Thursday, January 21, 2010

வழுக்கும் மொழியாய் திருநெல்வேலி வழக்குமொழி...

பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும்போது, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சார்ந்த சில நண்பர்கள் எனக்குண்டு. அவர்கள் பேசும் தமிழில் அந்த ஊர் அல்வா தரும் சுவை நான் பெற்றதுண்டு. தூத்துக்குடியில் மஸ்கோத்து அல்வாவும், மக்ரூனும் எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகைகள்.

காலேஜில பட்ட மேற்படிப்பின் மொத வகுப்புல, ஒவ்வொருத்தரா எந்தரிச்சு உங்க பேரு, நீங்க இதுக்கு முன்னாடி படிச்ச காலேஜு, எந்த ஊருன்னு சொல்லச் சொல்லி அறிமுக வகுப்பு நடத்துவாங்க... இத ஒரு வகுப்புல சொல்லி அறிமுகப்படுத்திகிட்டது பத்தாதுன்னு... சில வாத்திமாருங்க அந்த மொத நாலு பூராம் எல்லா வகுப்புலயும் சொல்லச் சொல்லி பொழுத ஒப்பேத்திருவாங்க.

அப்புடி ஒரு சமயத்துல ஒருத்தன் எந்திரிச்சு, எம் பேரு "முத்து", "சதக்", "திருநெல்வேலி"-னு சொல்லிட்டு உக்கார... ஏல மக்கா, இவன் என்னடே வந்த ஒடனையே "ச்சதக் ச்சதக்"-னு பீதியை கிளப்புதான். அவங்கிட்ட ச்சொல்லி "ச்சதக்"குங்கெறது காலேஜுன்னு ச்சொல்ல ச்சொல்லுலே. இங்க உள்ளவனுகளுக்கு "ச்சதக்" காலேஜு பேருன்னு தெரியாதுடே-னு ஒரு குரல். அந்த குரலுக்குச் சொந்தக்காரன் என் நண்பன். இவன் தூத்துக்குடியைச் சேர்ந்தவன். நாங்க எல்லாம் அதே காலேஜுல பட்டப் படிப்பு படிச்சதால அவங்கிட்ட மக்ரூன் வாங்கி வரச் சொல்லி தின்னு தீர்த்திடுவோம் அவன் காசையும். அப்பாடா... திருநெல்வேலி அல்வா திங்க ஒரு அடிமை சிக்கிட்டான்டானு மனசுக்குள்ள சந்தோசம் வேற.

தேர்வு காலங்கள்ல இவங்க அறைக்கு நான் படிக்கப் போகும்போது, இவர்களுது பேச்சே ரொம்ப சுவாரசியமா இருக்கும். சொல்லப் போனா அந்த மொழி மேல எனக்கு ஒரு காதலே உண்டு. போன உடனே, மாமா "ச்சாரம்" கட்டிட்டு வாங்க. நாம படிப்போம்-னு சொல்லுவாங்க. எனக்கு சிரிப்பா வரும். நான் திரும்ப, மாமா எங்க ஊர்ல பெரிய பெரிய கட்டிடத்துக்கு வெள்ளையடிக்க தான் சாரம் காட்டுவாங்க. படிக்கிறதுக்கு எதுக்கு மாமா சாரம்?-னு கேட்பேன். அதுக்கு அவங்க..."ஏடே, மாமா சோக்கு சொல்லுதுடே... எல்லாருஞ்சிரிங்க"-னு சொல்லி ஒரே அமர்க்களமா இருக்கும்.

ஏடே, நம்ம மாமா வந்திருக்குடே... நம்ம அண்ணாச்சி கடையிலே இட்லி சாப்புடுதாம்லே.

போடே அண்ணாச்சி கடையிலே ச்சரக்கு ச்சரியில்லடே. அவன் எங்க ச்சாமான் வாங்குதாம்னு தெரியலே.

