Friday, November 6, 2009

தண்டனைகள் தப்பினால் தப்புக்கள் குறையுமா?


நம்ம ஊர்ல குற்றங்கள் பெருகிகிட்டே வருது. இது எப்ப குறையும்னு நமக்கெல்லாம் ஒரே ஏக்கமா இருக்குது. எப்படி குறையும்?

குற்றங்கள் குறையனும்னா, அது குறையிரதுக்கான வழிமுறைகளை நம்ம ஏற்படுத்தணும் / கடைபிடிக்கணும். இந்திய குற்றவியல் தடுப்பு சட்டம் வருசையா எண்களையும், ஆங்கில எழுத்தையும் கூட்டு சேர்த்துகிட்டு சில புத்தகங்கள்ல தூங்கிகிட்டு இருக்குது. ஒரே சட்டத்துக்கு பல உட்பிரிவுகள். அது சில வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்குமே புரியாது போல. சிவாஜி படத்துல வருமே செக்சன் 49D, 498B....இது மாதிரி இன்னும் என்னென்னமோ இருக்குது போல.

சட்டத்தை படிக்கும் போது எல்லாத்தையும் படிக்கிற நம்ம ஆளுக, களத்துல இறங்குன உடனே அதுல உள்ள எல்லா ஒட்டைகல்லையும் புகுந்து இவங்க வெளிய வர்றதுமட்டுமில்லாம குற்றவாளிகளையும் வெளிய கொண்டுவந்துடுறாங்க.

தேசப்பிதா சொன்னதுல எதை பின்பற்றுகிறார்களோ இல்லையோ, 1000 குற்றவாளி தப்பிக்கலாம் அனால், ஒரு நியாயவாதி கூட தண்டிக்கப்படக் கூடாது அப்படிங்கிறதுல மட்டும் கடைபிடிக்கிறாங்க. ஆனா என்ன, லட்சக் கணக்குல குற்றவாளிங்க தப்பிச்சிட்டாங்க, தப்பிச்சுகிட்டு இருக்காங்க...ஒருத்தன்கூட தண்டிக்கப்படல. பாவம் அந்த அரைநிர்வாணக் கிழவனுக்கு தெரியல, நம்ம ஆளுங்களோட நேர்மை, யோக்கியதை.


நம்மில் பல பேர் நம்ம நாடு ரொம்ப பெரிய நாடு அதுனால, இதுல அவ்வளவு எளிமையா எல்லா குற்றங்களையும் குறைச்சிட முடியாதுன்னு சொல்லிக்கிட்டு திரிவோம். குற்றங்களை நம்ம வீடு, பள்ளி, நம் ஊர், நம் மாவட்டம், மாநிலம், நாடு-ன்னு பார்த்த இடங்களில் எல்லாம் திருத்தியோ, குற்றங்களுக்கேற்றாற்போல் தண்டனைகள் வழங்கியோ தடுக்க முயன்றால் முடியாதா என்ன?

ஒரு மனித சமுதாயம் வீட்டில் தான் தொடங்குகிறது. ஒரு தாயும், தந்தையும் தன் பிள்ளையின் மீது உண்மையான அக்கறை கொண்டு அவர்களை நல்ல முறையில் வளர்த்தால், ஒரு பள்ளி ஆசிரியர் புத்தகப் பாடங்களை போதிப்பதை மட்டும் செய்யாமல் (அதை மட்டுமாவது செய்யுங்க-ன்னு இப்ப கெஞ்சுற நிலமையில இருக்குது), வாழ்க்கை பற்றிய புரிதலை, சாதித்தவர்களின் (சாதித் தலைவர்களின் அல்ல)வாழ்க்கையும் எடுத்துக்கூறி வளர்த்தால் குற்றங்கள் குறைக்கப்படுவது மிக மிகச் சாத்தியமே.

சிறு குற்றங்கள் ஆனாலும், அவற்றின் பாதகத்தை குற்றம் புரிந்தவருக்கு உணர்த்தவேண்டும். வெறுமனே தண்டித்தலிலும் முழுப் பலன் கிட்டாது. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு "Low Crime doesn't mean No Crime". சிறிய குற்றங்கள் மன்னிக்கப்படக் கூடியதாக இருக்கலாம். ஆனால், குற்றவாளி தன் குற்றத்தையும் அதன் பாதகங்களையும் உணர்ந்தால் அவராகவே அது போன்ற குற்றங்களையாவது எதிர்காலத்தில் செய்யத் தயங்குவர்.

