போகலாம்னு சொன்னேன். ங்கொக்கா மக்கா நான் ஜோகூர் வந்துருக்குறதே திங்கிறதுக்குத் தான். எவனாவது சீக்கிரம் கிளம்புன்னு சொன்னீங்க, அப்புறம் மத்தியான சாப்படு வரைக்கும் இங்கே இழுத்துக் கடத்திருவேன்னு ஞானப் பித்தன்கிட்ட இருந்து மிரட்டல் வந்தது.

நான் பல முறை மலேசியா போயிருந்தாலும், இந்த ஊருக்கு இது தான் முதல் முறை. இறங்கி ரெண்டு வீதி தாண்டிப் போனா ஏதோ நம்ம மதுரை பக்கம் நுழைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங்கு... ஒரு கோயிலு, நிறைய பூக்கடை, சாம்பிராணி, ஊதுபத்தி இன்னும் பல பூஜை சாமான்கள் விக்கிற கடை நிறைய இருந்தது. பத்தடிக்கு ஒரு கைரேகை, ஜோசியம் பாக்குற நம்ம ஆளுக. பாவம்ணே உங்களுக்கு நல்ல காலம் வருது, உங்க வாழ்கையில பெரிய முன்னேற்றம் ஏற்படப் போகுதுன்னு எல்லோருக்கும் சொல்லிவிட்டு... அவங்க மட்டும் இன்னும் ஒரு ஒட்டுத் துணிய விரிச்சுகிட்டு பிளாட் ஃபார்ம்ல உக்காந்து இருக்காங்க.

அஞ்சு பேரும் ஒரு சாப்பாட்டுக் கடைக்குள்ள புகுந்து, சாப்பிட்டிட்டு வெளிய வரும்போது, யானை புகுந்த கரும்புத் தோட்டம் மாதிரி அந்த ஹோட்டல் இருந்துச்சு... இவ்வளவு சாப்பிட்டும் கடைசியா பில்லு சும்மா RM. 24 (மலேசியா ரிங்கிட்டு) (சிங்கை வெள்ளி 10) தான் வந்துச்சு. அப்புடியே ஓடிப் போயி ஒரு பஸ்ஸைப் பிடிச்சு 45 நிமிடப் பயணத்துல கோத்தா திங்கி நகரை அடைந்தோம். போற வழி முழுவதும் பல ஏற்ற இறக்கங்கள் மற்றும் வலைவுகளுடனான பச்சைபசேல்-னு மரம் செடிகள். மிக அருமை. பெரும்பாலான மலாய்காரங்களுக்கு, ஆங்கிலம் அதிகம் தெரியாதுண்ணே. எவ்வளவு பஸ் டிக்கெட்டுன்னு கேட்டா மலாய்ல பதில் சொல்ல... நாங்க திணறிபோயி கடைசியா கால்குலேட்டர்தான் உதவுச்சு...

ம்ம்ம்... சொல்லவே இல்லையே... கோத்தா திங்கில ஒரு அருவி இருக்கு. அதுல போயி குளிச்சு ஆட்டம் போட்டு வரத்தான் இந்த பயணம். நகர் பகுதியில இருந்து அருவி இருக்கிற இடத்துக்கு 15 நிமிடம் கார்ல போகணும். இரண்டு தமிழ் பேசும் இந்திய வம்சாவளி ஓட்டுனர்களின் காரை வாடகைக்கு எடுத்து சென்றோம். அங்கயும் பேரம் பேசணும்ணே... அந்த அருவி இருக்கிற இடத்துக்கு நுழைவாயில் கட்டணமும் உண்டு(RM. 10). கண்ணில் படும்படியா எங்கள் உடை மற்றும் நொறுக்குத் தீனி பைகளை வைத்துவிட்டு நங்கு நங்குன்னு கொட்டும் அருவியில குளித்து ஆட்டம் போட்டோம். அப்பத் தானே நம்ம முன்னோர்கள் நம்மள சந்திக்க வந்தாங்க... தாவித் தாவி வயித்துல ஒரு குட்டியையும் தூக்கிகிட்டு இது போன்ற உணவு பைகளை குறி வைத்து அவய்ங்க போட்ட ஆட்டம் தாங்கலண்ணே... (அப்பாடா தலைப்பு வச்சதுக்கு ஒரு காரணம் சொல்லியாச்சு...)