விடுடே... விட்டா உள்ள எவ ச்சமைக்குதா... அவ மூஞ்சியப் பாக்கனும்னு நீ உள்ள புகுந்துருவ போலையே...

ஆமாடே... எதோ செத்த மூதிதான் ச்சமைக்கும்போல... அதான் செத்துப்போன மாதிரி இட்லிய கொடுக்காணுவ.

யய்யா... என்னா லாஜிக்குலே?? (என்று கூறியவாறு அவனை கிள்ளுகிறார்)

அதுக்கு ஏன்டே என்னைய முள்ளுதே? மாமா இவன நாலு சவட்டு சவட்டுங்க மாமா...

ஏலே நீ ரொம்பதாம்ல ஆடுத... முதுகுல மூச்சா போய்கிட்டு இருக்க அருவாளுக்கு வேலை குடுத்துடாதைலே...!

இதுக்குப் போயி ஏம்லே இப்புடி கோவிக்கே??

பின்ன என்னடே.... நீ இப்புடி பேசிப் பேசி எஞ்செவ்வி கிழிஞ்சுட்டு...

விடுடே... ரோட்டுல போறவன் எல்லாம் நம்மளையே பாக்கானுவ...

நம்ம பேசி விளையாண்டுட்டு போனா அவன் ஏன்டே நம்மள அப்படி பாக்கான்....??

பொறவு... அவனுக்கு வேலை இல்லையினா இப்புடித்தாண்டே பாப்பான்...

இப்படியே விளையாட்டு நீண்டுகொண்டு போகும் இந்த வழுக்கும் மொழியுடன்...

இந்த திருநெல்வேலி மொழியை நான் காதலிக்கக் காரணமான என் அன்பு நண்பர்கள் சதீஷ், முத்து, அமல், சில்வின், ரஜனி, சுபின், மணிகண்டன் மற்றும் சிவமுருகனுக்கு என் அன்பு நன்றிகள். :-)

பதிவுலகிலும் சிலர் இந்த திருநெல்வேலி வழக்கு மொழியில் எழுதும்போது நான் சிலாகித்துப் படிப்பதுண்டு. மரியாதைக்குரிய தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணனின் பேச்சையும் நான் கேட்க விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம். தொடருங்க மக்கா... நானும் மகிழ்கிறேன்.




27 comments:

சிவாஜி சங்கர் said...

அண்ணாச்சி நல்லா எழுதிருக்கியல.... நமக்கும் அது பக்கந்தான்.. எங்க பேச்சு எனக்கே மறந்தாப்புல இருக்கு. ஓர்ம படுத்துனதுக்கு நன்றி.. :)

sathishsangkavi.blogspot.com said...

எங்க ஊர் மளிகை கடையில் அண்ணாச்சிகள் பேசும் போது ரசித்து கேட்பேன்...

Chitra said...

ஏலே மக்கா, நம்மூரு நக்கல் பேச்சுல அசத்தி புட்டீகளே.

மதார் said...

ம்ம் எங்க ஊரு பேச்சு கொஞ்சி விளையாடுது , சொன்னது கொஞ்சம்தான் சொல்லாதது நெறைய .அது ஏனோ தெரியல ஊருக்கு போனாலே ஊரு பாஷ நாக்குல வந்து ஒட்டிக்கும் . பேசும்போது , மத்தவங்க இங்க பேசுறத கேட்கும் போது மனசுல ஒரு சந்தோசம் வரும் . "யோவ் மச்சான் எங்கவே போயிட்டு வரீரு " இத என்கூட இருக்க பொண்ணுகிட்ட சொல்ல சொன்னேன் இப்போவரைக்கும் சொல்லத் தெரியல .வாழ்க எம்மொழி .

பின்னோக்கி said...

அனுபவங்கள் எனக்கு உண்டு. தூத்துக்குடி, திருச்செந்தூரில் பள்ளிப்படிப்பு.

மக்ரூன் - அருமையாக இருக்கும்.

