Friday, April 30, 2010

பள்ளிக்கூடத்துல பேரு சேக்கனும்...

கிராமத்துல பொறந்து, அங்கையே படிச்சு வளந்த வாழ்க்கைய நெனச்சுப் பாத்தா... அந்த ஊரு வயக்காடுக மாதிரி ரொம்ப பசுமையாத் தான் இருக்கு.

பயலுக்கு நாலு வயசாச்சு, அவனைக் கொண்டுபோய் பால்வாடியில சேத்துவிட்டா அவம் பாட்டுக்க போயி, அங்க போடுற சோத்த தின்னுப்புட்டு, அங்க வர்ற புள்ளகுட்டிகளோட வெளையாண்டுட்டு, அங்கிட்டே சத்த தூங்கிட்டு சாயந்தரமா வருவான். அதுக பாட்டுக்க இப்புடி தெனோம் போயிட்டு வந்தா, நம்ம காடு கரைக்கு போகலாம், வீட்டு வேலைகளைப் பாக்கலாம். இந்த வருஷம் பால்வாடி ஆயா பாப்பா அக்காகிட்ட சொல்லி தெனமும் இவனையும் கூட்டிகிட்டு போக சொல்லணும்.

தம்பி இன்னையிலருந்து நீ, பட்டவரு பேரன் ராபட்டு, பரிபூரணம் பேரன் ஜோசப்பு கூட தெனமும் பால்வாடிக்கு போகணும். தெனமும் காலையில பாப்பாக்கா வந்து உங்கள கூட்டிகிட்டு போவாக. போகும்போது ரோட்டு ஓரமா போகணும். பஸ்சுகிஸ்சு வரும். பாத்து போகணும். அங்க போயி யாருகூடயும் சண்டைபோடாம வெளையாண்டுட்டு, சாப்புட்டுட்டு சாயந்தரம் எல்லாரோடவும் சேந்து வீட்டுக்கு வந்துரு. சரியா?

இது மாதிரி தெனமும் நாங்க கொஞ்சப்பேரு பால்வாடிக்கி போய்ட்டு வந்துக்கிட்டு இருந்தோம். தூக்கிகிட்டு போறதுக்கு எந்த புத்தகமும், பைக்கட்டும் கிடையாது. நடந்து போகும்போதே, ரோட்டோரம் போற ஓந்திய (ஓணான்) கல்லைவிட்டு எறிஞ்சு வெளையாண்டுக்கிட்டு போறது வழக்கம். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பழக்கம் இருக்கும். ஒருத்தன் லூசா இருக்குற டவுசர ஒரு கையாள புடிச்சுகிட்டும், இன்னொருத்தன் ஒழுகி முட்டை விடுற மூக்கை அப்பப்ப உறிஞ்சிகிட்டும், சட்டை காலரை வாயில வச்சு கடிச்சு உறிஞ்சிகிட்டும் போவானுக.


அங்க பால்வாடி டீச்சரு, தெனுமும் வகை வகையா "அம்மா இங்கே வா வா..., தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை....," போன்ற பாட்டுகளச் சொல்லிக்குடுப்பாங்க. வெளையாடுரதுக்கு பொம்மையோ, விளையாட்டு சாமான்களோ, பிளே க்ரௌண்டோ எதுவும் இருக்காது. ஒரே ஒரு நீண்ட ஹால் தான் எங்க பால்வாடி. வீதியோரம் விறகடுப்ப பத்த வச்சு எல்லாப் புள்ளைகளுக்கும் ஒண்ணாப் போட்ட சோறு (காய்கறி, கொழம்பு, சோறுன்னு தனித்தனியா இல்லாம) பாப்பா அக்கா சமைக்க ஆரம்பிச்சுருவாங்க.


அதே வீதில கொட்டாச்சில (தேங்காய் ஓடு) மண் அள்ளி விளையாடுறது தான் எங்க பொழுதுபோக்கு. அப்புடியே அங்க சாப்புட்டுப்புட்டு, அந்த ஹால்ல படுத்து தூங்க சொல்லுவாங்க... நாலு மணிக்கு எழுப்பிவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவாக. இப்புடியே ரெண்டு வருஷம் ஓடும்.

ஏங்க இவனுக்கு இந்த வருசத்தோட அஞ்சு வயசு முடியுது. வர்ற ஜூன் மாசம் இவன பெரிய பள்ளியோடத்துல பேரு சேக்கனும். நீங்க ஹெட்மாஸ்டரையும், ஒண்ணாங்கிளாஸ் அம்மாங்களையும்(கிறிஸ்டியன் சிஷ்டர்களை அம்மாங்க-ன்னும் கிராமத்துல சொல்லுவாங்க) பார்த்தா சொல்லி வையுங்க.

சரிடி சொல்லிருவோம். அடுத்த வருசமும் இந்த சளி முழுங்கி(காறி உமிழும்போது சளி வந்தா முழுங்குற பழக்கம் இவங்களுக்கு) அம்மாங்க தான் ஒண்ணாங்கிளாஸ் டீச்சரா??

அமாங்க, இன்னும் மூணு வருசத்துக்கு இவுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் இல்லையாம். நீங்க வேலைக்கு போய்ட்டு வரும்போது இவனுக்கு ஒரு பிளாஸ்டிக் சிலேட்டும், ஒரு சப்பட்டைகுச்சி பாக்கெட்டும், ஒரு உருண்டைகுச்சி பாக்கெட்டும், இதையெல்லாம் கொண்டுபோக ஒரு பையும் வாங்கிட்டு வாங்க. ம்ம்ம்... நரம்புப் பைய்யா வாங்கிக்கங்க. அதுதான் தாங்கும்.

சரி சரி வாங்கிட்டு வாரேன். ஆமா, பள்ளியோடத்துல சேக்கும்போது எல்லாருக்கும் முட்டாயி குடுக்கணுமே அதுவும் வாங்க வேணாம்??

அதை இப்பவே வாங்க வேணாங்க. இன்னும் பள்ளியோடந்தொறக்க ரெண்டு வாரம் கெடக்கு. முட்டாயி பாக்கெட்டு மட்டும் நம்ம சத்துனாரு கடையில வாங்கிக்கலாம். அது சும்மா அஞ்சு பைசா புளிப்பு முட்டாயி வாங்கிக்கலாம்.

இந்த வருஷம் என்னைய பெரிய பள்ளியோடத்துல பேரு சேக்கப் போறாங்களே! ஊர் பூராம் தம்பட்டம். சேரும்போதே அனைத்து படிப்புகளையும் முடித்துவிட்டது போல பெருமை. ரெண்டு வாரம் கழித்து அந்த நாளும் வந்தது.

இன்னைக்கு பொதன்கிழமை... நல்ல நாளு. இருங்க இவனை குளிப்பாட்டி பொறப்பட வைக்கிறேன். ரெண்டு பேருஞ்சேந்து போயி இவனை சேத்துவிட்டுட்டு வருவோம்.