தன் பிள்ளை செய்வதெல்லாம் சரியென எல்லா விஷயங்களிலும் நினைப்போர், தாங்களே தங்கள் பிள்ளைகளை குற்றவாளி கூண்டின் முதல் படியில் ஏற்றுகிறார்கள் என்று அர்த்தம். பிள்ளைகளுக்கு பாசம் காட்டுங்கள். செல்லம் என்றுமே காட்டாதீர்கள். பாசத்திற்கும், செல்லத்திற்கும் மிகக் குறைந்த இடைவெளி என்பதை அறிந்திருப்பீர்கள். பாசம் உங்கள் குழந்தையின் எதிர் கால வாழ்விற்கு நீங்கள் அளிக்கும் ஊட்டச் சத்துள்ள உணவு. செல்லம் நீங்களும் உங்கள் குழந்தையும் சேர்ந்து அருந்தும் விஷமான போதைப்பொருள். செல்லத்தால் விளையும் விபரீதங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு குற்றத்தின் பின்னணியைப் பார்த்து, சில சமயங்களில் மன்னிக்கப்படுவதில் உடன்படலாம். சில குற்றங்கள் நிரூபிக்கப்பட்டும், அவற்றிற்கு சரியான தண்டனை வழங்காமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பது உயரிய கருத்தாக இருக்கலாம். அனால், அந்த குற்றவாளி மட்டும் தான் திருந்த வாய்ப்பிருக்கிறது. கடும் தண்டனை அளித்திருந்தால் இது போன்ற குற்றம் செய்ய பல குற்றவாளிகள் உருவாவது தடுக்கப்பட்டிருக்கும். குற்றம் செய்பவர்களுக்கு திருந்த வாய்ப்பளிப்பது என்பது மற்றும் பலருக்கு குற்றவாளி ஆகும் வாய்ப்பளிப்பதாகவே பொருள்படாதோ?

கணவன் மனைவி விவாகரத்து வழக்குகளில், பலமுறை அவர்கள் ஒன்றுகூட வாய்பளித்து கடைசியில் தீர்ப்புக் கூறுவது பொருத்தமாக இருக்கும். அதே சமயம், இன்னும் பிற குற்ற வழக்குகளில், விசாரணைகள் ஒத்தி போடப்படுவது எதனால்? குற்றவாளி திருந்தவா? வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை இன்னும் அருமையாக ஜோடிக்கவா? சட்டங்களின் ஓட்டைகளை முற்றிலும் தெரிந்துகொண்டு தப்பிக்கவா? பல குப்பை வழக்குகள் கூட பல ஆண்டு காலம் நடந்துகொண்டிருப்பது நமது நாட்டின் முக்கிய தூண் பழுதடைந்து விட்டதைத்தான் காட்டுகிறது. அல்லது நம் நீதித்துறையின் கையாலாகாத்தனம் எனப் பொருள் கொள்ளும்படி உள்ளது.

நீதிமன்றங்கள், நமது தொல்லைக்கட்சிகளில் பண்டிகை தினங்களில் இடம்பெறும் பட்டிமன்றங்களுக்கும், வழக்காடுமன்றங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் செயல்படுவது வெட்கக்கேடு. இதைவிடக் கேவலம் சட்டம் பயிலும் மாணவர்களின் சாதீய நிலைப்பாடு. எதை நோக்கி போகிறது நம் நீதித்துறை? நீதித்துறையில் நீதி குறைந்து நிதித்துறையின் கிளையாக செயல்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இரு தரப்புகளுக்கு கொடுக்கப்பட்ட உரிமை தான் வாதம். அது மருந்தில்லா நோயாகி, வாதத் திறமைக்கு தீர்ப்பு பரிசாக அளிக்கப்படுகிறது.