ஆசை தீர ஆட்டம் போட்டுட்டு... அருவியின் மேல் பகுதிக்கு போனோம்னே. அங்க போனா நமக்கு முன்னாடி ஒரு பெரிய கூட்டமே, நீச்சல் குளம் போல இருக்கிற பகுதிகள்ல நீந்தி விளையாடிகிட்டு இருந்தாங்க. அப்பத்தானே புரிஞ்சது கீழ குளிக்கும்போது எதுக்கு நமக்கு குளிரலைன்னு... அங்க ஒரு பெரிய அருவி இருந்தது. ஆனால் அதன் அடிப் பகுதியின் ஆழம் அதிகம் என்பதால் அங்கு குளிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. நாங்களும் நல்ல நீந்தி குளிச்சோம்ணே... அங்க இருந்த மீன் குஞ்சுகள் இலவசமாவே எங்கள் பாதங்களுக்கு மசாஜ் பண்ணி விட்டுச்சுண்ணே. கால்ல இருந்த அழுக்கு பூராம் போயிடுச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டோம்... அப்பாடா இன்னும் ஒரு மாசத்துக்கு குனிஞ்சு குளிக்க வேண்டிய அவசியம் இல்லன்னு... :-))











அந்த அருவி அழகோட போட்டோ எடுக்கனும்னு கல்யாண உடைகளோட சில தம்பதிகள் வந்திருந்தாங்கண்ணே. சில வெளிநாட்டு தேனிலவு ஜோடிகளும் இருந்தாங்க... எப்படி கட்டி புடிச்சுகிட்டே நீச்சல் அடிக்கிறதுன்னு அவங்க நாடுகள்ல சிறப்பு பயிற்சி பட்டறைகள் நடைபெறுகிறதுன்னு நினைக்கிறேன்ண்ணே. அப்படி நம்ம நாட்டுல எதுவும் பயிற்சி பட்டறைகள் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்கண்ணே... நம்ம இளம் பதிவர்களுக்கு உதவியா இருக்கும். :-)










திரும்ப ஜோகூர் பாரு வந்து மாலை 4.30 மணியளவில் மதிய உணவு என்ற பேரில் மிகுந்த சுவையுடன் இருந்ததால சில பல கொத்து பரோட்டாகளையும், புட்டு வகைகளையும் வயிற்றுக்குள் அமுக்கி (வயிறாரனு சொல்ல முடியாது... ஏன்னா வயிறு அழும் அளவுக்கு) திரும்ப சிங்கை வந்து சேர்ந்தோம். இந்த ஊரு ஹோட்டல்கள்ல சாப்பாட்டு அயிட்டம் சொன்ன உடனே... தண்ணி எதுவும் சொல்லீட்டிங்களானு கேட்டாங்க. எனக்கு ஒன்னும் புரியல. அண்ணன் முரு தயவால காப்பி, பால் இவற்றை இங்கு பொதுவா தண்ணின்னு சொல்லுவாங்கனு புரிஞ்சுகிட்டேன். அவற்றை குடிச்சதுக்கப்புறம் முழுவதும் புரிஞ்சுகிட்டேன். :-) அங்க உள்ள தியேட்டர்ல போயி Avatar படம் 3D-ல பாக்கலாம்னு... தியேட்டர்ல இருந்த பொண்ணுகிட்ட அண்ணன் முரு போயி இந்தப் படம் பார்க்க கண்ணாடி தருவீங்களானு கேட்க... நாங்க அந்த பொண்ணு போட்டிருந்த கண்ணாடியத்தான் கேட்டமோனு நினச்சு ஹா...ஹா..னு சிரிச்சிட்டு.... நீங்க வேணும்னா வேட்டைக்காரன் பாருங்கன்னு சொல்ல... உன் 3D-யும் வேணாம் ஒன்னும் வேணாம் போ-D -னு தலை தெறிக்க ஓடி வந்துட்டோம்.

வாய்ப்பு அமைஞ்சா நண்பர்கள் கூட்டத்தோட இந்த இடத்துக்குப் போயி சந்தோசமா கும்மி அடிச்சிட்டு வாங்கண்ணே. உடல் அழுக்கு மட்டுமல்ல... மனக்கசடுகளும் போன மாதிரி இருக்கும்.



