Sunday, December 20, 2009

அடங்கிய சுனாமி... அடங்காத பீதி...- 3

பகுதி - 1
பகுதி - 2


எங்க மாடியிலிருந்து ஒரு மூலையில் பார்த்தால் கடலின் சிறிதளவு தெரியும். அலைகள் மிகப் பெரியதாய் தோன்றுவதை காண முடிந்தது. எங்கள் அறையில் இருந்த பெரும்பாலோர் பயப்படத் தொடங்கினர். மேலே உள்ள மொட்டை மாடிக்கு செல்ல படி இல்லை. அதனால், அந்த அறையில் இருந்த ஒரு இரும்பு கட்டிலை வராந்தாவில் போட்டு அதன் மேல் அங்கு இருந்த மேசையை போட்டு இரண்டு ஆண்களை முதலில் ஏறச் செய்தோம். பிறகு குழந்தைகளையும் மகளிரையும் நாங்கள் இருவர் கீழிருந்து ஒவ்வொருவராக தூக்கி மேலே ஏற்றி விட்டோம். எனது அப்பாயி(அப்பாவின் அம்மா), கொஞ்சம் வயதானவர். ஆனால் நல்ல தெம்பாக இருக்கிறார். வாங்க அப்பாயி நீங்களும் மேல ஏறுங்க என்றால். அட போங்கப்பா, ரூமுக்குள்ள நம்ம கொண்டுவந்த பொருள் எல்லாம் இருக்குது. நான் பாத்துக்கிறேன். நீங்க போங்க என்றார். அட, "கடல் தண்ணி ஊருக்குள்ள வருது... நம்மளே செத்தாலும் செத்துடுவோம். இப்ப போயி பொருள பாதுகாக்கிறேன்னு..." வாங்கன்னா வாங்களே என்றோம். அதற்கு அவர் நீங்க பத்திரமா இருங்கப்பா... நான் இனிமே இருந்து என்ன பண்ணப் போறேன். நான் செத்தா சாகிறேன் என்கிறார். ஒரு வழியாக அவரையும் தூக்கி மேல போட்டுட்டோம்.

அங்க போயி பார்த்தாத்தான் தெரியுது அந்த ஊர்ல எங்க எங்க மொட்டை மாடி இருக்கோ அங்கெல்லாம் மக்கள் வெள்ளம். பக்கத்திலிருந்த கட்டிடத்தை பார்த்தால் அந்த மொட்டை மாடி தளமே தாங்காதோ! அதனால் அவர்களுக்கு பாதிப்பு வருமோ என்று பயம் கொள்ளும் வகையில் கூட்டம். எனது அப்பா அனைவரிடமும், இது தான் நமக்கு அதிகபட்ச பாதுகாப்பு. இத்தளம் வரை தண்ணீர் வராது என நம்புவோம் என்றார். (இந்த நிகழ்வின் பெயர் சுனாமி என்பது நாங்கள் அந்த ஊரை கடக்கும் வரை தெரியாது.) இப்போது எனக்கும், என் தம்பிகளுக்கும், என் அம்மாவிற்கும் மற்றும் என் அப்பாயிக்கும் ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்து, இதை மிக பத்திரமாக உங்கள் ஆடைகளில் முடிந்து வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை நாம் இருக்கும் தளம் வரை நீர் வந்துவிட்டால்.... அப்பாவை காப்பாத்துறேன்.... அம்மாவை காப்பாத்துறேன்... தம்பிய காப்பாத்துறேன்-னு முயற்சி செய்யாமல் நீர் செல்லும் திசையில் நீந்தி தப்பித்து, இப் பணத்தை வைத்துக் கொண்டு ஊர் போய் சேருங்கள் என்றார்.


