பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெண்களில் பலருக்கு, பெண் சுதந்திரம் என்பது என்னவென்று தெரியாமல் போனது வருத்தம்தான். பெண்ணடிமை எங்கெல்லாம் உள்ளதோ, அதை களைய முனையும் ஆண்களில் ஒருவனாக என்னை புரிந்துகொண்டு படியுங்கள்.
பெண் சுதந்திரம் பற்றி நம் நாட்டில் மட்டுமல்ல, இன்னும் பல வெளிநாடுகளிலும் தவறான புரிதலைக் கொண்ட பெண்டிர் அதிகம் உள்ளனர் என்பதிற்கு எடுத்துக்காட்டாகத் தான் இந்தப் பதிவு. இது ஒரு விபச்சாரியின் மூலம் நான் அறிந்துகொண்ட அனுபவம். உடனே இவனுக்கும் விபச்சாரிக்கும் எப்படி உறவு? என்ற குறுக்குப் புத்தியை தவிர்க்கவும். எய்ட்ஸ் நோய் பற்றி விளக்குபவன் எய்ட்ஸ் நோயின் கொடூரத்தை அனுபவித்தவனாக இருக்க வேண்டியதில்லை. :-)
இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் மாடல்களே
அவளது பார்வையில் பெண் சுதந்திரம் - கீழே உரையாடல் வடிவில்:
நீ எந்த நாடு?
ஃபிலிப்பைன்ஸ்.
நீங்க எந்த நாடு?
இந்தியா.
ஓ! எனக்கு இந்தியப் பெண்களை ரொம்ப பிடிக்கும்.
எதனால?
அவர்களுடைய நீண்ட மூக்கு. அப்புறம் அவர்களின் டிரஸ் சாரீ. அவங்க பொதுவாவே ரொம்ப அழகானவங்க.
அதுசரி. உங்க மூக்கு எங்க ஆளுங்க அளவுக்கு நீளம் இல்லைதான். ஆமா, உனக்கு இந்தியப் பெண்களை மட்டும் தான் பிடிக்குமா? அப்ப எங்க ஆம்புளைங்கள?
இல்ல இல்ல அவங்களையும் பிடிக்கும். அவங்களும் ரொம்ப ஹேண்ட்சம். அவங்களுடைய மீசை ரொம்ப பிடிக்கும்.
ம்க்க்கும்...இப்பவெல்லாம் மீசை இருக்கது எங்க நாட்டு பொண்ணுங்களுக்கே புடிக்க மாட்டேங்குது...
உங்க நாட்டுல மேரேஜ் ஃபங்க்சன் ரொம்ப நல்லா இருக்குமாமே...? எப்படி பண்ணுவாங்க? கல்யாணம் பண்ணினா பொண்ணு எங்க தங்குவா?
எங்க ஊர்ல கல்யாணம் பல விதமா நடக்கும். அவங்கவங்க ஜாதி, மதத்துக்கு ஏற்ற மாதிரி. கல்யாணம் முடிச்ச பொண்ணுங்க அவ புருசனோட வீட்டுல, சில சமயம் மாமனார், மாமியாரோட இருப்பாங்க.
அப்படியா! எப்படி கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் மாமனார், மாமியாரோட இருக்காங்க? அது டிஃபிகல்ட்டா இருக்காது? ஆமா, எத்தனை ஜாதி மதம் இந்தியாவுல இருக்கு?
ஆத்தா, இந்த கேள்விக்கு எனக்கே பதில் தெரியாது... ஆமா, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
இல்ல. ஆனா, நான் சிங்கள் மதர்.
அப்புடின்னா?
எனக்கு கல்யாணம் ஆகல. ஆனா, எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு.
இதென்னா புதுக்கதையா இருக்கு. அப்புறம் எப்படி அந்த குழந்தை?
எனக்கு ஒரு பாய் ஃபிரெண்டு இருந்தான். அவனுக்கும் எனக்கும் பொறந்த குழந்தை தான் இது.
இப்ப உன் பாய் ஃபிரெண்டு இறந்து போயிட்டானா?
இல்ல. ஓடிப் போயிட்டான்.
கல்யாணம் ஆகமலே புள்ள பெத்துகிட்டியா? அப்ப எப்ப கல்யாணம் பண்ணிக்குவே?