சிஸ்டர்... இவன் எங்க மூத்தவன். இவனை இன்னைக்கு பள்ளியோடத்துல பேரு எழுதீரலாம்னு இருக்கோம்.

ரொம்ப நல்லதும்மா. இப்ப இவனுக்கு வயசு என்ன??

வர்ற ஜூலையில அஞ்சு முடிஞ்சு ஆறாகுது.

இப்ப என்ன ஜூன் மாசந்தானே ஆகுது. அஞ்சு வயசு முடிஞ்சாத்தாநேம்மா இங்க சேக்க முடியும்.

இல்ல சிஸ்டர்... இந்த ஒரு மாசத்துக்காகப் பாத்தம்னா ஒரு வருஷம் லேட் ஆயிடும்.

எங்க இவன் வலது கைய தலைக்கு மேல கொண்டுவந்து இடது காதை தொட சொல்லுங்க...

தம்பி சிஸ்டர் சொன்னது மாதிரி தொடு. எங்க இன்னும் கொஞ்சம் எட்டி தொடு... ம்ம்ம்... அப்புடித்தான். அய் நடுவிரலு காதை தொட்டுருச்சு டா. சிஸ்டர் இந்தா தொட்டிருச்சு.

ம்ம்ம்... வாடா உம் பேரு என்ன? ஒழுங்கா படிப்பியா?? வாத்தியார் மயன் மக்குன்னு இருந்துறமாட்டியே... ஒழுங்காப் படிக்கணும் என்ன??

சரி சிஸ்டர்.

வாங்க ஹெட்மாஸ்டர்கிட்ட நான் சொல்லுறேன். சார்... இந்த பையனையும் பேர் சேத்துக்கலாம். இவனுக்கும் அஞ்சு வயசு முடியுது.

(இப்பவெல்லாம் இவ்வளவு எளிதா, மலிவா பள்ளியில் சேர்க்க முடியுமா?? இரண்டரை வயது பிள்ளைகளுக்கே பள்ளிகட்டணம் கட்ட கடன் வாங்கவேண்டிய நிலமையில இருக்கு நம்ம கல்வி அமைப்புகள்... பேஷ் பேஷ்...)



Wednesday, April 21, 2010

உள்குத்து கவிதைகள் - 7

கார்ப்பரேட் சாமிகள்

கருவறையில்
கரு வரையில் படமெடுத்தாலும்
கார்ப்பரேட் சாமிகள்
கர்ப்ப ரேட் கேட்டாலும்
காவியிடமே - கடவுளின்
சாவி உள்ளதென
கூவி கூடிடும் - பாவிகளே
நம்மா(ட்)க்கள்!


அகநானூறாயிரம்

அகநானூறு படைத்தவன்
படைத்திருப்பான்....
அகநானூறாயிரம் - நம்
காதலைப் பார்த்திருந்தால்...!!!


மரண அறிவிப்பு

தன் முனையில் கருமையேற்றி
தன்முனைப்பில்
தனக்குத் தானே
மரண அறிவித்தல் ...
மின்விளக்கு!



Tuesday, April 20, 2010

(முன்னாள்) மதிப்பிற்குரிய டோண்டு சார் அவர்களுக்கு,

(முன்னாள்) மதிப்பிற்குரிய டோண்டு சார் அவர்களுக்கு,

வணக்கம். நலம். நீங்களும் நலமாயிருப்பதாகவே தங்களின் பதிவின் மூலம் அறிய வருகிறேன்.

திருமதி. பார்வதி அம்மா அவர்களின் மருத்துவ உதவியினை வந்தாரை வரவேற்கும் தமிழகத்தின் வாயில் வரை கொண்டுவந்து, திருப்பியனுப்பி... வந்தாரை வாழவைக்கும் தமிழரின் மரபை ஒரு தமிழ் இனத்தை சேர்ந்த ஒரு முதியவருக்கு மறுத்ததில் நான் மனிதன் என்ற முறையில் சிறுமையாகவே கருதுகிறேன். இது பற்றி பல பதிவர்கள் தங்களது கருத்துக்களை ஆதரித்து பதிவு செய்துள்ளனர் உங்களைத் தவிர.

அவரை பிராபாகரனின் தாயாராகவோ, தமிழச்சியாகவோ கூட தாங்கள் கருத வேண்டாம். அவளை ஒரு வயது முதிர்ந்த, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பெண் என்பதாக தாங்களும் கருதுவீர்கள் என நினைக்கிறேன்.

மத்த தமிழனுக எல்லாம், இந்த அம்மாவை பிரபாகரன் அம்மாவாவே மட்டும் பார்ப்பானுங்க. அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா, உடனே கொந்தளிச்சுப் போயி தமிழகத்துல கலவரம் பண்ணி சுடுகாடா ஆக்கிடுவானுகன்னு நினைக்கிறீங்களா?? அட போங்க சார். அந்த அளவுக்கு நம்ம ஆளுங் கட்சித்தலைவர்களும் விட மாட்டானுக. எதிர்கட்சி ... ஓ அப்புடி ஒன்னு இருக்கான்னு தெரியலையே.. சரி அதை விடுங்க. இங்க நீங்க நினைக்கிற மாதிரி புலி ஆதரவு தலைவர்கள் நிறையப் பேர் இருக்காங்க. அவங்க எல்லாம் தனித்தனி குழுவா செயல்பட்டு எப்பேர்ப்பட்ட போராட்டமா இருந்தாலும் ஆளுக்கொரு பக்கமா இழுத்து சொதப்பிருவாணுக சார். ஆளுங்கட்சிக்கு கவலையே இல்லை.

தமிழன் நண்டு மாதிரின்னு நம்மளே பெருமையா சொல்லிக்கிட்டு திரியிற கூட்டம் தானே சார் நம்ம... (நீங்களும் என்னோட சேர்ந்து இந்த கூட்டத்துல இருப்பீங்கன்னு நல்லாவே தெரியும்). இன்னொரு விஷயம், இதுவரை கலவரம் ஏற்படுத்துற மாதிரி நம்ம நாட்டுல பல கலகங்களை நம்ம கழகங்கள் உருவாக்கிடுச்சு சார். ஆனா அது எல்லாம் அவனுங்க நலனுக்கு செஞ்சுக்குருவானுகளே ஒழிய மக்களுக்கு பயன்படுற மாதிரி அல்லது நாட்டுக்கு விடிவு காலம் பொறக்குற மாதிரி உருப்படியா செஞ்சுரமாட்டாணுக. நம்ம மகா பொது ஜனங்களும் அவ்வளவு வொர்த் இல்ல சார் (ஆமா ஆமா நீங்களும், நானும் அங்க தான் இருக்கோம்).