இதைப் பார்த்த என் உறவினர்களும் அவ்வாறே தங்கள் குழந்தைகளுக்கு செய்து கொண்டிருந்தனர். நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் தன் 2 வயது குழந்தைக்கும், 4 வயது குழந்தைக்கும் இது போல் 500 ரூபாய் பணத்தை தன் குழந்தைகளின் ஆடையில் ஊக்கு வைத்து குத்திவிட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாங்கள் பலர் சிரித்துவிட்டோம். அங்கிருந்த பல பெண்கள் ஆலயத்தை நோக்கி ஜெபிக்க தொடங்கிவிட்டார்கள். ஆண்கள் நாங்கள் கடலில் எழுந்த அலைகளின் உயரங்களை பார்த்து இப்போது அலையின் வேகம் குறைகிறது... இல்லை இல்லை கூடுகிறது என்று அவரவர்களுக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டிருந்தோம். சில மணி நேரம் கழித்து ஒவ்வொரு கட்டிடத்திலிருந்தும் மக்கள் வெளியேறத் தொடங்கினர். அலையின் வேகமும் தணிந்திருந்தது.

அனைவரையும் மேலே ஏற்றும்போது அவசரத்தில் எங்களுக்கு சிரமமாகத் தெரியவில்லை. கீழே இறக்கும் பொது மிகவும் சிரமமாகப் போய்விட்டது. கடைசியில் அந்த மேசையும், கட்டிலும் தங்களின் கால்களை இழந்தன. ஊருக்குள் இருந்த நீரின் அளவும் சில இடங்களில் வெகுவாகக் குறைந்திருந்தது. நாங்கள் உதவிய அந்த குடும்பங்கள் எங்களை கட்டியணைத்து தங்களின் கண்ணீர் மூலம் நன்றி தெரிவித்து சென்றனர். எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் வேனில் ஏற்றிக்கொண்டு, எங்களில் சிலர் என் அப்பா தலைமையில் வந்தது வந்தாச்சு அப்படியே வேகமா கோயிலுக்குள்ள போயி சாமியக் கும்பிட்டிட்டு போயிடுவோம் என்று வேகமாக நடந்தபடியே கடற்கரை பக்கம் இருக்கும் பெரிய கோவிலுக்கு சென்றோம். வேன் எங்களுக்கு முன்பாக சென்று கோவிலின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்தது.


நடந்து செல்லும் வழியில் நாங்கள் பார்த்த காட்சிகள் எங்கள் மனங்களை மறத்துப் போகச் செய்துவிட்டது. எங்கு பார்த்தாலும் பிணக் குவியல்கள். நீரில் மூழ்கிக் கிடந்த பிணங்களை சிலர் தூக்கி கோவிலின் வாசற்படிகளில் கிடத்திக்கொண்டிருந்தனர். சந்து பொந்துகளில் எல்லாம் பிணங்கள் தலை குப்புற நீரின் வேகத்தால் சொருகப்பட்டிருந்தது. பல உள்ளூர் பெண்களும் ஆண்களும் தங்களின் துணைகளை தேடிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்களது துணைகள் பிணங்களாக. இவர்களோ நடமாடும் பிணங்களாக. பெரும்பாலான பிணங்கள் தலை குப்புற கிடந்ததால் இவர்களால் எளிதில் அடையாளம் காண முடியவில்லை. ஒவ்வொரு பிணமாக சென்று முகத்தை திருப்பி பார்த்து அடையாளம் காண முயன்றனர். இதே போல தேடிவரும் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு கண்ணீருடன் "அடியே மொட்டையா போக உன் புருஷன் அந்த கோடி மரத்துக்குப் பக்கத்திலே கிடக்காருடி", "அண்ணே! உங்க பொண்டாட்டி, பஸ் ஸ்டாண்டு காம்பவுண்டுக்குப் பக்கத்திலே சாக்கடை குழில சொருகி கிடக்காக".... இன்னும் பல அடையாளங்களுடன் சொல்லிக்கொண்டிருந்தனர்.

