Sunday, December 20, 2009

அடங்கிய சுனாமி... அடங்காத பீதி - 4
கனத்த இதயங்களுடன் எங்களில் மிகச் சிலர் கோவிலுக்குள் சென்றோம். ஆள் அரவமே இல்லாமல் இருந்தது. மிக விரைவாக அங்கிருந்து வெளியேறும்படி காவல்துறை ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தது. இந்த பதட்டத்தில் என் அப்பா என்னிடம் 50 ரூபாயை கொடுத்து வேகமாக மெழுகுவர்த்தி வாங்கி வா. அதை ஏற்றிவைத்து கும்பிட்டுவிட்டு சென்றுவிடுவோம் என்றார். நானும் கோவிலிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளை நோக்கி ஓடினேன். பிறகுதான் தெரிந்தது அந்த கடைகளும் அடித்து செல்லப்பட்டுவிட்டது. இதிலிருந்து நாங்கள் அனைவரும் ஏதோ மனம் பேதலித்த நிலையில் தான் இருந்துள்ளோம் என்பது புரிந்தது.

இந்த ஆழிப் பேரலைகள் வேளாங்கண்ணி புதிய கோவில் வாசல் வரை வந்துள்ளது. ஆனால் கோவிலின் உள்புறம் சேதமில்லை. கோவிலின் வலது புறம் வழக்கமாக நாங்கள் தங்கும் Little Flower Lodge-ப் பகுதி பெருத்த சேதம் அடைந்திருந்தது. நல்லவேளை இந்த முறை நாங்கள் அங்கு தங்கவில்லை. தங்கியிருந்தால் எங்களில் சிலருக்கு அல்லது அனைவருக்குமோ உயிர் உத்திரவாதம் இருந்திருக்காது.

எங்கள் வீட்டு உரிமையாளர் ஏதோ வேளாங்கண்ணி கடலுக்குள் மூழ்கி கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டு, "சார் வாங்க வேகமா கடலுக்கு எதிர் திசையில போயிடுவோம்" என்கிறார். எங்கள் ஒட்டுனரில் ஒருவர் பழனிக்கு மாலை அணிந்திருந்தார். அவர் வேறு அடிக்கடி... "ஐயா நான் வேற மாலை போட்டிருக்கேன்யா. வாங்கய்யா சீக்கிரம் வீட்டுக்குப் போயிருவோம்" எனக் கூறிக் கொண்டிருந்தார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று. அவன் வழக்கம் போல பழக்க தோஷத்தில் தப்பிப்பதற்கு ஏதாவது காரணம் சொல்ல வேண்டும் என்று இதை சொல்லி இருக்கிறான்.


எங்க அப்பா ரொம்ப சின்சியர் ஆனவரு. அவரு என்னிடம், "தம்பி நம்ம வேற உயர்மட்ட பரிந்துரையில இந்த ரூம் வாங்கினோம். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து போச்சு. தங்குமிட வசதி செஞ்சுகொடுக்குற அலுவலகத்துல போயி இந்த ரூம் சாவியக் குடுத்துட்டு... நம்ம எல்லாரும் பத்திரமா இங்கிருந்து கிளம்புரம்னு" பயணஞ் சொல்லிட்டு வரச்சொல்லிட்டாரு. நானும் என் தம்பியும் அந்த மோசமான தண்ணியில பெரும்பாலும் மேட்டுப் பகுதியாப் பார்த்து போயி சாவிய குடுத்துட்டு சொல்லிட்டு வந்துட்டோம். பல வாகனங்களின் புகைக் குழாயில் தண்ணீர் புகுந்ததால் மேலும் செல்ல இயலாமல் பலர் தவித்தனர். எங்கள் ஓட்டுனர் மேட்டுப் பகுதிகள் வழியாக சென்று இப் பிரச்சனைகளை தவிர்த்தான். அதே நேரம், எனக்காகவும் என் தம்பிக்காகவும் காத்திராமல் என் அப்பா கூறியதைக் கூட கேட்காமல்.... நீர் குறைவாக இருந்த பகுதியில் வண்டியை நிறுத்தினான்.