ஏன் சார்... வீரமாக மரண மடல் எழுதி, இலங்கைப் பிரச்சணைக்கு முற்றுப்புள்ளி வைக்க தனது உடலை காணிக்கையா கொடுத்தானே சார் ஒருத்தன்... அவனை நம்ம கோழையின்னு சொல்ற கூட்டம் தான் சார் இந்த ஆறரைக் கோடி கூட்டம். அவன் என்ன லவ் பண்ணி அப்பனுக்கும், ஜாதி சண்டைகளுக்கும் பயந்தா சார் செத்தான்...?? சாகிறது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை தான். ஆனா அந்த சாவுக்கு நம்மள காவு கொடுக்குற துணிச்சல் நம்மள்ல எத்தனை பேருக்கு சார் வரும். அவன் என்ன சாகும்போது என்னை காப்பாத்துங்க காப்பத்துங்கன்னா செத்தான்?? அவன் எழுதுன கடிதத்தை படிச்சிட்டு எவ்வளவு பெரிய கலவரம் சார் வெடிச்சிடுச்சு நம்ம நாட்டுல?? ஓ இதுல கழகங்கள் கலந்துக்கிரலையில்ல... பாத்தீங்களா நம்ம ஆளுகளோட ஒற்றுமையும், வீரதீரச் செயல்களையும்...

அட போங்க சார்... நம்ம ஆளுங்க இது மாதிரி நடந்துக்கிதால, அவ்வளவு பக்குவப்பட்டவங்களா?? இல்ல பயந்தாங்கொள்ளிகலான்னு?? பல பேரு புரியாமத் திரியிராணுக. பாத்தீங்களா வழவழன்னு பேசி நானும் தமிழன்னு சரியா நிரூபிச்சிட்டேன். சரி சரி விஷயத்துக்கு வருவோம்... இந்த அம்மாவுக்கு இங்க சிகிச்சை அளித்தால் புலி ஆதரவு தலைவர்கள் பேட்டி கொடுப்பாங்கன்னு சொன்னீங்க... இன்னமுமா சார் நம்புறீங்க? இலங்கை சுற்றுலாவுக்கு இலவச டிக்கெட் அப்புடின்னு இனமானக் கம்பெனி ஒரு விளம்பரம் குடுத்தாப் போதும் சார். ஒரு விக்கெட் காலி. ஒரு தேர்தல் அறிவிப்பு வரட்டும் இன்னொரு டிக்கெட் காலி. அப்புறம் இந்த வைகோ... அவரு பேரை சுருக்குனதுனாலையோ என்னவோ அவர் அரசியல் வாழ்க்கையும் போச்சு சார்... (வைகோ சார் நீங்க திரும்ப கோபால்சாமின்னு வாங்க சார்).

அப்புறம் பிரபலமா / பிராபலமா யாரு சார் இருக்கா?


அந்த பார்வதி அம்மா நல்லாயிருக்கட்டும் சார். ஒருவேளை அவங்க உயிருக்கு இங்க இழப்பு நேர்ந்தால் கலவரம் வெடிக்கும்னா எதிர் பாக்குறீங்க?? அப்புடியே நடந்தாலும், இங்க உள்ள சில மூத்த தலைவர்கள் இயற்கை மரணம் அடைந்தால் கூட, நடக்குமே ஒரு வாரத்துக்கு கூத்து... அதை விட ரொம்ப கம்மியா இருக்கும் சார். அப்புடி அவங்க பன்ற கலகத்துக்கு என்னா பேரு சார் நீங்க வைப்பீங்க?? இன்னொன்னு என்னா சொன்னீங்க...? பாதுகாப்புக்குன்னு ஒரு தொகை செலவழிஞ்சிருக்கும்னா... அட போங்க சார்... சிமரன், சிநேகா, நமிதா (கடை) தொறப்புவிழவுக்கு நம்ம அரசாங்கம் செலவழிக்காமையா இருக்கு?? அப்புறம், நம்ம அமைச்சருங்க, கட்சிக்காரன் வீட்டு விஷேஷங்களுக்கு என் காசையும் பயன்படுத்தி வெய்யில்ல கொடுமையா பல கிலோமீட்டர்களுக்கு பாதுகாப்பு போட்டிருப்பானுகலே அதெயெல்லாம் நம்ம ஏன் சார் கண்டுக்கிறது இல்ல?? அவனுகளை அல்லைக்கைகள் தவிர எவனும் சீண்டுறது இல்ல?? அவனுகளுக்கு என்ன உயிர் பயமா?

ஒரு குத்துமதிப்பா யோசிச்சுப் பாருங்க... எதிர்கட்சிக்காரனுக வெட்டுனதுல செத்த கழகக் கோமான்களை விட, உள்கட்சிக்காரனுக வெட்டுக் குத்து தான் சார் அதிகம். அப்போக்கூட நம்ம அவங்க அராஜகத்தைப் பாத்துட்டு உச்சுக் கொட்டியோ, உச்சாப் போயோ நம்ம எதிர்ப்பைக் காட்டிக்கிட்டு இருக்கோம். ஆமா, பிராபகரன் செத்துட்டாரு, எரிச்சுட்டோம், உரிச்சிட்டோம்னு சொன்னானுகளே , அப்போ என்னா சார் இங்க நடந்துச்சு... என்ன தினசரிகளும், மற்ற பத்திரிக்கைகளும் அதிக அளவுல வித்துச்சு... அதைவிட என்னத்தை சார் நாங்க புடிங்கிட்டோம்?? பிரபாகரனை கண்ணுல காட்டாம எரிச்சதுல இவ்வளவு சந்தோசப்படுறீங்க... ஆமா, ஆமா அவருக்கிட்ட நாங்க பாக்க அப்புடி என்ன பெருசா இருக்கு?? பிரபலமே இல்லாத பல பன்னாடைகளுக்கு நினைவு மண்டபம் இருக்கும் பொது அவருக்கும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டுமே... உங்ககிட்ட எதுவும் பணம் கேட்டானுகன்னா சொல்லுங்க சார்... நான் அவனுகள செருப்பால அடிக்கிறேன்.

சரி உங்களுக்கு பிராபாகரன் பிரச்சனையா இல்ல அவரு ஆத்தா பிரச்சனையா?? இல்ல வெள்ளை வேட்டிக்குள்ள வெட்க, மானத்தை அடை காக்குற எங்க தலைவர்கள் பிரச்சனையா??

சூப்பர் சார்... நாட்டின் நலனுக்கு இது உகந்ததில்லை... நமது மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை.. சூப்பர்... சூப்பர். இருங்க இருங்க... ஆமா அப்புடிப் பாத்தா, நம்ம நாட்டுல நிறைய, நாட்டு நலனுக்கு பங்கம் விலைவிக்கிரமாதிரி இருக்குறதுங்களை என்ன சார் பண்ணலாம்? என்னது நான் சொல்லவா? அடப் போங்க சார் நான் உங்க பேரன் வயசுள்ளவன் சார். நீங்களே சொல்லிடுங்க...