ஆமா. எவனாவது கல்யாணம் பண்ணிக்கிற ஆசையோட எனக்கு கிடச்சா. உங்க இந்தியாவுல கல்யாணம் எப்படி பண்ணிக்கிறீங்க?
அங்க பெரும்பாலும் அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க.
அப்ப உங்க நாட்டுல லவ் மேரேஜ் கிடையாதா?
இருக்கு. ஆனா, ரொம்ப கஷ்டம். சில பேமிலில ஏத்துக்க மாட்டாங்க.
ஓ! அப்ப உங்க நாட்டுல சுதந்திரம் கிடையாதா?
அப்படி சொல்ல முடியாது.
உங்க நாட்டுல எல்லாரும் டிரஸ் ஃபுல்லா கவர் ஆகுற மாதிரி போடுறாங்களே...அது ஏன்?
அது அப்படி தான். அது தான் எங்க கலாசாரம்....வழக்கம்.
எங்க நாட்டுல, எங்களுக்கு முழு சுதந்திரம். நாங்க எப்படி வேணும்னாலும் டிரஸ் போட்டுக்கலாம். எப்படி வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். பேரண்ட்ஸ் ஒன்னும் சொல்ல முடியாது.
உன் டிரெஸ்ஸை பார்த்தாலே தெரியுது. இதை எங்க நாட்டுல ப்ரீகேஜி குழந்தைங்க தான் போடும். ஆமா, உனக்கு ஒரு குழந்தை இருக்கதா சொன்னியே...இப்ப யாரு பாத்துக்கிருவா? நீ இங்க சிங்கப்பூர்-ல இருக்க...
ஃபிலிப்பைன்ஸ்-ல எங்க அம்மா பாத்துக்குவாங்க. நான் அப்ப அப்ப சிங்கப்பூர்-க்கு இந்த தொழிலுக்காக வந்துடுவேன்.
ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆகிட்டு இப்படி இந்த தொழில் செய்யுறியே, ஏன்?
என்ன பண்றது? தினசரி வாழ்கை ரொம்ப எக்ஸ்பென்சிவா இருக்கு. பணம் வேணும்-ல.
அதுசரி. இப்புடி சம்பாதிச்சு...ஃபியூச்சர்ல உன் குழந்தைய என்ன பண்ணப் போற??
அவள நல்லா படிக்கவச்சு...நல்லா வேலைக்கு அனுப்பலாம்னு இருக்கேன்.
--- இவளின் வாழ்க்கையில் இருந்தே எது பெண் சுதந்திரம்? எது பெண்ணடிமை? எனப் புரிந்துகொள்ள முடிகிறதா உங்களால்?
அவள் விரும்பியதை உடுத்தியதிலோ, விரும்பிய படியெல்லாம் அவள் வாழ்க்கையை வாழ்ந்ததிலோ அவளுக்கு சுதந்திரம் கிடைத்து விடவில்லை. அவளது பாய் ஃபிரெண்டு-ம் அவளுக்கு விடுதலை கொடுத்து விடவில்லை.
மாறாக, அவள் தன் பெண் குழந்தையை நல்லா முறையில் படிக்க வைத்தால் அதுவே அவளுக்கு கிடைத்த சுதந்திரம். இல்லையா?
நம் நாட்டிலும் பெண்கள் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளையும், வசதிகளையும் நாம் வழங்க வேண்டும். அவர்கள் நம் குடும்ப வாழ்வில் சிறந்து விளங்க தேவையான தைரியத்தையும், மன உறுதியையும் நாம் ஊட்ட வேண்டும்.
நல்ல குடும்பங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட நல்ல குடும்பங்களை உருவாக்கும் உயரிய பொறுப்பு என் அருமை பெண் குலத்திற்கு உண்டு என்பதை பெண்களே நீங்கள் உணருங்கள். அடிமைத்தளையிலிருந்து பெரும்பாலான பெண்கள் விடுபட்டுவிட்டார்கள். இன்னும் அடிமையாய் நடத்தப் படுபவர்களை விடுவிக்க சரியான முறையில் முயலுங்கள். உங்களுக்குத் தோள்கொடுக்க பல பாரதிகளும், பெரியார்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் உங்கள் தந்தையாகவோ, அண்ணன் தம்பியாகவோ அல்லது கணவன்மார்களாகவோ வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து நல்ல சமுதாயம் படைக்க வாரு(ழு)ங்கள்.