நானும், எனது தம்பியும் அந்த நீரில் நடந்து வந்த பொது சந்தித்த அனுபவங்கள் இன்னும் மிகக் கொடியது. ஒருவர் ஒரு தரை அளவு பாலத்தின் சுவற்றில் உட்கார்ந்து இருப்பது போல இறந்து விறைத்து கை கால்களை மேல் நோக்கி நீட்டியவாறு கால் சட்டையுடன் இருந்தார். அவரது வேஷ்டியை காணவில்லை. நீரின் பல பகுதிகளில் சில மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருந்தன. நீருக்கடியில் சில கம்பு, கம்பி போன்ற பொருட்களும் மூழ்கி எங்கள் கால்களில் தட்டுப்பட்டன. சில சாக்கடை குழிகளில் மாட்டியிருந்த பிணங்களின் கைகளும், கால்களும் எங்கள் கால்களில் உரசியதில் அதிர்ந்து போனோம்.


ஒரு வழியாக அங்கு போக்குவரத்திற்கு சிரமப்பட்டவர்களில் ஒரு சிலரை எங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து வேளாங்கண்ணி நாகபட்டினம் சாலையில் விட்டுச் சென்று நாங்களும் உயிர் பிழைத்தோம். வேளாங்கன்னியை விட்டு வெளியேறியவுடன், அன்றைய காலை எங்களுக்கு தங்கும் வசதிக்காக முயற்சி செய்த என் நண்பர்களையும் தொடர்புகொண்டு அவர்களும் உயிர்தப்பி விட்டார்கள் என்றறிந்து கொண்டேன். நல்ல வேலையாக எனது உள்ளூர் நண்பனின் வீடு ஒரு பெரிய மணல் குன்றின் பின்புறமாக அமைந்ததால், அதிக பாதிப்பின்றி தப்பிவிட்டனர். அன்று முதல் இன்றுவரை, ஏனோ ஏன்னால் வேளாங்கண்ணிக்கு செல்ல முடியவில்லை.

இன்று வரை இந்த சுனாமியால் பாதிப்படைந்து, மனநிலை பாதிக்கப்பட்டு, குடும்பம் பிரிந்து வாடும் நம் உறவுகளை எண்ணி கண்ணீருடன் இந்த பகிர்வை நிறைவு செய்கிறேன்.

இந்த கட்டுரையின் அனைத்துப் பகுதிகளும், உலக நாடுகளில் சுனாமியால் தம் உறவுகளை இறந்த குடும்பங்களின் சார்பாக, இறந்த அந்த சொந்தங்களுக்கு சமர்ப்பணம்.

*** முற்றும் ***
18 comments:

Mr.vettiபைய்யன் said...

வணக்கம் ரோஸ்விக்
சுனாமி சம்மந்தபட்ட பதிவுகளில் உஙகள் பதிவு மனதை தொடுவதாக இருந்தது,
நன்றி

பித்தனின் வாக்கு said...

// பழனிக்கு மாலை அணிந்திருந்தார். அவர் வேறு அடிக்கடி... "ஐயா நான் வேற மாலை போட்டிருக்கேன்யா. வாங்கய்யா சீக்கிரம் வீட்டுக்குப் போயிருவோம்" எனக் கூறிக் கொண்டிருந்தார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று //
பொதுவாக மாலை போட்டவர்கள், இறந்தவர் வீட்டுக்குச் செல்லமாட்டார்கள். பிணங்களைப் பார்க்க மாட்டார்கள். தெருவில் எதிர்ப்பட்டால் கூட மறுபடியும் குளித்து பூஜை செய்துதான் சாப்பிடுவார்கள். இந்தக் காரணத்தில் தான் அவர் கூறியிருக்க வேண்டும். சுனாமி சமயத்தில் நானும் மாலையிட்டு இருந்தேன். ஆனாலும் சர்வீஸ் செய்து குளித்து பூஜை செய்தேன். அன்று மட்டும் ஜந்து முறை குளிக்க வேண்டியதாயிற்று.
நல்ல கட்டுரை. சுனாமிக்கும் கோவிலுக்கும் என்ன சம்பந்தம். கோவிலுக்குப் போய் வாருங்கள். நன்றி.