கேட்க மறந்துட்டனே, நம்ம நாட்டுல முளையிலே கிள்ளி எரிஞ்ச விஷயம் நிறைய இருக்குல்ல... ஐய்யயோ கொஞ்சம் டயம் குடுங்க டிவி-ல ஒரு முக்கிய டான்சு ப்ரோக்ராமு இருக்குப் பாத்துட்டு வந்துடுறேன்.

மருத்துவ உதவி மறுக்கப்பட்டாலும் அது கொலை செய்வதற்கு சமம்னு என் மன சாட்சி சொல்லுது...? நம்ம ஊர்ல இருக்குற கருப்பு கோட்டு சட்டம் என்ன சார் சொல்லுது?? ஓ அதையும், தலைமைச் செயலகம் தான் சொல்லுமோ... நீதி மன்றம் இப்பவெல்லாம் பல நேரங்கள்ல சும்மா வாயசைக்குது சார்... டப்பிங் வேற யாரோ குடுக்குரானுகோ...

அப்புறம் இந்த தர்மத்துக்குப் பொறந்த சு.சாமி என்னமோ சொன்னுச்சாமே! இந்தியா ஒன்னும் தர்மசாலையில்லை-னு, அவங்க தர்ம ஆஸ்பத்திரிக்கு வரல சார். காசு குடுப்பாங்க... இவனுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு குடுக்குறாங்க பாருங்க... அது தான் தர்மத்துக்குப் பன்றது. நான் அந்த ஆளை பார்த்தா சொல்லிடுறேன். நீங்களும் பார்த்தா சொல்லிடுறீங்களா??

சரி சார். இந்த ஜென்மம் தான் எளவெடுத்த ஜென்மமாப் போச்சு... அடுத்த ஜென்மத்துலையாவாது இந்த கழகக் கம்பெனிகள்ல புள்ளையாப் பொறக்கனும்னு எனக்காக வேண்டிக்கங்க சார்.


குறிப்பு : அண்ணே! இங்க யாரும் பார்ப்பனர்களைப் பற்றி பேச வேண்டாம். இந்தக் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தா மட்டும் சொல்லுங்க.
பார்ப்பான் என்ற பதம்/அர்த்தம் தாங்கிய பின்னூடங்கள் மட்டுறுத்தப்படும்.
தம் பெயரும் / தகப்பன் பெயரும் இல்லாத அனானிகளுக்கு ஏற்கனவே இங்கு வாய்ப்பு இல்ல. விரும்புபவர்கள் ஏதோ ஒரு பெயரை தாங்களுக்கு வைத்துக் கொண்டு... தகப்பன் பெயரில் என்னைப் போட்டுக்கொள்ளலாம். அட ஆமாங்க....

அன்புடன்,
ரோஸ்விக்.