Thursday, January 7, 2010

இந்த ஏர்செல்காரன் அட்டூழியம் தாங்கலையப்பா...

ஒரு காலத்துல மொபைல் சேவை வழங்குவதில் BPL நிறுவனம் முன்னணியில் இருந்தது. அப்பவெல்லாம், நமக்கு அழைப்புகள் வந்தாக்கூட அதற்கும் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படும். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், பழைய தொலைபேசி சந்தா முறைகளைப் போல, மாதம் குறைந்தபட்சம் இவ்வளவு கட்டாயக் கட்டணம், அதற்குமேல் நீங்கள் தொடுக்கும் அழைப்புகளுக்கும், எடுக்கும் அழைப்புகளுக்கும் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்.

அப்போ இருந்த மொபைல்களுக்கெல்லாம் கொம்பு மாதிரி ஒரு பக்கம் மட்டும் ஆண்டனா நீட்டிகிட்டு இருக்கும். அதோட கனம் மட்டும் கால் கிலோவுக்கு மேல இருக்கும். இவ்வளவு பெரிய கனத்தையும் சட்டைப் பையில்தான் போட்டுக்கிட்டு நம்ம ஆளுக அலப்பறையக் கொடுப்பாங்க. அந்த ஆண்டனா கம்பி சட்டைக்கு வெளில தெரிஞ்சாத் தான் நம்மகிட்டயும் மொபைல் இருக்குனு நம்புவாங்க... இந்த சிம் கார்டு எல்லாம் இப்போ வாங்குற மாதிரி பொட்டி கடையில எல்லாம் வாங்க முடியாது. அவங்க அலுவலகத்துக்கு நேரடியா போயி, சிவப்பு சிவப்பா அழகா அங்க உங்காந்து இருக்குற புள்ளைக்கிட்ட நம்ம மொபைல குடுத்து, நீங்களே கழட்டி, சிம் கார்டை போட்டு செட் பண்ணி கொடுத்துருங்கன்னு ஒரு கூட்டமே காத்துகிடக்கும். அதுல அந்த புள்ளைகளையும் எப்படியாவது செட் பண்ணிரலாம்னு ஒரு கூட்டம் அடிக்கடி அங்க போகும்.

அந்த புள்ளைக அதுக்கு மேல... அந்த மொபைல் சேவை தருகிற கம்பெனியே அவங்கோட்டு மாதிரி ரொம்ப பிகு பண்ணுவாளுக. 1999 & 2000 -வது ஆண்டுகள்ல இந்த BPL நிறுவனத்துக்குப் போட்டியா Aircel நிறுவனம் களம் இறங்குச்சு. எங்க டவரு தமிழகத்துல 90 இடத்துல இருக்கு. அதுனால எந்த ஒரு பெரிய நகரத்துக்கு நீங்க போனாலும் எங்க டவரு கவரு ஆகும்னு அதிரடியா விளம்பரம் பண்ணினாங்க. என் நண்பர் ஒருத்தரு இந்த நிறுவனத்துல, மொபைல் சேவை வழங்குகிற பிரதிநிதியா வேலைக்கு சேர்ந்தாரு. அவருக்குப் பிரதி பிரதியா நிதி வந்துச்சோ இல்லையோ... அந்த ஏரியா முழுக்க அவருக்கு மவுசு கூடிருச்சு.

எவன் எவன் புதுசா மொபைல் வாங்கினானோ... அவன் மொபைல்ல நேரம் செட் பண்ணக்கூட இவருகிட்ட வருவாங்க... என் நண்பருக்கும் அவ்வளவா தெரியாது... எவன் எத கேட்டாலும், அண்ணே! நாளைக்கு ஆபீஸ்-க்கு வாங்க. சரி பண்ணிடலாம்னு... நிறுவன எம்.டி கணக்கா சொல்லிடுவாரு. கொஞ்ச நாள் கழிச்சு அந்த நண்பருக்கு அவரது நிறுவனமே ஒரு மொபைல கையில குடுத்துருச்சு.... அவரு அலும்பு தாங்கல... எவென் புதுசா கணைக்க்ஷன் வாங்குனாலும், அவனுக்கு அடுத்த நாள் போன் பண்ணி அண்ணே... உங்க நம்பரு ஆக்டிவேட்டு ஆயிடுச்சு. எதாவது பிரச்சனைனா எங்கிட்ட சொல்லுங்கன்னு... என்னமோ அந்த ஏரியா ரௌடி மாதிரி சொல்லுவாரு.

