Saturday, March 19, 2011

தேர்தல் வாக்குறுதிகள்/அறிக்கைகள் ச்சீ... த்தூ...

ஆரம்பிச்சுட்டாங்கயா. தினந்தோறுமே இவங்க மஞ்சத் துண்டைப் போட்டுக்கிட்டும், பச்சை பர்தாவைப் போர்த்திக்கிட்டும் கொடுக்கிற அறிக்கை தாங்காது. ராசிபலன் பார்க்கிற இவங்களெல்லாம் திராவிடத் தலைவர்கள். ச்சீ த்தூ. உங்களுக்கும் வெட்கமில்லை. எங்களுக்கும் வெட்கமில்லை. இந்த துஷ்டர்கள் அதிகாரத்தில் இருந்தால் துஷ்பிரயோகம் பண்ணாமல் வேறென்ன செய்வார்கள்?

தேர்தல் திருவிழா வேறு வந்துவிட்டது. இந்த ஈன/மான தலைவர்கள் சொகுசு காரில், தெய்வங்கள் தேர்பவனி வருவது போல வரத்தொடங்கி விடுவார்கள். பொரிகளுக்குப் பதிலாக, பொன்னாடைகளும், மாலைகளும், பூக்களும் தூவி தங்களது பக்திகளைப் படையலாக்கத் தொடங்கிவிடுவார்கள். கட்டவுட்டுகளில் மட்டுமே உயர்ந்தவர்கள் இந்த அரசியல் தெய்வங்கள் என்பதை உணராத பக்தப் பதறுகள். இந்த வெள்ளை சட்டை தெய்வங்களைப் பார்க்கும்போது எனக்கு பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் நீங்கள்" என்ற வாசகம் தான் நினைவிற்கு வந்து தொலைக்கும்.  வெள்ளை சட்டை அணிந்த அனைவரையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்த என்னளவில் உயர்ந்த சில மனிதர்களும் இதில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர்களின் தேர்தல் அறிக்கைகள் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் போல அச்சடிக்கப்பட்டு நம்மை அசரடிக்கவரும். இதில் அண்ணாவும், பெரியாரும், எம்.ஜி.ஆரும், காமராஜரும் இந்த அரசியல் தெய்வங்களுடன் நம்மைப் பார்த்து, நம் நிலையைப் பார்த்து ஏளன சிரிப்பு சிரிப்பார்கள். இவர்களின் கடந்தகால தேர்தல் அறிக்கைகளையும் படித்துப் பாருங்கள். எந்த மாற்றமும் அறிக்கையிலும், நாட்டிலும் இருக்காது. பாராளுமன்ற தேர்தல் என்றால் நதிநீர் இணைப்பு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நம் மண்டையின் மறதிப்பகுதிகளில் மழுங்கிப் போயிருக்கும் சில மசோதாக்கள் கட்டாயம் இடம்பெறும்.

சட்டமன்ற தேர்தல்களில், கால்வாய் தூர்வாறுதல், கூட்டுக்குடிநீர் திட்டம், சத்துணவில் முட்டை போடும் திட்டம், நெல், கரும்பு ஆகியவற்றிற்கு உரிய விலை நிர்ணயம், தமிழ் வளர்க்கப் பாடுபடுதல் போன்றவை அனைத்து தேர்தல்களிலும் வாக்குறுதிகளாக அறிவிக்கப்படும். இன்னும் உச்சபட்சக் காமெடியாக மீனவர்களை பாதுகாத்தல், இலங்கைத் தமிழருக்கு அமைதியான வாழ்வு உறுதிப்படுத்தல், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து பிடுங்கி தருதல் போன்றவையும் இடம்பெற்றிருக்கும். இவ்வளவு நாள் என்ன புடுங்குனாங்கன்னு தெரியலை.