காவல்துறை ஒழுங்காகச் செயல்பாடாலே நாட்டில் பல வகையான குற்றங்கள் கட்டுக்குள் இருக்கும். ஆனால், காவல் துறையின் செயல்பாடுகள் பணக் கட்டுக்குள் அடிமையாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. புகார்கள் முறையாகப் பதியப்படுவதில்லை. எவ்வளவு பெரிய குற்றமாகினும் வழக்குப் பதிவதில் காவல்துறை மும்முரம் காட்டுவதில்லை (எமக்கு நடந்த அனுபவம்....அது தனிபதிவாக எதிர்காலத்தில் வரலாம்). நெருங்கிப் பழகிய காவல்துறை அதிகாரியிடம் கேட்டால், ஒரு வழக்குப் பதியப்பட்டால், அதற்க்கு தேவையான, சாட்சியங்கள் சரியாக விசாரித்து சேர்க்கப்பட வேண்டும். நிறையா எழுத்துவேலைகள் இருக்கும். சரியான செக்சன் பார்த்துப் போட வேண்டும். இந்த வழக்கு சம்பந்தமான கோப்புகளை நீதி மன்றத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். இன்னும் பல நடைமுறை சிரமங்கள் உள்ளதாகச் சொல்கிறார் (வேலை செய்வதற்குத்தானே கூலி. கூலி உயர்விற்கு மட்டும் முதலில் கொடி பிடிக்கிறார்கள்). இது வேதனையான மற்றும் அதிர்ச்சியான விஷயமாகப்படுகிறது.

நீதி மன்றங்கள், எவ்வித பாகுபாடுமின்றி நமது அரசாங்கத்தை கண்டிக்கவோ, தண்டிக்கவோ உரிமை இருந்தும் அவற்றை பயன்படுத்தாமல் அரசியல் வியாதிகளின் அடிவருடிகளாக ஆகிப்போனது வருத்தத்திற்குரியது. ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்களான நம்மால் கண்டிக்கப்படக் கூடியதுமாகும். நீதி தேவதையின் கண் கட்டியிருப்பதை தமக்கு சாதகமாக்கி, நீதி தராசின் ஒரு பகுதியில் வாதமும், மறு பகுதியில் பணமும் மட்டுமே வைத்து நிறுக்க / நிரூபிக்கப்படுகிறது. இந்த நீதித்துறை தன் பலம் அறியாத செத்த யானையாக உள்ளது. (பரியது கூர்ங்கோட்டதாயினும் யானை வெறும் புலிதாக்குரின் - வள்ளுவன்)

காவல்துறையும், நீதித்துறையும் ஒரு குடும்பத்தின் கணவன் மனைவி போன்ற நெருக்கம் இருக்கப்பட வேண்டியவர்கள் (குற்றமற்ற தேசம் உருவாக்க). இவர்களே விவாகரத்து கோரும் அளவிற்கு இன்றைய சூழல் இருப்பதை எங்கு போய் சொல்வது? கட்டப் பஞ்சாயத்து தடுப்பு சட்டம் முதலில் காவல் துறையில் தான் அமுல் படுத்தப்பட வேண்டும்.

இப்போதெல்லாம் குற்றவாளிகளை வேறெங்கும் போய் தேடவேண்டியதில்லை. பெரும்பாலான குற்றவாளிகள், நீதித்துறை, காவல்துறை மற்றும் அரசியல் ஆகியவற்றிலோ அல்லது அவர்களின் பின் புலத்திலோ தான் இருக்கிறார்கள் என்பதை விஜய் படத்தின் குத்து பாடல்களுக்கு ஆடும், டவுசர் போடாத குழந்தைகள் கூட சொல்லும்.

மேலே குறிப்பிட்ட துறையில் மிக மிகச் சில நல்லவர்களும், வல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை மேல சொன்ன கருத்துக்கள் எந்த விதத்திலும் பாதிக்காது. அவர்கள் இத்துறைகளில் பெருகிய களைகளை களைய தூவப்பட்ட களைக்கொல்லிகள்.

இனியொரு விதிசெய்ய வேண்டிய அவசியமில்லை. கொண்டவிதிகளை செம்மைப்படுத்தி, சரியான முறையில் பயன்படுத்தி புதிய உலகம் படைப்போம்.





19 comments:

கபிலன் said...

நல்ல பதிவு. இன்னும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம்னு தோணுது.

"திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...திருடாதே...பாப்பா திருடாதே"
இந்த பாட்டு தாங்க ஞாபகத்துக்கு வருது. என்ன தான் சட்டம் என்று சொன்னாலும், தனி மனிதனுக்கு ஏற்படும் மனமாற்றமே சமுதாய மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பது என் கருத்து.