32 comments:
nalla karuthu :) Nice
நல்ல பகிர்வு. சுஜாதா ஒரு வேசையுடன் உரையாடும் சிறுகதை நினைவிற்கு வந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரியான நேரத்தில் வந்தீர்கள். இந்த உரையாடல் போல சிங்கப்பூரில் நானும் பேசினேன். நண்பர் என்னை சோதிப்பதற்காக அழைத்துச் சென்றார். திருச்சியில் இருந்து அங்கு வந்து இருந்த அந்தப் பெண்ணிடம் வெளியே உட்கார்ந்து நிருபர் பேட்டி போல் பேசியதைப் பார்த்து கடைசியில் அந்தப் பெண் என் நண்பரிடம் கூறியது இன்னமும் நிணைவில் இருக்கிறது.
ராஜா, அடுத்த முறை அண்ணந்தம்பிக உறவு மாதிரி இருக்றவுங்கள கூட்டிக்கிட்டு வராதீங்க
நல்ல பதிவு நண்பரே!!
Super!
கிரேட் ரோஷ்விக்!தைரியமான பதிவு.நல்ல நடை.
தேவையான பதிவு தான்..............
நல்ல அலசல்...
நல்ல பகிர்வு
:) Nice :)
தமிழிஷ்-ல குத்தீட்டுப் போங்க ராசா.... :-)
arumaiyana pathivu nanbare CC :)
நல்தொரு பகி்ர்வு.......
2) செ.சரவணக்குமார் - அப்படியா! தேடிப் படிக்கவேண்டும் அந்த சிறுகதையை. மிக்க நன்றி நண்பா!
3) ஜோதிஜி. தேவியர் இல்லம் - ஆம் நண்பரே! நல்ல அனுபவம் தான். பாவம் அவர்களது வாழ்க்கை முறை. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
4) பா.ராஜாராம் - மிக்க நன்றி நண்பரே! சில கருத்துக்களை துணிவோடு கூறித்தானே ஆகவேண்டும். :-)
5) கேசவன் .கு,
Robin,
ஊடகன்,
ஸ்ரீராம்,
T.V.Radhakrishnan,
மணிப்பக்கம் மற்றும்
புலவன் புலிகேசி - தங்கள் வருகைக்கும், என்னை ஊக்குவிப்பதற்கும் மிக மிக நன்றி நண்பர்களே!
6) Anonymous - ஏய்! யாருப்பா அது?? அகிலன் OR ஜெய்?
துபாயிலும் நிறைய இதுபோல பொண்ணுங்க இருக்குதுங்க... அவங்க கலாச்சம் ரொம்பவே வித்தியாசம்.. ஒரே ரூம்ல பசங்களும் பொண்ணுங்களும் ஒண்ணா ஒரு கூட்டமாவே இருப்பாங்க... என்ன கொடுமைங்க இது..
நான் வரதுக்குள்ளே என் ஓட்டை யார் போட்டது... அடப்பாவமே இங்கயும் கள்ள ஓட்டு...
துபாயிலும் நிறைய இதுபோல பொண்ணுங்க இருக்குதுங்க... அவங்க கலாச்சம் ரொம்பவே வித்தியாசம்.. ஒரே ரூம்ல பசங்களும் பொண்ணுங்களும் ஒண்ணா ஒரு கூட்டமாவே இருப்பாங்க... என்ன கொடுமைங்க இது..
நான் வரதுக்குள்ளே என் ஓட்டை யார் போட்டது... அடப்பாவமே இங்கயும் கள்ள ஓட்டு...
விபச்சாரி - இது சரியான சொல்லாடலா? ஓக்கே.. செக்ஸ் லேபர்?? ஒரு செக்ஸ் லேபரிடம் இத்தனை கேள்விகள் கேட்பது என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
அவளுடைய ஓடிப்போன பாய்பிரண்ட் அவளை வெறுமனே ஏமாற்றியிருக்கிறான். ஆனால், இந்த கேள்விகள் அவளை கற்பழித்திருக்கின்றன.