Sivaji Sankar said...

//சில சமயத்தில் பல பாடம் கற்பித்து போய் விட்டது கடல்..
சாதி, மத, பொருளாதார பேதமின்றி வெட்டவெளியில் ஒன்றாய் அழுத கண்கள்.. இரை தந்தவனை இறையாய் கூப்பிய கரங்கள்...
மறக்கமுடியுமா??// உங்கள் பதிவு மீண்டும் (நினை உறுத்துகிறது)..!! நன்றி தல..

Sivaji Sankar said...

ம்ம்ம்ம் தல சொல்ல மறந்துட்டேன்...இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...

பூங்குன்றன்.வே said...

மனதை நெகிழவைக்கும் பதிவு நண்பனே !!!

Mr.vettiபைய்யன் said...

இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

படித்து முடித்தவுடன் நினைத்தது உங்களுடன் பேசவேண்டும் என்று. மனம் கனக்கிறது தம்பி... கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

ஜெஸ்வந்தி said...

மனதை நெகிழ வைத்த பதிவு. வாழ் நாள் பூராகவும் மறக்க முடியாத அனுபவம்.
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே! உங்கள் அனைவரது உயிரையும் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி.
இனிய நத்தார் நல் வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

நெகிழ வைத்த பதிவு...

காணிக்கைப் பொருள் கோடி காவியம் கூறும்
கழல் பணிந்தோர்க்குப் பசி நோயெல்லாம் தீரும்
மாணிக்க மேடை உந்தன் திருக் கோவில்..
மலர் பதம் பாராமல் தீராதென் ஆவல்...
சங்கத் தமிழ் நாட்டின்
வேளை நகர் தன்னில்
தாயாக வந்த எங்கள் ஆரோக்ய மாதாவே...

கிரிஸ்த்மஸ் வாழ்த்துக்கள்.

moulefrite said...

தோ பார்ரா, கடவுள் உங்களை மட்டும் காப்பாற்றி இருக்கிறார் பாருங்கள்,!!!!!கும்பலாக குவித்து குழியில் புதைக்கபட்டவர்க்ள் அனைவரும் பாவம் செய்தவவர்களா?!!!!!சூப்பர்ரா,,,ஆனால் உங்களையும் அறியாமல் ஒன்று சொன்னீர்கள் பாருங்கள் ,,,மறுபடியும்
வேளாங்கன்னி போக மனம் எண்ணவில்லை என்று ,,,அங்கேதான் உங்கள் பகுத்தறிவு
விழித்திருக்கிறது,,, மனச்சாட்சி
கேள்வி கேட்டிருக்கிறது,, தனிமையில் அதற்கு பதில் சொல்லிப்
பாருங்கள்,,கடவுளின் சக்தி என்ன என்பது புரியும்

கிரி said...

ரோஸ்விக் உங்கள் அனுபவம் ரொம்ப கொடுமையானது தான்.. இன்னும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று நிதி ஒதுக்கி! அதையும் கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறார்கள். இது சுனாமியை விட கொடுமையாக உள்ளது..

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூற விழைவது ..இதுவும் கடந்து போகும்!

ரோஸ்விக் said...

Mr.vettiபைய்யன் - மிக்க நன்றி நண்பரே!