Saturday, April 10, 2010

சுவாரஸ்யங்கள் - ஜப்பான்

70% மலைகளாலும், குன்றுகளாலும் ஆனது. அவற்றில் 200 எரிமலைகள். 6000-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
Fuji எனும் உயர்ந்த மலையில் உள்ள எரிமலை இன்றும் தீக்குழம்புகளைக் கக்கிக்கொண்டிருக்கிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
குதிரையின் பச்சைக்கறி அவர்களின் பாப்புலரான உணவுகளில் ஒன்று.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்கள் அதிக அளவில் காஃபி அருந்துபவர்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானிய மொழி நான்கு வகையான் எழுத்து முறைகளைக் கொண்டது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்கள் 100% எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பெரும்பாலான கழிப்பறைகளில் பின்புறமாக நீர் தெளிக்கும் வகையில் built-in Spray system இருக்கும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஒரு வாடகை வீட்டில் குடியேறும்போது, அந்த வீட்டு முதலாளிக்கு இரண்டு மாத வாடகைப் பணம் பரிசுத்தொகையாக வழங்கப்பட வேண்டும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஒவ்வொரு வருடமும் ஜப்பானில் சுமார் 1500 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
அரிசி சாதம் அவர்களின் பிரதான உணவு. காலை உணவுக்கும் கூட இதையே உண்பர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
அதிகபட்ச சராசரி வாழ்நாளைக் கொண்டவர்கள் ஜப்பானியர்கள். அமெரிக்கர்களை விட 4 வருடங்கள் கூடுதலாக வாழக்கூடியவர்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
உலகில் அதிக அளவில் ஆட்டோமொபைல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நாடு ஜப்பான்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பான் மொழி ஆயிரக்கணக்கான வேற்றுமொழி வார்த்தைகளைக் கலந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில் உள்ள Tsukiji எனும் மீன் சந்தை மிகப்பெரியது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்களில் சில ஆண்கள் மன்னிப்புக் கேட்கும் விதமாக தங்கள் தலையை மொட்டை அடித்துக் கொள்வார்கள்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்களில் சில பெண்கள் தனது காதலருடனான உறவை முறிந்துக் கொண்டதன் பிறகு தங்களின் கூந்தலை நறுக்கி விடுவர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில் பழ வகைகள் மிகவும் விலை உயர்ந்தவை. உதாரணமாக, தர்பூசணிப் பழம்(Watermelon) 300 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
காலணிகள் அணியும் ஒழுங்கு முறைகளைக் குறிக்க வீடுகளின் தரைத் தளங்கள் உயர்த்தப்பட்டிருக்கும். உதாரணமாக, 6 இன்ச்-க்கு மேல் உயர்வான இடங்களில் Shoes அணியக் கூடாது. Slippers அணிந்துகொள்ளலாம் (கட்டாயம் அணிந்திருப்பர்). 1-2 இன்ச்கள் உயர்த்தப்பட்ட Tatami mat ரூம் எனப்படும் அறைகள் பொதுவாக உணவு அருந்த பயன்படுத்தப் படுவதால் அங்கு Slippers கூட அணியக் கூடாது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
1800 -ஆம் ஆண்டுகளின் இறுதிவரை ஒருவகையான கருப்பு நிற சாயங்களைக் கொண்டு தங்கள் பற்களின் நிறங்களை மாற்றிக்கொள்வர். வெண்மையான பற்கள் அசிங்கமானவை என்பது அவர்களின் கணிப்பு.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பழங்காலத்தில் ஜப்பானில், சிறிய கண்கள், உருண்டையான முகம், சிறிது குண்டான உடல் போன்றவை அழகின் அம்சமாகக் கருதப்பட்டு வந்தது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
இன்னும் சில பழமையான தொழில் நிறுவனங்களில் காலையில் வேலை தொடங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்கப்படுகிறது. சில நிறுவனங்களில் மாலை 6 மணிக்கு மேல் மது வழங்கப்படும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்களுக்கு ஒழுங்காகக் கார் ஓட்டத் தெரியாது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானிய மொழியில் நேரடியாக "இல்லை" (No) எனும் வார்த்தை பயன்படுத்தப்படுவது திமிரான செயலாகக் கருதப்படுகிறது. அன்பு கொண்டவர்களுடனான அந்நியோன்யத்தை பொது இடங்களில் வெளிப்படுத்துவதும் திமிரான செயலாகக் கருதப்படுகிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
Junior High School வகுப்புகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் கிடையாது. அந்த வகுப்புகள் படிக்க வேண்டியது கட்டாயம்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. ஆனால் மூக்கு சிந்துவது மறுக்கப்பட்டது. ("இங்க பொது இடத்துல ஒன்னுக்குப் போனாலும் போகலாம், ஆனா, மூக்கு மட்டும் சிந்திடப்புடாதுடே" என்று நக்கல் முறையில் சொல்லப்பட்டிருக்கலாம். எனது தவறாகப் புரிதலாக இருக்கலாம்)
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
சூரியன் பெரும்பாலான நேரங்களில் சிவந்து தெரியும். எனவே, உதிக்கும் சூரியனின் தேசம் என்று அழைக்கப்படுகிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியர்கள் புதிய இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகளையே விரும்பி உண்ணுவர். எனவே தினமும், இவற்றை சந்தைகளில் இருந்து வாங்குவர். இதனாலேயே ஜப்பானில் மிகச் சிறிய அளவிலான Fridge மட்டுமே விற்பனையாகும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானிய கிராமங்களில், திருமணம் மற்றும் இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு எவருக்கும் அழைப்பு விடுக்கத் தேவையில்லை. அனைவரும் தாமாகவே முன்னின்று நடத்துவர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானியப் பெண்கள் பெரும்பாலும் 4-6 இன்ச் உயர காலணிகளையே பயன்படுத்துவர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில் Vending machine - களின் பயன்பாடு அதிகம். இதன் மூலம், பீர், ஒயின், காண்டம், சிகரெட், பேட்டரி, மின் விளக்குகள், காமிக் புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்திய உள்ளாடைகள் கூட வாங்கமுடியும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பெரும்பாலான ஜப்பானியர்கள் இரவில் வெந்நீர்க் குளியல் செய்துகொள்வர்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