தமிழர்களை எல்லாம் கொன்று குவித்துவிட்டு தமிழ் வளர்க்கப் பாடுபடுதல், நாட்டை மொத்தமாக சுரண்டிவிட்டு வீட்டை நாட்டுக்கு விட்டுகொடுத்தல், தொலைகாட்சி நிகழ்சிகளின் பேர்களிலும், அதில் வரும் இளம் தொகுப்பாளர்களின் நாவாலும் தமிழைக் கொன்றுவிட்டு தமிழ செம்மொழி என நிரூபிக்கப் பாடுபடுதல், கொடநாட்டில் முடங்கிவிட்டு அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசியல் நடத்திவிட்டு பதவி பெற்றதும் பணம் சம்பாதித்துவிட்டு, பதவியில் இல்லாத போது அதன் சுகம் அனுபவித்தல், ஊழல் வழக்கு தன்மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அடுத்த கட்சியின் ஊழலையும் ஆட்சியையும் விமர்சித்தல் இவையெல்லாம் இவர்களின் வித்தைகள்.

மாற்றுக்கட்சி உறுப்பினர்களுக்கு ஆசை காட்டியும், பேரம் பேசியும் தன் பக்கம் இழுக்கும் குதிரை வியாபாரிகள் தான் இவர்கள். இலவசங்களை இனத்திற்கு வழங்கிவிட்டு உணர்வுகளை விலையாய் வாங்கிக்கொண்ட சூத்திரகாரர்கள். வரிப்பணங்களில் இருந்து வழங்கிவிட்டு வாரிசின் பணங்களை வாரி வழங்கியது போன்று மார்தட்டிக் கொள்ளுதல் என்னை பொருத்தவரைக்கும் கேவலம் தான். கல்வியை இலவசமாக வழங்கமுடியாத நீங்களெல்லாம் எதற்கு அரசாள வேண்டும்? ஜாதியை ஒழிக்கப் பாடுபட்ட பெரியாரின் பாசறை குஞ்சுகள் இன்று ஜாதி வாரியாக தொகுதி ஒதுக்கிடுவது கேவலாமாக இல்லை?

இதுக்கு ஏண்டா நீங்க இவ்வளவு வெள்ளையுஞ் சொள்ளையுமா அலையணும்?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? -  என்று
மடியும் எங்கள் அடிமையின் மோகம்? - இன்றெமது
எண்ணிக்கை விலங்குகள் போலும்... - என்றெமது
இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?




7 comments:

பொன் மாலை பொழுது said...

இதெல்லாம் மானம் உள்ளவர்களுக்கு, மானமும் சொரணையும் அற்ற இக்கால அணைத்து அரசியல் பிழைபவர்களுக்கு இதெல்லாம் உரைக்காது.
சொல்லவேண்டியது நமது கடமை.சொல்லிவிட்டீர்கள். முதலில் நமக்கு , நம் மக்களுக்கு சொரணை வரட்டுமே!

மதுரை சரவணன் said...

// கல்வியை இலவசமாக வழங்கமுடியாத நீங்களெல்லாம் எதற்கு அரசாள வேண்டும்? ஜாதியை ஒழிக்கப் பாடுபட்ட பெரியாரின் பாசறை குஞ்சுகள் இன்று ஜாதி வாரியாக தொகுதி ஒதுக்கிடுவது கேவலாமாக இல்லை?//

இதெல்லாம் உறைக்கும் என்று நினைக்கிறீர்கள்... அருமை வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

//இவ்வளவு நாள் என்ன புடுங்குனாங்கன்னு தெரியலை.//

குட் கொஸ்டின்...!! ஆனா இலவசமா 5000 ரூபாய் தந்தால்தால் நாம இதையெல்லாம் மறந்துடுவோமே தல..!! :-))

'பரிவை' சே.குமார் said...

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? - என்று
மடியும் எங்கள் அடிமையின் மோகம்? - இன்றெமது
எண்ணிக்கை விலங்குகள் போலும்... - என்றெமது
இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?

Unknown said...

கலக்கல்...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ரோஸ்விக்,

நல்லா ஒறைக்கிற மாறி கேட்டுருக்கிய...!

ஒறைக்கும்கிறிய...!

ஜோதிஜி said...

நேற்று தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்த போது மிக்ஸி அல்லது கிரைண்டர் இலவசம் என்று சொன்னதும் பலத்த கைதட்டல். பார்க்கும் பெட்டியை உடைத்து விடக்கூடாது என்பதற்காக அமைதியாக வெளியே வந்து விட்டேன்.
இதைப்பற்றி எழுத வேண்டும் என்று உட்கார்ந்த போது இந்த பதிவு கண்ணில் பட்டது. நன்றி ராசா.