எல்லாம் ஏற்கனவே (ஜி.நாகராஜனின் நாளை இன்னொரு நாளே - படித்திருக்கிறீர்களா?) கேட்டுக்கேட்டுப் புளித்துப் போன கேள்விகள். பதில்கள் மாறியிருக்கின்றன - ஆனால் கேள்விகள் அப்படியே இருக்கின்றன.
ஏன் தெரியுமா? முடிவெடுக்கத் திராணியற்றவர்களால் கேள்விகளின் ஒரு சின்ன இடைவெளியைக் கூட மாற்ற இயலாது.
கடைசி 2 பாராக்கள்... உங்கள் நிலைப்பாடு என்ன என்றே தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஜெகநாதன் - தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.
சோறு - சாதம், வாத்தியார் - ஆசிரியர், வக்கீல் - வழக்கறிஞர் இது போல் தான் விபச்சாரி - பாலியல் தொழிலாளி என்பது என் கருத்து.
இது ஒன்றும் அவளிடம் குறித்து வைத்துக்கொண்டு கேட்கப்பட்ட பேட்டி அல்ல. நாங்கள் உடல் இச்சை தீர்க்க சென்ற ஆட்களும் அல்ல. இது எதிர்பாராத விதமாக நடந்த சாதாரண உரையாடல். என் எழுத்து நடை, நாங்கள் கொண்ட பேச்சு நடையில் இருந்து வேறுபட்டு தெரியலாம். இதில் முகஞ்சுளிக்கும் அளவுக்கு எதுவும் இடம் பெறவில்லையென நினைக்கிறேன்.
இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் சந்திக்கும்போது பெரும்பாலும் ஒரே மாதிரியான கேள்விகள் தான் இடம் பெரும். பதில்கள் மட்டுமே மாறுபடும். நீங்கள் என்னை புதிதாக சந்தித்தாலோ அல்லது வேறு ஒரு பதிவரை சந்தித்தாலோ நமது விசாரிப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். நீங்கள் நலமா? எப்போது வந்தீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் செய்யும் வேலை எந்த மாதிரியானது? இந்தப் படம் எப்படி உள்ளது? எல்லாமே....அவரவரின் பதில்கள் வேறுபடலாம். இதில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டது அல்ல. வழக்கமான உரையாடல் தான்.
கடைசி 2 பாராக்கள்...என் நிலைப்பாடு தெரிந்துகொள்ளமுடியாதது எனக்கு அதிர்ச்சியாகத் தான் உள்ளது. ஒருவேளை என் எழுத்து நடை எளிதாக இல்லையோ என்னமோ...
அநேகமாக இதுவரை படித்த நண்பர்கள் புரிந்துதான் படித்து சென்றார்கள் என நினைக்கிறேன்...:-)
//அநேகமாக இதுவரை படித்த நண்பர்கள் புரிந்துதான் படித்து சென்றார்கள் என நினைக்கிறேன்...:-)
//
அதுதான் தப்பு!
ரெண்டாவது தடவையம் வந்து உத்துப் பாத்து பின்னூ போடறவங்கதான் பெஸ்டு! புரிஞ்சிக்கோங்க
ஒருவேளை அந்த பெண்ணுக்கு நாம காட்டுமிராண்டி மாதிரி தெரிவோமோ!?
சொல்வதோடு எழுதுவதோடு மட்டும் நிறுத்தாமல் செயலிலும் பெண்களுக்கு ஊக்கம் உறுதியும் கொடுங்கள் ரோஸ்விக்.
எனக்குப் புரிந்தது :)
அன்பு ரோஸ்விக்,
நான் சொல்ல மறந்தது. உங்களிடம் எனக்கு நிறைய அன்பு (அதுமட்டும்தான்) உண்டு. உங்களின் கருத்துக்களை விமர்சிக்கிற எண்ணத்தில் உங்களுக்கும் எனக்குமான இடைவெளியைக் குறைத்துக் கொள்ள மட்டுமே முயற்சிக்கிறேன்.
இந்த கேள்விகள்... அப்கோர்ஸ் இத்தனை கேள்விகள் ஒரு விபச்சாரி / விலைமகள் / பா.தொ (நாம் எந்தப் பெயரில் அழைத்தாலும் மனம் காட்டுகிற பிம்பம் மாறப்போவதில்லை) தேவையா என்பதே என் நோக்கு, போக்கு எல்லாம். கேள்விகள் அத்தனையும் அதர பழசயாய் இருப்பதால் வந்த ஒரு ஏமாற்றம் கலந்த எதிர்வினைதான் இது.