மற்ற நண்பர்கள் முன்னாடி இவரு எப்போதும் பிசியா இருக்குறமாதிரி செவாலியே அளவுக்கு நடிச்சுகிட்டு இருப்பாரு. இவருக்கு அவுட்கோயிங் ஃப்ரீன்னு காட்டுறதுக்காக... யாரு மொபைலுக்காவது கூப்பிட்டு, அண்ணே! எங்கே இருக்கிக-ன்னு கேப்பாரு. தப்பித் தவறி எதிர் பார்ட்டி... சொல்லுங்க நான் வீட்டுல தான் இருக்கேன்னு சொல்லிட்டா போதும்... இவரு கொஞ்சம் அதட்டலா... என்னாண்ணே! மொபைல வச்சுகிட்டு வீட்டுல இருக்கீகன்னு ஒரு பிட்டைப் போட்டு அவரை ஒட்டுமொத்தமா வீட்டை விட்டு விரட்டவோ அல்லது அவராகவே தெருவுக்கு வரவோ பெரும் முயற்சியை பண்ணிக்கிட்டு இருப்பாரு.

ஏரியா-ல யாரை பார்த்தாலும் வணக்கம்... கை குலுக்கல்... அப்பப்பா... தாங்கமுடியல. அப்படித் தான் ஒரு நாளு நம்ம ஆளு திருச்சி மெயின்காட்கேட்டுல இருந்து உறையூர் பக்கமா வண்டில போயிகிட்டு இருந்தாரு. எதுத்தாப்புல ஒருத்தரு, உறையூர் பக்கமா இருந்து அவரு வண்டில வந்துகிட்டு இருந்தாரு... அவரு வலதுபக்கமாத் திரும்பி தில்லைநகர் ஆர்ச்சுக்குள்ள போறதுக்காக, இண்டிகேட்டர் போடாம... வலது கையை நீட்டிகிட்டே வந்தாரு... நம்ம மொபைலு ஆப்பீசரு பழக்க தோஷத்துல... நமக்கு தான் கை கொடுக்க வர்றாருன்னு நினச்சு... வண்டிய ஸ்லோ பண்ணி அந்த ஆளு கையை எட்டி புடிக்க... அவரு நடு ரோட்டுல பப்பரப்பேன்னு விழுந்துட்டாரு.

நானும் சில நண்பர்களும் வேற வேற வண்டிகள்ள வந்துகிட்டு இருந்தவய்ங்க போயி விழுந்த ஆளை தூக்கிவிட்டோம். அவரு எங்க நண்பரை விட்ட டோசு... இன்னும் எங்க காதுக்குள்ள இருக்குதுன்னா பாருங்களே. நண்பர்கிட்ட ஏன்யா இப்படி செஞ்சே-னு காரணம் கேட்டதும்... அவரும் வெள்ளந்தியா அந்த காரணத்த சொல்ல... வயிறு வலிக்க நடு ரோட்டுல சிரிக்க வேண்டியதாப் போச்சு...

இதைப் போயி நம்ம கூட்டளிக ஏரியா-வுல சொல்ல... இன்னைக்கும் அவர் என்ன பண்ணினாலும் "இந்த ஏர்செல்காரன் அட்டூழியம் தாங்கலையப்பா"-னு சொல்றாங்க. ச்சே! வாங்குற சம்பளத்துக்கு எப்படியெல்லாம் நிர்வாகத்துக்கு பேர சம்பாதிச்சுக் கொடுக்குரானுகப்பா...