ஜப்பானில் 24 மணி நேர ATM -கள் கிடையாது. அனைத்தும் வங்கி வேலை நாட்கள் / நேரங்களில் மட்டுமே இயங்கும்.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
உலகில் குற்றங்கள் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~
பெரும் பாலியல் தொழில் கூடமாகவும் விளங்குகிறது.
~~~~~~~~~*&*~~~~~~~~~~~



Friday, April 9, 2010

சின்னப் பசங்க கெச வாலுங்க...

உங்க வீட்டுல சின்னக் குழந்தைங்க இருக்குறாங்களா சார்...? அப்ப நீங்க கொடுத்துவச்சவங்க தான் சார். அவங்க எப்போதுமே உங்களை பிசி-யா வச்சிருப்பாங்க சார். ஒரு வருஷம் வரை உங்கள கண் அசர விடமாட்டாங்க. அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா, நீங்க அசந்தா உங்களை விடமாட்டாங்க. இத்துனூண்டு இருந்துகிட்டு அதுங்க பண்ணுற அழிச்சாட்டியம் தாங்க முடியாது சார். பிறந்த உடனே, அதுகளோட கை கால்களை தொட்டுப் பாருங்க... வெல்வெட் துணியெல்லாம் அந்த மென்மைக்கு தூசுங்க... மூனு மாசம் கழிச்சு, அதுங்களுக்கு கொஞ்சங்கொஞ்சமா பார்வை தெரிய ஆரம்பிக்கும்போது அசையிற பொருள்களைப் பார்த்து சிரிக்குங்க பாருங்க... அட அட அடா... இந்த சமயத்துல அதுங்க முகத்த பாருங்க சூரியனோட வெளிச்சமும், சந்திரனோட குளிர்ச்சியையும் உணரலாம்ங்க.

இந்த குழந்தைங்க முன்னாடி, கலர் துணியையோ, கிலுகிலுப்பையோ ஆட்டிப்பாருங்க... நிலாவுக்கு ராக்கெட் விட்ட சந்தோசம் நமக்கு கிடைக்கும். இவங்க தவந்து போகும்போது போற வேகம் இருக்கே அப்பப்பா... என்னமோ மாவீரன் நெப்போலியனோட குதிரைப்படைக்கு தலைமை தாங்கிப் போறது மாதிரி போவாங்க... என்ன, சில நேரத்துல பசி அல்லது புரியாத காரணத்துக்காக நொய்யி நொய்யினு அழுகும்போது தான் கொஞ்சம் கடுப்பா இருக்கும். இத மட்டும் பழகீட்டிங்கன்னா உங்களுக்கு வருகிற பல் இளிப்பு தான் நீங்க போடுற எல்லா டிரெஸ்-க்கும் எடுப்பா இருக்கும். நானும் பார்த்துட்டேன். எனக்குத் தெரிஞ்ச வரை பெண் குழந்தைங்கன்னா பிடிவாதம் பிடிக்கும். ஆம்புளைப் பசங்கன்னா அநியாயத்துக்கு சேட்டை பண்ணும்.






உக்கார்ற வயசுல, முன்னாடியும் பின்னாடியும் ஆடிக்கிட்டே இருக்குங்களா... பயபுள்ளைக எங்கிட்டும் போயி மப்பை கிப்பை போட்டுட்டு வந்துருச்சுகளோன்னு நமக்கே சந்தேகம் வந்துரும். சொந்தக்காரங்க ஃபோன் பண்ணினா, முதல்ல இவங்களைப் பத்திதான் விசாரணை இருக்கும். எந்திருச்சு நடக்க ஆரம்பிச்சாங்கன்னு வையுங்க வீட்டுல அடுக்கி வச்சிருக்கிற காஸ்ட்லியான பொருள்களுக்கு ஆயுசு கம்மி-னு அர்த்தம். ஆனாலும், அவங்க தத்தி தத்தி நடககுறதப் பாக்குறதுக்கு நாம தவம் கிடைக்கணும் சார். அது ஒரு நாட்டியம் மாதிரி இருக்கும். இந்த கலையை சொல்லிக் கொடுக்க உலகத்துல எங்கையுமே பாடசாலை கிடையாதுங்க...






தப்புத்தப்பா வார்த்தைகள தன்னோட கொஞ்சல் மொழில பேசுறதக் கேட்குறதுக்காகவே நம்ம புதுப்புது வார்த்தைகள அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம் போல இருக்கும். முழு நீல நகைச்சுவைப் படம் எடுத்து அதை நிறையப் பேரு பார்த்து சிரிக்கும்போது உங்களுக்கு ஏற்படுற சந்தோசத்தை விட, குழந்தைங்க கிட்ட "ம்ஹூம்... ம்ஹூம்... ம்ஹூம்... ப்ப்பே"-னு நம்ம சொல்லும்போது அதுங்க சிரிக்கிற சிரிப்பு பெரிய சந்தோசமா இருக்கும் பார்த்துருக்கீங்களா?? இந்த சிரிப்புகளுக்காகவே, நம்ம எவ்வளவு பெரிய பதவிகள்ல இருந்தாலும் நம்ம அவங்க முன்னாடி எத்தனை தடவை வேணும்னாலும் கோமாளி ஆகலாம்.

இந்த வாலுங்க, நம்ம சொல்ற வார்த்தைகள வேற நமக்கே திருப்பி சொல்லும் பாருங்க அதுவும் வேறொரு தேவைப்படும் நேரத்துல... அப்பவெல்லாம் பளிச்சுன்னு நாலு வைக்க முடியாது... ஹிஹிஹி-னு பல்லைத் தான் காட்டமுடியும். இதுல ஏய், ஏய்-னு நம்மள மிரட்டல் வேற பண்ணுவாங்க... நம்ம மாசச் சம்பளத்துல முக்கி முனங்கி ஒரு கேமரா மொபைல் வாங்கிருப்போம்... அந்த ஃபோனை இதுங்க பண்ணுகிற அதகளம் தாங்க முடியாது... எம் பொண்ணு ஒன்னுக்கு இருந்தே ரெண்டு மொபைல காலி பண்ணிடுச்சுன்னா பார்த்துக்கங்களே! இன்னும் ரெண்டு வயசு கூட ஆகல அதுக்குள்ளே, என் மொபைல், கேமரா, லேப்டாப் எல்லாம் அவங்க கண்ட்ரோல்ல... என்னத்தை சொல்றது.







இது பரவாயில்லங்க... என் நண்பனோட பையன் ஒருத்தன் இருக்கான்... அவன் உண்மையிலே டரியல் டக்ளசு தான் போல. ரெண்டு வயசு இப்பத் தாங்க ஆச்சு... அவன் பண்ணுகிற சேட்டை தாங்கலையாம்... என் நண்பனை பார்த்தாலும் பாவமா இருக்கு. ரொம்ப சேட்டை பண்ணுறான்னு கொஞ்சம் திட்டிட்டா போதும், டிவி ரிமோட், வீட்டு சாவி, இன்னும் சில முக்கியமான சில்லரைப் பொருட்கள் எல்லாம் எட்டாவது மாடியில இருந்து ஜன்னல் வழியா இவனால் தூக்கி எறியப்படும். இவன் தூக்கி எரிஞ்ச பொருள்களோட விபரம் வேணும்னா அவனுக்கு சாக்லேட் அல்லது வேற ஏதாவது ஸ்வீட் லஞ்சம் கொடுத்து அன்பா விசாரிச்சாத் தான் சொல்லுவான்.

இவன மிரட்டுறதுக்குன்னே ஒரு இருட்டு ரூமை காமிச்சு, தம்பி சேட்டை பண்ணினா அப்பா அங்க உன்னைய விட்டுருவேன்... சாரி சொல்லு... சாரி சொல்லுன்னு ரொம்ப நேரம் மிரட்டி/கொஞ்சி கேட்டாத் தான் அவரு சாரி சொல்லுவாரு. ஒரு முறை சமையற்கட்டுல நின்ன அவங்க அம்மாவக் கூப்பிட்டிருக்கான். இந்தா வாரேன்... வாரேன்-னு அவங்க நேரம் கடத்துனதுனால ஒரு ஆணியக் கையில எடுத்துக்கிட்டு 46 இன்ச் LCD TV ஸ்க்ரீன்ல கோடு போட்டுருவேன்னு மிரட்டுறான்... ஆத்தாடி... இன்னொரு கொடுமை என்னானா, அவங்க அம்மா சப்பாத்திக்கு பிசைஞ்சு வச்சிருந்த சப்பாத்தி மாவை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுற மாதிரி கேட்டு வாங்கிட்டு போயி, நண்பனோட லேப்டாப்-ல இருக்கிற USB Drive சொருகுகிற பகுதில பேப்பரை வச்சு அமுக்கி, அதுக்கு மேல இந்த சப்பாத்தி மாவை வச்சு சீல் பண்ணிட்டான் சார். இதே மாதிரி அந்த லேப்டாப்-ல இருந்த மூனு ஓட்டைய சீல் பண்ணிட்டான்...