மேலும் இந்த மாதிரியான கேள்விகளுக்குள் ஒளிந்திக்கிற ஒரு-பொருளைத்-திறந்து-பார்க்கிற தொனியே முதலில் கருத்தைக் கவர்கிறது. பட்டவர்த்தனமாக ஒரு தீர்வை முன்வைக்க முடியாத ஆக்கமாக இருக்கிறது உங்கள் பேட்டி வித் ப்ராஸ்ட்டிடியூட்.
//அவள் தன் பெண் குழந்தையை நல்லா முறையில் படிக்க வைத்தால் அதுவே அவளுக்கு கிடைத்த சுதந்திரம்//
அப்படியா? இது சுதந்திரம் அல்ல அடிமைத்தனம்! இந்த பளுவான பொறுப்புணர்ச்சியை அவள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? எது இன்னொருவர் சுதந்திரம் என்று நீங்கள் எப்போது வரையறுக்க ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே அந்த சுதந்திரம் செத்துப் போய்விடுகிறது.
//அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளையும், வசதிகளையும் நாம் வழங்க வேண்டும்.//
அமர்க்களமாகத்தான் இருக்கிறது! இதில் வரும் "நாம்" என்பது ஆண்களை மட்டும் அல்லாமல் பெண்களையும் சேர்த்துக் கொள்கிறது என்றால் உண்மையிலேயே அமர்க்களம்தான். ஆனாலும் இந்த 'வழங்கல்-ஆபிஸர்கள்' விஷயம்தான் கண்ணை உறுத்துகிறது. வாய்ப்புகள், வசதிகள் என்றால், எதற்கான வாய்ப்பு, எப்படிப்பட்ட வசதி என்றும் புரியவில்லை; அல்லது அதற்கும் உங்களிடம் ஏதும் திட்டவரைவு இருக்கிறதா?
//நல்ல குடும்பங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.//
ஸாரி. நான் அறியவில்லை. எப்படி திடீரென்று இப்படி ஒரு சிந்தனை உங்களுக்கு உதித்தது என்று தெரியவில்லை. இந்த நல்ல, உத்தமமான, மகிழ்ச்சியான போன்ற அளவுகோல் இல்லாத லேசுபாசான மதிப்பீடுகளை மட்டும் வைத்து குடும்பத்தை ஒரு சமுதாயம் அளவுக்கு ஸ்கேல் செய்யமுடியாது. உங்கள் கூற்றுப்படி பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து, தைரியம் ஊட்டி, வாய்ப்பு-வசதிகளைப் பெருக்கியும் கொடுத்து விட்டால் குடும்பம் நல்லதாகிவிடும் - அப்புறம் அப்படியே சமுதாயமும் நல்லதாகிவிடும் என்கிறீர்கள். முக்கியமாக விபச்சாரம் நல்ல சமுதாயத்தில் இருந்து ஒழிந்துவிடும் என்றும் சொல்கிறீர்கள். இன்னொருமுறை கேட்கிறேன்: விபச்சாரத்தால் ஒரு நல்ல சமுதாயம் சீர்குலைந்து போய்விடுமா?
//குடும்பங்களை உருவாக்கும் உயரிய பொறுப்பு என் அருமை பெண் குலத்திற்கு உண்டு என்பதை பெண்களே நீங்கள் உணருங்கள்//
அடக்கடவுளே! இந்த மாதிரியான புகழுரைகள்தான் பெண்ணடிமைத்தனத்தின் முதற் படிக்கட்டுக்கள். பெண்களை இப்படி உயர்ச்சியாய் பேசிப்பேசியே அவர்களின் மென்னுணர்வுகளை சைலண்டா கொலை பண்ணிடறாங்க ஆண்கள். குடும்பங்களை உருவாக்கும் பொறுப்பு ஆண்-பெண் இருவருக்கும் சமமானது. வாழ்வியல் நிலைப்பாடு இருவருக்கும் வெவ்வேறு தளங்களில் மாறுபட்ட கனங்களில் இருக்கலாம். ஆனால் மொத்த பளுவையும் ஒருத்தரிடம் மட்டும் சாமார்த்தியமாக ட்ரான்ஸ்ஃபர் செய்வதுதான் அடிமைத்தனம் என்பது.