Monday, January 4, 2010

தள்ளிப்போகும் திருமணங்கள் யாராலே?-2

இதன் பகுதி-1 மிகுந்த ஆதரவளித்த அன்பர்களுக்கு மிக்க நன்றி.
படிப்பு என்பதும் செட்டில் ஆகவேண்டும் என்பதும் ஓரிரு வருடங்களில் நிறைந்துவிடுவது அல்ல. அது ஆயுள் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் ஒரு வழக்கு. அதை திருமணத்திற்கு பிறகும் தொடரலாம். :-)


பொதுவாகவே இந்திய முழுவதும் ஆண்களை விட பெண்கள் மிகக் குறைவாகத்தான் உள்ளனர். இருப்பினும் இப்போது நாம் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அல்லாடும் அளவிற்கு அல்ல. முன்பு சமுதாய அமைப்புகளில் குடும்பங்கள் தன் ஜாதி சொந்த பந்தங்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளில் இருந்தனர். இன்று தொலை தொடர்பு சாதனங்கள் பெருகி இருந்தாலும், சொந்த பந்த தொடர்புகள் குறைந்து தான் உள்ளனர். பணக்காரனாக வேண்டும் என்ற பந்தயத்தில், பந்தங்களை இழந்துகொண்டிருக்கிறோம். மனை மட்டும் பெரிதாகி மனங்கள் சிறுத்து போகி விட்டன.


இந்த பந்தங்களின் இடைவெளியை குறைக்க பல மேட்ரிமோனியல் இணையதளங்கள் உதவினாலும்.... இதன் பயன்பாடு அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேரவில்லை. இதன் சில பாதகங்களால், பலரும் பயன்படுத்தவும் தயங்குகின்றனர். தரகர்களின் வாய் ஜாலங்களுக்கு பயந்தும் சிலர் திருமண நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடியாமல் தடுமாறுகின்றனர்.


ஜாதகம் சரியில்லை என்றோ, பொருத்தம் அமையவில்லை என்றோ, தோஷம் இருக்கிறது என்றோ கூறி பலரை முதிர் கன்னிகளாக ஆக்கிவைத்திருக்கும் நம் மத அமைப்புகளை என்னவென்று கூறுவது? இன்றைய இளைஞர்களில் பலருக்கும் இந்த ஜாதக அமைப்புகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், பெற்றோர்கள் மனம் புண்படக்கூடாது என்றும்... சமுதாயத்தின்(சம்பந்திகளின்) வற்புறுத்தலுக்காகவும் தங்கள் திருமண நாளை தள்ளிபோட்டுகொண்டு புளுங்குகிரார்கள். இது அவசியமா என்று பலரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த வரிகளை நான் யாரையும் புண்படுத்த எழுதவில்லை. ஆணை பெண்ணுக்கும், பெண்ணை ஆணுக்கும் பிடித்து, குடுபத்தினர்கள் அனைவரும் திருப்தியாக இருந்தாலும், இந்த ஜாதகப் பொருத்தம் என்ற பொருத்தமில்லாத காரணத்தை கூறி அவர்களை முதிர்கன்னிகளாக/கணவான்களாக வாட்டிவதைப்பது சரியா?


பலரும் தங்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை சரியாக அறியாமல் வரண் தேடுவதும், தாங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் குடும்ப அமைப்பு, அறிவு, படிப்பு, அழகு போன்றவற்றை முறையாக வரிசைப்படுத்தத்(Priorities) தெரியாமல் அனைத்திலும் முதன்மையான ஒரு (Ideal) துணையை தேடுவதும் சாத்தியத்தை, சாதனை அளவுக்கு உயர்த்திவிடுகிறது.
எதிர்ப்புகளில் மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளிலும் வளைந்துகொடுக்கும்(Flexibility) தன்மையுடன் இருந்தால், சூழ்நிலைகளை கையாளுவது மிக எளிதாக இருக்கும். முடிந்தவரை எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். திரைநட்சத்திர அழகிகளை திருமண பந்தத்தில் எதிர்பார்க்காதீர்கள். குறை சொல்ல முடியாத (முகத்) தோற்றம் இருந்தால் போதும் என தேடுங்கள்.


இப்ப என்ன அவசரம்... மெதுவா பண்ணிக்கலாம் என்று அலட்சியப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்கவோ, உங்கள் தாயின் நோய்க்கு சிகிச்சை அளிக்கவோ அலட்சியம் செய்வீர்களா?? இதுவும் அது போன்றது தான் என எண்ணுவதில் என்ன தவறு இருக்கக்கூடும்? நான் இங்கு திருமண பந்தத்தில் உடன்படாதவர்களுக்கு சொல்லவில்லை. திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமே இது.