பித்தனின் வாக்கு - நன்றி தலைவா. இது எனக்கு புது தகவல். அவனிடம் காரணம் கேட்டல் அவன் இதை சொல்லாமல் சிரித்தான். வழக்கம் போல் கூறியதாக கூறினான். :-)

கோயிலுக்கு போக வேண்டும் என்ற தீவிர பக்தனும் இல்ல. :-) அதன் பிறகு அந்த கோயிலுக்கு போவதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை. :-)
நான் பெரும்பாலான காலங்களில் வீட்டை விட்டு அதிக தொலைவில் வசிக்கும்படி என் பொழப்பு உள்ளதால் அதற்கான வாய்ப்பு, இந்த சுனாமிக்கு முன்னரே குறைவு தான்.


Sivaji Sankar - மிக மிக நன்றி தல. இந்த கட்டுரையின் அனைத்துப் பகுதிகளிலும் ஊக்கமூட்டியதற்கும் . :-)


பூங்குன்றன்.வே - மிக்க நன்றி நண்பா. இதற்கு முந்தைய பாகத்தில் உங்களுக்காக ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன். முடிந்தால் அங்கு சென்று படிக்கவும். :-)


பிரபாகர் - மிக நன்றி அண்ணா. இப்போ எனக்கு கொஞ்சம் பாரம் குறைஞ்ச மாதிரி ஆகிடுச்சு.


ஜெஸ்வந்தி - ஆம் தோழி. மிக்க நன்றி. தங்களின் நத்தார் வாழ்த்திற்கும். :-)


ஸ்ரீராம். - மிக நன்றி நண்பரே! பின்னூட்டமே மிக அருமையா எழுதீருக்கீங்க.


கிரி - ஆமா நண்பா. எரியிற வீட்டுல புடுங்குறது லாபம் என்பதை இவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது பிணத்திலும் பணம் பார்க்கும் கூட்டம்

ரோஸ்விக் said...

moulefrite -

//தோ பார்ரா, கடவுள் உங்களை மட்டும் காப்பாற்றி இருக்கிறார் பாருங்கள்,!!!!!கும்பலாக குவித்து குழியில் புதைக்கபட்டவர்க்ள் அனைவரும் பாவம் செய்தவவர்களா?!!!!!சூப்பர்ரா,,,//


வாங்க நண்பரே! இதுல எந்த இடத்துலையும் நான் தப்பித்தவர்களை உயர்வாகவும், இறந்தவர்களை பாவிகள் என்றும் கூறவில்லை. இது கடவுளின் மகிமை என்றோ... சதி என்றோ கூற சிறிது கூட முயலவில்லை. இயற்கையின் சீற்றத்தில் நான் பெற்ற அனுபவம் மட்டுமே.


//ஆனால் உங்களையும் அறியாமல் ஒன்று சொன்னீர்கள் பாருங்கள் ,,,மறுபடியும்
வேளாங்கன்னி போக மனம் எண்ணவில்லை என்று ,,,
//


மன்னிக்கனும். இங்கு "போக மனம் எண்ணவில்லை" என்று நான் சொல்லவில்லை.
இதில் என் தவறும் ஓன்று இருக்கிறது. "செல்ல முடியவில்லை" என்பது... அதற்கான வாய்ப்பு இன்று வரை அமையவில்லை என்ற பொருளில் எழுதவந்தது. தவறுக்கு வருந்துகிறேன்.

நீங்கள் கூறுவது போல் நான் அந்த கடவுளால் காப்பாற்றப் பட்டதாக நினைத்திருந்தால்.... நான் அந்த நன்றிக் கடனை வருடா வருடம் சென்று செலுத்தி இருக்க வேண்டும். நமக்கும் கடவுளுக்கும் கொஞ்ச தூரம். நான் மத தீவிரவாதியும் அல்ல. இந்த மதம்... இந்த கடவுள் உயர்ந்தவர் என்று நினைப்பவனும் அல்ல.
என்னை பொறுத்தவரை கடவுள் பல இடங்களில் கற்பனையாக உருவாக்கப் பட்டிருந்தாலும், சிலரின் நம்பிக்கையை தகர்ப்பது என் எண்ணமல்ல.
கடவுளின் பெயரால் பலர் தீய காரியங்களில் ஈடுபடுவதை தாங்களாகவே தவிர்த்து வருவதால்... கடவுளும் அவசியம். ஆனால், நாம்(நான்) வழிபடுவதைப் போல அவருக்கு வழிபாடுகள் தேவை இல்லை.