நீங்கள் பெண்ணடிமைத்தனத்தைப் போக்குவோம் என்ற பேரில் உங்களை அறியாமலேயே ஆதிகால பெண்ணடிமை சாஸனத்தின் கார்பன் காப்பியை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
சுதந்திரத்தை எப்போது நீங்கள் 'வழங்க' முற்படுகிறீர்களோ அப்பவே சுதந்திரம் ஒரு ரேஷன் கச்சாப் பொருளாகி தன் மதிப்பை இழந்துவிடுகிறது.
//இன்னும் அடிமையாய் நடத்தப் படுபவர்களை விடுவிக்க சரியான முறையில் முயலுங்கள்//
முயலுங்கள் ஆமையுங்கள் எல்லாம் சரி.. ஆனால் அடிமைகள் யார்? உங்கள் பார்வையில் ஃபிலிப்பைன்காரி விடுதலையானவள் (ஏன்னா... //அவள் தன் பெண் குழந்தையை நல்லா முறையில் படிக்க வைத்தால் அதுவே அவளுக்கு கிடைத்த சுதந்திரம்//) ஸோ, அடிமைகள் யார் யார்??
//உங்களுக்குத் தோள்கொடுக்க பல பாரதிகளும், பெரியார்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்//
இதுதான் ஃபைனல் இன்ஸல்ட்-ங்கிறது! ஒரே லைனில் மூன்று வர்க்கங்களை அடித்து வீழ்த்தியிருக்கிறீர்கள் (பாரதிகள் + பெரியார்கள் + பெண்கள்). ரோஸ்விக், தனக்கான சுதந்திரத்தை பெண்களே எடுத்துக் கொள்ளட்டும். எதுக்கு பாரதிகளும் பெரியார்களும் தோள் கொடுக்க வேண்டும்? நாமளும் ரேஷன் முறையில் சுதந்திரத்தைப் பிச்சீ பிச்சீ கொடுக்க வேண்டும்?? அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் கவனமாக இருந்தால் மட்டும் போதாதா?
கோவி.கண்ணனின் - பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை என்று ஒரு பதிவு உண்டு. இயன்றால் வாசித்துப் பாருங்களேன் (http://govikannan.blogspot.com/2009/07/7.html). இது குடும்ப அமைப்பின் முக்கியமான சாரத்தை அலசும் பதிவு.
பி.கு.
நான் நேற்று போட்ட பின்னூவில் முழுமையாக கருத்து வெளியிடமுடியவில்லை. ஆகவே டெலிட் செய்துவிட்டேன்
தைரியமான உதாரணம்,... பாராட்டுகள்... இதை இங்கு யாரும் உணரபோவதில்லை... பட்டால்தான் புரியும் என்றால்.. அப்படியும் இல்லை அந்த பிலிபினோ பெண்ணைப்போல
என்ன பாஸ் நீங்க? அவங்களை மாதிரி வாழனுமுன்னு சொல்ல வரீங்களா?
தவறுன்னு தெரிஞ்சி செய்கிறவங்களை என்ன பண்ணுரது.
பட்டபின் புத்திவந்தென்ன???????
நமது வாழ்க்கை முறை அந்த பெண்மணிக்கு அப்படி தோன்றலாம்.
ஹேமா - மிக்க நன்றி ஹேமா. நிச்சயமாக செயலிலும் இருக்கும் தோழி. எனது தந்தை எனக்கு முன்னுதாரனமாக இருக்கிறார் என்பதில் எனக்குப் பெருமையே.
எம்.எம்.அப்துல்லா - நம்புறேன் தல :-) மிக்க நன்றி.
ஆ.ஞானசேகரன் - நன்றி நண்பரே!. இதை படித்த சிலர்...நான் அது போன்ற செயல்களில் ஈடுபட்டு, இப்போது திருந்திவிட்டு, அவளது தொழிலை கேவலப் படுத்துவதாக புரிந்து கொண்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.
நான் அவளது தொழிலையோ, அவளையோ கேவலமாக சித்தரிக்க முயலவில்லை...அவள், சுதந்திரம் என்பதை எப்படி புரிந்து கொண்டுள்ளாள் என்பதை கூற முயற்சித்தேன்.