இன்னும் பலர் காதல் தோல்வி எனும் காரணம் சொல்லக்கூடும். அது தான் முடிவு தெரிந்து விட்டதே. இன்னும் என்ன தயக்கம்?? காதலில் தோற்றால் வாழ்வில் ஜெயிக்கக் கூடாதா?? காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. அது உங்களை விட்டு நீங்கியும் போகக்கூடும்... உங்கள் உள்ளேயே நீர்த்தும் போகக்கூடும். தோற்ற காதலுக்குப் பிறகு வரும் திருமண உறவை, உங்கள் காதலை வெளிப்படுத்தி வாழ்க்கையில் ஜெயிக்க கிடைத்த வாய்ப்பாக ஏன் எண்ணக்கூடாது?


இங்கு நம்மில் பலர் வாழ்கை துணையை தேடுவதை விடுத்து... சில நிறுவனங்கள் தேடுவது போல் (searching good resource with high salary) செய்து கொண்டிருக்கிறோம்.... இதுவும் திருமணம் தள்ளிப்போவதில் முக்கிய காரணம். இன்னும் சில வீடுகளில் வரன் பற்றிய போதிய விபரங்களை அறிந்துகொள்ளும் முயற்சியாக, நேர்முகத் தேர்வு போல் நடத்திக்கொள்கிறார்கள். சில அறிவு ஜீவி அண்ணன்கள் வரனின் பணி சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப விபரங்களையும் கேட்டுத் தொலைக்கிறார்கள்.



வாழ்கையை திட்டமிடுங்கள் உங்கள் திருமணத்தோடும் சேர்த்தே.... வாழத்தானே வாழ்கை! வீழ்வதற்கு இல்லை!!



Sunday, January 3, 2010

தள்ளிப்போகும் திருமணங்கள் யாராலே?

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று ஒரு வழக்கு தமிழில் உண்டு. உண்மைதான். ஒரு திருமணம் என்பது அந்த தலைமுறையோடு முடிந்துவிடுவதல்ல... தம்பதியரின் வளர்ப்புமுறை மற்றும் உயிர் ஜீன்களின் வழியாக, இந்த பந்தமும், பாரம்பரியமும் பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுகிறது. இந்த பயிரில் பூச்சிகள் விழ ஆரம்பித்திருப்பது மிக வருத்தமான விஷயம் தான்.

பழங்காலத்தில் குழந்தை திருமணம் நடைமுறையில் இருந்தது. இது மிகத் தவறான ஒரு வழக்கம். அதில் எந்த ஐயமுமில்லை. அதற்குப் பிறகு பெரும்பாலான குடும்பங்களில் தனது மகனுக்கோ, மகளுக்கோ அரசு நிர்ணயித்த வயதிற்காக காத்திருந்து... அந்த வயது வந்தவுடன் திருமணம் நடத்தி வந்தனர்.

அனால் இன்று, பல்வேறு காரணங்களால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் மிகத் தாமதமாக நடை பெறுகிறது. இந்த காரணங்களை ஆராய்ந்து களைய முடிந்தவற்றை களைந்து புறந்தள்ளுவது அவசியம் என்பதை நாம் உணரவேண்டும். இந்த காரணங்கள் அனைத்தும் நாமே உருவாக்கிக்கொண்டு... நம் சந்ததிகளின் வாழ்விற்கு நாம் போட்ட முட்டுக்கட்டை என்றால் மிகையாகது.

திருமணங்கள் தாமதமாவதற்கான காரணங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம். பெரும்பாலான குடும்பங்களில் ஏன் தங்களின் மகனுக்கு / மகளுக்கு இன்னும் திருமணம் முடிக்கவில்லை என்று கேட்டால், அதிர்ச்சியான பல காரணங்கள் வரும். சில இடங்களில் மிகக் குறைந்த வயது இடைவெளியில் தங்கை இருப்பதால், அவளுக்கு திருமணம் முடித்த பிறகு... நாம் திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்று பொறுத்திருக்கும் அண்ணன்களும் உண்டு. இது சரியான கருத்தும் கூட.