//அங்கேதான் உங்கள் பகுத்தறிவு
விழித்திருக்கிறது,,, மனச்சாட்சி
கேள்வி கேட்டிருக்கிறது,, தனிமையில் அதற்கு பதில் சொல்லிப்
பாருங்கள்,,கடவுளின் சக்தி என்ன என்பது புரியும்
//

பகுத்தறிவு என்பது கடவுளின் பெயரால் நாம் விதைத்திருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானது. கடவுளை வணங்குபவனுக்கு எதிராக அல்ல. அவன் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைக்கு எதிரானது.
எனக்கு இது தான் கடவுள் என்றில்லை. என்னை பெற்று வளர்த்தவர்களும் கடவுள் தான். உங்களை பெற்று வளர்த்தவர்களும் கடவுள் தான். எனை சரியா வழிநடத்திய என் ஆசிரியர்களும் கடவுள் தான். என் நண்பர்களும் எனக்கு கடவுள் தான்.

வாருங்கள்! இது குறித்து விரிவான விவாதம் மேற்கொள்வோம். இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.

கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதிலும், வேண்டுதல்களிலும் உடன்பாடில்லாதவன்.

அன்புடன்... உங்கள் பார்வையில் பகுத்தறிவாளன்.

moulefrite said...

ரோஸ்விக் அவர்களெ,நானும் உண்மையான??? கடவுள் ந்ம்பிக்கைக்கு எதிரானவனில்லை,கடவுல் ந்ம்பிக்கை என்பது மச்சேஸ்வரர் கோவில் லைவ் ஷொ போல் அகிவிடகூடாது என்கிற ஆதங்கத்தில் எழுதிவிட்டேன் உஙகள் மனதை புன்படுத்தியிருழ்தால் மன்னிக்கவும்,,நான் பிறப்பாள் கிருத்துவன் ஆனாலும் ஒரு சக்தி வாய்ந்த கடவுள்[வேளாண்கன்னி[ தன்
காலடியில் இத்தனை ஆயிரம் உயிர்கள் பறிபோவதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும் என்றால் அதை சக்தி என்றொ,கடவுள் என்றொ
எற்ரறுக்கொள்ள் என்னால் முடியவில்லை,அதனால்தான் சென்ற ஜுலையில் இந்தியா வந்த பொது என் குடும்பத்தார் அனைவரும் வேளாண்கன்னி போனார்கள் என்னைத் தவிற

ரோஸ்விக் said...

மிக நன்றி நண்பரே! என்னை பொறுத்தவரை கடவுள் என்பது ஒரு சக்தியாக இருக்கலாம். அவர் நம்மை காப்பார், நம்மை அழிப்பார் என்று சொல்லுவதெல்லாம் இந்த உலகம் ஒரு நல்வழியில் செல்ல பயன்படும் அவ்வளவே. கடவுள் மதங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும். இதைப்பற்றி விரிவாக சில பல இடுகைகள் இடலாம் என உள்ளேன். மீண்டும் சிந்திப்போம். :-)

சந்ரு said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

மனதைக் கனமாக்கியது உங்கள் தொடர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நம் பிரார்த்தனைகள்.
வரும் ஆண்டு எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ரோஸ்விக் said...

சந்ரு - மிக நன்றி நண்பரே!.
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் இனிய புதுவருட நல்வாழ்த்துகள்.


ராமலக்ஷ்மி - மிக நன்றி அக்கா!. அவர்களுக்கான உங்களின் பிரார்த்தனைகளில் நானும் கலந்துகொள்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் இனிய புதுவருட நல்வாழ்த்துகள்.