கலையரசன் - நண்பா தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். இதற்கு முந்தைய பகுதியை பார்க்கவும். அவள் போல வாழ முடிவெடுப்பது அவரவர் சுதந்திரம் (இப்படி வாழுங்கள் என்று சொல்ல முற்பட்டால் அதுவும் சுதந்திர பிரச்சனை ஆகிவிடும் :-) ). நன்றி நண்பரே!
அன்புடன் மலிக்கா - வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி தோழி. நீங்கள் இந்த பதிவை சரியான முறையில் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
பெண்கள் சுதந்திரமாக இருக்கவேண்டுமென்ற ஒரே உயரிய கொள்கையை நீங்களும், நானும் வெவ்வேறு கோணத்தில் அணுகுவதாக எனக்கு படுகிறது.
நான் இங்கு கூற வந்த விஷயம், அந்த பெண் தமக்கான சுதந்திரம் எப்படிபட்டது என்பதை எப்படி புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதுதான். அதற்கான வரிகள் ...
//எங்க நாட்டுல, எங்களுக்கு முழு சுதந்திரம். நாங்க எப்படி வேணும்னாலும் டிரஸ் போட்டுக்கலாம். எப்படி வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். பேரண்ட்ஸ் ஒன்னும் சொல்ல முடியாது. //
இந்தப் பதிவு விபச்சாரத்தை கேவலப் படுத்த அல்ல. நான் குறிப்பிட்ட வசதிகளையும், வாய்ப்புகளையும் இங்கு வந்து படித்துச் சென்று, பின்னூட்டமிட்ட பெண்கள் சரியாகப் புரிந்து கொண்டதாக உணர்கிறேன்.
பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்றுதான் அனைத்துப் பெண் விடுதலை விரும்பிகளும் விரும்புவார்கள் என நினைக்கிறேன். தாங்கள் அதையும் அடிமைத்தனம் என்று கூறும்போது நமது மாறுபட்ட கருத்துக் கோணத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
//நல்ல குடும்பங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்கும்//
எனக்கு திடீரென தோன்றிய சிந்தனை அல்ல. நம் முன்னோர்கள் கூறிச் சென்றது தான். "குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்"...இன்னும் பல.
"சுக்கா, மிளகா சுதந்திரம் அக்கா கொடுக்கக் கிளியே" என்று பாரதி சொன்னதும், இது ரேசன் கடைப் பொருளல்ல என்பதும் பலருக்கும் தெரிந்தது தான். பெண்கள் போராடி பெற முயலும்போது, நாம் அவர்களுக்கு உதவுவதும், தாமே முன்வந்து நாம் அறிந்த பெண்களுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கப் பெறுவதும் தான் எனது பாட்டன்மார்களான பாரதியும், பெரியாரும் சொல்லி தந்தது.
பாலியல் வேட்கை ஒவ்வொரு மனிதத்திற்கும் (ஆண், பெண், திருநங்கைகள்) இருக்க வேண்டிய ஒன்று தான். இதை தவறென்று சொல்ல நான் இங்கு முனையவில்லை. விபச்சாரம், விபச்சாரிகள் குறித்து இழி மனநிலையும் எனக்கில்லை.
நண்பர் கோவி. கண்ணனின் இடுகைகளில் சிலவற்றை படித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட இடுகையின் ஒரு பகுதியை ஏற்கனவே படித்திருக்கிறேன். பிற பகுதிகளையும் விரைவில் படிக்கிறேன். நல்ல கருத்தாளம் கொண்ட இடுகைகளை எழுதுவார் அந்த நண்பர்.
தங்களின் அன்புக்கும், புரிதலுக்கும் நன்றி தல. நேரில் சந்திக்கும்போது பேசுவோம். விடை பெறுகிறேன்.
நல்லா இருக்கு அண்ணே. நானும் சிங்கப்பூருதான். 91327896 டயம் கிடைக்கறப்ப போன் பண்ணுங்க, பதிவர் கூட்டங்களுக்கு வாங்க. சந்திப்போம். நன்றி.
சந்திப்புகளுக்காகக் காத்திருக்கிறேன். :-) எனக்கு தெரியப்படுத்துங்க.
Post a Comment