"எம் மக இன்னும் படிக்கணுங்கிறா", "எம் மயன் நல்லா செட்டிலாயிட்டு அப்பறம் பண்ணிக்கிரேங்கிறான்", "ஜாதகப் பொருத்தம் அமையல", "பொண்ணு கிடைக்க மாட்டேங்குது", "நம்ம தகுதிக்கு பொண்ணு கிடைக்கல", "நாம எதிர் பாக்குற ஒன்னு இருந்தா, இன்னொன்னு இருக்க மாட்டேங்குது", - என்று பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போவார்கள்.

இன்னும் சில வேடிக்கையான காரணங்கள் கூட உண்டு. என் நண்பன் ஒருவன் ஜெர்மனியில் இருக்கிறான். திருமணம் செய்து அந்த பெண்ணை ஜெர்மனிக்கு அழைத்து கொண்டு செல்ல வேண்டும். அந்த பெண்ணுக்கு ஜெர்மன் தெரிந்திருந்தால் சிறப்பாக இருக்கும். அதற்காக, ஜெர்மன் தெரிந்த பெண்ணாகவோ அல்லது ஜெர்மன் மொழி படிக்க ஆர்வமுள்ள பெண்ணாகவோ வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறான். இந்த நிபந்தனையோடு, வழக்கில் உள்ள நிறம், உடல் அளவு, அழகு, ஜாதி, மத, படிப்பு, அந்தஸ்து நிபந்தனைகளும் உண்டு... இதை படிக்கும்போது உதட்டோரம் சிரிப்பு வந்தாலும், உள்ளத்தில் நொந்தவர்கள் என்னை போல் பலராக இருக்கக்கூடும்.

இதில் பெரும்பாலான காரணங்களுக்கு பெற்றோரும், நாம் சார்ந்த இந்த சமுதாயமும் தான் காரணம். நாம் செட்டில் ஆவது என்று எதை அவர்களுக்கு கர்ப்பித்திருக்கிறோம்? இந்த செட்டில் ஆவது என்பது, நாம் ஏற்கனவே கொண்டுள்ள, அர்த்தமிலாத / அர்த்தம் பல கொண்ட "சும்மா" என்ற வார்த்தையை போல் இதுவும் ஒன்றே. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய நகரத்தில் பெரிய அளவிலான வீடு வேண்டும், நிரந்தரமான வேலை வேண்டும், திருமணத்திற்கு முன்பே சொகுசு கார் வாங்க வேண்டும், வெளி நாடுகளில் பணிபுரிய வேண்டும்....என்று பல வேண்டும்கள் இந்த டும்.. டும்... டும்-மை தள்ளிப்போட்டுகொண்டே போகின்றன.

வாழ்கையில் இவற்றை பெற வேண்டும் என்ற ஆவல் இருப்பதில் தவறில்லை. ஆனால், வாழ்கையை தொலைத்துவிட்டு இவற்றை மட்டுமே தேடிகொண்டிருப்பதில் என்ன இலாபம்? இதே போல் தான் இன்னும் படிக்க வேண்டும் என்பவருக்கும்... நான் இந்த டிகிரி படித்தேன், அந்த டிகிரி படித்தேன் என்று காலம் காலமாக ஏட்டு சுரைக்காய்களாக, உலகப் பொருளாதாரம், கொயஸ் தியரி, பேயஸ் தியரி என தியரிகளை மட்டுமே படித்துவிட்டு, குழந்தை வளர்ப்பு பற்றியும், குடும்ப நலம் பற்றியும், இனிமையான தாம்பத்தியம் பற்றியும் அறியாமல் இருப்பவர்களையும் நாம் என்ன சொல்வது?

படியுங்கள்.... வேண்டாம் என்பது என் கருத்து அல்ல. எதை நோக்கி நம் வாழ்வை செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து படியுங்கள். பெற்றோருக்கு பாரமாகவோ , உடன் பிறந்தோருக்கு தடையாகவோ அமைந்து விடாதீர்கள். வாழ்வியலையும் படியுங்கள். இன்று பெரும்பாலான திருமணங்கள் வரதட்சணையை மையமாக வைத்து தடைபெடுவது/தள்ளிப்போவது மிகச் சில இடங்களிலே மட்டுமே உள்ளது.

மேலே குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் இங்கு ஊற வைத்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அடித்து துவைப்போம். தொடருங்கள்... :-)