பிணங்களைத் தூக்கி செல்ல ஆள் கிடைக்காமல் ஒரு சைக்கிளில் இரண்டு பிணங்களை உட்கார வைத்து உருட்டிக்கொண்டு சென்றது ஒரு குடும்பம். ச்சே! என்ன கொடுமையான சம்பவம் இது. முதலில் எனக்கு கண்கள் கலங்கின. பிறகு மறத்துப்போய்விட்டேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகப் போடப்பட்டிருந்த பெரிய தென்னங்கீற்றுக் கொட்டகையில் ஆங்காங்கே பிணங்கள். அழுவதற்கு எங்களுக்கு திராணியும் இல்லை அவர்கள் வளர்த்த பிராணியும் இல்லை.





----- பீதி தொடரும்....




15 comments:

சிவாஜி சங்கர் said...

கண்முன்னே வந்து போகுது... அப்பப்பா... :((

க.பாலாசி said...

//நீர் செல்லும் திசையில் நீந்தி தப்பித்து, இப் பணத்தை வைத்துக் கொண்டு ஊர் போய் சேருங்கள் என்றார்.//

இதுதான் பெற்றவர்களின் பாசம் என்பது.

எனக்கும் இதே அனுபவம் எனது ஊரிலும் ஏற்பட்டது. மறக்கமுடியுமா அந்த பேரிடரை....

அ. நம்பி said...

மலேசியாவும் கடற்கோளுக்கு உள்ளானது என்றாலும் பாதிப்பு மிக மிகக் குறைவு. பிற நாடுகளில் ஏற்பட்ட மோசமான விளைவுகளை நாளிதழ்களில் படித்தும் தொலைக்காட்சியில் பார்த்தும் அப்போது அறிந்துகொண்டேன். உங்கள் கட்டுரையின்வழி இப்போது மேலும் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

ஜெகதீசன் said...

:(((

மீன்துள்ளியான் said...

என்ன சொல்லுறதுன்னே தெரியல

ரோஸ்விக் said...

Sivaji Sankar - நன்றி தல. கடைசிப்பகுதி நாளைக்கு வரும்.


க.பாலாசி - ஆமா நண்பா பெற்றவர்கள் பாசமும் மறக்க முடியாது. இந்த பேரிடரையும் மறக்க முடியாது.


அ. நம்பி - தங்களின் அன்பிற்கும் தொடர் வாசிப்பிற்கும் நன்றி நண்பரே.


ஜெகதீசன் - வாங்க ஜக்குபாய். :-) மிக்க நன்றி இச்சோக சம்பவ கட்டுரையை படிப்பதற்கு.


மீன்துள்ளியான் - ஆமா நண்பா. கொடுமையான சம்பவம். மிக்க நன்றி.

நான் உங்கள் பகுதிகளை பலமுறை படித்து மகிழ்ந்திருக்கிறேன்.
பெரும்பாலும் அலுவலகத்திலிருந்து தான் அதிக பதிவுகளை படிப்பேன். தங்களுடைய கமெண்ட் செட்டிங் ஆக இருப்பதால் என்னால் பின்னூட்டம் போடா இயலுவதில்லை. இது போன்று பல நண்பர்களுக்கு என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. இது முற்றிலும் எங்கள் அலுவலக சிஸ்டம் செட்டப்பே காரணம்.

அதனால் தான் "Pop-Window or Full Page Option-ஐ பயன்படுத்துமாறு ஒரு பதிவிட்டிருந்தேன். உங்கள் வரிசையில் இப்போது நண்பன் பூங்குன்றனும் சேர்ந்துகொண்டார்.

முடிந்தால் மாற்றிவிடவும். :-)

ஜெகதீசன் said...

அதற்கு முந்தய நாள் என் தம்பி வேளாங்கன்னி சென்று திரும்பியிருந்தான்...
அன்றும் அங்கு இருக்கவேண்டியவன்... ஏதோ காரணத்தால் ஒரு நாள் முன்பே கிளம்பிவிட்டான்...