மீன்துள்ளியான் said...

நன்றி மக்கா .. ஊரை நினைக்க வச்சதுக்கு

ரோஸ்விக் said...

Sivaji Sankar - ஊரு வழக்கு மொழிய மறந்துராதீங்க. :--) அதுலதான் சுகமே இருக்கு. இதுபோல இன்னும் பிற வழக்குமொழிகளைப் பற்றி சில இடுகைகள் வரலாம் என்னிடமிருந்து.

வருகைக்கு நன்றி

ரோஸ்விக் said...

Sangkavi - வருகைக்கு நன்றி .

சினிமாவில் இன்றும் நெல்லை சிவா மற்றும் M. S. பாஸ்கரின் நெல்லை வழக்குப் பேச்சை ரசிப்பேன். நீங்களும் ரசிக்கலாம்.

ரோஸ்விக் said...

Chitra - வருகைக்கு நன்றி.

எனக்குத்தெரிந்து தென் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் மிகவும் நகைச்சுவை கலந்து பேசுபவர்கள். உங்கள் இடுகைகளும் நகைச்சுவையாக இருக்கும். நீங்களும் தங்களின் நெல்லை மொழியில் எழுதலாமே. :-)

ரோஸ்விக் said...

மதார் - வருகைக்கு நன்றி மதார்.

அந்த மொழியில் ரசிக்கும்படியாக ராகம் வேறு இருக்கும். சிலருக்கு நீங்கள் குறிப்பிடுவது போல பேசுவது மிகக் கடினமாகத்தெரியும்... :-)

ரோஸ்விக் said...

பின்னோக்கி - வருகைக்கு நன்றி அண்ணே.

மக்ரூன் வாயில வச்ச உடனே கரைஞ்சு போயிடும்ணே... அவ்வளவு ருசி. எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

ரோஸ்விக் said...

மீன்துள்ளியான் - வாங்க செந்தில் மக்கா... வருகைக்கு நன்றி.

ஊர மறந்துராதீங்கயா... :-))

மதார் said...

நீங்கள் சொல்வது சரியே , நாங்கள் பேசும்போதும் மற்றவர் பேசக் கேட்க்கும் போதும் எங்கள் வழக்கு மொழியின் கடினம் எங்களுக்கு தெரியாது . சில திரைப்படங்களில் திருநெல்வேலி , தூத்துக்குடி வழக்கு மொழியில் பேசுகிறேன் என்று அவர்கள் பேசும்பொழுது தான் எவ்வளவு கடினம் எங்கள் மொழி என்று தெரியும் . திருநெல்வேலி , தூத்துக்குடி அல்லாதவர் பேசும்பொழுது அதில் இருக்கும் செயற்கைத்தனம் காட்டிகொடுத்து விடும் (தாமிரபரணி படம் ). அந்த பேச்சில் இருக்கும் குறும்பு , நக்கல் எப்பொழுதுமே சிரிக்க வைக்கும் , மற்றவர்களை திட்டும் வார்த்தையில் கூட ஒரு பாசம் இருக்கும் . சென்னை வந்த பிறகே என் வழக்கு மொழியை நான் மிக ரசிக்கிறேன் .

ரோஸ்விக் said...

பல படங்கள்ல அந்த மொழியக் கொலை பண்ணிருப்பாங்க... பொதுவா கிராமப் பகுதிகள்ல இருக்குறவங்க பேசும்போது அதில் வெள்ளந்தியான வார்த்தைகளும், பாசமும் கலந்தே இருக்கும். சில நேரங்களில் அவர்கள் பேசும் கேலிச் சொற்களில் ஆபாசமான வார்த்தைகள் இருந்தாலும்...அது அபத்தமாகத் தெரிவதில்லை...அதுவும் நகைக்கும் அளவிலே இருக்கும்.

உங்களுக்குத் தெரிந்த வெளியூர்களில் பயன்படுத்தாத நெல்லை வார்த்தைகளைக் கொண்டு நீங்களும் ஒரு பதிவிடுங்கள்.