அதுல இன்னொரு மேட்டர் பாருங்க....பெரும்பாலான குற்றங்கள் எதனால் நடக்கிறது என்று பார்த்தால், பணம் தான் காரணமாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட பணமும், வளமும் எல்லோரிடமும் இருந்தால் குற்றங்கள் பெருமளவு குறையும்.

ஆ.ஞானசேகரன் said...

//இனியொரு விதிசெய்ய வேண்டிய அவசியமில்லை. கொண்டவிதிகளை செம்மைப்படுத்தி, சரியான முறையில் பயன்படுத்தி புதிய உலகம் படைப்போம்.//


உஙக்ளின் ஆதங்கம் புரிகின்றது...

பிரபாகர் said...

நண்பா... ஆதங்கம் அருமை. பணம் எனும் ஒன்று தான் எல்லாவற்றிற்கும் காரணம். பொருத்திப்பாருங்கள், யாவற்றிலும் அது இருப்பது தெரியும்.

பிரபாகர்.

ஈ ரா said...

//தன் பிள்ளை செய்வதெல்லாம் சரியென எல்லா விஷயங்களிலும் நினைப்போர், தாங்களே தங்கள் பிள்ளைகளை குற்றவாளி கூண்டின் முதல் படியில் ஏற்றுகிறார்கள் என்று அர்த்தம்.//

மிகச் சரி

//இப்போதெல்லாம் குற்றவாளிகளை வேறெங்கும் போய் தேடவேண்டியதில்லை. பெரும்பாலான குற்றவாளிகள், நீதித்துறை, காவல்துறை மற்றும் அரசியல் ஆகியவற்றிலோ அல்லது அவர்களின் பின் புலத்திலோ தான் இருக்கிறார்கள் என்பதை விஜய் படத்தின் குத்து பாடல்களுக்கு ஆடும், டவுசர் போடாத குழந்தைகள் கூட சொல்லும்.//

--)

பத்மஹரி said...

தெளிவான கருத்துக்கள்,பிரச்சினைகளுக்கு தீர்வாகக்கூடிய பரிந்துரைகள்

//அவர்கள் இத்துறைகளில் பெருகிய களைகளை களைய தூவப்பட்ட களைக்கொல்லிகள்//

களைக்கொல்லிகள் பெருகி களைகளை வேரறுப்பார்கள் என்று நம்புவோம்!

நல்லா எழுதி இருக்கீங்க ரோஸ்விக். வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

தலைப்பு நல்லாருக்கே... படிச்சி பார்க்கலாம்.. :p

கலகலப்ரியா said...

//இப்போதெல்லாம் குற்றவாளிகளை வேறெங்கும் போய் தேடவேண்டியதில்லை. பெரும்பாலான குற்றவாளிகள், நீதித்துறை, காவல்துறை மற்றும் அரசியல் ஆகியவற்றிலோ அல்லது அவர்களின் பின் புலத்திலோ தான் இருக்கிறார்கள்//

அது..!

சீரியசான பதிவுதான்..! சிந்திப்பாங்களா..?!

ரோஸ்விக் said...

1) கபிலன் - மிக்க நன்றி நண்பரே!

//தனி மனிதனுக்கு ஏற்படும் மனமாற்றமே சமுதாய மாற்றத்துக்கு வழிவகுக்கும்//

அது தான் உண்மையும் கூட. அதைத்தான் இந்த பதிவிலும் சொல்லி இருக்கிறேன். :-)



2) பிரபாகர் - மிக்க நன்றி அண்ணா!

இந்த பணம் நம்ம பிணம் ஆனாலும் நம்மை விடாது போல. :-(


3) ஈ ரா - கருத்துடன்பாடுக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்ற நண்பரே!


4) பத்மஹரி - வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே. களைகள் விரைவில் களையப்படும் என நம்புவோம். இல்லையெனில் களையெடுக்க நாம் தயாராக வேண்டும். :-)


5) கலகலப்ரியா - வாங்க ஆத்தா வாங்க. கொஞ்சம் பெரிய்ய்ய பதிவுதான். நேரமளித்து வாசித்தமைக்கு நன்றிகள். :-)
எதிர்கால சந்ததியவாவது சிந்த்திக்க வைப்போம்.

Prathap Kumar S. said...

இருங்க நான் எஸ்.ஏ.சந்திரசேகர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்...

பதிவின் நீளத்தை குறைச்சு சுருக்கமாக எழுதினால் முழுக்க வாசிக்க முடியும், சுவாஸ்யமும் குறையாது..... கொர்...கொர்.....