என்னதான் சேட்டை பண்ணினாலும், இவங்களை கொஞ்சி விளையாடுறதுல பெத்தவங்களை விட ரொம்ப சந்தோசப்படுறவங்க தாத்தா பாட்டி தாங்க. புள்ளைங்களைப் பெத்து அவங்ககிட்ட விடுங்க... அந்தப் புள்ளைங்க எவ்வளவு நல்ல புள்ளையா வளருவாங்கன்னு பாருங்க. ABCD எல்லாம் எப்ப வேணும்னாலும் படிச்சுக்கிறலாம்ங்க. தாத்தா பாட்டிகிட்ட நிறைய நேரம் அவங்கள இருக்க விடுங்க... எவ்வளவு பக்குவமான புள்ளைங்களா வளருவாங்க தெரியுமா? நம்ம ஈகோ பிரச்சனைகளை மனசுல வைச்சுகிட்டு சிறு பிள்ளைங்களை தாத்தா பாட்டிகிட்ட போகவிடாமத் தடுத்துறாதீங்க... இழப்பு உங்க பிள்ளைகளுக்கும் தான். ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல வயதானவங்களும் குழந்தை தாங்க. இந்த இருவேறுபட்ட தலைமுறை குழந்தைகளை ஒண்ணா விளையாடவிட்டு ஓரமா உக்காந்து அவங்க கொஞ்சல் மொழிகளையும், சந்தோசச் சிரிப்புகளையும் பாருங்க. அப்ப உங்க கண்ணுல வரும் பாருங்க கண்ணீர்த் துளி அது தாங்க ஆனந்தம். அது தாங்க நம்ம எல்லாருக்கும் வேணும்.



Thursday, April 8, 2010

ரயில் - தாலாட்டும் மற்றொரு தாய்...

ரயில் - இந்த மூன்றெழுத்திலும் மூச்சிருக்கும். எப்போதும் ஓடி ஓடியே மூச்சிறைக்கும். தடக் தடக் என்ற இதயத் துடிப்பும் இருக்கும். இதன் இதயமும் இரும்பால் தான் இருக்கும். அதனாலோ என்னவோ முரட்டு பலம் கொண்டவன். பல, பலகுரல் மன்னர்கள் பழகிய முதல் குரல் இந்த ரயில் ஓசையாகத் தான் இருக்கும். நகரங்களில் நேரம் குறிப்பிட்டு, இந்த நேரத்திற்கு இந்த ரயில் வருமென்பர்... கிராமப் புறங்களில், குறிப்பிட்ட ரயில் வருவதை வைத்து இது தான் நேரம் என்பர்.

சேவல் கூவி பொழுது விடிந்ததை அறியும் கிராமங்கள் போல், இதன் சங்கு சப்தம் கேட்டு விடியலை அறியும், கிராமங்களும், சிறு நகரங்களும் உண்டு. கணவன் அலுவலகம் கிளம்பும் நேரம், மதிய உணவுக்கு உலை கொதிக்க வைக்கும் நேரம், பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரம் எல்லாமே, கடிகாரம் பார்க்காமல் உணர்த்தப்படும் இந்த ரயிலோசையால். நடு நிசியில், கூவும் சரக்கு ரயிலின் ஓசை கேட்டு விழித்த தம்பதிகள் தம் வாரிசுக் கணக்கில் ஓன்று கூட்டிவிட்ட கதைகளும் இருக்கக் கூடும் ரயிலடி ஓர வீடுகளிலும், கிராமங்களிலும்.

காலையில் சுட்ட வடைகளில் சில காய்ந்து கிடக்கும் மாலையில் வரும் பல்லவனுக்காக. கல்லூரி கும்பல்கள் கலாட்டாக்கள் செய்யும்போதெல்லாம், இதன் செயின் இழுத்து வழி (பறி)மரித்த திருடர்கள் ஆகிப்போவார்கள். காதலும், காமமும் இதன் கழிப்பறைகளில் தங்கி பல ஊர்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் பல மொழிகளிலும். பலரின் சபலங்களையும், சல்லாபங்களையும் இதன் ஒவ்வொரு பெட்டிகளும் பல முறை(த்துப்) பார்த்திருக்கும். இன்னும் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது ரயிலும் ரயில் பயணங்களும்.

பனங்குடி எனும் கிராமம் அருகில் உள்ள எமது வயலோரத்தில், ரயில்கள் கடக்கும் போதெல்லாம், நான் இதில் பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற கனவு என் அப்போதைய நினைவுகளைக் கடத்திப் போவதுண்டு. என் தந்தையிடம் கேட்கும்போதெல்லாம், நீ பெரியவனாகி படித்து வேலைக்குப் போனால், இதில் அடிக்கடி பயணிக்க வேண்டியிருக்கும் என்று சொல்வதுண்டு. அடம்பிடித்து ஒரு முறை குடும்பத்தார் அனைவருடனும் ரயிலில் இடம் பிடித்தோம் ஒரு நாள். வேளாங்கண்ணி செல்வதற்காக, காரைக்குடியிலிருந்து நாகபட்டினம் செல்லும் பயணிகள் ரயிலில் தான் எனது முதல் பயணம். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறி இடம் பிடித்ததில் பெரும் மகிழ்ச்சி. எனக்கும், எனது தம்பிகளுக்கும் தலை கால் புரியவில்லை. ரயில் நின்று கொண்டிருக்கும் போது காலி இடங்களில் எல்லாம் உக்கார்ந்து பார்த்தோம். நகருகையில் வீராப்பாய் கை பிடிக்காமல் நின்று பயணம் செய்ய முயற்சித்தோம்.

அதற்கு அடுத்து பல வருடங்கள் கழித்து, கல்லூரியில் படிக்கும் பொது இரண்டு முறைகள் கல்லூரி நண்பர்களோடு திருச்சியிலிருந்து காரைக்குடி வரை பயணித்தேன் அதே ஆர்வம் குறையாமல். அதில் என்னோடு வந்த நண்பர்களுக்கு இதுவே முதல் முறை. என்னிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். "டிக்கெட் வாங்காம ஏறுனா எபுட்ரா கண்டுபுடிப்பாய்ங்க?", "ரயில் கக்கூசுக்கு எங்க இருந்துடா தண்ணி வருது??", போன்ற வில்லங்க கேள்விகள்.

சில முறைகள் திருச்சியிலிருந்து சென்னைக்கு வியாபார நிமித்தமாக, பணக்கார நண்பன் ஒருவனுடன் பயணித்துள்ளேன். அவன் டிக்கெட் பரிசோதகர்களிடம் மிக எளிதாகப் பழகிவிடுவான் அடிக்கடி சென்று வருவதால். எந்த நிலையத்தில் விற்கும் டீ, காஃபி நன்றாக இருக்கும், எந்த நிலையத்தில் வடை, போலி நன்றா இருக்கும் என்பதெல்லாம் அவனுக்கு அத்துபடி. அவனது அன்பில் ஒரு முறை ஏ.சி பெட்டியில் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இறுக்கமான மனிதர்கள், தொலைபேசியில் கூட சுருக்கமாகவே பேசி வந்தனர். ஏனோ, அந்த பயணம் எனக்கும் பிடிக்கவில்லை. வழக்கமாக என்னோடு பயணிக்கும் காற்றும், நிலவும், கடந்து செல்லும் மரங்களும், பாலங்களும் காணமுடியாமல் கானல் ஆகிப்போயிருந்தது. வசதியானவர்களுடன் சென்ற அந்த பயணம் எனக்கு வசதியாக இல்லை. அந்தக் குளிரிலும் நான் உணர்ந்த தனிமை எனக்கு தனலாகவே தெரிந்தது.