பிரபாகர் said...

என்ன சொல்ல தம்பி, மனம் நிறைய பாரமாயிருக்கிறது. ஏதோ ஒரு சோகம் அழுத்துவதாய் உணர்வு.

பிரபாகர்.

சி.வேல் said...

மீன்துள்ளியான் said...
என்ன சொல்லுறதுன்னே தெரியல

ஸ்ரீராம். said...

இதுவரை காணாத சூழலின் பீதி...அதனால்தான் இன்னமும் உங்களால் அந்தக் காட்சிகளை மறக்க முடியாமல் மனக் கண்ணிலிருந்து கொண்டு வர முடிகிறது...

'பரிவை' சே.குமார் said...

என்ன கொடுமையான சம்பவம் இது

கிரி said...

சுனாமி ரொம்ப கொடுமையான சம்பவம்.. உங்களுக்கு காலத்திற்கும் இதை மறக்க முடியாது என்றே நம்புகிறேன்!

நான் அப்போது சென்னையில் இருந்து ஊருக்கு வந்து இருந்தேன், முதலில் சன் செய்தியில் கடல் கொந்தளிப்பில் இருவர் சாவு என்று வந்தது.. கடல் எப்படி கொந்தளிக்கும் என்று பேசிக்கொண்டு இருந்த போது..எண்ணிக்கை அதிகமாகி நூறு ஐநூறு என்று அதிகரித்து சென்ற போது உண்மையில் அனைவரும் பயந்து விட்டோம்.

ரோஸ்விக் கொஞ்சம் சிறிய பத்தியா பிரித்து எழுதுங்க ..படிக்க சிரமமாக உள்ளது.

ஜெயந்தி said...

சுனாமி தினம் நெருங்குகையில் உங்களின் இந்த நெகிழ்ச்சியான பதிவின் மூலம் இறந்தவர்களுக்கு சமர்ப்பித்துள்ளீர்கள்.

ரோஸ்விக் said...

ஜெகதீசன் - நல்ல வேலை உங்கள் தம்பி இந்த இடரில் துன்பப்படவில்லை.


பிரபாகர் - ஆமா அண்ணா. என் சோகத்தை இறக்கி வைத்துக்கொண்டிருக்கிறேன்.


Mr.vettiபைய்யன் - நன்றி நண்பரே! மிக இக்கட்டான சூழ்நிலைகள் தான் அவை.


ஸ்ரீராம். - நன்றி நண்பரே! சரியாகச் சொன்னீர்கள்.


சே.குமார் - நன்றி நண்பா. அதன் ஒவ்வொரு நிமிடங்களும் என் மனதில் இன்றும் சோகம் கலந்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.


கிரி - ஆமா கிரி. எங்களுக்கும் அங்கிருந்து கிளம்பும்வரை இதன் பெயர் சுனாமி என்று தெரியாது. மிக சோகமான சம்பவம்.
சின்ன சின்ன பத்திகள் தான். ஆனால் என் டெம்பிளேட் அப்படி பெரியதாக காட்டிவிடுகிறது. சீக்கிரம் இதை மாற்றிவிட வேண்டும். :-)


ஜெயந்தி - ஆம் தோழி. என் முடிவுரையை சரியாக சொல்லி விட்டீர்கள். அடுத்த பகுதியுடன் முற்றும். :-)

பித்தனின் வாக்கு said...

// முதலில் எனக்கு கண்கள் கலங்கின. பிறகு மறத்துப்போய்விட்டேன் //
சத்தியமான உண்மை வரிகள். எனக்கும் முதலில் இறந்தவர்களைப் பார்க்கும் போதும், அதைப் பற்றிக் கேக்கும் போதும் மனது கனத்தது. பின்னர் மரத்துப் போனது. வெறுத்தும் போனது. நன்றி ரோஸ்விக்.