மைதீன் said...

நானும் நெல்லைதான் ஆனால்,தமிழில் உள்ள "ழ "உச்சரிப்பு சரியாக உச்சரிப்பதில்லை .நல்ல பதிவு

தமிழ் உதயம் said...

நானும் நெல்லை தமிழை ரசிப்பேன்

எண்ணங்கள் 13189034291840215795 said...

எங்க நெல்லை தமிழை சிறப்பித்தமைக்கு நன்றி மக்கா..

எனக்கே மறந்து போச்சு அந்த Accent..

பெண் குழந்தைகளையும் பாசத்தோடு " ஏல எப்பல வந்த " னு கேட்பார்கள்.

ரோஸ்விக் said...

மைதீன் - வருகைக்கு நன்றி.
"ழ" உச்சரிப்பு நிறையப்பேருக்குப் பிரச்சனைதான்...எனக்கும் தான்னு சொல்லிக்க வெட்கப்படுகிறேன். :-(

ரோஸ்விக் said...

தமிழ் உதயம் - வருகைக்கு நன்றி சார்.
நாமெல்லாம் ரசிகர் கூட்டம்...ம்ம்ம் சந்தோசம்.

ரோஸ்விக் said...

புன்னகை தேசம். - சிறப்பிக்கப் படவேண்டிய ஒன்றுதான் மக்கா... :-)

ஊருக்குப் போனீங்கன்னா தன்னாலே அந்த ராகமும் மொழியும் தொத்திக்கும் சந்தோஷத்தோட சேர்ந்தே...

ஸ்ரீராம். said...

ரசித்'தேன்'...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல பதிவு

Hussain Muthalif said...

எலேய் மக்கா,
எங்கூரு பாஷைல பின்னிப்புட்ட அப்பு !!!,
நம்ம சேக்காளி பல பேரு மேல சொல்லுதப்போல, நமக்கும் ஊரு பக்கம் போனா பாஷ நாக்குல வந்து ஒட்டிக்கும்.
மத்தபடி மெட்ராஸ், வெளிநாடு-ன்னு வந்தபொறகு, neutral accent- ல பேச வேண்டியதா போது மக்கா!!!!

ஆனா நம்ம மண்ணோட அடையாளத்தை எப்போவும் விட்டுக்கொடுத்ததில்ல அப்பு.

என் ப்ளாக்-ல நம்மூரு மணத்தை கொண்டு வந்துட்டு சொல்றேன் அப்பு,
ஊட்டுக்கு(ப்ளாக் -க்கு) வந்து நல்லா பசியாறிட்டு போங்க மக்கா.

நானானி said...

ஏலே...எவம்முல அது எங்கூரு பாஷைய சும்மா கூட்டாஞ்சோறு மாரிதி கிண்டிவிட்டது?
நல்லாத்தாம்ல இருக்கு.
எனக்கு சோலி இருக்கு பொறவு வாரேன்.

Unknown said...

ஏலே பயலுவளா. நம்ம ஊரு பாசைய புடிக்காத பய எவம்ல இருக்கான்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நான் ஈழம் எமக்கும் வட்டார மொழி உண்டு; ஆனாலும் உங்கள் இந்த வட்டார மொழி ;மிகக் குறும்புதான். இப்படி தொடராகவே பேசுவது ஆச்சரியம் தருகிறது.
அத்துடன் மற்றாஸ் தமிழும்- குறிப்பாக துக்ளக்- ஜக்குவின் தமிழ் படித்து அனுபவித்து ரசித்ததுண்டு.
2004ல் சென்னை வந்தும் அந்த தமிழைக் கேட்கமுடியவில்லை.

ALHABSHIEST said...

kalapria.blogspot
venuvanam.blogspot
வந்து பாருங்க.அப்பிடியே திருநெலில சுத்துன மாதிரி இருக்கும்