அதன் பிறகு நெடுந்தூரப் பயணமாக என் உறவினர்களுடன் கல்கத்தா சென்றேன். போகும் வழியில் பல மாநிலங்கள், பல மொழிகள், பல்வேறு உடை மற்றும் உருவங்களை கடந்து செல்லும் வாய்ப்பு அது. எனது அம்மாச்சி மற்றும் எனது சித்தப்பாவுடன் சென்றதால், சுதந்திரமாக உலாவவும் முடியவில்லை. அருகாமையிலிருந்த இளவயது பெண்ணுடன் அலாவவும் முடியவில்லை. இது தான் முதன் முறையாக முன்பதிவு செய்து தொடர்ந்த பயணம். கல்கத்தாவிலிருந்து, மேற்குவங்க மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் பயணித்த போது, காலுறை முதல், தலை குல்லா வரை, தனி மனிதனின் தேவைகளை விற்பனை செய்வதைப் பார்த்தது ஒரு நல்லா அனுபவம்.

அதன் பிறகு, ஹைதராபாத்திலும், திருவனந்தபுரத்திலும் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு முறையும் ஊர் செல்லும்போதும், திரும்பும்போதும் முன்பதிவு செய்தே தொடர்ந்தேன் என் பயணங்களை. ஒவ்வொரு முறையும், நான் பயணிக்க வேண்டிய பெட்டியில் ஏறும் முன் அதில் ஒட்டப்பட்டிருக்கும் பயணிகள் பட்டியலை பல முறை பார்ப்பதுண்டு. என் பயணத்தை உறுதி செய்ய அல்ல. முதலில் எனக்குப் பக்கத்து இருக்கைகளில் ஏதேனும் இளநங்கை இருக்கிறாளா?? குறைந்த பட்சம் அந்த பெட்டியில் எங்காவது ஒரு அழகிக்கு இடம் கொடுக்கப் பட்டிருக்கிறதா என்பதையே ஆராயும்.

ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு வகையில் இருப்பார்கள். சிலர் இருக்கும் காலி இடங்களில் எல்லாம் தம் பொருளை பரப்பி வைத்திருப்பார். சிலர் ஏதாவது படித்துக் கொண்டும், படிப்பது போல் நடித்துக்கொண்டும், சிலர் எதையாவது தின்று கொண்டும் இருப்பார்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வழியனுப்ப வந்தவரிடம், இதுவே முதலும் கடைசியும் அவரை சந்திக்கும் வாய்ப்பு போல பேசிக்கொண்டிருப்பார். சிலர் பரிசோதகர்களுக்கு கை குவித்தும், சிறு அளவில் பொருள் குவித்தும் தங்கள் பயண இருக்கைகளை உறுதிப்படுத்த முயன்று கொண்டிருப்பார். சுடப்பட்ட பஜிஜிகளும், வடைகளும் வியாபாரிகளின் தட்டுக்களில் பாதி தூரமும், என் போன்றவர்களின் வாய் வெட்டுக்களில் பாதி தூரமும் பயணிக்கும்.

எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களுக்கு அனுமதி இல்லை என்று ஆங்காங்கே எழுதப்பட்டிருக்கும். முன்பதிவு செய்து தரும் அதிகாரிக்கு இது தெரியாது போலும். பஞ்சையும், நெருப்பையும் அடுத்தடுத்த இருக்கைகளில் பயணம் செய்ய வைத்து விடுவார். முன்பதிவு செய்யப்படாத இந்த திடீர் காதல் பயம் தொற்றாமலும், பணம் வற்றாமலும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும். இளம் பையன்கள் எப்போதும் பயணத்திற்கு என்று ஒரு பழைய பேண்டும், டீ-ஷர்ட்டும் வைத்திருப்பார் போலும். ஆனால், இளம் பெண்களோ, மல்லிகைப் பூக்களோடும், மணக்கும் வாசனைத் திரவியத்தொடும், மனம் தொடும் பவ்வியத்தொடும் பயணம் தொடங்குவார்கள். இதனாலோ என்னவோ, நம்மவர்களுக்கு பெரும்பாலும் காதல் இங்கு கைகூடுவதில்லை.

சில பெண்கள் இருப்பார்கள், ஏறியவுடன் இரண்டு ரொட்டித் துண்டுகளைத் தின்றுவிட்டு, ஒரு காஃபி அருந்திவிட்டு மேல்படுக்கைக்கு சென்று ஒரு ஆங்கில நாவல்களை வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். என் பயணத்தின் பொது அப்படிப்பட்ட பெண்களை நான் விரும்புவதில்லை. சிலர் மட்டுமே இயல்பாக இருப்பார்கள். அம்மா கொடுத்தனுப்பிய தயிர் சாதத்திற்கு பிரபல பேக்கரியின் பக்கோடா கடித்துக் கொண்டிருப்பார்கள். தூரப்பார்வை இருப்பது எப்படி ஒரு குறைபாடோ அது போல, ஓரப்பார்வை இல்லாத பெண்ணும் ஒரு குறைப்பாடு என்றே எனக்குத் தோன்றும். இன்னும் சிலர் உண்டு கண்ணாலும், கைகளாலும் ஏதோ சைகை செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களது நடவடிக்கைகளைப் படித்துப் பாருங்கள் ஓர் பேரனுபவம் கிடைக்கும். இது போன்ற கள்ளத்தனங்கள் தான் அந்த காலி இடத்தை ஜாலி இடமாக மாற்றும்.


நெடுந்தூரப் பயணங்களில் தன் சட்டையைக் கழற்றி ரயில் பெட்டியின் தரைப் பகுதியை துடைக்கும் சிறுவர்களைக் காணும்போதெல்லாம் பரிதாபம் வரும். அவன் நம்மை தொட்டு காசு கேட்கும்போதெல்லாம் அவன் ஏழ்மையை ஏளனம் செய்துவிடும் நாம் உடுத்தியுள்ள சலவைத் துணிகள். திருநங்கைகளின் காசு கேட்டு கைதட்டும் ஓசை, அவர்களின் முறை தவறும் அணுகுமுறைகள் மட்டும் எனக்கு, இளம் ஆணாக இருப்பதை நினைத்து பீதியைக் கிளப்பும்.


ஆனந்த விகடனும், குமுதமும், கல்கியும், பாக்யாவும், இந்தியா டுடே-வும் இன்னும் பல ஆங்கில புத்தகங்களும் சிலருக்கு ரயிலை விட வேகமாக தூரம் கடத்திப் போகும். வயதானவர்களுக்கு கீழ் இருக்கையை வேண்டுமென்றே தரமறுக்கும் மனிதர்களைப்பர்க்கும் பொது கதவின் வழியேனும் இவர்களை தள்ளி விடுவோமா என்ற கொலைவெறி தலைக்கேறும். ஒரு முறை வயதான தாத்தாவும், பாட்டியும் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு பயணம் செய்ய இருந்தார்கள். எனக்கும் அவர்கள் இருந்த பெட்டியில் தான் இருக்கை. தாத்தா, பாட்டியிடம் "ஒக்க லோயறு பெர்த்து வுந்தி. தாண்ட்லோ நுவ்வு படுக்கோ. நாக்கு தேவுடு இஷ்த்தாடு" என்றார். எதார்த்தமாக எனக்கு சைடு லோயர் பெர்த். மனமுவந்து வேண்டுமென்றால் நீங்கள் இங்கு படுத்துக் கொள்ளலாம் என்று அந்த தாத்தாவிடம் கூறினேன். அவர் அடைந்த ஆனந்தத்தை கண்டு நான் பேரானந்தம் அடைந்தேன். உடனே அவர் பாட்டியிடம், "சூசாவா, தேவுடு இ ரூபம்லோ வச்சி மனக்கு இச்சாடு" என்று புன்னைகையோடும், நன்றியோடும் கூறினார். ஒரு வழியாக நான் அன்று அவர்கள் முன் கடவுள் அவதாரம் எடுத்துவிட்டேன்.

எனது கைக்குழந்தையோடு, நான் செய்த ரயில் பயணமும் மறக்க முடியாதது. ரயில் நின்றுவிட்டால், அவள் விழித்துக்கொள்வாள். தொடர்ந்து பயணித்தால், ஆழ்ந்து உறங்குவாள். அப்போது மீண்டும் ஒருமுறை, ரயில் அனைவருக்கும் மற்றொரு தாய் என அறிந்தேன். தாலாட்டும் மடி, தட்டிக்கொடுக்கும் தடக் தடக்... அனைத்தும் சுவாரஸ்யமே.