ரோஸ்விக் said...

நாஞ்சில் பிரதாப் - எந்திரீங்க எந்திரீங்க....தூங்குனது போதும்...ஊர் வந்துடுச்சு...
ரொம்பவே பெரிய்ய்ய பதிவுதான் நண்பா...இதை இரண்டு பாகமாக எழுத நினைத்தேன். ஆனால், சொல்ல வந்த்ததன் ஆழம் புரியாமல் போய்விடுமோ என்ற எண்ணம். அதுபோக, நீங்கெல்லாம் வந்து ரெண்டு ஒட்டு போடணும், ரெண்டு பின்னூட்டம் இடனும்...அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்ல.

கொஞ்ச நேரம் ஆனாலும் ஒரே நாள்ல இந்த கருமத்தை படிச்சுட்டு போயிரலாம்ல. :-) என்னோட ப்ளாக் டெம்ப்ளேட்-ம் ஒரு காரணம். ரொம்ப பெருசா காட்டுது.

படிச்சுட்டு தூங்குனதுக்கு நன்றி நண்பரே!

ஸ்ரீராம். said...

கொஞ்சம் நீளமான பதிவு. ஏகப் பட்ட வழக்குகள் சேர்ந்து போய் உள்ளதும், வாய்தாக்கள் வாங்குவதும், விசாரணைக் கைதிகளே நீண்ட நாள் காத்திருப்பதும்....பணம், அரசியல்வாதிகள் தலையீடும்...மாற ரொம்ப நாள் ஆகும்.

Nan said...

good one bro

V.N.Thangamani said...

அற்புதமான சிந்தனை, இது எல்லோர் மனதிலும் உரைக்கவேண்டும்.
இதற்கான தீர்வு மனவளக்கலை 1, 2, 3 தொகுதிகளில் முழுமையாக உள்ளது.
தயவு செய்து அந்த புத்தகத்தை படித்து பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள்
இது தொடர்பாக www.vethathiri.org தளத்தையும் பாருங்கள் . நன்றி அய்யா.

ரோஸ்விக் said...

ஸ்ரீராம் - ஆம் கொஞ்சம் நீளமான பதிவுதான் நண்பரே.
வழக்குகளை முடிக்க கொஞ்சம் நாள் ஆகும் என்பது உண்மை. ஆனால், நம்மவர்கள் அதற்காக தங்களை கொஞ்சம் கூட மனதளவில் மாற்றிக்கொள்ளாமல் செயல்படுகிறார்கள்.

Nan - மிக்க நன்றி

வி.என்.தங்கமணி - மிக்க நன்றி

Sanjai Gandhi said...

தண்டனை கடுமையானால் குற்றங்கள் குறையும்.

ரோஸ்விக் said...

SanjaiGandhi - நீங்கள் சொல்வது தான் என்னுடைய கருத்தும். வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!

கடை(த்)தெரு said...

தங்களின் ஒவ்வொரு வரியிலும் சமூக அக்கறை தெரிகிறது.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இன்பா

அன்பேசிவம் said...

ஆம் நண்பா, நான் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். புக்கட் தீவுகளில் ரோட்டில் எச்சில் துப்பினால் 2500 டாலர்கள் அபராதம். பேருந்தில் புகைபிடித்தாலோ, குட்கா சமாசாரங்களை மென்றாலோ 2000 டாலர் அபராதம்.
முக்கியமாக அதை அவசியம் வசூலிக்கிறார்கள். நியாயமாக.:-)

M.Mani said...

வீட்டில் தந்தையை சாராயக்கடையில் பார்த்தால் மகன் பள்ளியிலா இருப்பான்? தலைவர்கள் நேர்மையாளர்களாக ஒழுக்கச்சீலர்களாக இருந்தால்தான் அதிக அளவு மக்கள் நேர்மையாக இருப்பார்கள். இன்றும் தமிழ்நாட்டில் தலைவர் மனைவி மற்றும் துணைவியுடனும் நீதிபதியால் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டவரும் மத்தியில் போபர்ஸ் புகழ் தலைவரின் வழிகாட்டலில் அரசு செயல்படுகிறது. இந்நிலை மாறினால்தான் ஊழல் செய்த தலைவர்கள் தண்டிக்கப்பட்டால்தான் மக்கள் மத்தியில் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும் குற்றங்கள் குறையும்.